இலைவெட்டி எறும்பின் சாகசம்
உதயசங்கர்
“ எல்லாரும் சீக்கிரம்
வாங்க.. இன்னிக்கு மழை வந்தாலும் வரும்..”
என்று இலைவெட்டி எறும்புத்தாத்தா
அட்டி சொன்னது. தன்னுடைய உடலிலிருந்து ஒரு ரசாயனத்தை வெளியிட்டது. அந்த ரசாயானம் தான்
செய்தி. அந்தச் செய்தியை ஒரு இலைவெட்டி எறும்பிடம் பரிமாறியது. அந்த எறும்பு மற்றொரு
.எறும்பிடம் பரிமாற அப்படியே எல்லா எறும்புகளுக்கும் செய்தி போய் விட்டது. ஆயிரக்கணக்கான
போர்வீரர் இலைவெட்டி எறும்புகள் புறப்பட்டன.
வடக்கு திசையில் ஏராளமான
செடிகளும் சவான்னா புல்வெளிகளும் இருக்கும் செய்தியை நேற்றே ஒற்றர்படை இலைவெட்டி எறும்புகள்
சொல்லி விட்டன. எல்லாருக்கும் முன்னால் வெட்டும் இலைகள் நல்லதா விஷமுள்ளதா என்று ருசித்துப்
பார்ப்பதற்கு அறிவியலாளர் இலைவெட்டி எறும்புகள் அணிவகுத்தன. அந்த அணிவகுப்பில் தான்
நம்முடைய அட்டின் இலைவெட்டி எறும்பு இருக்கிறது. சுறுசுறுவென அங்கும் இங்கும் அலைந்து
திரிந்து கொண்டிருந்தது. இன்று தான் முதல்முறையாக
வெளியில் வருகிறது.
போவோமே போவோமே
ஊர்வலமாய் போவோமே
இலைகளையே வெட்டுவோம்
கூட்டினிலே கொண்டு சேர்ப்போம்
போவோமே போவோமே
ஊர்வலமாய் போவோமே
என்று பாடியது. ஆனால் மற்ற
இலைவெட்டி எறும்புகள் பாடவில்லை. அவை அட்டினை வித்தியாசமாய் பார்த்தன.
“ டேய் பொடியா! பேசாமல்
வா..”
என்று அட்டினி படைத்தளபதி
மிரட்டியது. அட்டின் வாய் மூடிக் கொண்டது. ஆனால் போரடித்தது. பக்கத்தில் போன அன்னியிடம்,
“ டே ஓட்டப்பந்தயம் ஓடுவோம்
வர்ரியா? “ என்றது.
அன்னி திரும்பிக்கூட பார்க்கவில்லை.
ஆனால் அட்டின் வேகமாக முன்னால் ஓடியது. கொஞ்சதூரம் சென்று நின்று பார்த்தது. இலைவெட்டி
எறும்புப்படை தூரமாய் வந்து கொண்டிருந்தது. மறுபடியும் கொஞ்ச தூரம் ஓடிப் போய் பார்ப்போம்
என்று நினைத்து ஓடியது.
ஒரு மணல் மேட்டின் மீது
ஏறி நின்று பார்த்தது.
அட! எங்கே போனார்கள்? ஒருவரையும்
காணோம். திரும்ப வந்த பாதையில் ஓடியது. எங்கும் இலைவெட்டி எறும்பின் வாடையே இல்லை.
எந்த இடத்தில் திரும்பினார்கள் என்று தெரியவில்லையே.
அட்டினுக்குக் கவலை வந்து
விட்டது. திரும்பிப்போனால் காலனியில் தாத்தா அட்டியின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாதே.
என்ன செய்வது? என்று யோசித்துக் கொண்டு நின்றது.
“ யார்ரா அது? குறுக்கே
வழியில் நின்னுகிட்டு டிராபிக் ஜாம் பண்ணிக்கிட்டிருக்கிறது? “
அட்டின் திரும்பிப்பார்த்தது.
ஒரு சித்தெறும்பு எதிரே நின்று முன்காலைத் தூக்கி எச்சரித்தது. அதைப் பார்த்ததும் அட்டினுக்குக்
கோபம் வந்து விட்டது.
“ பொடிப்பயலே! யார்கிட்டே
பேசிக்கிட்டிருக்கே தெரியுமா? எவ்வளவு கனமான இலையாக இருந்தாலும் வெட்டித்தள்ளிருவேன்..
