Monday, 9 December 2024

சுண்டெலிக்குத் தெரிஞ்சி போச்சு!

 

சுண்டெலிக்குத் தெரிஞ்சி போச்சு!

உதயசங்கர்



மாயா குட்டிப்பாப்பா தானே. இப்போது தான் ஒண்ணாம்கிளாஸ்  போகிறாள்.  முதலில் சுண்டெலியைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். அதன் குட்டியான உடம்பு. குட்டிக்கால்கள், குட்டி வாய் குட்டி மூக்கு, ஐயோ எவ்வளவு அழகாக இருக்கு என்று மூக்கில் விரலை வைத்து அதிசயமாய் பார்த்துக் கொண்டேயிருந்தாள். சுண்டெலிக்கு ஒரு பெயர் கூட வைத்தாள். அது என்ன பேர் தெரியுமா?

பாப்பி.

அம்மா அப்படித்தான் அவளைக் கூப்பிடுவார்கள். அம்மா எப்போதும்,

“ ஏ பாப்பி தலைமுடியை சீவிட்டு போ..” என்று சிரித்துக் கொண்டே சொல்வார்கள். மாயாவுக்கும் அந்தப் பெயர் பிடித்து விட்டது. அதனால் அந்தப் பெயரையே சுண்டெலிக்கு வைத்து விட்டாள்.

ஆனால் நாளாக நாளாக பாப்பி சுண்டெலியின் தொல்லை தாங்க முடியவில்லை. இரவில் மட்டுமல்ல பகலிலும் கூட பாப்பி சுண்டெலி தைரியமாக நடமாடியது. அதுவும் வீட்டு உறுப்பினர்களைப் போல காலையில் பாத்ரூமுக்குள் போய் உச்சா கக்கா போச்சு.. மாயா குளித்த பிறகு கீழே சிந்திய தண்ணீரில் உடம்பைத் தேய்த்துக் குளித்தது. சோப்பு கூட போட்டது. மாயாவுக்கு முதலில் பயமாயிருந்தது. ஆனால் போகப்போகப் பழகி விட்டது.

மாயா சாப்பிட உட்கார்ந்தாள். அம்மா செய்து கொடுத்த உப்புமாவை வாயில் போடும்போது கீழே கொஞ்சம் விழுந்து விட்டது. அவ்வளவு தான் எங்கிருந்து தான் வருமோ பாப்பி சுண்டெலி ஓடி வந்து அதைக்கௌவிக் கொண்டு போய் விடும்.

அப்படி மாயா கீழே சிந்தாமல் சிதறாமல் சாப்பிட்டால் நேரே அவளுக்கு எதிரில் போய் முன்கால்களைத் தூக்கி ,

“ ஏன் கீழே சிந்தலை? “ என்று கேள்வி கேட்பதைப் போல கீச்ச் கீச்ச் என்று கத்தும். அப்போது அதன் காதுகள் விடைத்துக் கொள்ளும். அதைப் பார்க்கும் மாயாவுக்குச் சிரிப்பு சிரிப்பாய் வரும்.

ஒரு நாள் பாப்பி சுண்டெலி அப்பாவின் லேப்டாப்பின் வயரைக் கடித்து விட்டது. அப்பாவுக்குக் கோபம் வந்து விட்டது. அன்று இரவு எலி மருந்து வாங்கி வைத்தார். பாப்பிக்குத் தெரிந்து விட்டது. பாப்பி அருகிலேயே போகவில்லை.

எலி பிஸ்கெட் வாங்கி அடுக்களையில் வைத்தார். பாப்பி சுண்டெலி தொடக்கூட இல்லை. அதன் பிறகு அப்பா செய்த காரியம் தான் பாப்பி சுண்டெலியை உண்மையிலேயே பயமுறுத்தி விட்டது. மாயா காலையில் எழுந்திரிக்கும் போது சத்தம் கேட்டது.

மியாவ்..மியாவ்.. மியாவ்

கடுவன் பூனையின் சத்தம். வீடு முழுவதும் பலமாகக் கேட்டது. அப்பா பூனை வாங்கி வந்து விட்டார் என்று நினைத்து மாயா வேகவேகமாக எழுந்து போனாள்.

அங்கே அச்சு அசல் பூனை மாதிரியே ஒரு பொம்மை இருந்தது. அதனிடமிருந்து தான் சத்தம் வந்தது.

மியாவ் மியாவ் மியாவ்

பாப்பி சுண்டெலி உண்மையில் பயந்து விட்டது. இனி இந்த வீட்டில் இருக்க முடியாது என்று நினைத்தது. இரண்டு நாட்களாக அதனுடைய வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

நின்று யோசித்தது. உட்கார்ந்து யோசித்தது. படுத்து யோசித்தது. ஒன்றும் தோன்றவில்லை. சரி முதலில் தூரமாய் இருந்து அந்தப் பூனையைக் கவனிப்போம் என்று நினைத்தது.

மாயாவுக்கும் கவலை. பாப்பி சுண்டெலி வீட்டை விட்டுப் போயிருக்குமோ. அவளுடைய குட்டி பிரெண்ட்டில்லையா? அவளுக்குப் பூனை பொம்மையைப் பிடிக்கவில்லை. போகும்போதும் வரும்போதும் அந்தப் பூனைப் பொம்மையைத் தூக்கி அங்கிட்டும் இங்கிட்டும் வைத்து விடுவாள்.

அப்படி ஒரு நாள் பொருட்கள் சேமிக்கும் அறையில் வைத்து விட்டாள். அந்த அறையில் தான் பாப்பி சுண்டெலியும் பதுங்கி இருந்தது.

மியாவ் மியாவ் மியாவ் சத்தத்தைக் கேட்டு உயிரே போய்விடும்போல இருந்தது. ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து பூனையைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தது.

கொஞ்ச நேரத்தில் கண்டுபிடித்து விட்டது. பூனை இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. கழுத்தைத் திருப்பவில்லை. உடம்பை நெளிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக வாலை ஆட்டவில்லை. பாப்பி சுண்டெலிக்குச் சந்தேகம் வந்தது.

மெல்ல பூனைப்பொம்மையின் பின்னால் சென்றது. பூனைப் பொம்மை அசையவில்லை. வாலை முகர்ந்து பார்த்தது. செயற்கை இழைகளின் நாற்றம் அடித்தது. லேசாய் கடித்துப் பார்த்தது. பூனைப்பொம்மை அப்படியே இருந்தது.

மியாவ் மியாவ் மியாவ்

சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. பாப்பிச் சுண்டெலிக்குத் தெரிஞ்சி போச்சு. என்ன தெரிஞ்சி போச்சு என்று உங்களுக்குத் தெரியுமே.

அப்புறம் இரண்டு நாட்களில் அந்த பூனைப்பொம்மையின் கண், காது, மூக்கு எல்லாம் தனித்தனியாகக் கிடந்தது.

அவ்வளவு தான்.

மாயாவும் ஹேப்பி. பாப்பிச்சுண்டெலியும் ஹேப்பி.


நன்றி - நான் யார்?

வெளியீடு - புக் பார் சில்ட்ரென்

தொடர்புக்கு - 8778073949




No comments:

Post a Comment