கண்ணாமூச்சி ஆடும் புனைவுகள்
உதயசங்கர்
தமிழ் நாவல் இலக்கியம் 1876-ஆம் ஆண்டு மாயூரம் வேதநாயகம்பிள்ளை எழுதிய பிரதாபமுதலியார் சரித்திரத்தில் தொடங்கி இன்று வரை எத்தனையோ மேடுபள்ளங்களைக் கடந்து சமீபகாலத்தில் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாவல்களின் படைப்புக்களமாக மாறியிருக்கிறது.
இன்று ஒரு தமிழ் இலக்கிய வாசகன் பெருமையோடு குறைந்தது பத்துப்பேரையாவது நாவல் இலக்கியத்தில் சாதித்தவர்கள் என்று சொல்ல முடியும். நவீன நாவல் இலக்கிய வடிவம் வெறும் புனைவைத் தாண்டி எழுத்தாளனிடம் வேறு பல விஷயங்களையும் வற்புறுத்துகிறது. வரலாறு, புவியியல், அறிவியல், அரசியல், மானுடவியல், நாட்டுப்புறவியல், இனவரைவியல், என்று நவீன அறிவுலகின் தரவுகள் அனைத்தையும் தன்னுடைய புனைவிலக்கியத்தில் நெய்வதன் மூலம் படைப்பின் அடர்த்தியையும், ஆழத்தையும், பரப்பளவையும், நம்பகத்தன்மையையும், கலையாளுமையையும், செழுமைப்படுத்துகிறான்.
இன்றைய நாவலாசிரியன் தன்னுடைய புனைவெழுத்தை உண்மையைப் போல புனைவையும், புனைவு போல உண்மையையும் குழப்பித்தருவதன் மூலம் வாசகனுக்கு கலைப்பரவசத்தை அளிக்கிறான். கலைஞனே கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் தன் படைப்பில் முன்னுணர்ந்து வடிவமைக்கிறான். ஈராயிரம் வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்த நிகழ்வுகளைக்கூட சில வரலாற்றுக்குறிப்புகளின் துணையோடு வாசகனின் கண்முன்னே நிகழ்த்திக் காட்டி விடுகிறான். இதிகாசங்கள், புராணங்கள், நாட்டுப்புறக்கதைகளில் உள்ள பேசப்படாத பக்கங்களைப் பேச வைக்கிறான். வெளிச்சம் படாத கதாபாத்திரங்களை பிரம்மாண்டமாய் உருப்பெருக்குகிறான். ஏற்கனவே நிலைநிறுத்திய மதிப்பீடுகளை மறுவாசிப்பு செய்கிறான். இண்டு இடுக்குகளில் நுழைந்து கலையின் ஒளியினால் நமக்கு வேறொன்றாகக் காட்டுகிறான்.
மனித மனதின் கோடிக்கணக்கான விசித்திரங்களையே உலகெங்குமுள்ள படைப்பாளிகள் கோடிக்கணக்கான பக்கங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். கலைடாஸ்கோப்பின் சித்திரங்களைப் போல ஒரு சிறு சலனத்தில் அற்புதமான சித்திரங்களை உருவாக்கும் மனித மனம் எழுதித்தீராத மர்மங்களைக் கொண்டிருக்கிறது.
வரலாற்றைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு தொல்லியல் சான்றுகள் மட்டும் போதாது. நம்முடைய இனக்குழுவின் ஆதிக்கிழவி தன்னுடைய உடலெங்கும் கதைகளைச் சேர்த்து வைத்திருக்கிறாள். இன்னும் சொல்லப்போனால் கதைகளால் உருவாக்கப்பட்டவள் தான் அந்த ஆதிக்கிழவி. அவளுடைய சடைபிடித்த தலைமயிரில் எத்தனை லட்சம் கதைகள் ஈரும் பேனுமாய் அடைந்து கிடக்கின்றன. அவைகள் எப்போதும் கதைக்குஞ்சுகளைப் பொரித்துக் கொண்டேயிருக்கின்றன. அவளுடைய உடல் சுருக்கங்களிலிருந்தும், மீன்செதில் பாய்ந்த தோல் பரப்பிலிருந்தும் கதைகள் உதிர்ந்து கொண்டேயிருக்கின்றன.
ஆதிக்கிழவி தலைமுறைகள் தோறும் பண்பாடு, பழக்கவழக்கம், தொன்மங்கள், வழியாக உருவாகும் கதைகளைச் சேகரித்து தன்னுடம்பில் ஒளித்து வைத்துக் கொண்டேயிருக்கிறாள். அந்தக்கதைகளின் மூலமே எத்தகைய இடரையும் மனித இனம் தன் ஆன்மபலத்தினால் எதிர்கொண்டு தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. எத்தனை விஞ்ஞானங்கள், புதிய கண்டுபிடிப்புகள் இந்தப்புவியில் வந்தாலும் என்றும் கதைகளுக்கு அழிவில்லை. மற்றொரு வகையில் சொல்லப்போனால் கதைகள் இந்தப்பூமியில் என்று அழிந்து போகிறதோ அன்று மனித இனமே அழிந்து விடும்.
அதனால் தான் இந்தப்பூமியெங்கும் அலைந்து திரிந்து ஆதிக்கிழவி கதைகளைச் சேர்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் காலம் பிழைத்தவள். நித்தியமானவள். அதனால் அந்தக்கிழவியிடமிருந்து கடந்த காலத்தின் கதைகளையும் நீங்கள் கேட்கலாம். எதிர்காலத்தின் கதைகளையும் நீங்கள் கேட்கலாம். அவளுடைய கதைகள் நிரூபிக்கப்பட்ட உண்மைகள் அல்ல. ஆனால் உண்மைகளும் உள்ள புனைவுகள். புனைவுகளுக்குள் உண்மையை உருமாற்றி கண்ணாமூச்சி ஆடுகிறாள் ஆதிக்கிழவி. ஏன் தெரியுமா? சில நேரம் உண்மை குரூரமானது. உணர்ச்சியற்றது. சாய்வில்லாதது. நேரடியானது. ஒரு கொலைக்கருவியைப் போல. அதனால் மனித இனமே கூட அழிந்து போய்விடலாம். ஆதிக்கிழவிக்குத் தெரியும். அதனால் தன் குழந்தைகளைக் காப்பாற்ற புனைவுகளை கலந்து வைக்கிறாள். இந்தப் புனைவுகளே மனிதகுலம் இன்னும் நம்பிக்கையோடு மேலும் மேலும் முன்னேறக் காரணமாக இருக்கிறது.
( சு.வெங்கடேசனின் சந்திரஹாசம் கிராஃபிக் நாவலுக்கு எழுதிய மதிப்புரையிலிருந்து )

No comments:
Post a Comment