நீயெல்லாம் ஜுஜுபி..”
என்று கர்ச்சித்தது.
“ யாரைப் பார்த்து பொடிப்பயல்னு
சொன்னே.. நான் தான் எங்கள் காலனியில் மூத்த தாத்தா” என்று அந்தச்
சித்தெறும்பு சொன்னது. அதைக்கேட்ட அட்டின் உடனே மன்னிப்பு கேட்டது. மூத்தவர்களை மதிக்க
வேண்டும் என்பது அட்டினின் தாத்தா அட்டி சொல்லிக்கொடுக்கும் முதல்பாடம்.
“ என்னப்பா.. நீ தனியா
நிக்கிறே? “ என்று சித்தெறும்பு தாத்தா கேட்டது.
“ ஆமாம் தாத்தா.. என்னுடைய
கூட்டத்தைத் தவற விட்டுட்டேன்..”
“ சரி வா என்னுடைய
காலனி இங்கே தான் அங்கே போய் பேசுவோம் ”
என்றது சித்தெறும்புத்
தாத்தா. அட்டினுக்கு வேறு வழி தெரியவில்லை. திரும்ப அதனுடைய கூட்டம் வரும்போது சேர்ந்து
கொள்ளலாம் என்று நினைத்தது.
சித்தெறும்புத்தாத்தாவும்
அட்டினும் பேசிக் கொண்டே நடந்து போனார்கள்.
“ சரி உன்னைப் பத்திச்
சொல்லேன்.. கேட்போம்..”
“ அதுவா தாத்தா..
நங்கள் ஒரு வித்தியாசமான எறும்பு.. “
“ அப்படி என்னப்பா வித்தியாசம்..?
“
என்றது சித்தெறும்புத்தாத்தா.
“ உலகத்தின் முதல் விவசாயி
நாங்கள் தான்.. “
அட்டின் சொன்னதைக் கேட்ட
தாத்தா வாயைப் பிளந்து நின்றது. பிறகு,
“ எப்படி? எப்படி? எப்படி?”
“ எதுக்கு இத்தனை
எப்படி? கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே விவசாயம் செய்கிறோம்..
“ என்று சொல்லித் தலையை நிமிர்த்தியது.
“ மனிதர்களுக்கு முன்னாடியா?
ஆச்சரியமா இருக்கே.. வா இப்படி நிழலில் நின்று பேசுவோம்.. நீ அந்த இலையைக்
கடி.. நான் இந்த விதையைக் கொறிக்கிறேன்..”
என்றது சித்தெறும்புத்
தாத்தா.
அருகிலிருந்த ஒரு இலையை
வெட்டுவதற்காகச் சென்றது அட்டின் இலைவெட்டி எறும்பு. அப்போது அதன் தலைப்பிளவிலிருந்த
வேலைக்கார எறும்பு ” அட்டின் அட்டின் ஆபத்து “ என்று சொன்னது. அபோது
தான் சித்தெறும்புத்தாத்தா கவனித்தது. அட்டின் தலையில் ஒரு பிளவும் அதில் ஒரு குட்டி
எறும்பும் இருப்பதைப் பார்த்தது.
“ இதென்னடா ஆச்சரியமா இருக்கு?
இந்தக் கூத்தை நான் பார்த்ததில்லையே..”
என்றது தாத்தா. அட்டின்
உடனே அந்தச் செடியிலிருந்து திரும்பி வேறொரு செடியை நோக்கிப் போனது.
“ தாத்தா என்னை எச்சரித்தது
எங்கள் காலனியிலிருக்கும் வேலைக்காரன் அட்டு.. நச்சுச்செடியாகவோ, ஆபத்தான பூச்சிகள்,
பூஞ்சைகள் இருக்கும் இலையாகவோ செடியாகவோ இருந்தால் அட்டு என்னை எச்சரித்து விடும்.
அதையும் மீறி நாங்கள் போய் விட்டால் அதுவே சண்டை போட்டு எதிரிகளை விரட்டி விடும்..
நச்சை நல்லதாக்கி விடும்.. அந்தப் பிளவில் தான் நாங்கள் வெட்டிய இலைகளைத்தூக்கிக் கொண்டு
போவோம்…”
என்றது அட்டின். சிறிய
விதையைக் கொறித்துக் கொண்டிருந்த தாத்தா கவனிக்காத மாதிரி இருந்தது. அதற்கு தாழ்வுமனப்பான்மை
வந்து விட்டது.
