Tuesday, 10 December 2024

முழுமதி நாள் சாகசம்

 

. முழுமதி நாள் சாகசம்

உதயசங்கர்



நல்ல முழுமதி நாள் இரவு. மின்னி முயல் அதனுடைய பாட்டி வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தது. காடு நிலா ஒளியில் மின்னியது. மின்னி முயல் அல்லிமலர்கள் நிறைந்த ஒரு குளத்தைப் பார்த்தது.  நிலாவின் ஒளி குளத்து நீரில் விழுந்தது. மீன்கள் தண்ணீருக்கு மேலே வாயை வைத்து நிலவின் ஒளியைக் குடித்தன. தவளைகள் அல்லி இலைகளின் மீது தாவித் தாவிக் குதித்தன. மின்னி முயலுக்கும் மகிழ்ச்சி. அங்கும் இங்கும் தாவிக் குதித்தது.

பாட்டி வீட்டுக்கு அருகிலுள்ள ஒரு குன்றைத் தாண்டிப் போக வேண்டும். மின்னி முயல் புறப்படும் போது,

“ பார்த்துப் பத்திரமாப் போகணும்..என்று அம்மா சொல்லியனுப்பியது. ஆனால் நிலாவைப் பார்த்ததும் மின்னி அம்மா சொன்னதை மறந்து விட்டது. திடீரென தவளைகள் க்கிர்ரக் க்கிர்ராக் “ என்று சத்தம் போட்டன. மின்னி முயல் உடனே அருகிலுள்ள ஒரு செடிக்குக் கீழே அப்படியே பதுங்கியது.

அப்போது காய்ந்த சருகுகள் நொறுங்குகிற சத்தம் கேட்டது. ஒரு குள்ள நரி அப்படியே மோப்பம் பிடித்துக் கொண்டே குளத்துக்குப் பக்கமாய் வந்தது. கிட்டத்தட்ட மின்னி முயல் பதுங்கியிருந்த செடிக்கு அருகிலேயே வந்து விட்டது. மின்னி முயலுக்கு உடல் நடுங்கியது. மூச்சைப் பிடித்துக் கொண்டு கண்களை மூடி அப்படியே உட்கார்ந்திருந்தது.

இதோ வந்து விட்டது.

அந்த நேரத்தில் வேறு ஏதோ ஒரு விலங்கு குடுகுடுவென ஓடுகிற சத்தம் கேட்டது. உடனே குள்ளநரி சத்தம் வந்த இடத்தை நோக்கி ஓடியது.

இப்போது தான் மின்னி முயலுக்கு மூச்சு வந்தது. மெல்ல அங்கிருந்து நழுவியது. சிறிது தூரத்துக்கு காதுகளை விடைத்துக் கொண்டு சிறிய சப்தங்களையும் கேட்டுக் கொண்டே சென்றது.

ஒரு இடத்தில் சிறிய வெள்ளை நிறப்பூக்கள் நிலாவின் ஒளியில் வெள்ளித்துகள்களாக ஜொலித்தன. அதைப் பார்த்ததும் எல்லாவற்றையும் மறந்து விட்டது மின்னி முயல். அந்தப் பூக்களைக் கடித்துத் தின்றது. இதழ்களில் பனித்துளியும் தேனும் கலந்து மின்னி முயல் இதுவரை சாப்பிடாத ருசியில் இருந்தன. 

திடீரென மின்னி முயல் சறுக்கிக் குப்புறவிழுந்தது. உருண்டு புரண்டு ஒரு பள்ளத்தில் கிடந்தது.

“ ஐய்யோ அம்மா..என்று கத்தியது.

 பள்ளத்தில் ஒரே இருட்டு. மேலே தெரிந்த வெளிச்சம் பள்ளத்தில் விழவில்லை. ஒரே சேறும் சகதியுமாக இருந்தது. அதன் உடலெங்கும் பாசி நாற்றமடிக்கும் சேறு பூசியிருந்தது. மின்னி முயலுக்கே அந்த நாற்றத்தைத் தாங்க முடியவில்லை.

