தீராத
விக்கல்
உதயசங்கர்
ஆத்தூர்
நாட்டு ராஜாவின் பெயர் அடி ராஜா. திடீரென்று அவனுக்கு விக்கல் வந்தது. க்வ்அடி க்வ்அடி க்வ்அடி க்வ்அடி என்று விக்கல் வந்தது..
நிற்கவில்லை. என்னவெல்லாமோ செய்து பார்த்தான். என்ன செய்தும் விக்கல் நிற்கவில்லை.
தண்ணீரைக் குடித்துப் பார்த்தான். விக்கல் நிற்கவில்லை. மூக்கைப் பிடித்து மூச்சை அடக்கிப்
பார்த்தான். விக்கல் நிற்கவில்லை. மூச்சு விடாமல் கத்திப் பார்த்தான். விக்கல் நிற்கவில்லை.
குதித்துப் பார்த்தான். விக்கல் நிற்கவில்லை. ஓடிப் பார்த்தான் விக்கல் நிற்கவில்லை.
விக்கல்
எப்படி வந்தது?
அடிராஜாவுக்கு
சிரித்துக் கொண்டே இருக்கவேண்டும். அது நல்ல விசயம் தானே. ஆமாம் நல்லவிசயம் தான். ஆனால்
அடிராஜாவுக்கு எப்போது சிரிப்பு வரும் தெரியுமா? யாராவது அழுதால் தான் சிரிப்பு வரும்.
அதனால் அவன் சிரிக்க வேண்டும் என்றால் மற்றவர்கள் அழ வேண்டும். அதுவும் சும்மா கள்ள
அழுகை அழக்கூடாது. உண்மையாகவே அழவேண்டும்.
மக்களுக்கு
தினம் ஒரு வரி போடுவான். ஒவ்வொருவராக அரசவைக்கு வந்து அழுது கொண்டே இவ்வளவு வரிகளை
கட்ட முடியாது என்று சொல்லும்போது அவன் விழுந்து விழுந்து சிரிப்பான்.
அப்படி
யாரும் வரவில்லை என்றால் என்ன செய்வது?
இரண்டு
ஊர்க்காரர்களை அழைத்து சண்டை போடச் சொல்வான். அப்போது சொல்வான் ” அடி அடி அடி ”
இல்லையென்றால்
வேறு வேறு சாமிகளைக் கும்பிடுபவர்களிடம் சண்டை மூட்டி விடுவான்.
“ அடி
அடி அடி “ என்று சொல்வான். அவர்கள் அடித்துக் கொண்டு அழும்போது சிரிப்பான். சிரிப்பான்.
அப்படிச் சிரிப்பான். அதுவும் நடக்கவில்லை என்றால் அவனிடம் வேலை பார்ப்பவர்களை அழைத்து
ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளச் சொல்வான்.
“ அடி
அடி அடி “
அவர்கள்
அடி தாங்க முடியாமல் அழும்போது அவன் சிரிப்பான். அதனால் அடிராஜாவிடம் வேலை பார்ப்பவர்கள்
மட்டுமல்ல மக்களும் பயந்து கொண்டே இருந்தார்கள்.
ஒரு நாள்
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இரண்டு சமையல்காரர்களை அடித்துக் கொள்ளச் சொன்னான்.
அப்போது வாயில் கோழிக்கறியைத் திணித்துக் கொண்டே,
“ அடி
அடி க்க்க்வ் அடி க்க்வ் அடி க்வ் அடி ” சொன்னான். அப்போதிருந்து இந்த விக்கல் நோய்
அடிராஜாவுக்கு வந்து விட்டது.
உடனே
வைத்தியர்கள் வந்தார்கள். அவர்களும் தெரிந்த வித்தைகளை எல்லாம் காட்டினார்கள். ம்ஹூம்..
சில நிமிடங்கள் நிற்பதைப் போலத் தெரியும். மறுபடியும் வந்து விடும். ” க்வ்அடி க்வ்அடி
க்வ்அடி “
ராஜாவால்
பேசமுடியவில்லை. சாப்பிட முடியவில்லை. தூங்க முடியவில்லை. முக்கியமாக சிரிக்கமுடியவில்லை.
” க்வ்அடி க்வ்அடி க்வ்அடி க்வ்அடி ”
ஒவ்வொரு
முறை அடிராஜா விக்கும்போது அடிக்கத்தான் சொல்கிறான் என்று ஒருவரை ஒருவர் அடித்துக்
கொண்டனர். பக்கத்து நாடுகளில் இருந்து வைத்தியர்கள் வந்தார்கள். அவர்களாலும் விக்கலை
நிறுத்த முடியவில்லை.
அடிராஜா
ஆத்தூர் நாட்டில் முரசறையச் சொன்னான்.
