வெளிவராத நேர்காணல்
புதிய கட்டுக்கதைகளும் எதிர்க்கதையாடல்களும் தேவை
நேர்காணல் செய்தவர் - சித்தார்த்
1.
கட்டைவிரலின் கதை எழுத்தூண்டியது எது? ஏகலைவன் கதையை மறுஆய்வுக்கு உட்படுத்தும் வகையில் அல்லது மாற்றுக் கோணத்தில் காண என்ன காரணம் உந்தியது?
வெகுமக்கள் படிக்கும் ஏகலைவன் கதையில் உள்ள சிக்கல்கள் என்ன?
90 களுக்குப் பிறகு ஏற்பட்ட தலித் இலக்கிய எழுச்சி பல மாநிலங்களிலிருந்து ஏராளமான தலித் இலக்கியப்பிரதிகளைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்தது. அப்படி வந்த கவிதைகளில் ஏகலைவனின் கட்டைவிரல் கேள்வி கேட்பதைப் போல ஒரு கவிதை மனதில் தங்கிவிட்து. பிறகு சென்னைக்கலைக்குழுவின் நாடகவியலாளர்.தோழர்.பிரளயனின் உபகதை நாடகம், புதிய கோணத்தைக் கொடுத்தது. அப்போதும் இலக்கியப்பிரதியாக எழுத வேண்டுமென்ற எண்ணம் இல்லை. ஆனால் புராண இதிகாசங்களை எப்படியெல்லாம் மறுவாசிப்பு செய்யவேண்டுமென்றும் எப்படி மறுவாசிப்பு செய்யக்கூடாதென்றும் புரிந்தது. அதற்கு மார்க்சிய அழகியல் கோட்பாட்டின் அடிப்படைகள் உதவின. வலதுசாரிகளின் ஆதிக்கம் மீண்டும் வலுப்பெற்ற போது அவர்கள் மக்கள் மனதை வசப்படுத்த மீண்டும் புராண இதிகாசங்களையே கையிலெடுத்தனர். இராமாயாணம், மகாபாரதம் போன்ற தொடர்களும், அவர்களுக்கு உதவினார்கள். தமிழ் எழுத்தாளர்களும் மறுவாசிப்பு என்ற பெயரில் மீண்டும் அவற்றை எழுதி உதவினார்கள். மீண்டும் குருபக்திக்கு உதாரணமனிதனாக ஏகலைவன் கதை பேசப்பட்டது. பொது சமூகத்திலும், பள்ளிகளிலும் குரு, சிஷ்யன் உறவின் லட்சியவடிவங்களாக துரோணாச்சாரியரும், ஏகலைவனும் மீண்டும் மீண்டும் பேருருக்கொண்டார்கள்.
இவையெல்லாம் கட்டுக்கதைகளென்பதை மக்கள் உணரவில்லை. இந்தக் கதைக்குள் சூட்சும வருணபேதத்தையோ, சாதிய வன்மத்தையோ புரிந்து கொள்ள முடியாதபடிக்கு குரு சிஷ்ய உறவென்று கட்டுக்கதை பின்னப்பட்டிருக்கிறது.
இந்தக் கட்டுக்கதையின் அடிப்படையிலேயே எதிர்க்கட்டுக்கதையை எழுத வேண்டுமென்ற எண்ணம் உருவானது. குறிப்பாக வளரிளம் பருவம் பதின்ம வயதினருக்கான பிரதியாக எழுத வேண்டுமென்று திட்டமிட்டு அதற்கான நூல்களை, ஆதாரங்களை வாசித்து அதிலிருந்து எனக்கான புனைவை நான் உருவாக்கினேன்.
ஒரு வகையில் கட்டைவிரலின் கதை எதிர்க்கதையாடல் பிரதி என்று சொல்லலாம்.
2.
நீங்கள் பறம்பின் பாரி படைக்கும்போது உங்களுடைய நோக்கம் என்னவாய் இருந்தது.?
