புலம்பெயர் வாழ்வின் ஒரு
துளி மதுரம் அமானுல்லா
உதயசங்கர்
உலகம் முழுவதும்
மனிதர்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு
இடத்துக்குப் புலம் பெயர்ந்து கொண்டேயிருக்கிறார்கள். தீரவே தீராத இந்தப்
பயணம் கிட்டத்தட்ட எழுபதாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.
ஆதிமனிதன் தான் பிறந்த ஆப்பிரிக்காவிலிருந்து வாழ்வதாரம் தேடி
புறப்பட்ட பயணம் இன்னும் முடியவில்லை. இன்று உலகமுழுவதுமுள்ள மனிதர்கள்
யாவரும் புலம் பெயர்ந்தவர்களே. நடந்து
சென்றவர்கள் இப்போது பறந்து
செல்கிறார்கள். ஆனால் கொரோனா
மறுபடியும் ஆதிகாலநடையை மனிதர்களுக்கு நினைவுபடுத்திச் சென்றது. எங்கோ இருப்பவர்களைப் பற்றி இங்கிருப்பவர்களுக்கு எப்போதும்
மகிழ்ச்சியான கற்பனையும் பெருமிதமும்
பொங்கி வழியும்.
என் பிள்ளை
அமெரிக்காவிலிருக்கிறான். என்பிள்ளை துபாயிலிருக்கிறான். என்று சொல்வதில் எல்லோருக்கும்
ஒரு கர்வமிருப்பதைப் பார்க்கமுடியும். வெளிநாடுகளில் வேலை தேடிச்
சென்றால் ஒருவன் தன்
வாழ்க்கையில் வெற்றி பெற்று
விடுவான் என்ற பாமரநம்பிக்கை மக்கள்
மனதில் நிலவுகிறது. புலம்
பெயர்ந்தவர்களைப் பற்றி எத்தனையோ
உண்மைச்செய்திகள், படைப்புகள் கதைகள்,
சினிமாக்கள், அவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு துயரத்துக்குள்ளானார்களென்று சொன்னாலும், நம்பிக்கைச்சுடரை கைகளேந்தியே ஒவ்வொருவரும் புலம்
பெயர்கிறார்கள்.
தோழர். மஞ்சாலும்மூடு
சுனில் லால் முதலில் இந்த
மொழிபெயர்ப்பு நூலைக் கொடுத்தபோது
வாசித்து முடித்த அன்றிரவு
உறக்கம் வரவில்லை. நான்
முற்றிலும் அறிந்திராத அந்நியநாடு,
அதில் கைவிடப்பட்ட மனிதர்கள்,
கற்பனைக்கும் எட்டாத அவர்களின்
துயரங்கள், அவர்களைக் காப்பாற்றி
தாயகம் அனுப்பி வைக்கும்
அமானுல்லா, எல்லோரும்
அன்றிரவு முழுவதுமே உடனிருந்தார்கள். சில அத்தியாயங்களில் வருகிற
மனிதர்களைப் பற்றி வாசிக்கும்போது மனம்
கலங்கி கண்ணீர் பொங்கிக்
கொண்டேயிருந்தது.
என்ன வாழ்க்கை
இது ? என்று விரக்தி கூடத்
தோன்றியது. ஆனால் அந்த விரக்தியைத்
தகர்த்துக் கொண்டு தோழர்.
அமானுல்லா பிரம்மாண்டமான ஆகிருதியாக
என் முன்னே நின்றார்.
உண்மையில் அமானுல்லா போன்றவர்களே
இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகிறார்கள். மனிதனாகப் பிறந்ததில்
பெரும்பேறு பிறர்க்கென முயலுதல்
என்று பழந்தமிழ் இலக்கியம்
சொல்கிறது. அப்படிப் பட்ட
பெரும்பேற்றினை அமானுல்லா அடைந்திருக்கிறார். இந்த நூல் அனைத்து
இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படவேண்டும். எல்லாவிதமான வேறுபாடுகளும்
பிரிவுகளும் பிளவுகளும் வன்மமும்
துவேஷமும் ,மனமாச்சர்யங்களும் தலைவிரித்தாடும் இந்தக் காலத்தில் இந்த
நூலை வாசித்தால் நம்முடைய
வேறுபாடுகள் தூசியிலும் தூசியென்று
அனைவரும் உணர்ந்து கொள்வார்களென்று நம்புகிறேன். உண்மையில் மாமனிதனாக
அமானுல்லாவை உணர்கிறேன். வாழ்க
அமானுல்லா!
அமானுல்லாவின் நினைவுகளை
படைப்பாக எழுதியதின் மூலம்
முனைவர் தீபேஷ் கரிம்புங்கரை
மிகப் பெரும் பணியினைச்
செய்திருக்கிறார். அvவருடைய
எழுத்தில் உருவான மலையாளப்பிரதியின் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு
பாலைச்சுனை என்று சொல்லலாம். அப்படியே
அந்த உணர்ச்சித்ததும்பல்களை, அவலத்தை,
துயரத்தை, கைவிடப்பட்ட உணர்வை,
அன்பை, ஆதரவை, ஒற்றுமையை
தமிழுக்குக் கொண்டுவந்திருக்கும் சுனில்லால்
மிகப்பெரும் கொடையைத் தமிழுக்குக்
கொடுத்திருக்கிறார். இந்த மொழிபெயர்ப்பின் வழியாக
வாழ்வனுபவ இலக்கிய வகைமையில்
ஒரு புதிய பாதை கிடைத்திருக்கிறது.
தமிழ்ப்படைப்பை வாசிப்பதைப் போலவே நான் உணர்ந்தேன். வாசிக்கும் ஒவ்வொருவரும் நிச்சயமாக இதில் வரும் உண்மை மனிதர்களுடன் வாழ்வார்கள். அவர்களுடன் சேர்ந்து பரிதவிக்கவும், கண்ணீர் விடவும், அமானுல்லா போன்ற ஆளுமைகளால் ஆறுதல் பெறவும் செய்வார்கள். அதை மொழிபெயர்ப்பில் சாதித்துக் காட்டிருக்கிறார் தோழர். சுனில்லால்.
அமானுல்லாவின் ஞாபகங்கள்
பாலைச்சுனை
தீபேஷ் கரிம்புங்கரை
தமிழில் - சுனில்லால் மஞ்ஞாலுமூடு
வெளியீடு - பாரதி புத்தகாலயம்
.

No comments:
Post a Comment