“ எப்படி விவசாயம் செய்வீர்கள்?
அதைச் சொல்லு.. பீலா தானே விடறே..”
என்று கேட்டது தாத்தா.
எப்படியும் பொய் தான் சொல்லப்போகிறது என்று உறுதியாக நம்பியது. அட்டின் குரலைச் சரிப்படுத்திக்
கொண்டு,
“ தாத்தா.. நாங்கள் வெட்டிக்
கொண்டு போய் எங்கள் காலனியில் சேர்ப்போம்.. உங்கள் காலனி மாதிரி தான்.. எல்லாவற்றிற்கும்
தனித்தனி அறைகள் , வரவேற்பறை, படுக்கையறை, உணவு சேமிப்பறை, குழந்தைகள் தங்கும் அறை
ராணி அறை என்றிருக்கும். கூடுதலாய் நாங்கள் மிகப்பெரிய தோட்டம் வைத்திருப்போம்.. “
“ என்னது தோட்டமா? “
ஆமாம் தாத்தா.. தோட்டம்
தான்.. அதில் தான் நாங்கள் வெட்டிக் கொண்டு போகிற இலைகளை எல்லாம் துண்டு துண்டாக்கி
விதைப்போம்.. பிறகு எங்களுடைய சிறப்பு விருந்தினரான பூஞ்சை உயிரியை அந்த இலைகளில் விடுவோம்..
அந்த பூஞ்சை உயிரி அதற்குத் தேவையான சத்துகளைச் சாப்பிடும் அதனுடைய விளைவாக மக்கிப்போன
இலைகளிலிருந்து புதிய காளான்கள் முளைக்கும்.. அந்தப் புதிய காளான்களை வெட்டி எடுத்துக்
கொண்டு போய் உணவு சேமிப்பறையில் வைத்துப் பாதுகாப்போம்.. இது தான் எங்கள்
விவசாயம்..ஸ்ஸ் யப்பா..மூச்சு வாங்குது ”
“ எனக்கே மூச்சு
வாங்குது.. இவ்வளவு வேலைகள் பார்க்கிறீங்களா? ”
“ ஆனா பாருங்க
இன்னிக்கு என்னுடைய அவசரத்தாலே எங்க கூட்டத்தை மிஸ் பண்ணிட்டே.ன்.”
என்று கவலையுடன் அட்டின்
சொன்னதைத் தாத்தா கேட்ட மாதிரியே தெரியவில்லை. அது தலையைத் தூக்கி சுற்றிச் சுற்றி
எதையோ மோப்பம் பிடித்தது.
“ டேய் அட்டின் ஓடறா..
அலுங்கு வர்றான்.. ( ஆர்மாடில்லோ ) “
என்று கத்தியது சித்தெறும்புத்தாத்தா.
“ ஐய்யய்யோ அலுங்கா? “
என்று அலறிக் கொண்டே கண்மண் தெரியாமல் ஓடியது அட்டின் இலைவெட்டி எறும்பு.
அங்கே தூரத்தில் ஒரு அலுங்கு
தரையை முகர்ந்தபடியே வந்து கொண்டிருந்தது. அலுங்கு தான் இலைவெட்டி எறும்புகளின் மிகப்பெரிய
எதிரி. ஐந்து நிமிடத்தில் ஆயிரக்கணக்கான எறும்புகளைத் தின்று தீர்த்து விடும். அதன்
கண்ணில் படக்கூடாது.. ஆபத்து வந்து விட்டால் அட்டி தாத்தா எப்படியாவது தப்பிக்க வழி காட்டி விடுவார்.
மெல்ல அருகிலிருந்த நுணா
மரத்தின் மீது ஏறியது அட்டின் இலைவெட்டி எறும்பு. அங்கிருந்து பார்த்தால் தூரத்தில்
இலைவெட்டி எறும்புகளின் படை இலைகளைச் சுமந்து கொண்டு வந்து கொண்டிருந்தது.
ஆகா.. ஆபத்தாச்சே..” என்று வாய்விட்டு
கத்தியது அட்டின்.
என்ன செய்வது ? என்ன செய்வது?
என்று யோசித்தது. ஆபத்தான யோசனை தான். ஆனால் என்ன செய்ய முடியும்? எப்படியாவது படையைக்
காப்பாற்ற வேண்டுமே. கீழே இறங்கியது ஆட்டின்.
