Friday, 26 December 2025

முதல் உயிர்

  முதல் உயிர்

உதயசங்கர்




    குட்டிப்பாப்பாவின் காதுகளில் தவிட்டுக்குருவிகளின் காச் மூச் காச் மூச் சத்தம் கேட்டது. அவள் கண்களைத் திறந்து சன்னலைப் பார்த்தாள். சன்னலுக்கு வெளியே இருந்த புளியமரத்தில் ஐந்தாறு குருவிகள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தன. முதலில் சிரிப்பு வந்தது. அப்புறம் நெற்றியைச் சுளித்தாள். உடனே அவளுடைய மூளையில் கேள்விகள் முளைக்கத்தொடங்கின.

    அம்மா அம்மாஇங்கே வாங்களேன்.. இந்தக் குருவிகளைப் பாருங்கள்..

    அம்மா சன்னலுக்கு வெளியே நின்று பல் தேய்த்துக் கொண்டிருந்தாள். என்ன என்று கையை ஆட்டிக் கேட்டாள்.

    இந்தக்குருவிகள் எப்படி வந்தன? “

    என்று கேட்டாள். அம்மா பொறு என்று கையைக் காட்டி விட்டு வாயைக் கொப்பளிக்கப் போனாள். இப்படித்தான் குட்டிப்பாப்பா பேசத் தொடங்கியது முதல் கேள்விகளாகக் கேட்க ஆரம்பித்தாள். எப்படித்தான் அத்தனை கேள்விகள் அவளுடைய குட்டியூண்டு தலையிலிருந்து புறப்படுகிறதோ தெரியவில்லை. அவளுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்காக அம்மா நிறையப் புத்தகங்களைப் படித்தாள்.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமாகக் கேள்விகளைக் கேட்டாள். ஒருநாள் நிமிர்ந்து வானத்தைப் பார்த்து,

    அம்மா  வானம், பூமி.. எப்படி வந்தது? “ என்று கேட்டாள். அம்மா பொறுமையாக,

    அதுவா குட்டிப்பாப்பா.. ரொம்ப ரொம்ப ரொம்ப காலத்துக்கு முன்னாடி சூரியனில் வெப்பத்தினால் அழுத்தம் ஏற்பட்டு வெடித்துச் சிதறி விட்டது.. அதில் ஒரு துண்டு தான் பூமி..

    அப்ப பூமி எப்படி இருந்தது? “

    சூடா இருந்ததுடா..

    எப்ப சூடு ஆறிச்சு..

    பல கோடி வருசங்களுக்கு அப்புறம் சூடு ஆறி ஹீலியம், நைட்ரஜன், மாதிரி வாயுக்கள் உருவாச்சு.. அந்த வாயுக்கள் சேர்ந்து தண்ணீரா மாறிச்சு..

    குட்டிப்பாப்பா முகவாயில் கையை வைத்துக் கொண்டு புரிந்து கொள்ள முயற்சித்தாள். குட்டிப்பாப்பா யோசிப்பதைப் பார்த்த அம்மா புன்முறுவல் பூத்தாள்.

    அப்ப நாம் எப்படி உருவானோம்? “

    அது பெரிய கதை.. முதல்ல அமீபா என்ற ஒரு அணு உயிர் தான் உருவாச்சு.. அது உடைந்து இரண்டு அணு உயிராக மாறுச்சு.. அப்படியே இரண்டு நாலாச்சு.. நாலு .. எட்டாச்சு.. நீரில் வாழும் செடிகள் வந்தன.. அப்படியே நீரில் வாழும் நண்டுகள்.. மீன்கள் வந்தன..

    குட்டிப்பாப்பாவுக்குப் புரியவில்லை. தலையைச் சொறிந்தாள்.

    அப்போ.. தரையில்.. “

    முதல்ல தண்ணீரிலும்.. தரையிலும் வாழும் விலங்குகளும் தாவரங்களும் உருவாச்சு.. அப்புறம் டைனோசர் மாதிரியான பெரிய விலங்குகள்.. ஆலமரம், வேப்பமரம் மாதிரியான பெரிய மரங்கள்.. செடிகள்.. கொடிகள்.. பாம்பு மாதிரியான ஊர்வன.. யானை சிங்கம் போன்ற காட்டு விலங்குகள்.. புறா, குருவி, கழுகு மாதிரி பறக்கிற பறவைகள்..வெட்டுக்கிளி.. வண்டுகள்.. மாதிரி பூச்சிகள்.. என்று கோடிக்கணக்கான உயிர்கள் வந்தன.. ஆனால் ஒண்ணு ஞாபகம் வச்சுக்கணும் இதுக்கெல்லாம் கோடி கோடி வருசம் ஆச்சுடா.. குட்டிப்பாப்பா..

    குட்டிப்பாப்பாவுக்கு இன்னும் நிறையச் சந்தேகங்கள் முளைத்துக் கொண்டேயிருந்தன.

    அவள் அம்மாவிடம் கேட்டாள்.

    மனுசன் எப்பம்மா வந்தான்.?.

     மனுசன் தான் கடைசியாக வந்த உயிரினம்..அவன் தோன்றி இரண்டரை லட்சம் வருசம் ஆகிறது..

    மனுசன் எப்படி வந்தான்?

     அதுவா.. வாலில்லாத குரங்குகளுக்கும் மனுசனுக்கும் இடையில ஹோமினிட் என்ற ஒரு இனம் தோன்றியது.. அந்த இனத்திலிருந்து தான் மனிதன் வந்தான்....

    அப்படியா.. மனுசனோட பேர் என்னம்மா?

     பாப்பா எப்படியெல்லாம் கேட்கிறாள் என்று அம்மா ஆச்சரியப்பட்டாள்

சேப்பியன்ஸ்

    குட்டிப்பாப்பா சொல்லிப்பார்த்தாள்.

    சேப்பின்..ஸ்

    அம்மா அவளுடைய தலையைத் தடவிக்கொண்டே,

    ஆப்பிரிக்காவில தான் முதமுதலா சேப்பியன்ஸ் வந்தாங்க.. அங்கேருந்து தான் உலகம் முழுவதும் அவங்க நடந்து நடந்து அவங்க அவங்களுக்குப் பிடிச்ச இடத்தில போய் தங்கிட்டாங்க..

    இவ்வளவு கதை இருக்கா?..

    ஆமாண்டா செல்லம்.. இந்த பூமியில மட்டும் தான் இத்தனை கோடிக்கணக்கான உயிர்கள் தோன்றி உயிர் வாழ்ந்துக்கிட்டிருக்கு.. வேறு எந்தக் கோள்களிலும் உயிர்கள் இருப்பதை யாரும் கண்டுபிடிக்கல..

    அப்ப நாம இந்த பூமியைப் பத்திரமாப் பார்த்துக்கணும்.. இல்லையாம்மா..

    ஆமாண்டா எஞ்சமத்துக்குட்டி..என்று அம்மா குட்டிப்பாப்பாவை முத்தமிட்டாள். குட்டிப்பாப்பா,

    அமீபா முத்தம் கொடுத்தமாதிரி சில்லுன்னு இருக்கும்மா..என்று சொல்லிச் சிரித்தாள்.

    அம்மாவும் சிரித்தாள்.

No comments:

Post a Comment