Thursday, 12 December 2024

பப்புவின் குறும்பு

 

பப்புவின் குறும்பு

உதயசங்கர்

குட்டி யானை பப்புவுக்கு எல்லாமே விளையாட்டு தான். அடுத்தவர்களைப் பயமுறுத்தும் விளையாட்டு. மரத்துக்குப் பின்னாடி ஒளிந்து நிற்கும். அந்த வழியே முயல் தாவும் போது ப்ள்ளீங் என்று சத்தமிடும். எதிர்பாராத சத்தத்தினால் முயல் பயந்து எங்கு போவது என்று தெரியாமல் குப்புறவிழுந்து எழுந்து ஓடும். அதைப் பார்த்து பப்பு யானை சிரிக்கும்.

மரத்தின் மீது கண்ணைமூடித் தூங்கிக் கொண்டிருக்கும் குரங்கு உட்கார்ந்திருக்கும் கிளையை பிடித்து ஓங்கி ஓங்கி ஆட்டும். குரங்கு கீழே விழுந்து விடுவோமோ என்று பயந்து அலறும். அதைப் பார்த்துச் சிரிக்கும்.

மழைக்காலம் சீக்கிரம் வந்துவிடும். எறும்புகள் வேகவேகமாக தானியங்களையும் விதைகளையும் இறந்த புழு, பூச்சிகளையும் தூக்கிக் கொண்டு ஓடும். லட்சக்கணக்கான எறும்புகள் மேலும் கீழும் அலைந்து கொண்டிருக்கும். அந்தப் புற்றினை மிதித்து விடுவதைப் போல காலைத் தூக்கும். ஒரு மிதி மிதித்தால் போதும். அந்தப் புற்று தரை மட்டமாகி விடும். எறும்புகள் எல்லாம் முன்னங்கால்களைத் தூக்கிக் கும்பிடும்.

“ பப்பு வேண்டாம்.. பப்பு..

அந்தக் குரலைக் கேட்டபிறகு பப்பு காலை மாற்றி வைத்துச் சிரிக்கும்.

அல்லிக்குளத்தின் தண்ணீரை தும்பிக்கையால் உறிஞ்சி வைத்துக் கொள்ளும். எதிர்பாராமல் மான் மீது பீய்ச்சும். இல்லையென்றால் குள்ளநரியைக் குளிப்பாட்டும். மரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் குரங்கை அப்படியே அலாக்காகத் தூக்கிப் பயமுறுத்தும்.

இப்படி பப்பு செய்யும் சேட்டைக்கு அளவேயில்லை.

பப்புவைப் பார்த்துப் பயப்படாதவர்களே இல்லை.

காட்டில் பப்பு எங்கிருக்கிறது என்று பார்த்து விட்டுத் தான் எல்லாவிலங்குகளும் நடமாடின. பப்புவுக்கு நண்பர்களே இல்லை.

பப்பு எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. பப்பு அன்று காலை வெளியில் புறப்படும்போது காட்டில் யாரையும் காணவில்லை. எல்லாரும் தான் பதுங்கி விட்டார்களே.

போகும் வழியில் தென்பட்ட மரங்களின் கிளைகளை உடைத்துப் போட்டுக் கொண்டே போனது.

அதுபோகும் வழியில் எதிரில் ஒரு சிங்கக்கூட்டம் இரை தேடி வந்து கொண்டிருந்தது. சிங்கம் கழுதைப்புலி, போன்ற ஆபத்தான விலங்குகள் இரை தேடி வருவதைப் பார்த்தால் ஆக்காட்டி குருவி சத்தம் போட்டு எச்சரிக்கும். மரத்திலிருக்கும் குரங்குகள் கத்தி ஆபத்து என்று சமிக்ஞை கொடுக்கும். பறவைகள் கலைந்து வானத்தில் வட்டமிடும்.

ஆனால் இப்போது அப்படி எச்சரிக்கவோ, ஆபத்து என்று சொல்லவோ யாருமில்லை. எல்லாம் பப்புவைப் பார்த்து ஓடி ஒளிந்து கொண்டன.

பப்பு சாதாரணமாகப் போய்க் கொண்டிருந்தது. புல்வெளிக்குள் பதுங்கியிருந்த சிங்கக்கூட்டத்தைப் பார்க்கவில்லை.

திடீரென்று சிங்கக்கூட்டம் பப்புவின் மீது பாய்ந்தது. பப்பு எதிர்பார்க்கவில்லை. அதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தன்னுடைய வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்தது. சிங்கள் மேலே பாயத் தயாராகின.

” ப்ளாங்..ப்ளாங்..ப்ளாங் அம்மா அம்மா “ என்று அபயக்குரல் எழுப்பியது பப்பு.

திடீரென்று பப்புவின் குடும்பம் அங்கே ப்ப்ப்ப்ப்ள்ளாங் என்ற சத்தத்துடன் கூட்டமாய் ஓடி வந்தது.

அம்மா சித்தி அக்கா அண்ணன் தம்பி அப்பா பெரியப்பா என்று எல்லாரும் வந்தன. அவை வருகின்ற வேகத்தைப் பார்த்ததும் சிங்கங்கள் தலை தெறிக்க ஓடி விட்டன.

கூடவே ஒரு குரங்கும் ஆக்காட்டிக்குருவியும் வந்தன. அவை தான் பப்புவின் குடும்பத்திடம் ஆபத்தைச் சொல்லி அழைத்து வந்திருக்கின்றன.

அன்று முதல் பப்பு அனைவரிடமும் அன்பாக நடந்து கொண்டது. இப்போதும் குறும்பு செய்யும் பப்பு. அதோ பாருங்கள்! புளிய மரத்தின் கிளையைத் தும்பிக்கையால் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறது.

ஆமாம்! யாரையும் துன்புறுத்தாத குறும்புகளைச் செய்கிறது பப்பு.



நன்றி - நான் யார்?

வெளியீடு- புக் ஃபார் சில்ட்ரென்



 

 

No comments:

Post a Comment