Showing posts with label புலி. Show all posts
Showing posts with label புலி. Show all posts

Saturday, 11 January 2025

மாயக்காட்சி

 

மாயக்காட்சி

உதயசங்கர்





” ஓடு ஓடு ஓடு.. ‘ என்று கத்தியது அம்மா. 

அவ்வளவு தான். 

தலை தெறிக்க குட்டி மான் ஓடியது. 

எவ்வளவு தூரம் ஓடியது என்று தெரியவில்லை. ஒரு புதருக்கடியில் நின்று அங்குமிங்கும் பார்த்தது. பயத்தில் நெஞ்சு பட பட என துடித்தது. அம்மாவைக் காணவில்லை. 

லேசாய் கனைத்தது. பின்னால் ஏதோ சத்தம் கேட்டது. மறுபடியும் ஓட வேண்டுமோ? மான் குட்டிக்குக் கால்கள் நடுங்கின. 

ஓடுவதற்காகக் கால்களைத் தூக்கியது. அதற்குள் அம்மாவின் வாசனை குட்டி மானுக்குத் தெரிந்தது. உடனே குட்டி மான் குரல் கொடுத்தது. 

அம்மாவின் குரல்  காற்றில் பறந்து வந்தது.

குட்டி மானுக்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது. அம்மாவின் முகத்தை அண்ணாந்து பார்த்தது. குட்டி மானின் முகத்தோடு முகம் வைத்து உரசியது. அதன் நெற்றியில் நாவினால் நக்கிக் கொடுத்து ஆற்றுப்படுத்தியது.

குட்டிமானுக்கு இனி பயமில்லை. அம்மா வந்து விட்டாள்.

” அம்மா ஏன் ஓடச் சொன்னீங்க? “

” புலியின் வாசனை அடிச்சதும்மா..கொஞ்சம் அசந்திருந்தால் புலி அடிச்சிக்கும்..”

மானின் உடல் நடுங்கியது.

“ புலியே இல்லாமல் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும். நாம் எந்தப் பயமும் இல்லாமல் வாழலாம் இல்லையா .”

குட்டி மான் அம்மாவின் காதருகே முணுமுணுத்தது.

அம்மா குட்டிமானைப் பார்த்துச் சிரித்தது.

“ ஏன் சிரிக்கிறீங்க? “

” அங்கே பாரு..”

குட்டி மான் நிமிர்ந்து பார்த்தது. அங்கே ஒரு காடு தெரிந்தது.

அந்தக் காட்டில் புலியோ, நரியோ, சிங்கமோ, ஓநாயோ, இல்லை.

கூட்டம் கூட்டமாய் மான்கள் மட்டுமே மேய்ந்து கொண்டிருந்தன.

கொய் கொய் என்று மான்கள்.  எங்கு பார்த்தாலும் மான்கள். நிற்க இடமில்லை. உட்காரமுடியவில்லை.

மான்கள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டன. உணவில்லாமல் சண்டை போட்டன. மான்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகியது.

காட்டில் புல் இல்லை.

செடி இல்லை.

கொடி இல்லை.

நிழலுக்குப் புதர்கள் கூட இல்லை.

மான்களின் தீராதபசியில் காடு அழிந்து விட்டது.

மான்கள் உணவில்லாமல் ஒவ்வொன்றாய் மயங்கி விழுந்து இறந்தன. மான்கள் மட்டுமா?

இலை தழை புல் பூண்டுகள் இல்லை. அதனால் அவற்றில் வாழும் புழு, பூச்சிகள் இறந்தன.

புழு, பூச்சிகளைச் சாப்பிடும் பறவைகள் இறந்தன.

விலங்குகள் இறந்தன. 

பூச்சிகள் இல்லை என்பதால் மகரந்தசேர்க்கை நடக்கவில்லை.

மகரந்தச்சேர்க்கை நடக்காததினால் பூக்கள் பூக்கவில்லை.

காய்கள் காய்க்கவில்லை.

கனிகள் இல்லை.

கனிகள் இல்லாததால் விதைகள் இல்லை.

விதைகள் இல்லாததால் புதிய மரங்கள் முளைக்கவில்லை.

இருந்த மரங்களும் இறந்தன.

மனிதர்களும் இறந்தனர்.

