அதிசயத்திலும்
அதிசயம்
உதயசங்கர்
ஆவூர் ராஜாவின் பெயர் செல்வராஜா.
ஆனால் மக்கள் அவனுக்கு சூட்டிய பெயர் அதிசய ராஜா. ஐந்துவேளை சாப்பாடு. மூன்று நேரத்தூக்கம்.
நினைத்த நேரம் விளையாட்டு, நடனம், பாட்டு, என்று இருந்தான் அதிசயராஜா. எல்லாம் போரடித்து
விட்டது. சரி கதை கேட்கலாம் என்று கதைசொல்லிகளை வரச்சொன்னான். தினமும் கதை கேட்டான்.
கதைசொல்லிகள் திரும்பத்திரும்ப
ராமாயாணம், மகாபாரதம், பஞ்சதந்திரக்கதைகள், முல்லாக்கதைகள், பைபிள கதைகள், என்று கழுத்தறுத்தார்கள்.
அதுவும் போரடித்தது.
ஒருநாள் தோட்டத்தில் உலாவிக்
கொண்டிருக்கும்போது ஆண் இருவாட்சிப்பறவை மரப்பொந்துக்குள்
பெண் இருவாட்சிப்பறவையை வைத்து மண்ணைக்குழைத்து பூசிக் கொண்டிருந்தது. உணவு தருவதற்காக
ஒரே ஒரு சின்னஞ்சிறு ஓட்டையை ஏற்படுத்தியிருந்தது.
“ என்ன டா இது அதிசயமா
இருக்கு! “ என்று நினைத்தார் அதிசயராஜா. மறுநாள் அரசவைக் கூட்டினார்.
“ தினம் ஒரு அதிசயத்தைக்
காட்ட வேண்டும் “ என்று ஆணையிட்டார். நாடு முழுவதும் முரசறைந்து அறிவிக்கப்பட்டது.
தினமும் ஒருவர் வந்தார். மந்திரிகளும் தினம் தினம் ஒரு அதிசயத்தை ராஜாவிடம் காட்டி
பரிசுகளைப் பெற்றனர். அதில் பாதியை அதிசயத்தைக் காட்டியவருக்குக் கொடுத்தனர். அப்படி
அதிசய ராஜாவுக்கு ஆச்சரியம் வரவில்லை என்றால் கொண்டு வந்தவருக்கு கசையடியும் கிடைத்தது.
பாம்பை விழுங்கும் தவளையைக்
காட்டினர்
காக்கா கூட்டில் குயில்
முட்டையிடும் தந்திரத்தைக் காட்டினார்கள்.
பூச்சிகளைச் சாப்பிடும்
செடியைக் காட்டினார்கள்.
மனிதர்களைப் போல விவசாயம்
செய்யும் இலைவெட்டி எறும்பைக் காட்டினார்கள்.
குஞ்சுகள் பொரிக்கும் கடல்குதிரையைக்
காட்டினார்கள்.
கொஞ்சநாட்களில் அதிசய ராஜாவின்
ஆச்சரியம் வற்றி விட்டது. எதைக் காட்டினாலும் அவர் ஆச்சரியப்படவில்லை. அதிசயப்படவில்லை.
அவருக்கு ஆச்சரியம் வராததினால் மக்களுக்குத்
தண்டனையும் கிடைத்தது.
அநேகமாக கசையடி வாங்காத
மக்களே இல்லை. மக்கள் கவலைப்பட்டனர். ராஜாவின் நோய்க்கு மருந்தில்லையா என்று எல்லாவைத்தியரிடமும்
கேட்டார்கள். அல்லோபதி மருத்துவர் இல்லை என்றார். , ஹோமியோபதி மருத்துவர் இல்லை என்றார்.,
சித்தமருத்துவரும் இல்லை என்றார்., ஆயுர்வேதம், யுனானி என்று எல்லாவைத்தியருமே இல்லை
என்றார்கள்.
அந்த நாட்டின் எல்லையில்
அறிவுக்கரசன் என்ற பையன் தன்னுடைய தாத்தாவுடன் வாழ்ந்து வந்தான். அவன் அரசரின் பைத்தியக்காரத்தனத்தைக் கேள்விப்பட்டான். மிகவும் வருத்தமாக இருந்தது.
அப்போது அவனுடைய தாத்தா அவனிடம் ஒரு விஷயம் சொன்னார்.
அவன் அதிசய ராஜாவிடம் வந்து,
“ அதிசயராஜா.. நான் உங்களுக்கு
இதுவரை யாரும் காட்டாத அதிசயத்தைக் காட்டுகிறேன்.. ஆனால் நீங்கள் என்னுடன் பயணம் செய்யவேண்டும்..”
என்று சொன்னான்.
“ அதற்கு என்ன வருகிறேன்..
ஆனால் அதிசயத்தைக் காட்டவில்லை என்றால்..? “
“ நீங்கள் என்ன வேண்டுமானாலும்
செய்து கொள்ளுங்கள்..”
என்று தலைநிமிர்ந்து சொன்னான்
அறிவுக்கரசன்.
அவர்கள் கப்பலில் பசிபிக்
சமுத்திரத்துக்குப் போனாரகள். அங்கே இரண்டு தீவுகள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருந்தன.
ஒன்றின் பெயர் சமோவா. இன்னொன்று ரொங்கோ. அறிவுக்கரசன் அதிசய ராஜாவை சமோவாவுக்கு அழைத்துச்
சென்றான்.
அன்று புதன்கிழமை காலை
பத்துமணி. அப்படியே நடந்து அருகிலிருந்த ரொங்கோ தீவுக்குப் போனார்கள். ஐந்து நிமிடத்தில்
போய்ச்சேர்ந்து விட்டார்கள்.
என்ன ஆச்சரியம்! அங்கே
வியாழக்கிழமை காலை பத்துமணி.
அதிசய ராஜாவுக்குப் புரியவில்லை.
“ என்னடா இது அதிசயமா இருக்கு!
“
அவர் சமோவாவுக்கு ஓடினார். அங்கே புதன்கிழமை.
ரொங்கோவுக்கு ஓடி வந்தார்.
இங்கே வியாழக்கிழமை. அவருடைய கண்களை அவரால்
நம்பமுடியவில்லை.
அங்கிட்டு புதன்கிழமை.
இங்கிட்டு வியாழக்கிழமை..
எப்படி ஒரு நாள் காணாமல்
போனது?
அவருக்குப் புரியவில்லை.
” அங்கிட்டு புதன்கிழமை,
இங்கிட்டு வியாழக்கிழமை”
என்று வாய்விட்டு கத்தினார்.
ஆச்சரியத்தில் திறந்த வாய் திறந்தபடியே இருந்தது.
அங்கும் இங்கும் ஓடிக்
கொண்டே இருக்கிறார் அதிசயராஜா. இன்னமும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அறிவுக்கரசன் உங்களிடம்
மட்டும் அந்த ரகசியத்தைச் சொல்லச்சொன்னான்..
சமோவாவையும் ரொங்கோவையும்
சர்வதேச தேதிக்கோடுகள் பிரிக்கின்றன. அதனால் இரண்டு தீவுகள் அருகருகே இருந்தாலும் இருபத்திநான்கு
மணிநேரம் வித்தியாசம் இருக்கும்.
யாரிடமும் சொல்லி விடாதீர்கள்.
முக்கியமாக அதிசயராஜாவிடம் சொல்லவே சொல்லாதீர்கள்.
நன்றி - அதிசயத்திலும் அதிசயம்
வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்
No comments:
Post a Comment