“ நாட்டு
மக்களுக்கு நற்செய்தி.. நல்லதோர் வாய்ப்பு. இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது
என்ன என்றால் ராஜாவின் விக்கல் நோயை என்ன செய்தாவது குணப்படுத்த வேண்டும். அப்படி குணப்படுத்துபவர்களுக்கு
அவர்கள் கேட்பதைக் கொடுக்கிறேன் என்று அறிவிக்கிறார் அடி ராஜா…”
ஆனால்
யாருமே அரண்மனைப் பக்கம் போகவே இல்லை.
போய்
யார் அடி வாங்குவது?
அப்போது
ஆத்தூர் நாட்டின் கிழக்கு திசையிலிருந்து ஆதவன் என்ற இளைஞன் அரண்மனைக்கு வந்தான்.
“ அரசனை
நான் குணப்படுத்துகிறேன்.. “ என்றான். அவனை அரசனிடம் அழைத்துச் சென்றனர். அவன் அடிராஜாவிடம்,
“ அரசே..
நான் இரண்டு நிமிடத்தில் உங்கள் நோயைக் குணப்படுத்தி விடுவேன்.. ஆனால் அதற்கு முன்னால்
நீங்கள் இரண்டு உறுதி மொழிகளைத் தரவேண்டும்..” என்று
சொன்னான்.
“ க்வ்அடி
க்வ்அடி க்வ்அடி சீக் க்வ்அடி கிரம் க்வ் அடி சொ க்வ்அடி ல்லு க்வ்அடி..
எது க்வ்அடி ஆனாலும்
க்வ்அடி சரி..” என்று
சொன்னான் அரசன்.
“ முதலாவது
நான் கொடுக்கும் மருந்துகளைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது…”
“ க்வ்அடி
க்வ்அடி சரி.. அடுத்தது..க்வ்அடி க்வ்அடி
“
“ மருத்துவம்
முடிந்ததும் சொல்கிறேன்..” என்றான்
ஆதவன்.
ஆதவன்
ஒரு இருட்டறைக்கு அரசனை அழைத்துச் சென்றான். அவனுடைய கைகளையும் கால்களையும் சங்கிலியால்
பிணைத்தான்.
அவன்
என்ன செய்யப்போகிறான் என்று புரியாமல் அடிராஜா முழித்தான். என்ன செய்தாலும் சரி விக்கல்
நின்றால் சரி.
வெளியில்
மந்திரிகள், தளபதிகள் எல்லாரும் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆதவன் நிதானமாக தன்னுடைய
இடுப்பில் சுருட்டி வைத்திருந்த புளியவிளாரை எடுத்தான்.
அடித்தான்.
அடின்னா.. அடி.. அப்படி ஒரு அடி..
அடிராஜாவின்
முதுகிலும் கால்களிலும் அடி வெளுத்து வாங்கினான். அடிராஜா வலி தாங்க முடியாமல்,
“ அய்யோ
அம்மா அய்யோ அம்மா… “ என்று அலறினான் அடிராஜா. கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக
வழிந்தது. உடம்பு முழுவதும் தீயாய் எரிந்தது. பல இடங்களில் தோல் உரிந்து விட்டது.
ஆனால் என்ன ஆச்சரியம்!
விக்கல்
நின்று விட்டது. அடிராஜா உடைகளை அணிந்து கொண்டு வெளியில் வந்தான். யாரிடமும் எதுவும்
சொல்லவில்லை. மந்திரிகள்,
“ எப்படி
இருந்தது மருத்துவம் ராஜாவே..”
என்று
கேட்டார்கள். அடி ராஜா அழுது கொண்டே,
“ ஆகா
ஓகோ பேஷ் பேஷ்..” என்றான்.
“ ஏன்
அழுகிறீர்கள் ராஜாவே..? ”
“ அதுவா
ஆனந்தக்கண்ணீர்..” என்றான்
அடி ராஜா. பிறகு ஆதவனைப் பார்த்து,
“ இரண்டாவது
உறுதி மொழி என்ன தம்பி? “
என்று
கேட்டான். ஆதவன் சிரித்துக் கொண்டே,
“ உங்களுக்கே
தெரியுமே.. ராஜாவே..”
என்று
சொன்னான். அதைக் கேட்டதும்,
“ ஆமா ஆமா எனக்குத் தெரியும்..” என்று சொன்னான் அடிராஜா.
மந்திரிகளிடம்,
“ இனி
ஆத்தூர் நாட்டில் யாரும் யாரையும் அடிக்கக்கூடாது.. இதைச் சட்டமாக்கி விடுங்கள் ”
என்றான்.
மந்திரிகள்
ஆச்சரியத்துடன் அரசனைப் பார்த்தார்கள். அடிராஜா அழுது கொண்டே சிரித்தான்.
தீராத
அவனுடைய விக்கல் தீர்ந்து விட்டதே.
நன்றி - அதிசயத்திலும் அதிசயம்
வெளியீடு - புக் ஃபார் சில்ட்ரென்
No comments:
Post a Comment