அனைத்து உயிர்களும் இறந்தன.

பூமி பாலைவனமாகி விட்டது.

குட்டி மானின் கண்ணில் கண்ணீர்.

அந்தக் காட்சியைப் பார்க்கவே முடியவில்லை. தலையை ஆட்டி அந்தக் காட்சியை அழித்தது. குட்டிமானின் வாயிலிருந்து,

” அம்மா எல்லோரும் இருக்கட்டும்ம்மா. “

என்ற சொற்கள் வந்தன.

தூரத்தில் புலியின் உறுமல் கேட்டது.

குட்டிமான் துள்ளிக்குதித்தது. 

இனி எதற்கும் பயமில்லை.

நன்றி - சூரியனைத் தொட ஆசை

வெளியீடு - சுவடு பதிப்பகம்


 

 

 

Sunday, 5 January 2025

மந்திரத்தொப்பி

 

மந்திரத்தொப்பி

உதயசங்கர்



காட்டில் ஒரு மான் புதரில் கிடந்த தொப்பியைத் தலையில் அணிந்தது. வேடிக்கையாக இருந்தது. அது தான் தொப்பியுடன் இருக்கும் அழகை   எல்லாரிடமும் காட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டது.

முயலின் வீட்டுக்குப் போனது.

“ முயல் தம்பி முயல் தம்பி.. வெளியே வா.. எனக்குத் தொப்பி எப்படியிருக்குன்னு பாரு..”

என்று சொன்னது. மானைப் பார்த்ததும் முயலுக்கு ஒரு தமாஷ்  செய்யலாம் என்று நினைத்தது. உடனே அது,

“ யாரது யாரையும் காணல.. தொப்பி மட்டும் தான் தெரியுது..” என்றது. அதைக் கேட்ட மான் தொப்பியைக் கையில் எடுத்தது. உடனே முயல்,

“ யாரு மான் அண்ணனா? நீங்க போட்டிருக்கிற தொப்பி மந்திரத்தொப்பி போல அதைப் போட்டா ஆளே தெரியாது போல..”

என்று புருடா விட்டது. மானுக்கு மகிழ்ச்சி. உடனே அந்தத் தொப்பியைப் போட்டுக்கொண்டு காட்டுக்குள் கம்பீரமாக நடைபோட்டது.

எதிரே ஒரு புலி வந்தது. புலியைப் பார்த்ததும் மானுக்கு நடுக்கம். ஆனால் முயல் சொன்ன மந்திரத்தொப்பி  ஞாபகம வந்தது. உடனே புலிக்கு எதிரேயே நடந்தது.

புலிக்கு ஆச்சரியம். எப்போதும் புலியைப் பார்த்தாலே பாய்ந்து ஓடி விடும். இப்போது என்னடா தைரியமாய் எதிரே வருகிறதே. அமைதியாய் நின்றது. மந்திரத்தொப்பியணிந்த மான் புலிக்கு மிக அருகில் வந்து விட்டது.

ஆனாலும் பயம். உரத்த குரலில்,

” யாருக்காவது நான் தெரிகிறேனா.. நான்  மந்திரத்தொப்பி அணிந்திருக்கிறேன் “ என்று கத்தியது. இப்போது புலியின் கால்களுக்கு அருகில் போய்விட்டது.

அவ்வளவுதான்.

புலி ஓங்கி ஒரு அடி அடித்து மானைக் கீழே வீழ்த்தியது.

“ ஏய் முட்டாளே! யாராவது ஏதாவது சொன்னால் அப்படியே நம்பி விடுவாயா? மந்திரத்தொப்பியாம்..மந்திரத்தொப்பி ..இதோ நான் உன்னைச் சாப்பிடப்போகிறேன்..”

“ ஐயய்யோ.. என்னை விட்டு விடு.. இனி யார் என்ன சொன்னாலும் யோசிப்பேன்.. சிந்தித்து முடிவெடுப்பேன்..” என்று கதறியது மான்.

” ம்ம் அது.. நான் இப்போது தான் காட்டெருமையைச் சாப்பிட்டேன்.. அதனால் உன்னை விட்டு விடுகிறேன்..” என்று சொன்ன புலி மான் தலையிலிருந்த மந்திரத்தொப்பியை நார் நாராய் கிழித்தது.

