கண்டு
பிடி கண்டு பிடி
உதயசங்கர்
இதெல்லாம் எப்படி ஆரம்பித்தது என்று யாருக்கும் தெரியவில்லை.
ஆறு மாதங்களுக்கு முன்பு கருப்பூரில் இருந்து தொடங்கி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
கருப்பூரில் பாரதி தெருவில் குடியிருந்த கண்ணாயிரம் நள்ளிரவில் எழுந்து வீட்டிற்கு வெளியே உள்ள கழிப்பறையில் சிறுநீர் கழிப்பதற்காக வெளியில் வந்தான். அப்போது அந்த உருவத்தைப் பார்த்திருக்கிறார்.
அவரது ஓட்டு வீட்டின் உச்சியில் ஒரு மொட்டை தலை மனிதன் உட்கார்ந்து இருப்பதை பார்த்தவுடன் பயத்தில் நாக்குளறியது.
“ திருடன் திருடன் ”
என்று கத்த ஆரம்பித்தார். உச்சியில் இருந்த உருவம் நேரே அவரை நோக்கி தடதடவென்று இறங்கி குதித்து ஓடியது. அவர் கண்களை மூடிக்கொண்டு, ” “காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்” என்று கத்தினார்.
அவ்வளவுதான். தெருவில் எல்லோரும் எழுந்து வந்து கண்ணாயிரத்திடம்,
“ என்ன? என்ன? “ என்று கேட்டார்கள். அப்போது கண்ணாயிரத்தின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. பேச்சு வரவில்லை. ஆனாலும் அவர் திக்கித்திக்கி சில விஷயங்களை கூறினார்.
“ கருப்பு உருவம்… மொட்டைத்தலை… இடுப்பில் டவுசர் மட்டும் இருந்தது, எண்ணெய் மிணுமிணுப்பு… நல்ல உடற்கட்டு… திருடுவதற்காக ஓட்டை பிரிக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.. நான் அப்போது வெளியில் வந்ததால் என்னை பார்த்து பயந்து ஓடிவிட்டான்… அப்படி ஓடும் போது அவன் ஏதோ கூக்குரலிட்டான் அது வேற்று மொழியாக இருந்தது ”
என்று கண்ணாயிரம் சொன்னான்.
உடனே அந்த தெருவில் இருந்தவர்கள் எல்லோரும் கையில் டார்ச் லைட்டுடனும் கம்புகளுடனும் அந்த தெருவின் மூலை முடுக்கு பக்கத்து தெருகளிலெல்லாம் சென்று தேட ஆரம்பித்தார்கள். யாரும் சிக்கவில்லை. எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.
விடிய விடிய தேடியும் யாரும் சிக்காததினால் அவரவர் வீடுகளுக்கு சென்றார்கள். ஆனாலும் கண்ணாயிரத்துக்கு காய்ச்சல் வந்துவிட்டது. அவன் திருடனைப் பார்த்து பயந்து போனதால் வந்த காய்ச்சல் என்று எல்லோரும் சொன்னார்கள். ஒருவேளை அந்தத் திருடனை போகும் போது இவன் மீது ஏதாவது மந்திரத்தை போட்டு விட்டு இருக்கலாம் என்றும் சிலர் சொன்னார்கள்.
மூன்று நாட்களில் கண்ணாயிரத்தின் காய்ச்சல் குணமாகிவிட்டது ஆனால் கண்ணாயிரத்தின் வீட்டிற்கு வந்த திருடன் அதன் பிறகு அந்த ஊரின் வேறு வேறு தெருக்களில் தோன்றத் தொடங்கினான் அல்லது அவனைப் பார்த்ததாக பேசத் தொடங்கினார்கள்.
காந்தி தெருவில் அப்படி ஒரு உருவத்தை இரவில் பார்த்ததாக முத்துசாமி சொன்னார். அவர் இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு வீட்டிற்கு வரும்போது அந்த தெருவில் கடைசியில் கருப்பாய் ஒரு உருவம் நடந்து போனதாகவும், அந்த உருவம் கண்ணாயிரம் சொல்லி இருந்த மாதிரியே மொட்டை தலையும், கருப்பு உடலும் இடுப்பில் டவுசரும் மட்டும் போட்டு இருந்த மாதிரியும் தெரிந்தது என்று முத்துசாமி சொன்னார்.
