Saturday, 30 May 2026

என்றுமுள இசை - மனதைத் தூர்வாரும் கதைகள்

 

மதிப்புரை

மனதைத் தூர்வாரும் கதைகள் .

என்றுமுள இசை – குறுங்கதைகள் – உதயசங்கர்

சுகன்யா ராமநாதன்



சிறுகதைக்கும் கவிதைக்கும் இடைப்பட்ட ஒரு நவீன இலக்கிய வடிவம் குறுங்கதை. இன்றைய டொபாமின்-ஹிட் தரும் ரீல்ஸ் யுகத்தில், மனிதரின் சராசரி ஒருமுகப்படுத்தப்பட்ட கவனக் காலம் என்பது 50 வினாடிகளை விடக் குறைவாக இருக்கிறதாம். அதிலும் ஜென்-ஜீ தலைமுறை மற்றும் ஜென்-ஆல்பா தலைமுறையினரின் சராசரி, ஒற்றை இலக்கமாக இருக்கிறது. அந்த கால அவகாசத்திற்குள் மின்னலைப்போல பாய்ந்து ஒரு மிகப் பெரிய வாழ்க்கை சித்திரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகிறது எழுத்தாளர் உதயசங்கரின் குறுங்கதைகள்.

கதை பண்படுத்திய மிருகம் மனிதர். அவர்களின் முதனிகளின் விலங்குதனங்கள் அவர்களின் நினைவகங்களின் அடுக்குகளில் படிந்துகிடக்கிறது. அவை நவீனத்துடன்  வினைபுரிந்து இன்றைய மனிதர்களை விசித்திரர்களாக உருவெடுக்கவைத்துள்ளது. ‘என்றுமுள இசை’  தொகுப்பின் குறுங்கதைகள் விசித்திரர்களின் மனங்களை கதையாடுகிறது.    

மனிதர்களின் போலித்தனங்களை நகையாடி, நம்மை சுய பரிசீலனைக்கு உட்படுத்தும் கதைகள் கூர்மையானவை. ‘பிம்பம்’ என்ற கதை ஒட்டுமொத்த சமுதாயத்தின் போலித்தனத்தின் பிம்பத்தை காட்டுகிறது. தனி மனித அடையாளத் தேடல் என்பது இன்று ஒரு போதையாகவே மாறியிருக்கிறது, அந்த போக்கை சுட்டும் கதைகள் ‘நகல்’, ‘எலியின் காதல்’ மற்றும் புல்ஷிட். இரண்டே வரிகளில் ‘கதையின் கதை’.“யாரும் எழுதாத கதையை எழுதி விடுவதற்காக ஒரு கதையும் எழுதாமல் காத்திருந்த எழுத்தாளர் யாரும் எழுதாத கதையை எழுதாமலேயே இறந்து போனார். யாரும் எழுதாத கதை ஒரு கதையும் எழுதாத மற்றும் ஒரு எழுத்தாளருக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

உணர்வுகளை படிமங்களின் மேல் ஏற்றிடும் மாயம் நிகழ்ந்திருக்கிறது. படிமங்களின் போட்டோ ஆல்பமாக இந்த தொகுப்பு இருக்கிறது. “ஒரு ஓவியம் போல அந்த மரமும் வானமும் தெரிந்தன. அந்த ஓவியத்தில் ஒரு காய் கூட இல்லை. ஒரு பூ கூட பூக்கவில்லை.” இப்படி ஆரம்பித்து “அதனால் என்ன?” என்று முடிகிறது ‘பூப்பதும்..’ என்ற கதை. இந்த படிமம் நம் மனதில் பதிந்து, சமூகம் வகுத்து வைத்துள்ள இருத்தலின் தகுதிகளின் மீது கேள்விகளை எழுப்புகிறது. வரலாறு நெடுகிலும் வன்முறையின் கோரமும் சேர்ந்தே புதையுண்டவை வழிபாட்டு தலங்கள். அதை ‘கடவுளரின் கல்லறைகள்’ என்கிறார் ‘அலறிய கடவுளர்’ கதையில்.

பயம் என்பது ஒரு பரிணாம எதிர்வினை. உயிரினங்களின் தப்பிப் பிழைத்த வரலாற்றில் விளைந்த குணநலன். எதிர்காலத்திற்கான கருவி. ஆனால் அந்த கருவியை இன்று நாம் எப்படி கையாளுகிறோம். கொரனா காலத்தில் ‘கொரனா’ என்ற சொல்லைக் கேட்டு மரணித்தவர்களின் செய்திகளை நாம் கேள்விப்பட்டோம். மரணம், பயத்தின் விளைவாகவும் மாறி இருக்கிறது. மனித மனதில் தோன்றும் விசித்திரமான அச்சங்களை படம்பிடித்து காட்டுகிறது, ‘எட்டிபார்த்த மரணம்’, ‘கண்ணாமூச்சி’, ‘இறந்தவனின் அழைப்பு’.

மரணம் ஒரு கதாபாத்திரமாக உலா வருகிறது. ‘எட்டிபார்த்த மரணம்’ கதையில்,“திறந்த வாயுடன் கோரைப் பற்களுடன் இருளால் உருவாக்கபட்டதைப் போல ஒரு உருவம் சன்னல் வழியே அறைக்குள் நுழைய யத்தனிக்கிறது. அது மரணமென்று தோன்றுகிறது”. ‘தேவதைக்கதை’யில் ‘சிறகுகளையடித்துக் கொண்டு நட்சத்திரங்கள் புடைசூழ’ தேவதையாக வருகிறது. மரணம் களைத்துப் போகிறது, ஏன் தற்கொலை கூட செய்துகொள்கிறது.