மான் தப்பித்தோம் பிழைத்தோம் என்று நாலு கால் பாய்ச்சலில் ஓடியது.

 

 நன்றி - மந்திரத்தொப்பி

வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்

 

Tuesday, 31 December 2024

மும்பாவின் தாகம்

 

மும்பாவின் தாகம்

உதயசங்கர்



கோடைகாலம் வந்து விட்டால் அந்தியூர் காட்டில் தண்ணீர் இருக்காது. விலங்குகள் எல்லாம் தண்ணீருக்காக வெகு தூரம் அலைய வேண்டும். உணவில்லாமல் கூட சில நாள் தாக்குப்பிடிக்கலாம். தண்ணீர் இல்லாமல் எப்படி இருக்க முடியும். அப்படி மும்பா காட்டுப்பன்றி தண்ணீர் தேடி அலைந்தது.

காட்டின் நடுவில் ஒரு பெரிய மைதானத்தில் ஒரு குட்டையில் சிறிதளவு தண்ணீர் இருந்தது. அந்தக் குட்டையில் இருக்கும் திசையைப் பார்த்து நடந்தது.

நடந்தது.

நடந்தது.

நடந்து கொண்டேயிருந்தது.

மும்பா காட்டுப்பன்றிக்கு பலகீனமாக இருந்தது. நடக்கமுடியவில்லை. தூரத்தில் புலியின் உறுமல் கேட்டது. அது பசி உறுமல். புலிக்குப் பசி தாங்க முடியாத போது இப்படித்தான், க்வாவ்.. க்வாவ் என்று கத்தும். மும்பாவுக்குப் பயம். அங்கே ஒளிந்து கொள்ள புதர்ச்செடிகளும் இல்லை. வெட்டவெளி. கோடைகாலம் ஆனதால் செடிகள் எல்லாம் காய்ந்து விட்டன. இனி மழை பெய்தால் தான் புதிய இலைதழைகளைப் பார்க்க முடியும்.

இப்போது மும்பா எச்சரிக்கையாக காதுகளை விடைத்துக் கொண்டு அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டு நடந்தது.

இதோ அந்த மைதானம் தெரிகிறது. ஒரு வளைவில் திரும்பியதும் அந்த மைதானம் முழுவதும தெரிந்தது. அதன் நடுவில் இருந்த ஒரு பள்ளத்தில் கொஞ்சூண்டு தண்ணீர் இருந்தது. சாதாரணமான காலத்தில் அந்த மைதானம் முழுவதும் நிறைந்து தளும்பிக் கொண்டிருக்கும்.

திடீரென்று திடுக்கிட்டு நின்று விட்டது மும்பா. பார்த்தால் அந்தப் பள்ளத்தைச் சுற்றி ஒரு பெரிய கூட்டமே இருந்தது.

புலி, யானை, புள்ளிமான், கடம்பை மான், மும்பாவின் பெரியப்பா ஜிம்பா, குள்ளநரி, சிறுத்தை, முள்ளம்பன்றி, முயல், காட்டு மாடு, காகம், மரகதப்புறா, மைனா, காட்டுக்கோழி, மயில், சிட்டுக்குருவி, பருந்து, வல்லயம், என்று எல்லாரும் நீர் அருந்திக் கொண்டிருந்தார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக அருகில் போகும்போது தான் தெரிந்தது. ஒரு சத்தமில்லை. புலிக்குப் பக்கத்தில் புள்ளிமான் நீரரருந்திக் கொண்டிருந்தது. குள்ளநரிக்கு அருகில் முயல் இருந்தது. மும்பாவுக்கு அருகில் போகலாமா? வேண்டாமா? என்ற தயக்கம் இருந்தது.

ஆனால் தண்ணீரைப் பார்த்ததும் தாகம் அதைப் பள்ளத்தை நோக்கி கூட்டிக் கொண்டு போனது. எங்கும் இடமில்லை. சுற்றிச் சுற்றி வந்தது. புலிக்கு அருகில் மட்டும் கொஞ்சம் இடம் இருந்தது. மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து புலிக்கு அருகில் சென்றது. புலி ஓரக்கண்ணால் மும்பாவைப் பார்த்தது. ஆனால் பேசாமல் தண்ணீர் குடித்தது. புலி பார்த்ததை மும்பாவும் கவனித்தது. உடல் நடுங்கியது. இப்படியே திரும்பிவிடலாமா? தண்ணீரை விட உயிர் முக்கியம் இல்லையா? என்று யோசித்தது.