தமிழில் இளையோருக்கான இலக்கியப்பிரதிகளே மிகவும் குறைவு. அல்லது எது குழந்தைகளுக்கானது எது இளையோருக்கானது என்ற தெளிவான வரையறையோ, விவாதங்களோ நடைபெறவில்லை. இப்போது தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக அப்படியான பிரதிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இளையோருக்கான பிரதிகளை எழுத நினைத்தபோது புராண இதிகாசக்கதாபாத்திரங்களுக்கு மாற்றாக தமிழின் தொன்மையான கதாபாத்திரங்களை வைத்து எழுத வேண்டுமென்ற எண்ணம் இருந்து கொண்டேயிருந்து. முருகன், பாரி, மணிமேகலை, குணடலகேசி, இப்படியெல்லாம் யோசிக்கும் போது, ஏற்கனவே சொல்லப்பட்ட பிரதிகள் பெரியவர்கள் வாசிப்புக்கானவை. பெரியவர்களுக்கான பிரதிகளில் குழந்தைகள், மற்றும் இளையோரால் தங்களைத் தொடர்பு படுத்திக் கொள்ள முடிவதில்லை.
அப்படியென்றால் அந்தக் கதாபாத்திரங்களை குழந்தைகளாகவோ, இளையோராகவோ சித்தரிக்க வேண்டும். என்று தோன்றியது.
முதலில் பாரியைப் பற்றி எழுதலாமென்ற எண்ணம் வந்தபோது இதற்கு முன்பு குழந்தைகளுக்காகவோ, இளையோருக்காகவோ யாராவது எழுதியிருக்கிறார்களா? என்று தேடிப்பார்த்தேன். கி.வா.ஜ. எழுதியிருப்பதாக விஷ்ணுபுரம் சரவணன் அந்தப் பிரதியைக் கொடுத்தார். அதில் வேளிர்குலத்தலைவனாகத் தான் பாரி வருகிறான். அதேபோல சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர், தோழர். சு.வெங்கடேசன் வீரயுக நாயகன் வேள்பாரி என்ற மிகவும் புகழ்பெற்ற நாவலை எழுதியிருந்தார். அதையும் வாசித்தேன். குறிஞ்சிப்பாட்டு, மலைபடுகடாம், நிலம் பூத்து மலர்ந்த நாள், சிந்து சமவெளிப்பண்பாட்டில் திராவிட அடித்தளம் போன்ற நூல்களையும் வாசித்தேன்.
பாரியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் கபிலரின் 133 பாடல்களைத் தவிர வேறு ஆதாரங்களில்லை. அந்தப் பாடல்களில் வேளிர்குலத்தலைவனாகத் தான் பாரி வருகிறான்.
பாரியின் இளமைப்பருவம் எப்படியிருந்திருக்கும்? ஒரு காவியத்தலைவனாக பாரி உருவாவதற்கான மூலக்கூறுகள் அவனுடைய இளமையிலேயே இருந்திருக்க வேண்டும். அந்த கூறுகளை எழுதிப்பார்த்தால் என்ன? என்று யோசனை தோன்றியது. எனக்கு முன்னால் சு.வெங்கடேசனின் பாரியும் பிரம்மாண்டமான ஆகிருதியாக நின்று கொண்டிருந்தான்.
அந்தப் பாரியின் சாயல் இல்லாமல் அதேநேரம் அதிலிருந்து வேறுபட்டோ மாறுபட்டோ விடாமல் எழுதுவதற்காக ஒரு வருடகாலம் பிடித்தது.
பெரியவர்கள் இலக்கியத்துக்கும் இளையோர் இலக்கியத்துக்கும் பாலமாக இந்த நூல் இருக்கவேண்டுமென்று திட்டமிட்டு எழுதினேன்.
3.
இரண்டு புத்தகங்களும் சாதி போன்ற பெரிய தலைப்பை எடுத்துக் கொண்டாலும் வர்ணனைகளிலும், கதை ஆழத்திலும், மேலோங்கியிருக்கின்றன. எந்த வயதினருக்கான கதைகளாக இவற்றைப் படைத்தீர்கள்?
இன்றைய நவீன காலத்தில் குழந்தைகளும் சரி இளைஞர்களும் சரி ஹாரிபாட்டர், லிட்டில் பிரின்ஸ், ஹக்கிள்பெரி பின், போன்ற புத்தகங்களை சாதாரணமாக வாசிப்பதைப் பார்க்கமுடிகிறது. அந்தப் பிரதிகளுக்குள் பல ஆழமான, விவாதத்துக்குரிய பிரச்னைகளைப் பேசுகிறார்கள். வாசிக்கும் போது சுவாரசியமாகவும் யோசிக்கும்போது ஆழமான பல சமூகப்பிரச்னைகளைப் பற்றியும் பேசுகின்றன.