இப்போது அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் கூடினார்கள். தினமும் நான்கு பேர் தெருவுக்கு காவல் இருப்பது, தெரு முழுவதும் சுற்றி திரிவது திருடனை எங்கு பார்த்தாலும் அடித்து உதைத்து போலீசில் பிடித்துக் கொடுப்பது என்று பேசி முடிவெடுத்தார்கள். உடனே சிங்கராஜ், தங்கமணி, சாரதி, சந்தானம் எல்லாரும் முதலில் களம் இறங்கினார்கள்.
அன்று இரவு முழுவதும் டார்ச் லைட்டோடும் தீப்பந்தத்தோடும் ஊரைச் சுற்றி சுற்றி வந்தார்கள். எதுவும்
நடக்கவில்லை. ஒருவேளை நாம் சுற்றுவது தெரிந்து திருடன் பதுங்கி விட்டானோ என்று அவர்கள் சந்தேகப்பட்டார்கள். இவர்களைப்போலவே
காந்தி தெருவிலும் நான்கு இளைஞர்கள் சுற்றி வந்தார்கள்.
பின்பு இரண்டு நாட்களுக்கு கருப்பு கருப்பூர் அமைதியாக இருந்தது.
. ஒரு வாரம் கழிந்திருக்கும். பகத்சிங் தெருவில் மில் தொழிலாளி ராமசாமி அந்தத் திருடனைப் பார்த்ததாகச் சொன்னார். அவர் மில் வேலை முடிந்து இரவு 12 மணிக்கு வரும்போது அவன் தெருமுனையில் நின்று கொண்டு இருந்ததாகவும் அவரைப் பார்த்தவுடன் அப்படியே இருளில் பதுங்கி ஓடிவிட்டானென்றும் சொன்னார்.
மீண்டும் கருப்பூரில் கற்பனைத் திருடர்கள் தெருவங்கும் முளைத்தார்கள். ஒவ்வொருவரும் அவரவர் கற்பனைக்கு ஏற்ப திருடனை உருவகப்படுத்தினார்கள்.
பத்து ஆள் பலம் கொண்டவன். ராட்சசனை போல கொடூரமானவன். குழந்தைகளையும் பெண்களையும் கொன்று விடுவான் அல்லது கடத்திக் கொண்டு போய் விற்று விடுவான் . இப்படி கருப்பூரிலுள்ள அத்தனை வீடுகளிலும் புதிது புதிதாய் கதைகள் உருவாகி காற்றில் மிதந்து கொண்டிருந்தன.
ஆனால் இதுவரை திருடன் சிக்கவில்லை. போலீசுக்கும் புகார் செய்தாகிவிட்டது. போலீஸ் இரவில் இரண்டு மூன்று முறை ரோந்து சென்றார்கள்.
பிறகு கொஞ்ச நாள் அமைதி.
எல்லாம் முடிந்தது போல் தெரிந்தது. திடீரென்று கருப்பூரில் காற்றாய் சுற்றிக் கொண்டிருந்த திருடன் டானாவூருக்குப் போய் விட்டான்.
கருப்பூருக்கு கண்ணாயிரம் வீட்டிற்கு வந்து சென்ற அவருடைய மச்சான் பொன்னுச்சாமி தான் டாணாவூருக்குக் கூட்டிக் கொண்டு போய்
விட்டார். அடுத்த நாளே அந்தத் திருடனை இரவிலே முச்சந்தியில் பார்த்ததாகச் சொன்னார்.
அதன் பிறகு மீண்டும் இளைஞர் படை டானாவூர் முழுவதும் அலைந்தது. ஆனால் திருடன் சிக்கவில்லை. திருடனை பல வேடங்களில் அலைந்து திரிந்து
கொண்டிருந்தான். அவனைப் பற்றிய கதைகள் மட்டும் சிறகு முளைத்து அங்கும் இங்கும் அலை மோதிக்கொண்டே இருந்தன.
டாணாவூரிலிருந்து அந்த திருடன் இப்போது முக்கூர் டவுனுக்கு வந்துவிட்டான். முக்கூர் டவுன் திரைப்பட அரங்கங்கள், மிகப்பெரிய வணிக வளாகங்கள்,, நகைக்கடைகள், ஹோட்டல்கள், விடுதிகள் என்று எல்லாம் இருக்கக்கூடிய ஒரு நகரம்.