அப்போது புலி தலையைத் தூக்கிப் பார்த்தது. பிறகு அமைதியாக,

“ வா நண்பா.. தண்ணீரைக் குடி.. பசி வரும் போது மட்டும் தான் நீ என் உணவு.. பசி இல்லை என்றால் நீயும் நானும் இந்தக் காட்டின் மக்கள், இயற்கையின் மக்கள் “ என்றது.

அதைக் கேட்ட மும்பா கடைவாயின் இரண்டு பக்கமும் நீண்ட கோரைப் பற்களைக் காட்டிச் சிரித்தபடி தண்ணீரில் வாயை வைத்து உறிஞ்சியது.

“ பார்த்து நண்பா..! உன் பல் என் முகத்தில் இடிக்கிறது.. என் பல் விழுந்து விடும்.. ஹ்ஹ்ஹா ஹ்ஹாஹா..”

என்று புலி சிரித்தது. மும்பாவும் தண்ணீரைக் குடித்தபடியே சிரித்தது. புர்ர்ரென தண்ணீர் நாலுபக்கமும் தெறித்தது.

நன்றி - மந்திரத்தொப்பி

வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்


Friday, 13 December 2024

காக்கா கிளி புலி நரி

 

10.  காக்கா கிளி புலி நரி

உ உதயசங்கர்



u

கனகு ஒரு குட்டி எழுத்தாளர். ஒரு கதை எழுத வேண்டும். என்ன கதை எழுதலாம்? மரம் நடுவதைப் பற்றிய கதை எழுதலாமா? வேண்டாம். அப்படி லட்சக்கணக்கான கதைகள் வந்து விட்டன. ஆனாலும் அமேசான் காடுகளில் லட்சக்கணக்கான மரங்களை வெட்டிக் கொண்டுதானிருக்கின்றனர்.

நெகிழிப் பயன்பாட்டை ஒழிப்பதைப் பற்றி எழுதலாமா? அதுவும் ஆயிரக்கணக்கில் வந்து விட்டன. ஆனாலும் நெகிழிப்பயன்பாடு குறையவில்லை.

கா க்க்கா கா கா கா..

என்று காகம் கரையும் சத்தம் கேட்டது. உடனே கனகுவுக்குக் காகத்தைப் பற்றிக் கதை எழுதலாம் என்று தோன்றியது.

காக்காவுக்கு கருப்பு நிறம் எப்படி வந்தது?

ஐய் சூப்பர்!

கனகு கதையை எப்படித் தொடங்கி எப்படி முடிக்கலாம் என்று யோசித்தபடியே தூங்கி விட்டான்.

நள்ளிரவு. ஒரே இருட்டு. அவன் காதுக்குள் கா கா கா கா என்று சத்தம் கேட்டது. கண்விழித்தான் கனகு.

சன்னலில் கன்னங்கரேலென்று ஒரு உருவம் தெரிந்தது. கனகு பயத்தில் உளற ஆரம்பித்தான்.

“ யாய்ய்ய்யாரு? “

 அந்தக் கருப்பு உருவம் பதில் சொன்னது,

“ நான் தான் காகம்.. என்னைப் பற்றிக் கதை எழுதப் போகிறாயா? “ என்று கேட்டது காகம்.

“ ஆஆம்மா..”

“ என்ன கதை எழுதப் போறே? “

“ காக்காவுக்கு கருப்பு நிறம் எப்படி வந்தது? “

“ ஏம்ப்பா இப்படி யோசிக்கிறீங்க? காக்கா ஏன் கருப்பாச்சு? கிளி ஏன் பச்சையாச்சு.. புலிக்குக் கோடு போட்டது யாரு? சிறுத்தைக்குப் புள்ளி வைச்சது யாரு? “

“ பிறகு எப்படி எழுதறது? “

“ அறிவியல் வளராத காலத்தில் கிராமப்புற மக்கள் நிறையக் கட்டுக்கதைகளைச் சொன்னாங்க.. சரிதான்.. இப்போதும் அப்படிச் சொல்லலாமா?“

கனகு யோசித்தான். காகம் சன்னலில் இருந்து பறந்து வந்து அவனுடைய படுக்கையில் உட்கார்ந்தது. இப்போது கனவுக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது.