சிறார் இலக்கியமென்றால் மிக எளிமையான சமூக அறங்களை, அறிவுரை கூறும் தொனியில் எழுதினால் போதுமென்ற எண்ணம் இருக்கிறது.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் குழந்தைகள் அன்றாட வாழ்க்கையில் பல ஆழமான சமூகப்பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள். அதில் மிக முக்கியமானது சாதி அடையாளம். என்ன தான் அறிவியலில் உலகமுழுவதும் உள்ள அனைத்து மனித இனத்தினரும் ஹோமோசேப்பியன்ஸ் தான் என்று சொன்னாலும், யதார்த்தத்தில் இன்றும் நம் கண்முன்னே, குழந்தைகளின் கண்முன்னே சாதி ஒரு சாத்தானைப் போல இருந்து கொண்டேயிருக்கிறது.
அவர்களிடம் கேள்விகளை உருவாக்க வேண்டும். அறிவியல் பூர்வமாகவும் வரலாற்றுரீதியிலும் சாதி என்ற கற்பிதம் உருவானதைச் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். அதே நேரம் அது வெறும் பிரச்சாரமாக இருக்க்கூடாது. கலை அமைதியுடன் கூடிய இலக்கியப்பிரதியாக இருக்க வேண்டுமென்று திட்டமிட்டேன்.
12- முதல் 18 வரையுள்ள இளையோருக்காக எழுதினேன்.
4.
தமிழில் சிறார் இலக்கியம் எத்தனை வகைப்படும்? ( வாசகர்களின் வயது வாரியாக )
பொதுவாகச் சிறார் இலக்கியத்தை மூன்றுவகையாகப் பிரிக்கலாம்.
1.
3 வயது முதல் 8 வயது வரை – விலங்குகள், பறவைகளை மையமாக வைத்து எழுதப்படுகிற கதைகள்
2.
8 வயது முதல் 12 வயது வரை – மாயாஜாலக்கதைகள், தேவதைக்கதைகள், மந்திரதந்திரக்கதைகள், எளிய அறம்சார்ந்த கதைகள்.
3.
12 முதல் 18 வயது வரை – அதீதப்புனைவுக்கதைகள், சாகசக்கதைகள், துப்பறியும் கதைகள், யதார்த்தக்கதைகள், சமூகக்கதைகள், சிக்கலான கதைப்பின்னல்களைக் கொண்ட கதைகள், சமூகவிழுமியங்களைக் கேள்விகேட்கிற கதைகள்.
பொதுவாக இப்படிச் சொல்லலாம்என்றாலும் இவையும் விவாதத்துக்கும் உரையாடலுக்கும் உட்படுத்த வேண்டியது.
5.
அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தாலும் சாதி குறித்த தமிழ்ச்சிறார் இலக்கியங்கள் சமீப காலத்தில் கவனம் பெற்று வருகின்றன. இது ஒரு சிறார் சாதி எதிர்ப்பு இலக்கிய இயக்கமாக மாறும் என்று நினைக்கிறீர்களா?
இப்போது தான் சிறார் இலக்கியத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சாதி எதிர்ப்பு கதைகள் எழுதப்படுகின்றன. குறிப்பாக விஷ்ணுபுரம் சரவணனின் கயிறு புத்தகம் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஆனால் இவையெல்லாம் சமூகத்தின் பொதுப்புத்தியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட முடியாதென்றே தோன்றுகிறது. சாதி எதிர்ப்பு சிறார் இலக்கியம் இயக்கமாக மாறவேண்டுமென்றால் அமைப்புகள் இந்த இலக்கியப்பிரதிகளைக் கையிலெடுத்து பரவலாக் குழந்தைகள் மத்தியில் விவாதப்பொருளாக மாற்ற வேண்டும். குறிப்பாக மாணவர் அமைப்புகள் இத்தகைய நூல்களை வாங்கி வாசித்து விவாதப்பொருளாக மாற்றும்போது அப்படியொரு இயக்கம் உருவாகும். அத்துடன், இன்னும் சமூகத்தின் அனைத்துப்பிரிவுகளிலிருந்தும் சிறார் இலக்கியம் எழுத முன்வரவேண்டும். அப்போது இன்னும் கூர்மையான விவாதங்களும் உரையாடல்களும் சமூகத்தில் உருவாகும்.
6.
இந்த இரண்டு கதைகளைப் பற்றி சிறார் வாசகர்கள் உங்களுடன் பகிர்ந்து கொண்ட கருத்துகள், குறுஞ்செய்திகள், எவ்வடிவிலிருந்தாலும் அவற்றில் ஓரிரு உதாரணங்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?
