அழகிய பன்றிக்குட்டி
உதயசங்கர்
கவிதா பள்ளிக்கூடம்
போகும்போது ஒரு அழகான பன்றிக்குட்டியைப் பார்த்தாள்.அது சாக்கடைக்குள்
இருந்தது. கழிவுகளைச்
சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அதைப்
பார்த்ததும் அவள் முகம் சுளித்தாள்.
“ ஐயே! என்ன
இது சாக்கடைக்குள்ளே கிடக்கறே..
அசிங்கத்தைத் திங்கறே..”
என்று பன்றிக்குட்டியிடம் பேசினாள். கவிதா வாயாடி.
எல்லாரிடமும் பேசுவாள். பின்வாசலில்
நிற்கும் வேப்பமரத்தில் காலையில்
பள்ளிக்கூடம் நடத்தும் காகத்திடம்
பேசுவாள்.
“ சரி சரி
பாடம் நடத்தினது போதும்..
கதை சொல்லுங்க..” என்று
சொல்வாள்.
எப்போதும் ஒன்றுக்கு
ஒன்று சண்டை போட்டுக் கொண்டு,
சலம்பிக்கொண்டிருக்கும் தவிட்டுக்குருவியிடம் பேசுவாள்.
“ எதுக்குச் சண்டை
போட்டுக்கிட்டிருக்கே..” என்று
கோபிப்பாள். ஒரு முறை ஒரு
தவளையை விழுங்கிக் கொண்டிருந்த
பாம்பிடம்,
“ பாவம் குட்டித்தவளை
இல்லையா? பெரிசான பிறகு
சாப்பிடலாமே..” என்று நியாயம்
பேசினாள்.
அவளுக்கு
என்ன தோணுதோ அதைச்
சொல்லி விடுவாள். கெட்டிக்காரி. அதுதான் அழகிய பன்றிக்குட்டி
சாக்கடைக்குள் இருப்பதைப் பார்த்ததும்
கேட்டு விட்டாள்.
” எனக்கு வயிறு
பசிக்குதில்ல.. சாக்கடையில் தானே
உணவு கிடைக்கு..”
என்று அழகிய
பன்றிக்குட்டி சொன்னது. உடனே
கவிதா யோசித்தாள். எல்லாரும்
நாய் வ:ளர்ப்பதைப் போலவோ,
கோழி வளர்ப்பதைப் போலவோ,
ஆடு வளர்ப்பதைப் போலவோ
எல்லோரும் பன்றி வளர்ப்பதில்லையே ஏன்?
என்று அவளுக்குக் கேள்வி
வந்தது. பதில் தெரியவில்லை.
தூய்மைப்பணியாளர்கள் மட்டுமே
பன்றி வளர்க்கிறார்கள். அந்தப்
பன்றிகள் எல்லாம் தெருக்களில்
சாக்கடைகளில் தான் உணவு தேடி
அலைகின்றன. அழகிய பன்றிக்குட்டி அவள்
ஏதாவது சொல்லப்போகிறாளோ என்று
அவள் வாயையே பார்த்துக்
கொண்டிருந்தது.
புர்ர்ர்ர்ர் என்று
சத்தம் கொடுத்தது. பிறகு
மறுபடியும் தன் மூக்கால் சாக்கடையைத்
துழாவ ஆரம்பித்தது.
பள்ளிக்கூடத்துக்கு நேரமாகி
விட்டது. அறிவியல் ஆசிரியரிடம்
தன்னுடைய சந்தேகங்களைக் கேட்டுக்
கொள்ளலாம் என்று வேகவேகமாகப் போய்விட்டாள். அறிவியல் ஆசிரியர் ஆனந்தனிடம்
எந்த சந்தேகம் கேட்டாலும்
பதில் சொல்வார். அவருக்குத்
தெரியாவிட்டாலும்,
“ தெரியவில்லை.. நாளை
தெரிந்து கொண்டு சொல்கிறேன்..
நீங்களும் கூட தெரிந்து கொண்டு
வாருங்கள்.. “ என்று சொல்வார்.
அன்றும் கவிதா
பன்றிகளைப் பற்றிக் கேட்டதும்
அப்படித்தான் சொன்னார். மாலை
பள்ளிக்கூடம் விட்டு வரும்போது
சாக்கடையில் அந்த அழகிய பன்றிக்குட்டியைத் தேடினாள். இல்லை. தெருவில்
எங்காவது தென்படுகிறதா என்று
பார்த்தாள். இல்லை.
அழகிய பன்றிக்குட்டி
எங்கே போச்சு?
அது கவிதாவின்
கனவில் வருவதற்காகச் சீக்கிரமே
தூங்கப் போய் விட்டது. அதே
மாதிரி கவிதாவின் கனவிலும்
வந்தது அந்த அழகிய பன்றிக்குட்டி.
ஒரு பெண்
சிங்கம் காட்டுப்பன்றியைத் துரத்திக்
கொண்டு ஓடி வந்தது. இரண்டு
பக்கங்களிலும் வாய்க்கு வெளியே
ஒரு அடி அளவுக்கு நீண்ட
தந்தப்பற்களுடன் இருந்தது அந்தக்
காட்டுப்பன்றி. பாய்ந்து வந்த
அந்தக் காட்டுப்பன்றி அப்படி
ஒரு புதரின் கீழே
இருந்த பொந்துக்குள் பாய்ந்து
பின்புறமாய்த் திரும்பி இறங்கி
மறைந்தது.
