Tuesday, 26 May 2026

தத்துவம் எப்படிப் பிறந்தது? 8

 

தத்துவம் அறிவோம் 8

தத்துவம் எப்படிப் பிறந்தது? 

உதயசங்கர்



தத்துவம் பிறப்பதற்கு எது காரணமாக இருந்தது?

மனிதனின் உழைப்பு.

இதை ஒருபோதும் மறக்கக்கூடாது. என்ன சரியா?.

ஒரு விஷயம் தெரியுமா?

இன்று இயற்பியல், வேதியியல், கணிதவியல், உயிரியல், வரலாற்றியல், வாழ்வியல் இலக்கியம் என்று எத்தனையோ அறிவுத்துறைகள் இருக்கிறதல்லவா? 

ஆரம்பகாலத்தில் இவற்றையும் இயற்கைத்தத்துவ இயல் என்று தான் சொல்லியிருக்கிறார்கள்.

அதன்பிறகே தத்துவம் என்பதை அறிவியல் துறைகளிலிருந்து பிரித்திருக்கிறார்கள்.

அதனால் என்ன? நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம், தத்துவம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ள அனைத்துத் துறை அறிவையும்  புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது எல்லா அறிவுத்துறைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. ஒன்றுடன் ஒன்று இணைந்தும் பிரிந்தும் ஒருங்கிணைந்தும் செயல்படுவது.

இன்னொரு வகையில் இந்த உலகம், இயற்கை, மனிதர்களின் வாழ்க்கை எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒன்று பாதிப்படையும் போது இன்னொன்றும் பாதிப்படையும்.

உதாரணத்துக்கு காலநிலை மாற்றத்தை தீவிரப் படுத்தியது யார்?

மனிதர்கள்! இப்போது அதன் விளைவுகளை அனுபவிப்பது யார்?

மனிதர்கள் மட்டுமா? இல்லை.அனைத்து உயிர்களும் அனுபவிக்கின்றன.

இயற்கையின் சுழற்சியில் மாற்றம் ஏற்படுகிறது.

உயிர்ச்சங்கிலியில் மாற்றம் ஏற்படுகிறது.

மனிதர்களின் வாழ்க்கையிலும் மாற்றம் ஏற்படுகிறது.

எனவே தான் எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்று சொல்கிறோம். எதுவும் தனியாக நடப்பதில்லை.

இந்த உலகத்தில் நடைபெறும் எல்லாச்செயல்களுக்கும் காரணகாரியங்கள் இருக்கின்றன.

தத்துவம் என்பதை இவற்றையெல்லாம் உள்ளடக்கியது தான்.

தத்துவம் என்பது காற்றில் கயிறு திரிக்கும் வேலையல்ல.

அந்தரத்தில் அரண்மனை கட்டுவதுமில்லை. மாயாஜாலமுமில்லை.

சரியா?

தத்துவம் என்பது அனைத்து அறிவுத்துறைகளைப் போன்ற ஒரு அறிவுத்துறை. மூளை என்ற உறுப்பின் செயல்பாடு. மனிதனின் மூளை வளர்ச்சியடையும் போது அதன் செயல்பாடுகளும் நுட்பமடைகிறது.

புதிய சிந்தனை முறைகள் உருவாகின்றன.

ஒவ்வொரு அறிவுத்துறையும் ஒரு குறிப்பிட்ட துறை பற்றிய விளக்கம் என்று சொல்லலாம். அவையும் மனித வாழ்க்கையுடன் தொடர்புடையது தான்.

ஆனால் இலக்கியமும் தத்துவமும் மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றிய அறிவுத்துறை எனலாம்.    

மனிதர்களிடம் பகுத்தறிவு தோன்றிய காலம் முதல் அவனிடம் கேள்விகள் உருவாகிவிட்டன.

நான் ஏன் பிறந்தேன்?

எனக்கும் இந்த உலகத்துக்கும் என்ன உறவு?

இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்ன?

இந்த வாழ்க்கையின் முடிவு என்ன?

மனிதர்களிடையே பாகுபாடுகள் எப்படி வந்தன?

கடவுள் இருக்கிறாரா?

யார் கடவுள்?

கடவுளுக்கும் மனிதனுக்குமான தொடர்பு என்ன?

மதம் என்றால் என்ன?

இத்தனை கடவுளர் எப்படி உருவானார்கள்?

இத்தனை மதங்கள் எப்படி உருவாயின?

சாதி என்றால் என்ன?

மேல்சாதி, கீழ்சாதி என்ற வேறுபாடு எப்படி உருவானது?

மரணம் என்றால் என்ன?

மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும்?

மரணத்துக்குப் பிறகு வாழ்க்கை உண்டா?

மரணத்துக்குப் பிறகு மறுபிறவி உண்டா?

மனிதனை விட உயர்வான உயிரினம் தோன்றுமா?

இப்படி ஆயிரமாயிரம் கேள்விகள் தோன்றின. தோன்றிக் கொண்டேயிருக்கினறன. தோன்றிக் கொண்டேயிருக்கும்.

இந்தக் கேள்விகளுக்கான பதில்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொன்னார்கள்.

அப்படி யார் என்ன எப்படிச் சொன்னார்கள்?

பார்க்கலாமா?

( தத்துவம் அறிவோம் )

நன்றி - இயல் சிறார் மின்னிதழ்

No comments:

Post a Comment