Thursday, 7 May 2026

ஒவ்வொரு குழந்தையிடமிருந்து இந்த உலகம் புதிதாய் பிறக்கிறது.

 

ஒவ்வொரு குழந்தையிடமிருந்து இந்த உலகம் புதிதாய் பிறக்கிறது.

 உதயசங்கர்

 

குழந்தைகள் பிறந்ததிலிருந்தே புறவுலகை அறிந்து கொள்ளத் தொடங்கிவிடுகிறார்கள். அவர்களின் புலன்களின் வளர்ச்சியும் அறிவு வளர்ச்சியும் அவர்களுடைய படைப்பூக்கத்தின் உந்துதாலேயே நிகழ்கிறது. இந்தப் படைப்பூக்கத்தின் வழியே இந்த உலகை அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள். ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் இந்த உலகம் புதிதாகப் பிறக்கிறது. 

குழந்தைகளின் படைப்பூக்கமென்பது கட்டுப்பாடுகளற்றது. எதையும் அறிந்து கொள்ளும் நோக்கம் மட்டுமே கொண்ட து. அதனால் தான் வீளையாட்டாக வீசுகிறது, கொட்டுகிறது, சாப்பிடுகிறது, ஓடுகிறது, குதிக்கிறது, விழுகிறது, எழுகிறது, கிறுக்குகிறது, கத்துகிறது, அழுகிறது, சிரிக்கிறது இப்படித் தான் தன்னுடைய புலன்களை அறிந்து கொள்கிறது. தன் உடலையும் அதன் ஆற்றலையும், இந்த உலகையும் அறிந்து கொள்கிறது.

ஓடுவது, துரத்துவது

வீசி எறிவது

குறிபார்த்து அடிப்பது

பிடிப்பது தப்பிப்பது

மறைந்து கொள்வது

சுற்றுவது சறுக்குவது

மூச்சு வாங்குவது என

விளையாடி வாழ்க்கைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்

சிறுவர், சிறுமியர்.

என்று கவிஞர் முகுந்த் நாகராஜன் சொல்வதை யோசித்துப் பாருங்கள். குழந்தைகளின் ஒவ்வொரு செயல்பாடுகளும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்று புரிந்து கொள்ள முடியும்.

குழந்தைகளின் கிறுக்கல்களென்பது திட்டமிடப்பட்டதில்லை. ஒரு குறிப்பிட்ட கருத்தை, விஷயத்தைச் சொல்வதற்காக இல்லை. ஆதிமனிதனின் கலையுணர்வே கிறுக்கல்கள். மொழிக்கு முந்தைய தொடர்பாடலாக் கிறுக்கல்களே இருந்திருக்கின்றன. இப்போதும் தொன்மையான குகைகளின் கிறுக்கல்களின் வழியே மனிதன் எவ்வாறு இந்த உலகைப் புரிந்து கொண்டிருக்கிறான் என்பதுவும் அதை எப்படி மற்றவர்களுக்குப் பரப்புரை செய்திருக்கிறானென்பதும் தெரியும். அந்த உணர்வின் வெளிப்பாடு தான் குழந்தைகளின் கிறுக்கல்கள். எல்லாக்குழந்தைகளும் ஒரே மாதிரி கிறுக்குவதில்லை. உண்மையில் அவர்கள் தன்னை வெளிப்படுத்துகிறார்கள்.  அந்த வெளிப்பாடு தான் படைப்பூக்கத்தின் அரிச்சுவடி.

குழந்தைகளின் கலையுணர்வு எந்த நோக்கங்களுமற்றது. அதற்கு யாரையும் திருத்தவேண்டும். தன்னை முன்னிறுத்தவேண்டும் என்ற லட்சியங்களில்லாதது. கலை என்று பெரியவர்கள் வரையறுத்திருக்கிற கலைவிதிகளைப் பொருட்படுத்தாதது. எந்தத் தர்க்கவிதிகளுக்குள்ளும் பொருந்தாது. காலத்தை மறுதலிப்பது. அந்தந்தக் கணத்தை நித்தியமாக்குவது. ஏனெனில் குழந்தைகளின் இறுதி லட்சியம் மகிழ்ச்சி மட்டுமே. தன்னுடைய ஒவ்வொரு செயல்பாட்டிலும் மகிழ்ச்சியைத் தவிர வேறெதையும் எதிர்பார்ப்பதில்லை. அந்த மகிழ்ச்சிக்காக மட்டுமே எழுந்து விழுகிறது. கீழே சிந்திச் சிதறுகிறது. உருண்டு புரள்கிறது. கிறுக்கித்தள்ளுகிறது. மகிழ்ச்சியின் வழியாகவே தன்னை உணர்கிறது.

