Wednesday, 11 December 2024

தாமதிக்காதே கண்ணே!

 

தாமதிக்காதே கண்ணே!

உதயசங்கர்




ஸ்ஸ்ஸ் அப்பா! என்ன வெயில்!

வறண்ட பாலைவனம். கானல் நீர் காற்றிலேயே தெரிந்தன. அனல் பறந்தது. ஜோகன் நெருப்புக்கோழி நிமிர்ந்து ஒரு தடவை சுட்டெரிக்கும் சூரியனைப் பார்த்தது.. பிறகு இன்னும் பொரியாமல் இருந்த நான்கு முட்டைகளையும் தன் வயிற்றுக்கடியில் நன்றாகத் தள்ளி வைத்தது. பிறகு முட்டைகளின் காதுகளில் சொன்னது.

தாமதிக்காதே கண்ணே!

சுற்றிலும் காய்ந்த புல்வெளி. ஏற்கனவே பொரிந்து வெளிவந்திருந்த எட்டுக்குஞ்சுகளையும் தன் சிறகுகளால் மூடியது.

தூரத்தில் மரியா நெருப்புக்கோழி நடந்து போய்க் கொண்டிருப்பது புகையாகத் தெரிந்தது. பத்து நாட்களாக மரியா நெருப்புக்கோழி தான் அடை காத்தது. பத்து நாட்கள் முறைவைத்து அப்பா ஜோகனும் அம்மா மரியாவும் அடைகாத்தார்கள்

அடைக்காக்க ஆரம்பித்து ஐம்பது நாட்கள் முடிந்து விட்டது. இதற்கு மேல் இந்த வெப்பத்தில் அங்கே இருக்கமுடியாது. புதிய குஞ்சுகளால் தண்ணீர் குடிக்காமல் இருக்கமுடியாது.

அம்மா நெருப்புக்கோழி பசியினால் சோர்ந்து விட்டது. ஏதாவது இரை கிடைக்காதா என்று தேடிப் போயிருக்கிறது. அது திரும்பி வந்தவுடன் இந்த இடத்தை விட்டு கிளம்ப வேண்டும். அதற்குள் இந்த முட்டைகள் பொரிந்து விட்டால் நல்லது.

தாமதிக்காதே கண்ணே!

ஜோகன் நெருப்புக்கோழி தலை குனிந்து சொன்னது. வயிற்றுக்கடியில் இருந்த நான்கு முட்டைகளில் மூன்று முட்டைகளுக்குக் காது கேட்கவில்லை.

 ஒரு முட்டைக்குள் இருந்த குஞ்சின் காதுகளுக்குக் கேட்டது. முட்டைக்குள்  தலையும் கால்களும் சுருண்டு ஒரு பந்து மாதிரி கிடந்தது.

இதோ வந்து விடுகிறேன் அப்பா!

என்று சொல்ல நினைத்தது. முட்டையின் ஓட்டை உடைக்கமுடியவில்லை. இரண்டு முறை கொத்தும். பிறகு சோர்ந்து விடும். அப்போது முட்டை ஆடி அதிரும். ஜோகனுக்கு அது தெரியும். ஆனால் அது என்ன செய்யமுடியும்? அவன் தானே முயற்சி செய்ய வேண்டும்.

காத்திருந்தது ஜோகன் நெருப்புக்கோழி.

இரவு குளிர் தாங்கமுடியவில்லை. இப்படித்தான் இந்தப் பிரதேசத்தில் பகலில் வெப்பமும் இரவில் குளிரும் தாங்கமுடியாததாக இருக்கும். விடிந்ததும் புறப்படவேண்டியதுதான்.

இன்னும் பிறக்காத குஞ்சுகளுக்காக பிறந்த குஞ்சுகளை விடமுடியாது. ஜோகன் நெருப்புக்கோழி யோசித்துக் கொண்டேயிருந்தது.

பொழுது விடிந்தது. காலையிலேயே சூரியன் கடுங்கோபத்துடன் வந்தான். ஏற்கனவே பிறந்த குஞ்சுகள் தள்ளாடிக் கொண்டிருந்தன. டிக் டிக் டிக் டிக டிக டிக என்று அலகுகளால் ஒலி எழுப்பின.

தூரத்தில் மரியா நெருப்புக்கோழி வந்து கொண்டிருந்தது. ஜோன் மீண்டும் ஒரு தடவை தன் வயிற்றுக்கடியில் இருந்த முட்டைகளை உருட்டிப் பார்த்தது. மூன்று முட்டைகளில் அசைவே இல்லை. ஆனால் ஒரு முட்டையில் துடிப்பு தெரிந்தது. ஆனால் வெளியே வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. முட்டையில் ஒரு சிறு கீறல் கூட இல்லை.

தாமதிக்காதே கண்ணே!

ஜோகன் நெருப்புக்கோழி முணுமுணுத்தது.

இதோ வந்து விட்டேன் அப்பா என்று முட்டைக்குள்ளே இருந்து கத்தியது. ஆனால் சத்தம் வெளியே கேட்கவில்லை.

எட்டுக்குஞ்சுகளுடன் ஜோகனும், மரியாவும் ஒரு நீண்ட பயணம் புறப்பட்டார்கள்.

ஜோகனுக்கு மனசேயில்லை. எழுந்து நின்று அந்த ஒரு முட்டையைப் பார்த்தது. லேசாய் உருட்டியது.

அப்பாவோ அம்மாவோ இல்லாமல் இந்த வெப்பத்தில் குஞ்சுகள் உயிர்பிழைக்கமுடியாது.

