எதையும்
கேள்வி கேள்
உதயசங்கர்
பட்டியூர்
நாட்டில் பஞ்சம். மழை பொய்த்து விட்டது. வேலையில்லை. மக்கள் சாப்பிடவே சிரமப்பட்டார்கள்.
எந்தப் பொருளும் கிடைக்கவில்லை. ஆனால் பட்டியூர் ராஜா பராக்கிரமன் எல்லாப்பொருட்களுக்கும்
வரி போட்டார். வரி கட்ட முடியவில்லை என்றால் வரிக்கு வரி போட்டார். மக்கள் அவரிடம்
முறையிட அரண்மனைக்குப் போனார்கள்.
அரண்மனை தங்கத்தால் இழைக்கப்பட்டிருந்தது. வெள்ளியில்
நீரூற்றுகள் கட்டப்பட்டிருந்தன. வைரங்களையும் வைடூரியங்களையும் ரத்தினங்களையும் பவளங்களையும்
பாதைகளில் பதித்திருந்தார்கள். மரங்களில் முத்துக்களைத் தோரணமாகக் கட்டித் தொங்க விட்டிருந்தார்கள்.
அரண்மனையில் ராஜா பராக்கிரமன் இல்லை. அவர் வெளிநாடு சுற்றுப்பயணம் போயிருப்பதாகச் சொன்னார்கள்.
எப்போது
வருவார் என்று தெரியாது என்று வாயிற்காப்போன் சொன்னான். அரண்மனை வாசலில் அவருடைய சட்டையணியாத
முழு உருவப்படம் சிரித்தபடி இருந்தது. ராஜா எப்போதும் எப்போதும் சட்டை அணிய மாட்டார்.
உடற்பயிற்சி நிலையத்திற்குப் போய் உடற்பயிற்சி செய்து உடம்பைக் கட்டுடலாக்கி வைத்திருந்தார்.
உருண்டு திரண்ட தோள்கள், விரிந்த மார்பு, தூண்களைப் போன்ற கால்கள் கொண்ட பயில்வானாக
இருந்தார். நாடு முழுவதும் பளு தூக்கியபடியோ,
கர்லாக்கட்டை சுழற்றியபடியோ, தண்டால் எடுத்தபடியோ, பஸ்கி எடுத்தபடியோ பெரிய பெரிய விளம்பர
பதாகைகள் இருந்தன.
அவர்
நாட்டில் இருக்கிறாரோ இல்லையோ தினமும் அவர் மக்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.
“ எனதருமை
மக்களே நாடு இப்போது மிகவும் இக்கட்டான நிலைமையில் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும்.
இதற்குக் காரணம் நீங்கள் போனபிறவியில் செய்த பாவங்கள் தான். எனவே பாவங்களைப் போக்க
இனி தினமும் பஜனைகள் செய்யுங்கள். நீங்கள் பஜனைகள் செய்வதற்காக நாடுமுழுவதும் கோயில்களை,
சர்ச்சுகளை, மசூதிகளைக் கட்டுவேன்.. உங்கள் பாவம் தொலைய மனமுருகிப் பிரார்த்தனை செய்யுங்கள்.
கடவுள் அருள் கிடைத்து விட்டால் நாடு வளம் பெறும்… பஞ்சம் பசி, பட்டினி எல்லாம் தொலையும்.
நாம் அனைவருமே பெரியாணி, சின்னானி போல பணக்காரராகி விடுவோம்.. வாழ்க பட்டியூர்! “ என்று
முழக்கமிட்டார்.
மறுநாளே
நாடுமுழுவதும் இதுவரை பெயர் தெரியாத கடவுள்கள் உருவானார்கள். அவர்களுக்குப் பிரம்மாண்டமான
வழிபாட்டுத்தலங்கள் கட்டப்பட்டன. முற்பிறவி
இப்பிறவி அடுத்தபிறவி என்று கதை சொல்லும் கதைசொல்லிகள் உருவானார்கள். சொர்க்கம் நரகம்
என்று புதிய கதைகளைச் சொன்னார்கள். ஜோசியர்கள், குறிசொல்பவர்கள் தோன்றினார்கள்.
அவர்கள்
மக்களின் கஷ்டங்களுக்குப் பரிகாரம் சொன்னார்கள். நடுராத்திரி பனிரெண்டு மணிக்கு வீட்டுக்கு
முன்னால் தகரத்தில் மேளம் தட்டு என்றார்கள். இல்லையென்றால் பகல் பனிரெண்டு மணி வெயிலில்
தெருவுல் படுத்து உருளு என்றார்கள்.
