தத்துவம் அறிவோம் 5
கொஞ்சம் வரலாறு
உதயசங்கர்
தத்துவச்சிந்தனை
எப்போது எப்படித் தோன்றியது என்று தெரிந்து கொள்ளும் முன்னால் நம்முடைய வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். என்ன
சரிதானே!
சூரியனிலிருந்து
உடைந்து சிதறிய ஒரு நெருப்புத்துண்டு தான் பூமி. அந்த
சம்பவம் நடந்து சுமார் 484 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டன.
என்னது?
480 கோடி
ஆண்டுகளா?
ஆமாம். நாம் வாழும் இந்த பூமி பிறந்து 480 கோடி ஆண்டுகளாகி விட்டன. ஆனால்
எரிந்து கொண்டிருந்த நெருப்புக்கோளமான பூமியில் ஒரு உயிர் எப்போது தோன்றியது தெரியுமா?
380 கோடி
ஆண்டுகளுக்குப் பிறகு தான் பூமியில் முதல் உயிர் தோன்றியது.
என்னது 100 கோடி ஆண்டுகளாக பூமி எரிஞ்சிக்கிட்டே இருந்ததா? அப்படின்னா
பூமியைப் படைத்தது, உயிர்களைப்
படைத்தது கடவுள் என்று சொல்கிறார்களே..
அதை அப்புறம் பார்ப்போம். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் இப்போது தெரிந்து கொள்ளலாம். அதாவது
அறிவியல் எந்த ஒன்றையும் ஆராய்ந்து நிரூபிக்கும். அல்லது நிரூபிக்கப்பட்ட ஒன்றையே உண்மை என்று ஏற்றுக் கொள்ளும்.
புரியலையே!
தண்ணீர்
எப்படி உருவானது என்று முதலில் யாருக்கும் தெரியாது. ஆனால்
இப்போது பள்ளிக்குழந்தை கூட ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் சேர்ந்தால் தண்ணீர் உருவாகும் என்று சொல்லிவிடும்.
எப்படித்
தெரிந்தது?
தண்ணீரின்
மூலக்கூறுகளை ஆராய்ந்து நிரூபித்திருக்கிறார்கள் அறிவியலாளர்கள். ஆராய்ந்து நிரூபிப்பது அறிவியல் என்று சொல்கிறோம்.
சரி. முதல் உயிர் எப்போது எப்படித் தோன்றியது?
நூறுகோடி
ஆண்டுகளாக எரிந்து கொண்டிருந்த பூமி கொஞ்சம் கொஞ்சமாகக் குளிர்ந்தது. அப்படிக் குளிரும் போது விதவிதமான வாயுக்கள் உருவாயின. ஹைட்ரஜன், நைட்ரஜன், ஹீலியம், கார்பன் டை ஆக்ஸைடு, இவை
கலந்து குழம்பியே தண்ணீர் உருவானது.
அது தான் கடல்.
பூமியில்
உள்ள அனைத்து உயிர்களுக்கும் சொந்த ஊர் என்றால் அது கடல் தான். அந்தக் கடலில் தான் முதல் உயிரான சையானோ என்ற ஒரு செல் நுண்ணுயிர் தோன்றியது.
அடேயப்பா!
நம்முடைய
மூதாதையர் யார்? என்று
கேட்டால் சையானோ என்று சொல்லவேண்டும்.
சரியா? பேரே சூப்பரா இருக்குல்ல.. சையானோ.
அந்த சையானோவிலிருந்து தான் பூமியில் இப்போது இருக்கும் இத்தனை கோடி உயிரினங்களும் தோன்றின. இதையும்
அறிவியலாளர்கள் ஆராய்ந்து நிரூபித்திருக்கிறார்கள். அப்படித்தான் ஒவ்வொரு உயிரும் தங்களுக்கென்று தனியான
பண்புகளுடன் வாழ்கின்றன. இயற்கையில் ஒன்றைப் போல இன்னொன்று என்ற ஒரு உயிர் கூட கிடையாது.
