Sunday, 17 May 2026

சிந்தனை விதை எப்படி உருவானது?

 

தத்துவம் அறிவோம் 4

சிந்தனை விதை எப்படி உருவானது

உதயசங்கர்



இந்த உலகிலுள்ள மற்ற உயிரினங்கள் இயற்கையை அனுசரித்தும், இயற்கையின் மீது மிகக்குறைந்த அளவில் செயல்புரிந்தும் உயிர் வாழ்ந்தன. அவை இயற்கையுடன் இணைந்து இயற்கையையும் அந்த உயிரினங்களையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு இயற்கையாகவே வாழ்ந்தன. அந்த உயிரினங்களுக்கு வறட்சியோ, வெள்ளமோ, புயலோ, மழையோ, இயற்கைப் பேரிடர் எதுவாக இருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டன. அதன் மீது அவற்றிற்கு எந்தப் புகாருமில்லை.

ஏன் இப்படி நடக்கிறது?

தெரியாது.

இதை மாற்ற முடியுமா?

தெரியாது.

இந்தப் பேரிடரிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியுமா?

தெரியாது.

ஏனெனில் அவற்றிற்கு இயற்கையையும் தங்களையும் பிரித்துப் பார்க்கத் தெரியாது. இயற்கையின் செயல்களுக்குக் காரணகாரியம் தெரியாது. அதைப் பற்றிச் சிந்திக்குமளவுக்கு அவற்றின் மூளை வளர்ச்சியடையவில்லை.

பரிணாமக்கோட்பாட்டின் படி இயற்கையான வாழ்நிலையில் மாற்றம் இல்லாதபோது எந்த உயிரும் மாற்றமடைவதில்லை. புரிகிறதா?

வாழ்நிலை என்றால் உணவு, இனப்பெருக்கம், பாதுகாப்பு, சூழல், இவற்றில் மாற்றம் நிகழாதபோது அந்த உயிரினங்களும் மாறவேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை.  எனவே தான் ஒரு புலி புலியாகவே இப்போதும் இருக்கிறது. அல்லது கரப்பான்பூச்சி இன்னமும் கரப்பான்பூச்சியாகவே தான் இப்போதும் இருக்கிறது.

இதிலிருந்து ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். அதாவது  வாழ்நிலை என்பது தான் ஒவ்வொரு உயிரின் இருப்பைத் தீர்மானிக்கிறது.

வாழ்நிலை தான் அந்த உயிரின் உணர்வையும், அறிவையும் முடிவு செய்கிறது. வாழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டால் உயிர்களின் வாழ்வும் கேள்விக்குள்ளாகிறது.

ஒரு புலி காட்டில் வாழ்கிறது. ஏனெனில் காட்டில் அதற்கான உணவு கிடைக்கிறது. இனப்பெருக்கம் செய்ய முடிகிறது. பாதுகாப்பு இருக்கிறது.  சுதந்திரமாக இருக்க முடிகிறது. அதனால் புலி காட்டில் வாழ்கிறது.

சரியா?

ஆனால் காடு அழியும்போது என்ன நடக்கிறது?

உணவு கிடைக்காது.  இனப்பெருக்கம் செய்ய முடியாது., பாதுகாப்பு இல்லை.

புலி என்ற இனம் அழிந்து விடும்.

நாம் யோசித்துப் பார்த்திருக்கிறோமா?

ஏன் புலி மரங்களை நட்டு காட்டை உருவாக்கக்கூடாது?

நினைத்துப்பார்த்தாலே சிரிப்பு வருகிறது இல்லையா?

கார்ட்டூன் படங்களிலோ, அனிமேஷன் படங்களிலோ அப்படி நடக்கலாம். உண்மையில் புலிக்கு அப்படி எல்லாம் செய்யமுடியும் என்று கனவில் கூடத் தெரியாது. வாழ்வதற்குச் சாதகமான சூழல் இருந்தால் வாழும். இல்லையென்றால் அழிந்து விடும். இயற்கையை மாற்ற முடியும் என்று தெரியாது.

யானையும் வண்ணத்துப்பூச்சியும் காட்டை உருவாக்குகிறதே என்று உங்களுக்குத் தோன்றுகிறதா?

உண்மை தான் யானையும் வண்ணத்துப்பூச்சியும் காட்டை உருவாக்குகின்றன. ஆனால் யானை தன்னுடைய சாணத்தின் வழியே விதைகளையும் கொட்டைகளையும் வெளியேற்றும் போது நான் மரம் நடுகிறேன். நான் காட்டை உருவாக்குகிறேன் என்று யோசித்துச் செய்கிறதா?

அல்லது

வண்ணத்துப்பூச்சி நான் மகரந்தச் சேர்க்கை மூலம் மரங்களின் செடிகளின் இனப்பெருக்கத்துக்கு உதவுகிறேன் என்று தெரிந்து ஒவ்வொரு பூவாகப் போய் உட்காருகிறதா?

இல்லையே.

யானைக்கோ, வண்ணத்துப்பூச்சிக்கோ தாம் செய்வது தெரியாது. தங்களுடைய செயலால் காடு உருவாகும் என்று சுத்தமாகத் தெரியாது.

 அவற்றின் உயிரியல் இயல்பும், உடலியல் செயலும் இயற்கையாக நடப்பவை.

அப்படி என்றால்?  

அவை சிந்தித்துச் செயல்படவில்லை.

மனிதன் மட்டுமே சிந்தித்துச் செயல்படுகிறான்.

மனிதனும் திடீரென சிந்திக்கவில்லை. அவனும் மற்ற விலங்குகளைப் போலவே இயற்கையோடு இயற்கையாகக் கலந்தே இருந்தான்.

எப்படி அவன் சிந்திக்கத் தொடங்கினான்?

எப்போது அவன் சிந்திக்கத் தொடங்கினான்?

அவனிடம் சிந்தனைவிதையை ஊன்றியது எது?

என்ற கேள்விகள் வருகிறதா?

இந்தக் கேள்விகளுக்கான பதில் உங்களுக்கு ஆச்சரியமளிக்கும். சிந்தனை என்றால் அது மூளையின் செயல்பாடு என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் மனிதனின் முதல் சிந்தனை தோன்றியது எங்கே தெரியுமா?

அவனுடைய கை விரல்களில் இருந்து தான்.

கேளுங்கள்!

எப்படி?

( தத்துவம் அறிவோம் )

நன்றி - இயல் சிறார் மின்னிதழ்

 

No comments:

Post a Comment