இப்போது தான் கிடைத்த து ஜன்னல் ஸீட்

உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா

வீடு இங்கே தான் இருக்கிறதாம்

இதெல்லாம் ஒரு காரணமா?

முகுந்த் நாகராஜனின் இந்தக் கவிதை குழந்தையின் கவித்துவ உணர்வைக் கச்சிதமாகச் சொல்கிறது.

இதைப் பெரியவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 இந்த உலகத்தின் மிகச்சிறந்த புனைவியலாளர்கள் குழந்தைகள் தான். மொழியைக் கற்றுக்கொள்ளத் தொடங்கும்போதே அவர்கள் கவிதை சொல்லத்தொடங்கி விடுகிறார்கள். தான் அறிந்த வார்த்தைகளை வைத்துக்கொண்டு விளையாடுகிறார்கள். அந்த விளையாட்டின் வழியாக இந்த உலகத்தை புதிதாகப் படைக்கிறார்கள். வேறொன்றாகப் பார்க்கிறார்கள். அப்படி விசித்திரமாகப் பார்ப்பதைச் சொல்கிறார்கள். அதுதான் அவர்களுடைய கலை.

நீ என்னைத் தொட்டால்

நான் ஒரு ரோஜாப்பூ

நான் உன்னைத் தொட்டால்

நீ ஒரு மல்லிகைப் பூ

என்று மகிழ் ஆதன் என்ற குழந்தை கவிதை சொல்கிறான். இந்தக் கவிதையின் பொருளை உணர்ந்து அவன் படைக்கவில்லை.. அவன் மனதில் இயல்பாக ஊறிவரும் ஸ்பாண்டேனியஸான எண்ணங்களைச் சொல்கிறான். இன்னும் சொல்லப்போனால் அவன் சொல்வதை அறிந்து சொல்லவில்லை. ஆனால் அதற்குள் கவித்துவம் பொங்கித் ததும்புகிறது. மொழியைக் கற்றுக் கொள்ளத் தொடங்கியதுமே குழந்தைகள் கவிஞர்களாகி விடுகிறார்கள். அவர்களுக்கென்று ஒரு கவிதை மொழியை உருவாக்குகிறார்கள். அந்த மொழிக்கென்று தனித்துவமான அர்த்தங்களையும் உருவாக்குகிறார்கள். வியன் என்ற குழந்தை தாத்தே தாத்தே என்று சொல்கிறது. அதன் மொழியில் தாத்தே என்றால் சுற்றுவது என்று பொருள். ஒவ்வொரு குழந்தையையும் உற்றுக் கவனித்தால் இதை உய்த்துணரலாம். ஆனால் நடைமுறை வாழ்க்கையின் வறட்டுத்தனமான செயல் மொழி அவர்களுடைய கவித்துவத்தை அழித்து விடுகிறது.

திருத்தி வடிவமைக்கப்பட்டு இலக்கணவிதிகளுக்கு உட்பட்டு, சிலபல லட்சிய நோக்கங்களுக்காக உருவாக்கப்படுகிற பெரியவர்களின் கலைப்படைப்புகளுக்கும் குழந்தைகளுடைய கலைப்படைப்புகளுக்கும் பாரதூரமான வித்தியாசம் இருக்கும். ஏனெனில் எந்த நோக்கமுமற்று தன்னை வெளிப்படுத்தலே குழந்தைகளுடைய கலை என்பதால் அந்தக் கலைப்படைப்புகள் சர்வ சுதந்திரமானதாக இருக்கின்றன.

 அப்படிப்பட்ட குழந்தைகளின் படைப்புகள் இந்த உலகைக் குறித்த அவர்களுடைய மனதில் ஏற்பட்ட ஆரம்ப காலப்பதிவுகள், என்பதால் மிகமுக்கியமானவை. அவற்றுக்கு எந்தச் சார்பும் கிடையாது. எனவே குழந்தைகள் படைக்கும்போது தன்னை மட்டுமல்ல இந்த உலகத்தைப் பற்றியும் படைக்கிறார்கள்.