சரி. மனிதன் எப்போது எப்படி உருவானான்?
அறிவியலறிஞர்
டார்வின் பரிணாமக்கோட்பாட்டை ( Evolution Theory ) கண்டுபிடித்தார். அப்போது அவருக்குக் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு ஆய்வு செய்தார். அதிலிருந்து
கிடைத்த உண்மைகளைச் சொன்னார்.
குரங்கிலிருந்து
மனிதன் தோன்றினான்.
. இது
உண்மையா? என்று
இப்போது கேட்டால் உண்மை தான்,
ஆனால் முழு உண்மையில்லை
உராங் உடான், சிம்பன்சி, கொரில்லா, போனோபாஸ்
போன்ற மனிதக்குரங்கினங்களிலிருந்து இப்போதிருக்கும் நவீன மனிதன் தோன்றினான்.
அப்படி
என்றால் நாம் பார்க்கும் குரங்குகள் எல்லாம் மனிதக்குரங்காகவோ, மனிதனாகவோ மாறவில்லையே ஏன்?
அங்கே தான் இருக்கிறது இன்னொரு ட்விஸ்ட்.
அதாவது, பிரைமேட் என்று சொல்லப்படும் குரங்கினங்களுக்கும் சிம்பன்சி மனிதக்குரங்குகளுக்கும் இடையில் ஹோமினிட் என்று சொல்லப்படும் விலங்கினங்கள் தோன்றியிருக்கின்றன.
மனிதக்குரங்குகளுக்கு
முன்னால் ஒரு குரங்கினம் தோன்றியிருக்கிறது. அதனுடைய பரிணாமவளர்ச்சியில் தான் மனிதக்குரங்குகள் தோன்றியிருக்கின்றன. மனிதக்குரங்குகளின் பரிணாமவளர்ச்சியில் தான் நவீன மனிதன் தோன்றினான்.
இதெல்லாம்
எப்போது ஆரம்பித்திருக்கும்?
சுமார்
அறுபது எழுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால்.. மனிதனின்
முன்னோர் இந்த பூமியில் உதித்தனர்.
அதற்கு
முன்னால் மனிதன் என்பவன் கிடையாது.
நவீன மனிதன் அதாவது நாம் அதாவது ஹோமோசேப்பியன்ஸ் எப்போது தோன்றினார்கள்?
கேட்கவேண்டும்
என்று தோன்றுகிறதா?
சுமார்
இரண்டரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் தான்.
சரி. எங்கே தோன்றினார்கள்?
ஆப்பிரிக்காவில்
தோன்றினார்கள். ஆமாம். இன்று
உலகமுழுவதும் பரவியுள்ள மனித இனம் முதன்முதலில் தோன்றியது ஆப்பிரிக்காவில் தான்.
நமக்கெல்லாம்
பூர்வீகம் அதாவது மூதாதையர் அல்லது முன்னோர்களின் ஊர் ஆப்பிரிக்காவா?
எதுக்குச்
சுத்தி வளைச்சிகிட்டிருக்கீங்க? மொத்த மனித இனத்தின் பாட்டி தாத்தா ஊர் ஆப்பிரிக்கா.
அவ்வளவுதான்.
ஆனால்?
என்ன ஆனால்?
இல்லை. வந்து.. ஆப்பிரிக்கமக்களுக்கும்
உலகம் முழுதும் இருக்கும் மக்களுக்கும் சம்பந்தமில்லையே.
ஆமால்ல..ஆனால் ஆப்பிரிக்கா தான் எல்லோருக்கும் சொந்த ஊர்.
என்ன குழப்பமாக இருக்கா?
சரி. குழப்பம் தான் அதாவது சந்தேகம் தான் உண்மையைக் கண்டுபிடிக்கும் ஒரே வழி..
எப்படின்னு
பார்ப்போம்.
( அறிவோம் தெளிவோம் )

No comments:
Post a Comment