Friday, 13 December 2024

எல்லாம் தெரியுமே!

 

எல்லாம் தெரியுமே!

உதயசங்கர்



ஒரு குளத்தில் விரால் மீன் இருந்தது. மற்ற கெண்டை, கெளுத்தி, அயிரை, நெத்திலி மீன்களை விட தான் பெரிதாக இருப்பதால் தான் பெரிய அறிவாளி என்று நினைத்துக் கொள்ளும். மிகுந்த கர்வத்துடன் எல்லாருக்கும் அறிவுரை சொல்லிக் கொண்டேயிருக்கும்.

 எனக்கு எல்லாம் தெரியும் என்று அதுவே சொல்லிக் கொள்ளும்.

“ ஏய் அங்கே போகாதே.. அது கெட்டுப்போன பாசி..

இந்த நீர்ப்பூச்சி கசப்பாக இருக்கும் இதைச் சாப்பிடாதே..

இத்தனை நாளாச்சு.. இன்னும் நீந்தத் தெரியலை.. வலதுபக்கம் திரும்பணும்னா இடதுபக்கம் வாலைத் திருப்பணும்..

எனக்கு எல்லாம் தெரியும் “

இப்படி எல்லாரையும் மேற்பார்வை பார்த்துக் கொண்டேயிருக்கும். எந்த மீனுக்கும் விரால் மீனைப் பிடிக்காது. பிறகென்ன? பள்ளிக்கூடத்து ஹெட்மாஸ்டர் போல எப்போதும் திட்டிக் கொண்டேயிருந்தால் எப்படிப் பிடிக்கும்.

எல்லாரும் விரால் மீனைப் பார்த்தாலே ஓடி ஒளிஞ்சுக்குவாங்க.

 ஒரு நாள் திடீரென்று தண்ணீரின் மேல்பரப்பில் நாலைந்து மண்புழுக்கள் மிதந்தன. உயிருடன் அவை நெளிந்து கொண்டிருந்தன. கெண்டைமீன் அதன் பக்கத்தில் போய்த் திரும்பி விட்டது. கெளுத்தி ஓடி வந்து விட்டது. மற்ற நெத்திலி, அயிரை எல்லாம் அருகிலேயே போகவில்லை.

விரால் மீன் மண்புழுவின் அருகில் போனது. அப்போது மண்புழு சொன்னது,

“ நண்பா என்னைச் சாப்பிடாதே.. மேலே மனிதன் உட்கார்ந்திருக்கிறான்.. உன்னைப் பிடிக்கத்தான் என்னை இரையாக வைத்திருக்கிறான்.. ஓடி விடு..

என்று சொன்னது. விரால் மீனுக்குத்தான் எல்லாம் தெரியுமே?

“ உன்னைச் சாப்பிடாமல் இருக்க என்னை ஏமாற்றுகிறாயா? கையில் கிடைத்ததை விடுவேனா? “

என்று மண்புழுவை அப்படியே விழுங்கியது. விரால் மீனின் தொண்டையில் தூண்டில் முள் மாட்டிக் கொண்டது.

அப்புறம் என்ன?

மண்சட்டியில் குழம்பாய் களபுள களபுள என்று குதித்துக் கொண்டிருந்தது விரால் மீன்.

அப்போதும்

எனக்கு எல்லாம் தெரியுமே. எனக்கு எல்லாம் தெரியுமே

என்று சொல்லிக் கொண்டிருந்தது.

நன்றி - நான் யார்?

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்

No comments:

Post a Comment