நாடு
முழுவதும் புதிது புதிதாக வழிபாட்டுத்தலங்கள் நிறைந்து விட்டன. எப்போதும் அங்கே சிறப்பு பூசை, ஆராதனை, பிரார்த்தனை, என்று
நடந்து கொண்டேயிருந்தன.
மக்களும்
நம்முடைய கஷ்டத்தையெல்லாம் புதிய வழிபாட்டுத்தலங்களில் உருவான தெய்வங்கள் தீர்த்து
விடுவார்கள் என்று நம்பினார்கள். எனவே போட்டி போட்டுக் கொண்டு கடன் வாங்கி பூசைகள்
செய்தார்கள். கொடைகளை நடத்தினார்கள். காணிக்கை போட்டார்கள். நன்கொடை அளித்தார்கள்.
ஆனால் எந்தப் பிரச்னையும் தீரவில்லை. எதுவும் நடக்கவில்லை.
நாட்டின்
நிலைமை இன்னும் மோசமானது. ஒரு வேளை சாப்பாடு
கிடைக்காதவர்களுக்கு இப்போது இரண்டு வேளை கிடைக்கவில்லை. இரண்டு வேளை உணவில்லாதவர்களுக்கு
மூன்று வேளையும் உணவு கிடைக்கவில்லை.
வேலையில்லை.
விவசாயப்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கோபப்பட்டார்கள். ராஜா பராக்கிரமன்
தன்னுடைய படத்தை அனைத்து வீடுகளிலும் ஒட்டி வைக்க வேண்டும். தான் மனிதப்பிறவியில்லை.
ஒரு தெய்வப்பிறவி என்று சொன்னான்.
அப்போது
தென் திசையிலிருந்து ஒரு வயதான கிழவர் தன்னுடைய கைத்தடியை ஊன்றிக் கொண்டு வந்தார்.
மக்களிடம் அவர்களுடைய அறிவை நம்பச்சொன்னார். சிந்திக்கும்படி தூண்டினார். எதையும் ஏன்?
எதற்கு என்று கேளுங்கள் என்று சொன்னார். மூடநம்பிக்கைகளை கைவிடச் சொன்னார்.
உன்
அறிவை நம்பு, எதையும் கேள்வி கேள் என்று சொன்னார். அதற்காக ஊரு ஊராகச் சென்றார். சிலர்
கல்லெறிந்தார்கள். சிலர் செருப்பை எறிந்தார்கள். ஆனால் அவர் இதற்கு அஞ்சாமல் மக்களிடம்
பேசிக் கொண்டேயிருந்தார்.
. மக்களுக்குக்
கொஞ்சம் கொஞ்சமாக மயக்கம் தெளிந்தது. அவர்கள் ஒன்று சேர்ந்தனர். பட்டியூர் ராஜா பராக்கிரமனின்
அரண்மனையைக் கைப்பற்றினார்கள். அதிலிருந்த விலை உயர்ந்த பொருட்களை விற்று தொழிற்சாலைகள்
கட்டினார்கள்.
அரண்மனை
பல்கலைக்கழகமானது. நாட்டில் இருந்த வழிபாட்டுத் தலங்களை அறிவியல் ஆராய்ச்சி கூடங்களாகவும்,
பள்ளிக்கூடங்களாகவும் மாற்றினார்கள்.
பெரியாணி
சின்னானியின் சொத்துகளைப் பிடுங்கி அவர்களையும் எல்லாரையும் போல வேலை பார்க்கச் சொன்னார்கள்.
நம்பிக்கையாளர்களுக்காக
ஊருக்கு ஒரு வழிபாட்டுத்தலத்தை மட்டும் விட்டு வைத்தார்கள். இப்போது பட்டியூர் அறிவூராக
மாறிவிட்டது. அவர்கள் இப்போது அந்த வயதான தாடிக்கிழவர் வார்த்தைகளை ஊருக்கு ஊர் எழுதி
வைத்தார்கள்.
” அறிவை
நம்பு. எதையும் ஏன் எதற்கு என்று கேள் “
பழைய
ராஜா பராக்கிரமன் என்ன ஆனான்? என்று கேட்கிறீர்களா?
அறிவை
நம்பு. எதையும் ஏன் எதற்கு என்று கேள். என்று வீட்டில் உட்கார்ந்து கோடி முறை இம்போசிசன்
எழுதிக் கொண்டிருக்கிறான்.
நன்றி - அதிசயத்திலும் அதிசயம்
வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்
அடேயப்பா... அழகான செய்திகளும் வரலாறுகளும் விருப்பங்களும்... ஒரே கதையில்... சிறப்புங்க மிகச்சிறப்புங்க...
ReplyDelete