மனித மனங்கள் முரண்களின் கண்ணாடி மாளிகை. அதில் எரியப்பட்ட கல் தான் இந்த கதைகள். உணர்வு
த்தளத்தில் ஏற்படும் முரண்கள், கதைகளில் இருள் ஒளி என்றாக திடவடிவம் எடுத்திருக்கிறது. “கண்களை மூடியதும் அவள் தெரிந்தாள். கண்களைத் திறந்தால் காணவில்லை... இமைக்கும் நொடியில் எதிரில் அவள் இருளாய் நின்று கொண்டிருந்தாள்.”  இருதலைக் கொள்ளி மாய யதார்த்தவாத படகில் பயணம் செய்ய வைக்கிறது சில கதைகள். “ஒரு மின்னல் அடித்தது. அந்த மின்னல் அத்தனை பெரிதாக, அத்தனை வலிமையாக, அத்தனை வெளிச்சமாக இருந்தது. கடந்த காலம் மட்டுமல்ல எதிர்காலமும் தெரிந்தது. அவர்கள் மின்னலாக மாறினார்கள். மின்னல் அவர்களாக மாறியது. பிறகு எல்லாம் பழைய மாதிரி ஆகிவிட்டது.” என்று மாற்றம் கதை முடிகிறது. இப்படி இன்னும் நிறைய கதைகள் புதிய பரிணாமத்தோடு வெளிப்பட்டிருக்கின்றன.

எழுத்தாளர் உதயசங்கர் படைப்புலகில் எறும்புகளுக்கென்று தனியிடம் இருக்கிறது. ‘நிழல் யுத்தம்’, ‘ஏன்’ கதைகளில் எறும்பு ஒரு குறியீடாக வருகிறார்.

‘செத்த எலி’ கதையில் வரும் அந்த பெண்ணின் பார்வை, ‘வீடு’ கதையில் வரும் வாசனை, ‘தொடுகைகதையில் வரும் தீண்டல் ..  இவை புலன்களின் ஆலயத்தை ஊடுருவிச் செல்பவை.

மனதின் யாரும் தீண்டத் துணியாத குரூர பக்கங்களை புரட்டுகிறது, ‘விளையாட்டு’, ‘நொடிக்கொலை’ போன்ற கதைகள்.

‘விசித்திரன்’ மற்றும் ‘தேடல்’ கதைகளில், குழந்தைமையின் ஆர்வம் (கியுரியாசிட்டி) காட்சியாகிறது. இதுவே உயிர்ப்பின் ஆணிவேர் . இந்த ஆர்வம் தான் தேடலை தூண்டுகிறது. வாழ்க்கையின் சுவரஸ்யங்களை ஆராயச்செய்கிறது. இந்த தேடலில் நாம் தொலைந்தே போய்விடுகிறோம்.

வரலாறு கண்ட, காண்கிற மனிதப் பேரிடர்களை சுருக்கென்று சொல்லிப்போகும் கதைகள், ‘நடை’, ‘மரணத்தின் நற்செய்தி’, ‘கனல் பூக்கள்’, ‘காலாதீதம்’. ஆறாத துக்கம் அடைந்து கிடக்கும் எழுத்தாளர் மற்றும் வாசக மனங்களின் இடையே, இந்த கதைகள் ஒரு ஒப்பாரி பாடலாக, ஒரு ஆறுதலாக சேர்ந்து ஒலிக்கிறது.

மூச்சடக்கி முத்தெடுத்தது போல நமக்கு கிடைப்பவை, ‘துப்பாகிக்குண்டின் துக்கப்பாடல்’, ‘சொற்கள்’, ‘குழந்தைகளின் சிரிப்பொலி’, ‘botulinum’, ‘பறவையின் இசை’ மற்றும் இவற்றில் வாழும் போராளிகள்.

அணிகலனாகவும் சில நேரத்தில் தனித்த கலைப்பொருளாகவும் இந்நூலுக்கு அழகு சேர்த்திருக்கிறது உ. நவீனா அவர்களின் ஓவியங்கள். நூலின் வடிவமைப்பு நேர்த்தியாகவும் கையில் தவழும் ஒரு குழந்தையின் மென்மையோடும் அமைந்திருக்கிறது.

எழுத்தாளர் உதயசங்கரின் குறுங்கதைகள் மனித மனதின் ஆழங்களை தூர்வாருபவை. காயங்களை மயிலிறகால் ஆற்றுப்படுத்துபவை. குரூரங்களின் பிம்பத்தை காட்டும் கண்ணாடி. இருளில் வெளிச்சம் பாய்ச்சும் ஒளி. ஒளியை வண்ணங்களாக விரிக்கும் முப்பட்டகம். தனிமைக்கு துணையாகும் யாழிசை. மானுட நேசத்தை கடத்தும் மூதாட்டி. பல் உயிர் ஓம்பும் அறம். மொத்தத்தில், கேட்டு வெகு நேரம் ஆகியும் நாம் முணுத்துக்கொண்டே இருக்கும் ஒரு பாடல்.

 நீங்களும் இந்த இசையை கேட்டுப் பாருங்கள்.

  

என்றுமுள இசைகுறுங்கதைகள்

வெளியீடுசெவ்வியல் பதிப்பகம்

விலை -150/

தொடர்புக்கு – 91 9488406868

நன்றி - புக் டே

No comments:

Post a Comment