“ பிறகு எப்படி எழுதறது? பெரிய எழுத்தாளர்கள் இப்படித்தான் எழுதியிருக்காங்க..”

“ அதே மாதிரி தான் நாம எழுதணுமா என்ன? சரி.. என்னைப் பத்தி உனக்கு என்ன தெரியும்? என்னுடைய வாழ்க்கை, பழக்கவழக்கம், அறிவுத்திறன், பூர்வீகம், இயற்கை ஏன் என்னைப் படைத்தது? இப்படி யோசித்துப் பாரு.. ஆயிரம் கதை கிடைக்கும் “

“ ஆகா.. நல்ல யோசனை..” என்றான் கனகுவின் முகத்தில் வெளிச்சம். காகம் மறுபடியும்,

“ அதை விட்டுட்டு.. நிறத்தைப் பற்றி, உருவத்தைப் பற்றி, குணத்தைப் பற்றி கதை விடலாமா? அது கேலி இல்லையா? “

“ நிறம் ஓகே.. உருவம் ஓகே.. ஆனால் குணத்தைப் பற்றி எழுதுவது என்றால் புரியவில்லையே..”

கனகு பெரிய எழுத்தாளரைப் போல நெற்றியில் கைவைத்து யோசித்தான்.

“ தம்பி, நரி தந்திரமானது என்று பஞ்சத்ந்திரக்கதைகளில் சொன்னதையே இப்பவும் சொல்லலாமா? புலியோ சிங்கமோ கொடூரமானது என்று சொல்லலாமா? பாம்பு பழி வாங்கும் என்று சொல்லலாமா? யோசித்துப் பாரேன்..

இயற்கை ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு விதமான குணத்தைக் கொடுத்திருக்கிறது.. அதைத் தந்திரம், கொடூரம், பாவம், புத்திசாலி, என்று நீங்கள் மனிதர்கள் தங்களுடைய குணங்களை ஏற்றிச் சொல்கிறார்களே சரிதானா? பார்க்கப்போனால் மனிதர்களிடம் தான் எல்லாக்குணங்களும் எப்போதும் இருக்கின்றன ”

“ அப்படின்னா எப்படி கதை எழுதறது? “

காகமும் கொஞ்சநேரம் அமைதியாக இருந்தது. தன்னுடைய அலகால் சிறகுகளைக் கோதி விட்டது. இருட்டுக்குள் அங்கும் இங்கும் பார்த்தது.

“ தம்பி வயிறு பசிக்குது.. ஏதாவது மிச்சம் மீதி இருந்தாக்கொடேன்..”

கனகு எழுந்து அலமாரியிலிருந்த பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்து இரண்டு பிஸ்கெட்டுகளைக் கொடுத்தான். காகம் பொறுமையாகச் சாப்பிட்டுவிட்டுச் சொன்னது.

 அறிவியல் உண்மைகள் மாறாமல் கதைகளை எழுத வேண்டும்.. இல்லையென்றால் கதைகளை உண்மை என்று நம்பிவிடுவார்கள்.. தம்பி. “

“ ஆமாம் உன்னை செத்துப்போன முன்னோர் என்றும் சனி பகவான் வாகனம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே..”

கனகுவுக்கு இப்போது கொஞ்சம் புரிந்தது போல இருந்தது. அவன் காகத்திடம் வேறு ஒரு கேள்வி கேட்பதற்காக நிமிர்ந்தான்.

காகம் அங்கு இல்லை. கனவா?

கனகுவுக்குத் தூக்கம் சொக்கியது.

காலையில் எழுந்ததும் பார்த்தால் படுக்கையில் பிஸ்கெட் துகள்கள் கிடந்தன..

நன்றி - நான் யார்?