அலங்கு வந்து கொண்டிருந்த
வழியில் தன்னுடைய ரசாயனத்தைச் சுரந்தது. பிறகு வேகவேகமாகத் தன்னை அலங்கு பார்க்கிறதா
என்று திரும்பிப் பார்த்தது. அது நினைத்ததைப் போலவே எறும்பின் ரசாயனத்தை அலங்கு முகர்ந்து
பார்த்ததும் சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் எறும்புப்புற்றைத் தேடியது.
தூரத்தில் தலையில் இலையைச்
சுமந்து கொண்டு அட்டின் போவதைப் பார்த்ததும் வேகமாகப் பின் தொடர்ந்தது. அட்டின் உயிரைக்
கையில் பிடித்துக் கொண்டு ஓடியது. ஓடிக் கொண்டே திரும்பிப்பார்க்கும் போது எதிர்பாராத
விதமாக ஒரு குழிக்குள் விழுந்து விட்டது. அது தீ எறும்புகள் கைவிட்டு விட்டுப்போன புற்று.
அப்படியே உருண்டு உருண்டு கீழேயே போய் விட்டது.
அந்தப் புற்றில் அப்படியே
அமைதியாக பதுங்கி இருந்தது. அலங்கு அந்தப் புற்றின் ஒவ்வொரு ஓட்டையிலும் முகர்ந்து
பார்த்தது. மூக்கை வைத்து லேசாக இடித்துப் பார்த்தது. மேலேயிருந்து மண் உள்ளே விழுந்து
அட்டின் இருந்த இடத்தை மூடி விட்டது.
ஒரே இருள். அட்டினுக்கு
மூச்சுத் திணறியது. மெல்ல மண்ணைத் தள்ளித் தள்ளி மேலே வந்தது. இப்போது எந்தச் சத்தமும்
இல்லை.
உள்ளே இருந்த சுரங்கம்
வழியாகப் போய் வேறு ஒரு ஓட்டை வழியே வெளியேறியது. சுற்றுமுற்றும் பார்த்தது. அலங்கு
இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
தன்னுடைய கூட்டம் தப்பித்திருக்குமா?
மெல்ல தன்னுடைய காலனியைப் பார்த்து நடந்தது. சோர்ந்து போய்விட்டது அட்டின். இன்று முழுவதும்
அதற்குத் தோல்வி தான். கூட்டத்திலிருந்து விலகிப் போனது. நல்வாய்ப்பாக அலங்கிடமிருந்து
தப்பித்தது. காலனியில் அதைச் சேர்த்துக் கொள்வார்களா?
அட்டினுக்குக் கவலையாக
இருந்தது. இதோ இன்னும் சில நிமிடங்களில் தன்னுடைய முடிவு தெரிந்து விடும்.
தூரத்தில் காலனி தெரிந்தது.
எப்போதும் அமைதியாக இருக்கும் காலனியில் அன்று ஏதோ வித்தியாசமாய்த் தெரிந்தது.
அட்டின் அருகில் போனபோது
தான் தெரிந்தது.
என்ன ஆச்சரியம்! ராணி இலைவெட்டி
எறும்பு வாசலில் நின்றது. சுற்றிலும் படைவீரர்களின் முழக்கம்.
அட்டின்! அட்டின்! அட்டின்!
அட்டினுக்கு எதுவும் புரியவில்லை.
ராணி இலைவெட்டி எறும்பு,
“ சபாஷ் அட்டின்.. நீ சாமர்த்தியமாக
யோசித்து அலங்கை வழி மாற்றி விட்டாய்.. இல்லையென்றால் இன்றைக்கு நம்முடைய படைவீரர்கள்
உயிருடன் திரும்பியிருக்க மாட்டார்கள்.. சபாஷ் அட்டின்.. இன்றைக்கு அட்டினுக்கு பிரமாதமான
விருந்து கொடுப்போம்..”
என்று சொன்னது.
” எனக்குக்கிடையாதா?
“ என்ற குரல் கீழேயிருந்து கேட்டது. அப்போது தான் அட்டின் பார்த்தது.
அட நம்ப சித்தெறும்புத்தாத்தா.
” உங்களுக்கு
இல்லாத விருந்தா? “ என்று அட்டின் தாத்தாவைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டது.
எல்லாரும்
ஆடிக் கொண்டே காலனிக்குள் போனார்கள்.
No comments:
Post a Comment