அந்த நகரில் திருடன் சுதந்திரமாக அலைந்தான். அங்கே பார்த்தேன் இங்கே பார்த்தேன். பஸ்ஸில் பார்த்தேன் பைக் ஓட்டிக் கொண்டு
சென்றான். சைக்கிளில் சென்றான். என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தி வந்த
வண்ணம் இருந்தது.
முக்கூரின் ஒவ்வொரு மூலையிலும் திருடனின் கதைகள் பேசப்பட்டன. வயதானவர்கள் அவர்கள் காலத்தில் வாழ்ந்த
திருடர்களைப் பற்றிச் சொன்னார்கள். அந்தக்
கதைகளும் சேர்ந்து கொண்டன.
ஊர் முழுவதும் பரபரப்பு. போலீஸ் இரவு பகலாக ரோந்து சுற்றினார்கள். அந்த நகரத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரையும் சந்தேகப்பட்டார்கள். தெரியாத முகம் என்றால் எல்லாரும் அடிக்கத்
தயாராக இருந்தார்கள்., எல்லோரையும் எல்லோரும் சந்தேகப்பட்டார்கள்.
முன்பின் தெரியாதவர்கள் யாரும் ஊருக்குள் நுழைய முடியவில்லை.
யார் வேண்டுமானாலும் அவர்களை நிறுத்தி கேள்வி கேட்டார்கள். ” “எங்கிருந்து வருகிறீர்கள்? யார் வீட்டிற்கு போகிறீர்கள்? எதற்குப் போகிறீர்கள்? உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன உறவு? “
இப்படி ஏராளமான கேள்விகளுக்கு பதில் சொன்னால் மட்டுமே அவர்கள் அங்கிருந்து நகர முடியும். இதனால் பல இடங்களில்
அடிதடியும் நடந்தது.
ஒரு கட்டத்தில் மாவட்ட நிர்வாகம் ஊர் முழுவதும் மாவட்டம் முழுவதும் அந்தத் திருடர்களைப் பிடிப்பதற்கு தனிக்காவல் படை அமைத்திருப்பதாகவும் மக்கள் அச்சமின்றி இருக்கலாம் என்றும் தெருத்தெருவாக அறிவிப்பு செய்தது.
தொலைக்காட்சியிலும் பரபரப்பாக செய்திகள் ஓடின.
திருடனைப் பார்த்ததாகச் சொன்னவர்களிடம் நேர்காணல் எடுத்து ஒளிபரப்பினார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் அந்த திருடனை பற்றி சொன்னார்கள்.
சிலர் முகமூடி போட்டிருப்பான் என்றும் சிலர் மூக்கு வரை மட்டுமே துணியை கட்டி இருப்பான் என்றும் சிலர் ஹெல்மெட் போட்டதனால் தான் தலை மொட்டையாக தெரிகிறது என்றும் அவரவர் கற்பனைக்கு ஏற்ப அவனை சித்தரித்தார்கள்.
ஆனால் யாரும் அவன் முகத்தை பார்க்கவில்லை. எல்லோருமே தூரத்திலிருந்து பார்த்ததாலும் இருளாக இருட்டில் பார்த்ததாலும் யாருக்கும் அவனுடைய முகம் தெரியவில்லை என்றும் ஒரே மாதிரி சொன்னார்கள்.
அது மட்டுமல்லாமல் சில தொலைக்காட்சிகள் அரசாங்கம் சிறையில் இருந்த அத்தனை திருடர்களையும் விடுதலை செய்து விட்டார்கள் என்றும் அந்தத் திருடர்கள் நாடு முழுவதும் பரவி விட்டார்கள் என்றும் செய்திகளை ஒளி பரப்பினார்கள்.
மக்கள் அன்றாட ம் திருடர்களைப் பற்றிய பேசிக் கொண்டிருந்தார்கள். திருடர்கள் மக்களின் உரையாடலில் தவிர்க்க முடியாதவர்களாக மாறிவிட்டார்கள்.
ஒருநாள் இரவு இரண்டு மணிக்கு ஒரு சம்பவம் நடந்தது.
