Sunday, 8 December 2024

அதிசயப் பென்சில்

 

அதிசயப் பென்சில்

உதயசங்கர்


அன்று வகுப்புக்கு வரும்போது சச்சின் ஒரு அதிசயமான பென்சிலைக் கொண்டு வந்திருந்தான். ஆமாம். அந்தப் பென்சிலின் தலையில் சிறிய தொப்பியும் அதற்குக்கீழே இரண்டு கண்களும் மூக்கும் வாயும் இருந்தன. ஓவியமாக வரையப்பட்டிருந்தாலும் அச்சு அசல் அப்படியே மனிதச்சாயலில் இருந்தது அந்தப் பென்சில். சச்சினுக்குப் பெருமை. அப்பா வேலை காரியமாக ஜப்பானுக்குப் போயிருந்தபோது வாங்கி வந்தார் என்று சொன்னான்.

அப்படி என்ன அதிசயம் என்று தானே கெட்கிறீர்கள்? அந்தப்பென்சில் பேசும். பென்சில் பேசுமா? ஆமாம். அது ஒரு ரோபோட் பென்சில். ஆசிரியர் அரைமணிநேரம் எழுதிப்போடும் பாடங்களை நோட்டின் மீது பென்சில் நுனியை வைத்தால் போதும் ஐந்து நிமிடங்களில் எழுதி முடித்து விடும்.

அதே போல முந்தின நாள் நடத்திய பாடங்களிலிருந்து ஆசிரியர்  கேள்வி கேட்பார். நொடிகளுக்குள் பதிலை சச்சினின் காதில் சொல்லி விடும். ஆனால் சச்சின் அந்தப் பாடங்களை ஒரு தடவையாவது வாசித்திருக்க வேண்டும். எல்லாப்பையன்களும் வகுப்பில் சச்சினையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் ஆசிரியர் என்ன கேள்வி கேட்டாலும் டக் டக்கென்று பதில் சொல்லிவிடுவானே சச்சின்.

ஒரு நாள் அரவிந்தனின் தங்கக்கலர் பேனா தொலைந்து விட்டது. இடைவேளை சமயத்தில் தான் யாரோ எடுத்திருக்கிறார்கள். யார் எடுத்தார்கள் என்று யாருக்கும் தெரியாது. அரவிந்தன் அழுது கொண்டிருந்தான். பேனா இல்லாமல் வீட்டுக்குப் போனால் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. அன்று தான் அந்தப் பேனாவைப் பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு வந்திருந்தான்.

ஆசிரியரிடம் அழுதுகொண்டே சொன்னான்.  ஆசிரியர்,

“ எடுத்தவன் ஒழுங்கா மரியாதையா கொண்டு வந்து கொடுத்திரு.. நான் ஒண்ணும் செய்யமாட்டேன்.. நீ வேணுக்குமின்னு எடுத்திருக்க மாட்டே.. சும்மா பார்க்கிறதுக்காகக் கூட எடுத்திருக்கலாம்.. ஒழுங்கா கொடுத்திட்டேன்னா.. இதோட போயிரும்.. இல்லை.. எல்லார் பையையும் செக் பண்ணிக் கண்டுபிடிச்சேன்னு வை.. அவ்வளவு தான் பிரின்சிபல்ட்ட கூட்டிட்டுப் போயிருவேன் ..”

என்று கோபத்தில் கத்தினார். பையன்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர். யார் எடுத்திருப்பாங்க என்று அவர்களுக்குள் குசுகுசுன்னு பேசிக் கொண்டனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. வகுப்பறை அமைதியாக இருந்தது. அந்த அமைதியே பயத்தைத் தருவதாக இருந்தது.

அரவிந்தன் கேவிக் கேவி அழுது கொண்டிருந்தான்.

ஆசிரியர் ஒவ்வொரு பையனின் முகத்தையும் பார்த்துக் கொண்டே வந்தார். க்டைசியில் ,

“ சரி பையைச் செக் பண்ணிர வேண்டியதான்.. கடைசி பெஞ்சிலேருந்து ஆரம்பிக்கலாம்.. டேய் உமேஷ்.. உன் பையைக் கொண்டு வந்து இங்கே மேஜை மேலே எல்லாத்தையும் எடுத்து வை.. “ என்று சொன்னார். பையன்கள் முகத்தில் கலவரம் தோன்றியது.

