சிடுமூஞ்சி
ராஜா
உதயசங்கர்
காந்தளூர் நாட்டு ராஜா
காந்தராஜா சிடுமூஞ்சி ராஜா. மூக்குக்கு மேலே கோபம் எப்போதும் உட்கார்ந்திருக்கும்.
எந்த நேரத்தில் கோபப்படுவார் என்று அவருக்கே தெரியாது. கோபம் வந்து விட்டால் என்ன ஆணையிடுவார்
என்று யாருக்கும் தெரியாது. அதனால் மக்கள் சிடுமூஞ்சி ராஜா என்றே கூப்பிட்டார்கள்.
திடீரென்று ஒரு நாள், அவருக்கு
வந்த கோபத்தில்,
“ எல்லாரும் கைகளால் நடக்க
வேண்டும்.. அப்படி நடக்காதவர்களுக்கு ஐம்பது கசையடி கொடுங்கள்.. “ என்று ஆணையிட்டார்.
அவ்வளவுதான். மந்திரி கைகளால் நடந்து குப்புறவிழுந்தார். தளபதி கைகளால் நடந்து மட்ட
மல்லாக்க விழுந்தார். படை வீரர்கள் கைகளால் நடந்து குண்டக்க மண்டக்க விழுந்தார்கள்.
மக்களும் அப்படித்தான் தலைகீழாக நடக்க முயற்சித்து தெருக்களில் விழுந்து கிடந்தார்கள்.
காலையில் படுக்கையிலிருந்து
எழுந்து பல் தேய்க்க மாலையில் தான் ள் கிழமை புறப்பட்டு வெள்ளிக்கிழமை தான் பள்ளிக்கூடம்
போய்ச்சேர்ந்தார்கள் குழந்தைகள். அலுவலகங்கள் எல்லாம் ஆளில்லாமல் குழம்பிப் போயின.
எல்லாப்போக்குவரத்தும் நின்று விட்டது.
காந்தராஜாவின் அரண்மனையில்
சாப்பாட்டை கால்களில் சுமந்து வந்த சமையல்
காரர்கள் உணவைத் திரும்பத் திரும்பக் கீழே போட்டார்கள். காலையில் உணவுமேஜையில் உட்கார்ந்த ராஜா சாயங்காலம்
தான் காலை உணவைச் சாப்பிட்டார்.
உடனே அவருடைய உத்தரவை ரத்து
செய்து விட்டார். இன்னொரு நாள் அவருடைய வீட்டில் நூற்றியோராவது ராணியுடன் சண்டை. அரசவைக்கு
வந்ததும்,
“ இனி பெண்களும் ஆண்களும் சேர்ந்து இருக்கக்கூடாது..
எல்லாரும் தனித்தனியாக வீடுகட்டி இருக்கவேண்டும்.. குழந்தைகள் அவர்களுடைய விருப்பப்படி
யார் கூட வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம்..”
என்று ஆணை போட்டான். அவ்வளவு
தான். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் குய்யோ முய்யோ என்று கத்திக் கூப்பாடுபோட்டுக்
கொண்டு அரண்மனைக்கு ஓடினார்கள்.
அங்கே மந்திரியும் அழுது
கொண்டிருந்தான். தளபதியும் அழுது கொண்டிருந்தான்.
படைவீரர்களும் அழுது கொண்டிருந்தார்கள். மக்கள் கூட்டமாக வந்திருப்பதை அரசரிடம்
தெரிவித்தார்கள்.
காந்தராஜா,
“ யாராவது ஒருத்தர் வரட்டும்..
என்ன விசயம் என்று சொல்லட்டும்..”
அரசரைப் பார்க்க ஒரு பையன்
வந்தான். அவன் பெயர் மதியழகன்.
“ அரசே! உங்களிடம் தனியாகப்
பேச வேண்டும்.. “ என்றான். அரசனும் தனியாக ஒரு அறைக்கு அழைத்துப் போய், கதவைப் பூட்டினான்.
“ யோவ்.. கொஞ்சமாச்சும்
அறிவிருக்கா.. உனக்குக் கோபம் வந்தால் என்ன வேணும்னாலும் சொல்லுவியா.. இப்போது நீ கைகளால்
நடந்து காட்டு.. “
என்றான். கோபத்துடன் நிமிர்ந்து
பார்த்த சிடுமூஞ்சி ராஜா, மதியழகன் கையில் வாள் மின்னுவதைப் பார்த்தான். கைகளால் தலைகீழாக
நிற்கமுயற்சித்தான். பொத்து பொத்துன்னு கீழே விழுந்தான். அவனால் ஒரு நொடி கூட கைகளால்
நடக்கமுடியவில்லை.
“ மக்களுக்குக் கோபம் வந்தா
என்ன செய்வாங்க தெரியுமா.. முட்டாளே.. ”
என்று முழங்கினான் மதியழகன்.
அரசனைப் பார்த்து இப்படி யாரும் பேசியதில்லை. அதிர்ச்சியில் அப்படியே நின்றான் சிடுமூஞ்சி
ராஜா. .
“ அரசே.. உங்களிடம் அதிகாரம்
இருப்பதனால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.. ஆனால் உங்கள் கோபம் நியாயமானது
தானா? என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா? கோபம் வந்தால் அதற்கான காரணம் என்ன? அது
சரியானது தானா? இல்லையா என்று இப்படி ஒரு அறைக்கு வந்து யோசித்துப் பாருங்கள்.. அறைக்குள்
கத்துங்கள்.. குதியுங்கள்.. கோபம் குறைந்ததும் யோசியுங்கள்..”
என்று இதமாகச் சொன்னான்.
சிடுமூஞ்சி ராஜாவுக்கு உடம்பு எல்லாம் வலி. யோசித்தான். மதியழகன் சொன்னதில் ஏதோ உண்மை இருப்பதைப்
போலத் தெரிந்தது.
“ தம்பி.. நீ சொன்னதை யோசிக்கிறேன்..
ஆனால் இங்கே அறைக்குள் நடந்ததை நீ யாரிடமும் சொல்லிவிடாதே..”
என்று சொல்லிச் சிரித்தான்.
மதியழகனும் சிரித்தான். சிடுமூஞ்சி ராஜா இப்போது சிரித்தமூஞ்சி ராஜாவாகி விட்டான்.
ஆனால் தினமும் அவன் ஒரு அரைமணிநேரம் அறைக்குள் சென்று பூட்டிக் கொள்வான். அவனுடைய கோபத்தை
எல்லாம் கத்தித் தீர்த்துவிடுவான்.
மந்திரிகள் அரசன் தியானம்
செய்கிறான் என்று எல்லாரிடமும் சொல்வார்கள்.
நன்றி - அதிசயத்திலும் அதிசயம்
வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்
No comments:
Post a Comment