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்

 

 

Sunday, 24 May 2020

கேப்பைக்கூழும் கருவாட்டுக்குழம்பும் சாப்பிட்ட புலி


கேப்பைக்கூழும் கருவாட்டுக்குழம்பும் சாப்பிட்ட புலி
உதயசங்கர்
காட்டூர் மக்கள் எல்லோரும் பயந்து கொண்டிருந்தனர். நேற்று இரவு ஒரு புலி காட்டூருக்குள் வந்து ஒரு ஆட்டைக் கொன்று இழுத்துக் கொண்டு போய்விட்டது. இரவில் புலியின் உறுமல் சத்தத்தையும் ஆட்டின் கூப்பாட்டையும் எல்லோரும் கேட்டார்கள். யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. காலையில் தான் கொஞ்சம் தைரியமாக வெளியே வந்தார்கள். ஊர் எல்லையில் குடிசையில் உறங்கிக்கொண்டிருந்த லட்சுமியும் அந்தச் சத்தத்தைக் கேட்டாள். அவளுடைய அப்பா அருகிலிருந்த கரும்புத்தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சப்போயிருந்தார். அவள் முழித்தபோது அம்மா எழுந்து சன்னல்வழியே இருட்டுக்குள் பயத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவளுக்கு கோபம் கோபமாக வந்தது. இந்தப் புலிகளை எல்லாம் கொன்றுவிட்டால் என்ன? எப்படியும் ஒவ்வொருவருடமும் கோடைகாலத்தில் புலியோ, சிறுத்தையோ, யானையோ, இறங்கி ஊருக்குள் வந்து விடுகிறது. ஆடு, மாடு, கோழி, என்று அடித்துத் தின்று விடுகிறது. தப்பித்தவறி மனிதர்கள் தென்பட்டால் அவ்வளவுதான்.
யானையோ வயல்களில் இறங்கி பயிர்களை நாசப்படுத்தி விடுகிறது. பேசாமல் காட்டையே அழித்து எல்லாவிலங்குகளையும் அழித்து விட்டால் மனிதர்கள் நிம்மதியாக இருக்கலாமே என்று நினைத்தாள் லட்சுமி. அவளுக்கு இப்போது அப்பா பத்திரமாய் வீடு திரும்பி வரவேண்டுமே என்று கவலைப்பட்டாள்.
மறுநாள் காலையில் வனவூரில் வனத்துறை அலுவலர்கள், பத்திரிகை, தொலைக்காட்சி சேனல்கள் எல்லாம் வந்திறங்கிவிட்டன. புலியைப் பிடிக்கக் கூண்டு கொண்டுவரப்பட்டு தயாரானது. அன்று இரவு புலி வரவில்லை. மறுநாளும் வரவில்லை. அதற்கடுத்த நாளும் வரவில்லை. ஒரு வாரம் கழித்து புலி இறங்கிவந்தது. புலி இறங்கி லட்சுமியின் குடிசை இருந்த வழியாக வந்தது.
அம்மாவும் அப்பாவும் இன்னும் கரும்புத்தோட்டத்திலிருந்து வரவில்லை. லட்சுமி காடாவிளக்கு வெளிச்சத்தில் பாடம் படித்துக் கொண்டிருந்தாள். வெளியே பௌர்ணமி நிலவின் வெளிச்சம் பளீரென்று வீசியது. வெள்ளிமலையிலிருந்து காற்று விர்விர்ரென வீசியது. லட்சுமி சன்னல் வழியே வந்த காற்றுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு படித்துக் கொண்டிருந்தாள். அப்போது சன்னலில் ஏதோ நிழல் தெரிந்தது. திரும்பிப்பார்த்தாள். எதுவும் தெரியவில்லை. சில நிமிடம் கழித்து வாசல் கதவை யாரோ பிறாண்டுவது போலக் கேட்டது. லட்சுமி பயத்துடன் வாசல் கதவின் அருகில் போய் அதிலிருந்த ஓட்டையின்வழியே பார்த்தாள். ஒரு பூனை உட்கார்ந்து கதவையே பார்த்துக்கொண்டிருந்தது.
