Sunday, 26 April 2026

யாருக்கு உரிமை?

யாருக்கு உரிமை?

உதயசங்கர்



உதிரன் கண்விழித்தான். அவனுக்குக் கண்விழித்தவுடன் உடனே கழிவறை போகவேண்டும். எப்போதுமே நெருக்கியடித்துக் கொண்டு ஓடுவான். அம்மா கூடக் கேலி செய்வாள். அண்ணன் கதிரவன்,

போடா அவசரக்குடுக்கி..”

என்று கேலி செய்வான். அதையெல்லாம் கேட்பதற்கோ நின்று பதிலுக்குக் கிண்டல் செய்யவோ உதிரனுக்கு நேரம் கிடையாது. கழிவறைக்குள் நுழைந்தான். கழிவறைக் கோப்பை இல்லை. மேலே இருக்கும் நீர்த்தொட்டி இல்லை. கழிவறை காலியாக இருந்தது. உதிரனுக்கு முதலில் புரியவில்லை. கண்களைக் கசக்கினான். தூக்கக்கலக்கம் போகவில்லையோ. இல்லையே. உண்மையிலேயே இல்லை. இரவுக்குள் எப்படி மாயமாகிப் போயிருக்கும். ஒருவேளை அறை மாறி வந்து விட்டோமோ?

வேகமாகக் கதவைத்திறந்து வெளியில் பார்த்தான். எதிரே அடுக்களை தெரிந்த து. சரிதானே. அடுக்களைக்கு எதிரில் தான் கழிவறை இருக்கும். அருகில் வேறு அறைகளும் கிடையாதே. அவசரம். அவசரம். அவசரம்.

அம்மா! அம்மா ! டாய்லெட்டைக் காணோம்..”

என்று கத்தினான். முதலில் அம்மாவிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. மறுபடியும் கத்தினான்.

அம்மா.. டாய்லெட்டைக் காணோம்..”

அடுக்களையில் இருந்து அம்மாவின் குரல் கேட்ட து.

அங்கே தான் இருக்கும் நல்லாப்பாரு..” என்று அம்மா சொன்னார். அவன் ஏதோ சோப்பையோ, துண்டையோ கேட்கிறான் என்று நினைத்துக் கொண்டார்.

உதிரன் கையில் டவுசரைப்பிடித்துக் கொண்டே அம்மாவிடம் ஓடினான்.

அம்மா டாய்லெட்டைக் காணோம்மா..”

அப்போது தான் அவன் சொன்னது அம்மாவுக்குப் புரிந்த து.

என்னது டாய்லெட்டைக் காணோமா? “ என்று சிரித்துக் கொண்டே கேட்டார். அண்ணன் கதிரவன்,

அம்மா அவன் அப்பா ரூமுக்குள்ளே போய்த் தேடியிருப்பான். ஹ்ஹா ஹ்ஹா.” என்று சொல்லிச் சிரித்தான். உதிரனுக்குக் கோபம் தலைக்கேறியது. அவன் அம்மாவிடம்,

நீ வேணா வந்து பாரு.. டாய்லெட் ரூமுக்குள் அந்தக் கோப்பையும் இல்லை.. டேங்கும் இல்லை..” என்று அம்மாவின் கையைப் பிடித்து இழுத்தான். அம்மாவும் உதிரனுடன் போனார். கழிவறைக்கதவைத் திறந்த அம்மா,

இந்தா இருக்குல்ல.. கோப்பையும் டேங்கும்.. இன்னும் தூக்கம் கலையலையா? போய் முகத்தை முதல்ல கழுவு..” என்று சிரித்துக் கொண்டே சொன்னார். உதிரனும் அம்மாவுடன் தான் நின்றான். ஆனால் அவன் கண்ணுக்குத் தெரியவில்லை. திடீரென்று அவனுக்குப் பயம் வந்து அழ ஆரம்பித்தான்.

அம்மா.. எனக்குக் கண்ணு தெரியலை.. “ என்று கத்தினான். அம்மா அவனை அணைத்துக் கொண்டு,

அட மக்கு உளறாதே.. மத்ததெல்லாம் தெரியுதில்ல.. அப்புறம் எப்படி டாய்லெட் மட்டும் தெரியாமல் போகும்? “ என்று சொல்லியபடியே கோப்பை இருந்த இட த்தில் உட்காரவைத்து விட்டு வெளியே போய்க் கதவைச் சாத்தினார்.

சிறிது நேரம் கழித்து அண்ணன் கதிரவன் கழிவறைக்குப் போனான். அவனுக்கும் அறையில் கழிவறைக்கோப்பை இருக்கும் இடமே தெரியவில்லை.  அவன் மெல்ல வெளியே வந்து அம்மாவிடம்,

அம்மா டாய்லெட்டில ஏதோ பேய், பிசாசு இருக்குன்னு நினைக்கிறேன்.. எனக்கும் எதுவும் தெரியல.. அறையே சுத்தமா இருக்கு..”

