அன்புத்தோழர் போஸ்கோவின் கேள்வி
இந்த முயற்சியை தொடங்குவதும், தொடர்வதும், எந்தளவு வெற்றி கிடைத்துள்ளது தங்களுக்கு..?
எப்படி இப்படியான ஒரு பெரு முயற்சி இங்கு...?
தோழருக்கு எனதன்பும் வாழ்த்தும்.
சரியா? கலை இலக்கிய ஆய்வு மய்யம், வடலூர்.
தோழருக்கு வணக்கம்.
சிறார் இலக்கியம் பற்றி ஒரு சிறு சலனம் உருவாகியிருக்கிறது என்று நம்புகிறேன். 2017 -ல் தொடங்கி சின்னச்சின்ன உரையாடல்கள், படைப்புகள் வழியே சிறார் இலக்கியத்தின் மீது கவனம் குவியத் தொடங்கியிருக்கிறது.
இதற்கு தமிழ்நாட்டு அரசின் முயற்சிகளும் முக்கியமான காரணம். குழந்தைகள் மீது அக்கறையும் அன்பும் கொண்ட பல ஆசிரியர்களும் காரணம்.
பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த தை விட இப்போது சிறார் எழுத்தாளர்கள் அதிகமாகியிருக்கிறார்கள்.
குழந்தைகளே எழுத்தாளர்களாகியிருக்கிறார்கள்.
ஏராளமான பெண்கள் எழுத வந்திருக்கிறார்கள்.
சிறார் இலக்கியக்கருத்தரங்கங்கள் நடக்கின்றன.
அரசிடம் தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் பல கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறது.
வரும் தேர்தலில் கூட சிறார் இலக்கியக் கோரிக்கை சாசனம் அனைத்துக் கட்சிகளிடமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சிறார் இலக்கிய விருதுகள் அதிகமாகியிருக்கின்றன.
சிறார் இலக்கிய விருதுகள் குறித்த சர்ச்சைகளும் அதிகமாகியிருக்கின்றன.
சிறார் இலக்கியம் என்றால் என்ன விலை என்று கேட்டுக் கொண்டிருந்த இலக்கிய உலகில் சிறார் இலக்கியப் புறணிகளும் அதிகமாகியிருக்கின்றன.
சிறார் இலக்கிய நூல்கள் லட்சக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் விற்பனையாகும் சூழல் உருவாக்கியிருக்கிறது.
உதாரணம் - ஆயிஷா, கயிறு, மாயக்கண்ணாடி, ஆதனின் பொம்மை, மரப்பாச்சி சொன்ன ரகசியம், ஒற்றைச்சிறகு ஓவியா , விழியனின் அனைத்து நூல்கள், சீர் பதிப்பகம் வெளியிடும் இளையோர் நூல்கள்,
அனைத்துப்பதிப்பகங்களும் சிறார் நூல்களைப் ( நூலக ஆணை சுலபமாகக் கிடைக்குமென்ற வணிக நோக்கமிருந்தாலும் )பதிப்பிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
கல்விப்புலத்தில் பாடத் திட்டத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆய்வுப்புலத்துக்குள் நுழைந்திருக்கிறது.
ஆனால் இவையெல்லாம் கல்வீசிய குளத்தின் அலைகள் தான்
ஏனெனில் சிறார் இலக்கியத்தை பெரியவர்கள் வாசிக்க வேண்டியதில்லை என்ற பொதுப்புத்திச் சிந்தனை நீக்கமற நிறைந்திருக்கிறது.
காரணம் சிறார் இலக்கியம் எளிமையானது, அதிலிருந்து உணர்ந்து கொள்ள, அறிந்து கொள்ள எதுவுமில்லை என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கிறது.
அதனால் தீவிர இலக்கிய உலகத்திலும் சரி, முற்போக்கு இலக்கிய உலகத்திலும் சரி தமிழ் அறிவுச்சமூகத்திலும் சரி, சிறார் இலக்கியம் ஒதுக்கப்பட்டே வருகிறது.
அனைத்து இலக்கிய அமைப்புகளும் அறிவுச்சமூகமும் அனைத்து ஊடகங்களும் தங்களுடைய நிகழ்ச்சி நிரலில் சிறார் இலக்கியத்தை பேசுபொருளாக்க வேண்டும்.
வாசித்து விமரிசனம் செய்து, புதிய படைப்புகளை உருவாக்கும்போது சிறார் இலக்கியம் இன்னும் வேகமாக முன்னேறிச் செல்லும். மிகச் சிறந்த படைப்புகள் வெளிவரும்.
இந்தத் தருணத்தில் ஓசூரில் எழுத்தாளர். பா.வெங்கடேசன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடத்தப்படும் புரவி என்ற இலக்கிய அமைப்பின் கூடுகையில் சிறார் இலக்கியம் பற்றிய ஒரு அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த து. விஷ்ணுபுரம் சரவணன், ந.பெரியசாமி, நான் மூன்றுபேரும் கலந்து கொண்டோம்.
இதை ஒரு மிக மிக முக்கியமான முன்னேற்றமாகக் கருதுகிறேன்.
இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் தான்.
பயணம் நெடியது, பாதையும் கரடு முரடானது ஆனாலும் பயணத்தைத் தொடர்கிறோம்!
மிக்க நன்றி தோழர்.போஸ்கோ
No comments:
Post a Comment