லட்சுமி கதவைத் திறந்தாள். அதற்குள் பூனை மாயமாய் மறைந்து விட்டது. வெளியே வந்து நின்று சுற்றிச் சுற்றிபார்த்தாள். பின்னர் வெள்ளிமலையைப் பார்த்தாள். மலையின் உச்சியில் மட்டுமே காடு இருந்தது. மற்ற இடங்கள் எல்லாம் வயல்களாகி விட்டன. பல இடங்களில் விளக்குகளின் வெளிச்சம் புள்ளிகளாய் தெரிந்தன. புலியின் உறுமல் சத்தம் கேட்கிறதா என்று கூர்மையாகக் கேட்டாள். எதுவும் இல்லை. மறுபடியும் வீட்டுக்குள் வந்து கதவைச் சாத்தி விட்டு விளக்கு வெளிச்சத்தில் உட்கார்ந்து படிக்கத்தொடங்கினாள்.
திடிரென நிமிர்ந்து பார்த்த லட்சுமி நடுநடுங்கி விட்டாள். எதிரே புலி பின்னங்கால்களில் உட்கார்ந்திருந்தது. லட்சுமியின் வாயிலிருந்து அலறல் வெளிவரும் முன்பாக,
“ பயப்படாதே.. குழந்தை.. எனக்கு ரொம்பப்பசிக்குது.. சாப்பிட ஏதாச்சும் கொடே.ன்..”
என்று பரிதாபமாக ஒரு குழந்தையைப் போல புலி கேட்டது. புலி பேசுமா? என்ற ஆச்சரியம் லட்சுமிக்கு வந்தது. ஆனால் பசியால் வாடிய அதன் உடலும், மூடி மூடித் திறந்த பஞ்சடைந்த அதன் கண்களும் அவளுக்குள் பரிதாபத்தை உண்டுபண்ணின. பயம் போய் விட்டது.
“ நீ கறி தானே சாப்பிடுவே? “
“ ஆமா அது ஒரு காலம்..ஆனால் இப்போ எது கிடைச்சாலும் சாப்பிடுவேன்.. உங்கவீட்டுல  இன்னிக்கு மத்தியானம் கருவாட்டுக்குழம்பு தானே..”
“ ஆமா எப்படித் தெரியும் உனக்கு? “
“ நான் இங்கேயே தான் சுத்திக்கிட்டிருக்கேன். எனக்குப் பசி கண்ணை அடைக்குது ப்ளீஸ் எதாச்சும் சாப்பிடக்கொடேன்...”
லட்சுமி உடனே எழுந்து போய் கேப்பைகூழை உருட்டி அதில் கருவாட்டுக்குழம்பை ஊற்றி அதில் நாலு துண்டு நெத்திலியைப் போட்டுக் கொண்டு வந்தாள். புலியின் முன்னால் தட்டை வைப்பதற்கு முன்னால் அது நாக்கை நீட்டி ஒரே விழுங்கு விழுங்கி விட்டது. பிறகு மறுபடியும்
“ ப்ளீஸ்..” என்றது. லட்சுமி பானையிலிருந்த அவ்வளவு கேப்பைக்கூழையும் கருவாட்டுக்குழம்பையும் ஊற்றிக் கொண்டு வந்தாள். புலி நாக்கைச் சப்புக்கொட்டி சப்புக்கொட்டி சாப்பிட்டது. சாப்பிட்டபிறகு சின்னதாக ஒரு ஏப்பம் விட்டது. லட்சுமியைப் பார்த்து “ ரொம்ப தேங்க்ஸ்..” என்றது.
” நீ ஏன் காட்டை விட்டு ஓடி கீழே வாரே? “
“ சாப்பாட்டுக்காகத்தான் குழந்தை.. நான் நல்லாச்சாப்பிட்டு ஒரு மாதம் ஆகப்போகுது..”
“ காட்டிலே சாப்பாடு இல்லையா? “
“ காடே இல்லையே..அப்புறம் ஏது சாப்பாடு..? “
” ஏன் அப்படி? “
” சொல்றேன் கேளு..”
வெள்ளிமலை முழுதும் ஒரு காலத்தில் அடர்ந்த காடாக இருந்தது. அந்தக்காட்டில் புலி, சிறுத்தை, யானை, புள்ளிமான், மிளா,, முயல், காட்டெலி, காட்டு அணில், சிங்கவால் குரங்குகள், காட்டுப்பன்றி போன்ற மிருகங்களும், காட்டுப்புறா, பருந்து, வல்லூறு, மயில், கொம்பு ஆந்தை, சிலம்பன், சிட்டுக்குருவி, தேன்சிட்டு, குயில், கொண்டலாத்தி, பனங்காடை, மரங்கொத்தி போன்ற பறவைகளும் நல்லபாம்பு, ராஜநாகம், சாரைப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், மரமேறிப்பாம்பு, பச்சைப்பாம்பு, போன்ற பாம்புவகைகளும், எல்லாவகையான பூச்சிகளும், வண்ணத்துப்பூச்சிகளும், தேனீக்களும், குளவிகளும் எறும்புகளும், எல்லாம் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தன. அருவிகளும் நீரோடைகளும் ஆறுகளும் ஓடிக்கொண்டிருந்தன. கடுங்கோடையிலும் அந்தக்காட்டில் தண்ணீருக்குப் பஞ்சம் வந்ததில்லை. இயற்கையின் விதிப்படி எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம்.
அப்போது மனிதர்கள் வந்தார்கள். காட்டை அழித்தார்கள். காட்டை அழிக்கும்போது மரங்கள், செடிகள், கொடிகள், புல்தரைகள், பூச்சிகள், புழுக்கள், வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்கள், எல்லாம் அழிந்தன. பச்சைத்தாவரங்கள் அழியும்போது அதைச் சாப்பிட்டு வாழ்ந்த மான்கள், மிளாக்கள், முயல்கள், காட்டுப்பன்றி போன்றவையும் அழிந்தன. மிச்சம் மீதி இருந்ததையும் மனிதர்கள் வேட்டையாடிக் கொன்றார்கள். இப்போது அந்த மிருகங்களைச் சாப்பிடும் எங்களைப் போன்ற மாமிசப்பட்சிணிகளுக்கு உணவில்லை. நாங்களும் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறோம்.. கடைசி முயற்சியாகத்தான் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கிராமங்களுக்கு வருகிறோம்.. காடுகள் இல்லையென்றால் மனிதர்களும் ரொம்ப நாட்களுக்கு உயிர் வாழமுடியாது….
லட்சுமிக்கு புலியின் கதையைக் கேட்டதும் வருத்தமாக இருந்தது. அவள் காட்டை அழிக்கவேண்டும் என்று நினைத்தாளே. ச்சே.. இயற்கையின் தொடர் சங்கிலியை மனிதர்கள் உணரவில்லையே. அவளுடைய கண்ணில் இப்போது நீர் துளிர்த்தது.
“ சாரிப்பா..”
புலி எழுந்து வாலை ஆட்டிக்கொண்டே, “ எதுக்கு..” எனறது. லட்சுமி பதில் சொல்லுவதற்கு முன்னால் கதவைத் தட்டுகிற சத்தம் கேட்டது. உடனே லட்சுமி,
“ போய் அந்தப்பெட்டிக்குப் பின்னால் ஒளிஞ்சிக்கோ..” என்று சொல்லிவிட்டு கதவைத் திறக்கப்போனாள். அம்மாவும் அப்பாவும் உள்ளே வந்தார்கள். அப்பா லட்சுமியிடம்,
“ லட்சுமிக்கண்ணு.. அப்பாவுக்கு நல்லபசி.. அந்தக்கேப்பைக்கூழையும் கருவாட்டுக்குழம்பையும் கொண்டுவா.. ஒரு பிடி பிடிப்போம்..” என்றார். லட்சுமி அப்பாவைப் பார்த்து திருதிருவென முழித்தபடி,
“ அப்பா.. கேப்பைக்கூழையும் கருவாட்டுக்குழம்பையும் பூனை வந்து சாப்பிட்டிருச்சிருச்சுப்பா..” என்றாள். அப்பா கோபத்துடன்,
“ எங்கே அந்தப்பூனை? “ என்று எழுந்தார். லட்சுமி பயத்துடன் பெட்டிக்குப் பின்னால் பார்த்தாள். அங்கே எதுவுமில்லை. முகங்கைகால்களைக் கழுவிக்கொண்டு வந்த அம்மா
“ அது எப்பயோ போயிருக்கும்.. பத்து நிமிசம் பொறு.. நான் கூழுகாய்ச்சி குழம்பு வச்சித்தாரேன்..” என்று சொல்லிவிட்டு அடுக்களை இருந்த மூலைக்குப் போனாள்.
லட்சுமி குழப்பத்துடன் மறுபடியும் படிக்க உட்கார்ந்தாள். அவள் கண்ணில் புலியின் பசித்த முகம் தெரிந்தது.