பின்னாலேயே வந்த
சிங்கம் திடீரென்று காட்டுப்பன்றியைக் காணாமல் திகைத்துப் போனது.
கர்கர்கர்கர் என்று
உறுமிக்கொண்டே அந்த இடத்தைச் சுற்றிச்
சுற்றி வந்தது. பிறகு
மெல்ல அந்த இடத்தை விட்டுப்
போய்விட்டது.
சிறிது நேரம்
கழித்து அந்தப் பொந்தில்
இருந்து நான்கு குட்டிகள்
வெளிவந்தன. பின்னால் தாய்க்காட்டுப்பன்றி வந்தது. அப்போது எங்கிருந்தோ
வேட்டை நாய்கள் பாய்ந்து
வந்தன. நாய்களை எதிர்பார்க்காத தாய்ப்பன்றி அவசர அவசரமாக
பொந்துக்குள் இறங்கியது. குட்டிகள்
நாலாபக்கமும் சிதறி ஓடி விட்டன.
வேட்டைநாய்களின் பின்னால்
ஓடிவந்தார்கள் காட்டு மனிதர்கள்.
விலங்குகளின் தோலாடை மட்டும்
அணிந்த அந்த மனிதர்கள் அந்தக்
குட்டிகளைப் பிடித்து தங்கள்
குடியிருப்புகளுக்குக் கொண்டுபோய் வளர்த்தார்கள். இந்தச் சம்பவம் நடந்து
கிட்டத்தட்ட பத்தாயிரம் ஆண்டுகளுக்கு
மேலிருக்கலாம்.
என்று அழகிய
பன்றிக்குட்டி ஒரு நாற்காலியில் அமர்ந்து
சொல்லிக் கொண்டிருந்தது. அது
கவிதாவின் சட்டையையும் பாவாடையும்
அணிந்திருந்தது. எதிரே கவிதா
கன்னத்தில் கை வைத்துக் கொண்டு
அழகிய பன்றிக்குட்டியையே பார்த்துக்
கொண்டிருந்தாள்.
“ ம்ம்ம் சொல்லு..
அதுக்கப்புறம்..”
“ அன்றிலிருந்து நாங்கள்
வீட்டு மிருகங்களானோம்.. தரையைக்
கிளறி கிழங்கு, காய்கனி,
இலைதழை, சிறிய விலங்குகள், பூச்சிகள்,
அழுகியது, கெட்டுப்போனது எதையும்
விலக்கமாட்டோம். எல்லாவற்றையும் சாப்பிடுவோம்.. மனிதர்கள் இறைச்சிக்காகத் தான்
எங்களை வளர்த்தார்கள்.
ஒரு கட்டத்தில்
மனிதர்களிடம் ஏற்றத்தாழ்வுகள் வந்தபோது
நாங்கள் யார் தூய்மை செய்கிறார்களோ
அவர்களுடைய வளர்ப்பு விலங்குகளாக
மாறி விட்டோம்.. இப்போது நாங்கள் கழிவுகளைத் தின்று
வளர்கிறோம். தூய்மைப்பணியாளர்களைப் போல
நாங்களும் சுத்தம் செய்கிறோம்..
ஆனால் மனிதர்கள் எங்களைப்
பார்த்து முகம் சுளிக்கிறார்கள்..
மற்றபடி பெரிய
முதலாளிகள் எங்களைப் பண்ணைகளில்
வளர்த்து எங்களுடைய இறைச்சியை
ஏற்றுமதி செய்கிறார்கள். ”
என்று சொல்லி
விட்டு மூச்சு வாங்கியது
அழகிய பன்றிக்குட்டி. அப்படியே
வைத்தகண் மூடாமல் பார்த்துக்
கொண்டிருந்த கவிதாவுக்கு வேறு
கேள்விகள் மனதில் எழுந்தன.
மனிதர்களில் ஏற்றதாழ்வுகளை
யார் உருவாக்கினார்கள்?
விலங்குகளிலும் ஏற்ற
தாழ்வுகளை யார் உருவாக்கினார்கள்?
நாளை சமூக
அறிவியல் ஆசிரியர் அமுதாவிடம்
கேட்க வேண்டும் என்று
நினைத்துக் கொண்டே நிமிர்ந்து
பார்த்தாள்.
எதிரே அழகிய
பன்றிக்குட்டி இல்லை.
மறுநாள் பள்ளிக்கூடம்
போகும்போது அதே சாக்கடையில் அந்த
அழகிய பன்றிக்குட்டி மேய்ந்து
கொண்டிருந்தது. அவளைப் பார்த்து
முகத்தைத் தூக்கியது. கவிதா,
“ தேங்க்யூ.. அழகிய
பன்றிக்குட்டியே..” என்றாள். அழகிய
பன்றிக்குட்டி சிரித்துக் கொண்டே,
“ வெல்கம்..” என்றது.
அன்று வகுப்பில்
சொல்வதற்கு கவிதாவிடம் எக்கச்சக்கமான
விசயங்கள் இருந்தன.
நன்றி - விஞ்ஞானத்துளிர்

No comments:
Post a Comment