அப்போது அதிசயப்பென்சில் சச்சினின் காதில்,

“ அரவிந்தன் டெஸ்க்குக்கு கீழே கிடக்குற புத்தகத்துக்குள்ளே இருக்குது..” என்று கிசுகிசுத்தது.

உடனே சச்சின் எழுந்து,

“ சார் அரவிந்தன் டெஸ்குக்குக் கீழே ஒரு புத்தகம் கிடக்கு.. அதைப் பார்க்கச் சொல்லுங்க. சார்.. “ என்றான். உடனே வகுப்பறையே அரவிந்தன் டெஸ்கைப் பார்த்தது. அரவிந்தன் அப்போது தான் கவனித்தான். சமூக அறிவியல் புத்தகம் கீழே கிடந்தது. எடுத்துப் பார்த்தான். உள்ளே பத்திரமாக இருந்தது தங்கக்கலர் பேனா.

ஆசிரியருக்கு ஆச்சரியம்.

” எப்படிடா உனக்குத் தெரிந்தது சச்சின்? “

“ ஒரு கெஸ் தான் சார்..” என்று பதிலளித்தான். அப்போது ஆத்விக் குரல் கொடுத்தான்.

“ சார் அவன் ரோபோ பென்சில் வைச்சிருக்கான் சார் “ என்று கத்தினான். ஆனால் ஆசிரியர் அவன் சொன்னதைக் கவனிக்கவில்லை.

மறுநாள் சமூக அறிவியல் தேர்வு. இப்போதெல்லாம் சச்சின் சரியாகப் படிப்பதேயில்லை. அதிசயப்பென்சில் ரோபோ இருக்கிற தைரியம். அன்றும் அப்படித்தான். படிக்காமல் நெட்பிளிக்ஸில் புதிதாக வந்த அனிமேஷன் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். காலையில் படித்துக் கொள்ளலாம் என்று நினைத்தான். காலையிலும் அவனால் படிக்க முடியவில்லை. அம்மா கடைக்குப் போய்விட்டு வரச் சொன்னாள். நேரம் போய் விட்டது.

அப்படியும் ஒரு தைரியம். அதிசயப்பென்சிலை சமூக அறிவியல் புத்தகத்தில் வைத்திருந்தான். அது எப்படியும் படித்திருக்கும் என்று நினைத்தான்.

பரீட்சை நடந்தது. கேள்விகளுக்கு அதிசயப்பென்சில் பதிலும் சொன்னது. ஆனால் சச்சினுக்குத் தான் எழுதமுடியவில்லை. அவன் தான் படிக்கவில்லையே. படித்தால் தானே பென்சில் சொல்வதை எழுதமுடியும். அன்றையத் தேர்வை அவன் நன்றாக எழுதவில்லை. அவன் அதிசயப்பென்சிலைக் குறை சொன்னான். திட்டினான். அதற்குச் சொல்லத் தெரியவில்லை என்றான்.

மறுநாள் காலையில் சச்சின் பள்ளிக்கூடம் புறப்படும்போது கவனிக்கவில்லை. வகுப்பறையில் வைத்துத்தான் தேடிப் பார்த்தான். அதிசயப்பென்சிலைக் காணவில்லை. பதட்டமாகி பையைக் கீழே கொட்டிப் பார்த்தான்.

இல்லை. அதிசயப்பென்சில் இல்லை.

ஒவ்வொரு நோட்டாக, புத்தகமாகத் திருப்பிப்பார்த்தான். சமூக அறிவியல் புத்தகத்தின் முதல்பக்கத்தில் புதிதாக ஏதோ எழுதப்பட்டிருந்தது.

“ அன்புள்ள சச்சின், நான் போகிறேன்.. நான் உன்னுடன் இருக்கும்போது படிப்பில் உனக்கு ஒரு அலட்சியம் உண்டாகிவிடுகிறது. மனிதர்களுக்கு உதவி செய்வதற்காகத் தான் இயந்திரங்களே தவிர மனிதர்களுக்கு மாற்று அல்ல. நீயாகப் படித்து எடுக்கும் மதிப்பெண்களே உனக்கு நீ யார் என்று காட்டும்.. என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டதற்கு அன்பும் நன்றியும்.. வருகிறேன்.. பை..”

சச்சின் வாசிக்க வாசிக்க எழுத்துகள் மறைந்து கொண்டே வந்தன. சச்சினின் கண்களில் நீர் துளிர்த்தது.



 

1 comment: