Friday, 13 December 2024

காக்கா கிளி புலி நரி

 

10.  காக்கா கிளி புலி நரி

உ உதயசங்கர்



u

கனகு ஒரு குட்டி எழுத்தாளர். ஒரு கதை எழுத வேண்டும். என்ன கதை எழுதலாம்? மரம் நடுவதைப் பற்றிய கதை எழுதலாமா? வேண்டாம். அப்படி லட்சக்கணக்கான கதைகள் வந்து விட்டன. ஆனாலும் அமேசான் காடுகளில் லட்சக்கணக்கான மரங்களை வெட்டிக் கொண்டுதானிருக்கின்றனர்.

நெகிழிப் பயன்பாட்டை ஒழிப்பதைப் பற்றி எழுதலாமா? அதுவும் ஆயிரக்கணக்கில் வந்து விட்டன. ஆனாலும் நெகிழிப்பயன்பாடு குறையவில்லை.

கா க்க்கா கா கா கா..

என்று காகம் கரையும் சத்தம் கேட்டது. உடனே கனகுவுக்குக் காகத்தைப் பற்றிக் கதை எழுதலாம் என்று தோன்றியது.

காக்காவுக்கு கருப்பு நிறம் எப்படி வந்தது?

ஐய் சூப்பர்!

கனகு கதையை எப்படித் தொடங்கி எப்படி முடிக்கலாம் என்று யோசித்தபடியே தூங்கி விட்டான்.

நள்ளிரவு. ஒரே இருட்டு. அவன் காதுக்குள் கா கா கா கா என்று சத்தம் கேட்டது. கண்விழித்தான் கனகு.

சன்னலில் கன்னங்கரேலென்று ஒரு உருவம் தெரிந்தது. கனகு பயத்தில் உளற ஆரம்பித்தான்.

“ யாய்ய்ய்யாரு? “

 அந்தக் கருப்பு உருவம் பதில் சொன்னது,

“ நான் தான் காகம்.. என்னைப் பற்றிக் கதை எழுதப் போகிறாயா? “ என்று கேட்டது காகம்.

“ ஆஆம்மா..

என்ன கதை எழுதப் போறே? “

“ காக்காவுக்கு கருப்பு நிறம் எப்படி வந்தது? “

“ ஏம்ப்பா இப்படி யோசிக்கிறீங்க? காக்கா ஏன் கருப்பாச்சு? கிளி ஏன் பச்சையாச்சு.. புலிக்குக் கோடு போட்டது யாரு? சிறுத்தைக்குப் புள்ளி வைச்சது யாரு? “

“ பிறகு எப்படி எழுதறது? “

“ அறிவியல் வளராத காலத்தில் கிராமப்புற மக்கள் நிறையக் கட்டுக்கதைகளைச் சொன்னாங்க.. சரிதான்.. இப்போதும் அப்படிச் சொல்லலாமா?“

கனகு யோசித்தான். காகம் சன்னலில் இருந்து பறந்து வந்து அவனுடைய படுக்கையில் உட்கார்ந்தது. இப்போது கனவுக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது.

“ பிறகு எப்படி எழுதறது? பெரிய எழுத்தாளர்கள் இப்படித்தான் எழுதியிருக்காங்க..

அதே மாதிரி தான் நாம எழுதணுமா என்ன? சரி.. என்னைப் பத்தி உனக்கு என்ன தெரியும்? என்னுடைய வாழ்க்கை, பழக்கவழக்கம், அறிவுத்திறன், பூர்வீகம், இயற்கை ஏன் என்னைப் படைத்தது? இப்படி யோசித்துப் பாரு.. ஆயிரம் கதை கிடைக்கும் “

“ ஆகா.. நல்ல யோசனை..என்றான் கனகுவின் முகத்தில் வெளிச்சம். காகம் மறுபடியும்,

“ அதை விட்டுட்டு.. நிறத்தைப் பற்றி, உருவத்தைப் பற்றி, குணத்தைப் பற்றி கதை விடலாமா? அது கேலி இல்லையா? “

“ நிறம் ஓகே.. உருவம் ஓகே.. ஆனால் குணத்தைப் பற்றி எழுதுவது என்றால் புரியவில்லையே..

கனகு பெரிய எழுத்தாளரைப் போல நெற்றியில் கைவைத்து யோசித்தான்.

“ தம்பி, நரி தந்திரமானது என்று பஞ்சத்ந்திரக்கதைகளில் சொன்னதையே இப்பவும் சொல்லலாமா? புலியோ சிங்கமோ கொடூரமானது என்று சொல்லலாமா? பாம்பு பழி வாங்கும் என்று சொல்லலாமா? யோசித்துப் பாரேன்..

இயற்கை ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு விதமான குணத்தைக் கொடுத்திருக்கிறது.. அதைத் தந்திரம், கொடூரம், பாவம், புத்திசாலி, என்று நீங்கள் மனிதர்கள் தங்களுடைய குணங்களை ஏற்றிச் சொல்கிறார்களே சரிதானா? பார்க்கப்போனால் மனிதர்களிடம் தான் எல்லாக்குணங்களும் எப்போதும் இருக்கின்றன

அப்படின்னா எப்படி கதை எழுதறது? “

காகமும் கொஞ்சநேரம் அமைதியாக இருந்தது. தன்னுடைய அலகால் சிறகுகளைக் கோதி விட்டது. இருட்டுக்குள் அங்கும் இங்கும் பார்த்தது.

“ தம்பி வயிறு பசிக்குது.. ஏதாவது மிச்சம் மீதி இருந்தாக்கொடேன்..

கனகு எழுந்து அலமாரியிலிருந்த பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்து இரண்டு பிஸ்கெட்டுகளைக் கொடுத்தான். காகம் பொறுமையாகச் சாப்பிட்டுவிட்டுச் சொன்னது.

 அறிவியல் உண்மைகள் மாறாமல் கதைகளை எழுத வேண்டும்.. இல்லையென்றால் கதைகளை உண்மை என்று நம்பிவிடுவார்கள்.. தம்பி. “

“ ஆமாம் உன்னை செத்துப்போன முன்னோர் என்றும் சனி பகவான் வாகனம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே..

கனகுவுக்கு இப்போது கொஞ்சம் புரிந்தது போல இருந்தது. அவன் காகத்திடம் வேறு ஒரு கேள்வி கேட்பதற்காக நிமிர்ந்தான்.

காகம் அங்கு இல்லை. கனவா?

கனகுவுக்குத் தூக்கம் சொக்கியது.

காலையில் எழுந்ததும் பார்த்தால் படுக்கையில் பிஸ்கெட் துகள்கள் கிடந்தன..

நன்றி - நான் யார்?

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்

 

 

No comments:

Post a Comment