ரமணி என்ற 12 வயதுக்குழந்தை எழுதிய யாருக்குத் தைக்கத் தெரியும் கதையில் உருவில் எளிய தையல்சிட்டுவுக்குத் தர வேண்டிய சன்மானத்தைக் கொடுக்காத தனால் ஏமாந்து போவதைச் சொல்கிறார். பெரியவர்கள் வாசிக்கும்போது எளியவர்களை எப்படி அதிகாரமிக்கவர்கள் ஏமாற்றுகிறார்களென்று புரிகிறது.  ஆனால் எழுதும்போது அந்தக் குழந்தைக்குத் தெரியாது. அதாவது பெரியவர்களைப் போல ஒரு கருவைத் திட்டமிட்டு கருத்தைச் சொல்வதற்காக குழந்தைகள் எழுதுவதில்லை அல்லது கதைகள் சொல்வதில்லை. ஆனால் யதார்த்த உலகின் அனுபவம் அவர்களின் மனதில் மறைமுகமாக ஏற்படுத்தும் பாதிப்பு கதையில் வெளிப்படுகிறது.

அதேபோல ரமணா என்ற ஆறுவயது சிறுவன் எழுதிய சிம்பாவின் சுற்றுலா என்ற சிறார் நாவல் பாலசாகித்ய புரஸ்கார் குறும்பட்டியலில் இரண்டுமுறை இடம் பெற்றது. அதற்கு அந்தக் குழந்தையின் ஸ்பாண்டேனியஸான படைப்பூக்கத்தை நாவல் பிரதிபலித்த து தான் காரணம்.

எனவே . எல்லாக்குழந்தைகளும் அச்சு அசலான படைப்பாளிகள் தான். அவர்கள் தங்கள் படைப்பூக்கத்தைக் கண்டுபிடிக்கப் பெரியவர்கள் வழிகாட்ட வேண்டும். அதற்கு முதலில் பெரியவர்களுக்கு சமகாலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் சிறார் நூல்களைப் பற்றிய அறிவு வேண்டும். சிறார் கதைகளென்றாலே பழைய பஞ்ச தந்திர, தெனாலிராமன், பீர்பால், முல்லா கதைகள் என்ற சிந்தனை மாறவேண்டும். சமகாலத்தில்  அவர்களுடைய வாசிப்புக்கேற்ற வகையில் வெளிவரும் நூல்களை வாங்கிக் கொடுக்க வேண்டும். அவர்களுடன் சேர்ந்து கதைகளை வாசிக்க வேண்டும். கதைகளைச் சொல்ல வேண்டும்.

அடுத்த து குழந்தைகளின் படைப்பூக்கத்துக்குக் கிடைக்கிற பாராட்டும் உற்சாகமும் அவர்களுடைய ஆளுமை உருவாக்கத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கும். என்பதைப் பெரியவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். 

ஆனால் பெரும்பாலான பெரியவர்கள் ஒரு குழந்தையின் இயல்பான படைப்பூக்கத்தில் தலையீடு செய்கிறார்கள். தாங்கள் அறிந்த வகையில் தங்களுடைய நோக்கத்துக்காக, ஆசைக்காக, லட்சியத்துக்காக, பரிசுக்காகத் திருத்துகிறார்கள். பள்ளிக்கூடத்திலோ, விழாக்களிலோ கிடைக்கிற ஒரு எவர்சில்வர் தட்டுக்காக குழந்தைகளின் சுயமான படைப்பூக்கத்தைச் சிதைக்கிறார்கள். எனவே தான் போட்டிகளில் கலந்து கொள்ளும் குழந்தைகள் தங்களுடைய படைப்பூக்கத்தில் விளைந்த கதைகளைச் சொல்லாமல் யாரோ சொல்லிக்கொடுத்த நீதிநெறிக் கதைகளைச் சொல்கிறார்கள்.

இயற்கை ஒவ்வொரு உயிரையும் படைப்பூக்கம் மிக்கவர்களாகவே படைக்கிறது.

குழந்தைகளின் படைப்பூக்கம் ஒரு மலையைப் போன்றது. ஒரு சிகரத்தைப்போன்றது. ஒரு காட்டாற்றைப் போன்றது. விரிந்த கடலைப்போன்றது. ஒரு மலரைப் போன்றது.

பெரியவர்கள் அதை உணர்ந்து கொண்டு விலகி நின்று கை தட்டிப் பாராட்டினாலே போதும்.

நன்றி - புத்தகம் பேசுது

 

No comments:

Post a Comment