கிர்ர்ராக்

மரியாவை அழைத்தது. மரியாவும் வந்து அந்த முட்டையை உருட்டிப்பார்த்தது. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. பிறக்கப்போகும் ஒரு குஞ்சுக்காக காத்திருந்தால் இந்த எட்டு குஞ்சுகளும் இறந்து விடும்.

சீக்கிரமாய முடிவெடுக்க வேண்டும். ஜோகனும் மரியாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் கால்களுக்கடியில் இருந்த குஞ்சுகள் தள்ளாடிக்கொண்டேயிருந்தன.

பிறகு ஜோகன் தான் முதல் அடியை எடுத்து வைத்தது. எட்டு குஞ்சுகளும் அப்பாவின் நிழலில் நடந்தன. மரியா தயங்கித் தயங்கி நடந்தது. திரும்பித்திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தது. முன்னால் போய்க் கொண்டிருந்த ஜோகன் தானாகவே,

தாமதிக்காதே கண்ணே!

என்று கத்தியது. இந்தக்குரல் முட்டைக்குள் இருந்த குஞ்சின் காதுகளில் லேசாய் கேட்டது. அது மீண்டும் முட்டையின் ஓட்டை உடைக்க முயற்சித்தது. தொடர்ந்த முயற்சி இருந்தால் மட்டுமே உடைக்க முடியும் என்பதை மறந்து விட்டது அந்தக் குஞ்சு.

இப்போது அமைதி. எந்த சத்தமும் இல்லை. அப்பாவின் குரலோ, அம்மாவின் குரலோ, சகோதரசகோதரிகளின் குரலோ கேட்கவில்லை. நேரடியான சூரியனின் வெப்பத்தைத் தாங்க முடியவில்லை.

பயந்து விட்டது. எல்லாரும் போயவிட்டார்களா? உடனே வேகவேகமாக ஓட்டைக் கொத்தியது.

டொக் டொக் டொக் டொக்

இப்போது முட்டையின் ஓடு மெல்ல விரிசல் விட ஆரம்பித்தது. மீண்டும் வேகமாக கொத்தியது.

டொக் டொக் டொக் டொக் டொக் டொக்

ஒரு பக்கத்தில் ஓடு உடைந்து விட்டது. அவ்வளவு தான். உடம்பை முறித்து உடைந்த பகுதியை இன்னும் பெரிதாக்கியது குஞ்சு.

அப்பாடா! வெளியே வந்து விட்டது.

என்ன இது ! ஒருவரையும் காணோம்.

அம்மா! அப்பா! அம்மா! அப்பா!

போய் விட்டார்களா? எல்லாரும் போய் விட்டார்களா?

குஞ்சு மெல்ல தட்டுத்தடுமாறி எழுந்து நின்றது. சுற்றிலும் பார்த்தது. கண்கள் கூசின. ஒரே வெளிச்சம். எங்கோ தொலை தூரத்தில் அப்பாவும் அம்மாவும் நடந்து போவதைப் போலத் தெரிந்தது.

அவ்வளவு தூரம் போகமுடியுமா? சுட்டெரித்தது சூரியன்.

மெல்ல நடக்க ஆரம்பித்தது.

அப்பா அம்மா அப்பா அம்மா

என்று கத்தியது. நான்கு அடி நடக்கும். பின்னர் அப்படியே உட்கார்ந்து விடும். கண்ணைக்கட்டிக் கொண்டு வரும். பிறகு நான்கு அடி நடக்கும். மறுபடியும் கண்ணைக்கட்டிக் கொண்டுவரும். அப்படியே உட்கார்ந்து விடும்.

அவ்வளவுதானா? வாழ்க்கை முடிந்து விடுமா?

அதன் அலகுகள் டிக்டிக்டிக் டிக் டிக் என்று அடித்தன. அப்பா அம்மா என்று கத்தக்கூட முடியவில்லை.

அதன் காதுகளில் அந்தக்குஞ்சு முட்டைக்குள்ளே இருந்தபோது ஒலித்த அப்பாவின் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது.

தாமதிக்காதே கண்ணே! தாமதிக்காதே கண்ணே!

ஆமாம் அப்பா. நான் கொஞ்சம் தாமதமாய் வந்து விட்டேன். கொஞ்சம் தாமதம் தான் ஆனால் அதற்கு என் உயிரையே விலையாகக் கொடுக்கப் போகிறேன்.

குஞ்சின் கண்கள் மூடின. அப்படியே காய்ந்த் புல்லில் உட்கார்ந்தது. இதோ இன்னும் சில நிமிடங்களில் என் வாழ்க்கை முடிந்து விடும். தலையைத் தொங்கப்போட்டது.

அப்போது அதன் காதுகளில் மெலிதாக ஒரு குரல் கேட்டது.

தாமதிக்காதே கண்ணே!

அப்பாவின் குரல் தான். பிரமையாக இருக்கும். அப்பாவும் அம்மாவும் குஞ்சுகளும் எப்போதோ போய் விட்டன.

இல்லை. உண்மையாகவே அப்பாவின் குரல் காதுகளில் கேட்டது. மிகுந்த முயற்சி செய்து கண்களைத் திறந்தது.

ஆ! ஜோகன் அப்பா ஓடி வந்து கொண்டிருந்தது.

உடனே எங்கிருந்து தான் அதற்குத் தெம்பு வந்ததோ! எழுந்து ஜோகனை நோக்கி ஓடியது.

அப்பா அப்பா

குஞ்சு ஓடியது.

தாமதிக்காதே என் கண்ணே!

ஜோகன் ஓடி வந்தது.



நன்றி - நான் யார்?

வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்

No comments:

Post a Comment