முக்கூர் நகரத்தின் பேருந்து நிலையத்தில் ஒருவன் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான். ரோந்து வந்த இளைஞர் படை அவனிடம் கேள்வி கேட்டார்கள். அவர்கள் கேட்ட கேள்விகள் அவனுக்கு புரியவில்லை. அவன் வேற்று மொழியில் ஏதோ சொன்னான். அவ்வளவுதான். அந்த இளைஞர் படை அவனை அடிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
அவன் தான் திருடன் என்று அவர்கள் முடிவு செய்தார்கள். போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து திருடனை பிடித்து விட்டதாக ஒருவர் தகவல் சொன்னார். போலீஸ் காரர்கள் வந்தார்கள். அவர்கள் திருடன் என்று சொல்லப்பட்ட அந்த மனிதனை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள். இளைஞர் படையும் பின்னாலேயே சென்றார்கள்.
போலீஸ் ஸ்டேஷனில் அந்த மனிதனை போலீஸ்காரர்கள் விசாரணை செய்தார்கள். ஆனால் அவன் பேசிய மொழி புரியவில்லை. உடனடியாக தகவல் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சென்றது. அவர் ஸ்டேஷனுக்கு வந்து அவனிடம் லத்தி கம்பை காட்டி கத்தினார். அவன் கம்பை பார்த்தவுடன் பயந்து அலறினான்.
அந்த அலறலை கேட்ட இன்ஸ்பெக்டர் ஒரு கணம் அமைதியானார்.
பின்னர் அவன் எந்த மொழியில் பேசினானோ அந்த மொழியில் அவர் பேசினார். யாருக்கும் எதுவும் புரியவில்லை. எல்லோரும் காத்திருந்தார்கள்.
ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு இன்ஸ்பெக்டர் இளைஞர் படையிடம்
“ அவன் குஜராத்தை சார்ந்தவன்.. அவன் பேசறது குஜராத்தி.. நான் கொஞ்சநாள் குஜராத்திலே இருந்தேன்.. அதனால் எனக்கு குஜராத்தி தெரியும்.. இவன் அங்கிருந்து வேலை தேடி வந்த அவனுடைய ஊர்க்காரர்களைத் தொலைத்து
விட்டான்.. அவர்களைத் தேடி ஊர் ஊராய்
அலைகிறான்..பார்த்தால் பாவமாகத்தான்
இருக்கிறது.. அவனுடைய சொந்த ஊர் அவனுடைய அப்பாவை அம்மா பெயர் எல்லாவற்றையும் விவரமாக சொல்கிறான். அவனுடைய ஆதார் அட்டையும் காட்டினான்.. வேலை தேடி அலைகிற அவனப் போய் திருடன் என்று நினைத்து
அடித்து விட்டீர்களே..”
என்று அனுதாபத்துடன் சொன்னார்.
இளைஞர் படை முழு சமாதானம் அடையாவிட்டாலும் இன்ஸ்பெக்டர் சொன்னதை கேட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்கள்.
மறுநாள் ஒரு துப்பறியும் பத்திரிக்கையின் நிருபர் திருடர்களைப் பற்றிய கதையின் கதையை துப்பறிந்து எழுதியிருந்தார். அதைத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பினார்கள்.
” முதன்முதலாக வீட்டின் ஓட்டு சாய்ப்பின்
உச்சியில் உட்கார்ந்திருந்த அந்த கருப்பு மனிதனைப் பார்த்ததாகச் சொன்ன கண்ணாயிரம் உண்மையில் அருகில் இருந்த மரத்தில் குடியிருந்த ஒரு ஆண் குரங்கை தான் பார்த்திருக்கிறார்.
அவர் பயத்தில் அந்த குரங்கை திருடன் என்று நினைத்து கத்திக் கூப்பாடு போட்டு இருக்கிறார் ”
என்று எழுதியதை கேட்டு ஊர் மக்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கேலி செய்து சிரித்துக்கொண்டார்கள்.
ஒரே சிரிப்பாணி தான்.
ஹ்ஹ்ஹ்ஹா ஹ்ஹ்ஹ்ஹ்ஹா...
நன்றி - மூ.அப்பணசாமி

No comments:
Post a Comment