சொன்னபோது முகம் வெளுத்திருந்த து. ரொம்ப ப் பயந்து போயிருந்தான். அம்மா அவனை அழைத்துக் கொண்டு கழிவறைக்குள் நுழைந்தார். கழிவறைக் கோப்பை, நீர்த்தொட்டி எல்லாம் தெரிந்த து.

இது என்னடா மாயம்! என்று வாய்விட்டுச் சொன்னார் அம்மா.

காலையில் அம்மாவும் மகனும் என்ன மாயத்தைக் கண்டுபிடிச்சீங்க? “ என்று கேட்டுக் கொண்டே வந்தார் அப்பா.

அம்மா எதுவும் பேசவில்லை. அப்பாவின் கையைப் பிடித்து கழிவறைக்குள் தள்ளினார். உள்ளே நுழைந்த அப்பா முதலில்,

ஏன் என்னைப் பிடிச்சு…” என்று ஆரம்பித்தவர் உடனேயே,

அய்ய ய்யோ.. என்ன இது கோப்பையைக் காணோம்.. டேங்கையும் காணோம்.. “

என்று கத்திக் கொண்டே வெளியே வந்தார். பிறகு கொஞ்சம் நிதானித்து மெல்ல அறைக்குள் போய் நடந்து பார்த்தார். கோப்பை இருந்த இடத்தில் தரை தான் இருந்தது. நீர்த்தொட்டி இருந்த இடத்தில் சுவர் தான் இருந்தது.

என்ன இது அதிசயமா இருக்கு..” என்று அம்மாவிடம் கேட்டார். அம்மாவுக்கும் எதுவும் புரியவில்லை. ஆனால் உதிரனுக்கு ஏதோ பொறி தட்டியது போலத் தோன்றியது.

நேற்று இரவு அவன் கட்டிலில் படுத்து தூங்கப்போகும்போது அப்பாவின் சத்தம் உரத்துக் கேட்டது. இன்னும் சொல்லப்போனால் அந்தச் சத்தம் கேட்டு அவனுடைய தூக்கமே தொலைந்து விட்ட து.

சாதாரணமாக அப்பா பேசவே மாட்டார். அமைதியாகத்தான் இருப்பார். அம்மாவும் வேலைக்குப் போவதால் சமையல், துணி காயப்போடுவது, எடுத்து மடித்து வைப்பது போன்ற  உதவிகள் செய்வார். அவருக்கு எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும். அப்பா எதுக்குக் கத்துகிறார் என்று உற்றுக்கவனித்தான்.

டாய்லெட்டைப் பாரு.. எப்படியிருக்கு? உள்ளே நுழைய முடியலை.. நாத்தம் தாங்கல.. அதைக் கழுவ முடியாதா உனக்கு? “

என்று அம்மாவைத் திட்டிக் கொண்டிருந்தார். அம்மாவும்,

ஏன் நான் தான் கழுவணுமா? நான் மட்டுமா அதைப் பயன்படுத்தறேன்.. நீங்களும் தானே..போறீங்க.. நீங்களோ பிள்ளைகளோ கழுவுனா டாய்லெட் வேண்டாம்னு சொல்லப்போகுதா? “ என்று கத்தினார்.

பாத்திரம் விளக்குறது, டாய்லெட் கழுவுறது.. துணிகளை வாஷிங் மெஷின்ல போடறதெல்லாம் உன் வேலை.. ஏதாவது உதவி தான் செய்யமுடியும்..ராத்திரி கழுவிட்டுப் படு..” என்று அதிகாரமாகச் சொன்னார் அப்பா.

நானுந்தான் வேலைக்குப் போய்ட்டு வாரேன்.. இது பெண்கள் வேலை இது ஆண்கள் வேலைன்னு யாரு பிரிச்சா? எல்லாவேலைகளையும் எல்லோரும் பகிர்ந்து செய்ய வேண்டியது தானே..”

என்று அம்மா பதில் சொன்னாலும் அவர் கழிவறையைக் கழுவி விட்டுத் தான் படுத்தார். எப்போதும் அம்மா தான் கழிவறையைக் கழுவி பினாயில் போட்டுச் சுத்தம் செய்வார்.

ஒருவேளை அம்மா பேசியதை கழிவறைக் கோப்பையும் நீர்த்தொட்டியும் கேட்டிருக்குமோ?

மறுநாள் காலையில் உதிரனும் கதிரவனும் கழிவறையைச் சுத்தம் செய்ய பிரஷும் பினாயில் பாட்டிலுமாக க் கழிவறைக் கதவைத்திறந்தனர். கழிவறைக் கோப்பையும் நீர்த்தொட்டியும் தெளிவாகத் தெரிந்தன.

அப்பா வாசலில் நின்று வாளியில் தண்ணீரை வைத்துக் கொண்டு நின்றிருந்தார்.

நன்றி - வண்ணக்கதிர்

No comments:

Post a Comment