உண்மையாகச் சொல்வதாக இருந்தால் நான் எதிர்பார்த்தைப் போல இந்த இரண்டு நூல்களைக் குறித்தும் பெரிய உரையாடல்களில்லை. சிறார் எழுத்தாளர்களே கூட இந்த நூல்களைக் குறித்துப் பெரிதாகப் பேசவில்லை. இத்தனைக்கும் தமிழ் இந்து மாயாபஜாரில் இந்த இரண்டு நூல்களைக் குறித்தும் நல்ல அறிமுகம் செய்திருந்தார்கள். பறம்பின் பாரி புத்தகத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எழுச்சித்தமிழர் விருதும் கிடைத்தது. ஆனாலும் அங்கொன்றுமாய் இங்கொன்றுமாய் சில பொதுவான பாராட்டுகள் குழந்தைகளிடமிருந்து கிடைத்தன. குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை.
7.
சாதி குறித்து குழந்தைகளுடன் உரையாட வேண்டிய தேவை இன்று எப்படி இருக்கிறது?
சாதி, மதம், குறித்து எப்போதுமே குழந்தைகளிடம் பேச வேண்டுமென்றாலும் இன்று அதன் தேவை அதிகமாகியிருக்கிறது என்று சொல்லலாம். கடந்து முப்பது ஆண்டுகளாக அடையாள அரசியல் மேலோங்கியிருக்கிறது. பள்ளிக்கூடமென்பது கல்வி கற்பிப்பது மட்டுமல்ல, அது குழந்தைகள் சமூகமயமாதலுக்குப் பழக்கப்படுத்துகிறது. எல்லோரிடமும் எங்கே இணக்கமாக, அனுசரித்து, விட்டுக்கொடுத்து, சமமாகப் பார்க்க வேண்டுமோ அந்த இடத்திலேயே சாதிக்கயிறு கட்டுவது, தனித்தனிக்குழுவாக மாறுவது, வன்முறையில் இறங்குவது, தன்னுடைய சகமாணவனை எதிரியாகப் பார்ப்பது என்று இப்போது கூர்மையடைந்துள்ளது. பெற்றோர், ஆசிரியர்களும் இதற்கு ஒரு காரணமென்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மொத்த சமூகத்திலும் சாதி குறித்த உரையாடல்களையும் விவாதங்களையும் பேசுபொருளாக மாற்றவேண்டிய அவசியம் அனைத்து பொதுநல அமைப்புகளுக்கும் இருக்கிறது.
8.
அவர்களின் வாசிப்புப்பழக்கம் எப்படி இருக்கிறது?
கடந்த பத்தாண்டுகளில் சிறார்களின் வாசிப்புப்பழக்கம் அதிகரித்திருக்கிறது. அதற்கு பல காரணங்களிருக்கின்றன. குறிப்பாக கொரோனா காலகட்டம், அதன் பிறகு வந்த தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறையிலும் பாடநூல் கழகத்திலும் முன்னெடுத்த முயற்சிகள், அரசுப்பள்ளிகளில் சிறார் வாசிப்பைப் பரவலாக்கியிருக்கிறது. மாவட்டம் தோறும் நடத்தப்படும் புத்தகக்கண்காட்சிகள், சர்வதேசப்புத்தகக்கண்காட்சி, இலக்கியத்திருவிழாக்கள், மாணவர் கலை, இலக்கியத் திருவிழாக்கள் என்று பல்வேறு முயற்சிகள் வாசிப்பை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது. இதுவரை சிறார் நூல்களே பதிப்பிக்காத பல பதிப்பகங்கள் சிறார் நூல்களைப் பதிப்பிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். புதிதாக சிறார் எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். ஆனாலும் இன்னமும் புத்தகங்களை வாங்குகிற சக்தி கொண்ட பெருவாரியான. மத்திய தரவர்க்க்குழந்தைகள் படிக்கிற தனியார் பள்ளிகளில் கிட்ஸ் ஸ்கூல் தொடங்கி சர்வதேச பள்ளிவரை முறையான நூலகங்களோ, வாசிப்போ, நடைமுறையிலில்லை. அப்படியே படித்தாலும் ஆங்கிலப்புத்தகங்கள் மட்டும்தான் அங்கே இருக்கிறது. அத்துடன் ஆசிரியர்களுக்கு எந்தப் புத்தகங்களைக் குழந்தைகளுக்குப் பரிந்துரைக்க வேண்டுமென்று தெரியவில்லை. பெற்றோர்களுக்கும் தெரியவில்லை.
இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் தான்.



No comments:
Post a Comment