ச்சே என்ன நாத்தம். என்று சொல்லி முடிக்கும் போது”

” உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ” என்ற சத்தம் மின்னி முயலின் முதுகுக்குப் பின்னால் கேட்டது. மெல்ல தலையைத் திருப்பிப் பார்த்தது மின்னி முயல். ஒரு பெரிய மலைப்பாம்பு தலையைத் தூக்கியபடி இருந்தது.

 நல்ல வேளை.

அங்கிருந்த நாற்றத்தாலோ என்னவோ மின்னி முயல் இருப்பது தெரியவில்லை. மின்னி முயல் அசையவில்லை. மின்னிக்கு அருகில் ஊர்ந்து அந்தப் பள்ளத்திலிருந்து வெளியேறியது மலைப்பாம்பு. மின்னி முயல் புத்திசாலி. மலைப்பாம்பு ஊர்ந்து சென்ற பாதையில் மெல்ல ஏறிப் பள்ளத்திலிருந்து வெளியே வந்தது.

 மின்னி முயல் அங்கிருந்த காய்ந்த புல்வெளியில் படுத்து உருண்டு தன் மீதிருந்த சேறையும் பாசியையும் நீக்கியது. அப்படியே கொஞ்ச நேரம் படுத்துக் கிடந்தது.

என்ன பயங்கர அனுபவம்?

மெல்லத் தாவித் தாவி குன்றின் மீது ஏறியது. ஒரு பெரிய ஆலமரத்தின் பக்கமாய் வந்தபோது தரையில் ஒரு நிழல் தெரிந்தது. நிலா வெளிச்சத்தில் ஒரு பெரிய பறவையின் நிழல் தாழ்ந்து வருவதைப் பார்த்தது. சற்றே தலையைத் தூக்கிப் பார்த்தது மின்னி முயல்.

 யம்மாடி எவ்வளவு பெரிய கூகை ( ஆந்தையினம் ) !

கால்களை விரித்துக் கொண்டு மின்னி முயலை நோக்கி பறந்து வந்தது. கால்களின் கூர் நகங்கள் நிலா வெளிச்சத்தில் பளபளத்தன.

இவ்வளவு தூரம் தப்பித்து வந்து விட்டோம். இதோ இன்னும் கொஞ்ச தூரத்தில் பாட்டி வீடு வந்து விடும். இப்போது மாட்டிக் கொண்டோமே. என்று நினைத்தது மின்னி முயல்.

சரியாக கூகை கால்களால் பிடிக்கப்போகும் போது ஒரு துள்ளு துள்ளி கூகையின் ஒரு சிறகில் மோதியது. கூகை இதை எதிர்பார்க்கவில்லை. அது நிலை தடுமாறி கீழே மோதப் போனது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மின்னி முயல் ஒரே ஓட்டமாய் ஓடி பெரிய புதருக்குள் நுழைந்து கொண்டது.

பகலில் தான் பயணம் கடினமாக இருக்கும் என்றால் இரவிலும் அப்படித்தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்து விட்டது.

மெல்ல பொழுது விடியத் தொடங்கியது.

மின்னியின் பாட்டி தன்னுடைய வளையை விட்டு வெளியே வந்து அருகில் இருந்த பனிப்புல்லை மேய்த்தொடங்கியது. நிமிர்ந்து பார்த்தது மின்னியின் பாட்டி.  தூரத்தில் மின்னி முயல் வருவது தெரிந்தது..

அவ்வளவு தான்.

தாவிக்குதித்து சென்று மின்னி முயலைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டது. பாட்டியின் அருமைப் பேரன் இல்லையா?

“ மின்னிக்கண்ணு என்னடா விசேசம்? “ என்று கேட்டது.

மின்னி முயல் முந்தின நாள் இரவில் நடந்த சாகசங்களைச் சொல்லத் தொடங்கியது.

என்ன நடந்தது என்று உங்களுக்குத் தான் தெரியுமே.

 

1 comment:

  1. Min(n)i முயலுடன் ஒரு இரவு பயணம் போனது போலவே கதையின் நடை அருமை.

    ReplyDelete