குழந்தைகளுக்குத் தத்துவமா -4
சிந்தனை விதை எப்படித் தோன்றியது?
உதயசங்கர்
உலகிலுள்ள மற்ற உயிரினங்கள் இயற்கையை அனுசரித்துக்கொண்டும், இயற்கையின் மீது மிகக் குறைந்த அளவில் தாக்கம் செலுத்தியும் உயிர் வாழ்ந்தன, வாழ்ந்துவருகின்றன. அவை இயற்கையுடன் இணைந்து, இயற்கையையும் அந்த உயிரினங்களையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு இயற்கையாகவே வாழ்ந்துவருகின்றன. அந்த உயிரினங்களுக்கு வறட்சியோ, வெள்ளமோ, புயலோ, மழையோ, இயற்கைப் பேரிடரோ என எதுவாக இருந்தாலும் அவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டன. அவற்றைக் குறித்து எந்தப் புகாரும் அவற்றுக்கு இல்லை.
ஏன் இப்படி
நடக்கிறது?
தெரியாது.
இதை மாற்ற முடியுமா?
தெரியாது.
இந்தப் பேரிடரிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியுமா?
தெரியாது.
ஏனெனில், அவற்றுக்கு இயற்கையையும் தங்களையும் பிரித்துப் பார்க்கத் தெரியாது. இயற்கையின் செயல்களுக்குக் காரணகாரியம் தெரியாது. அதைப் பற்றிச் சிந்திக்கும் அளவுக்கு அவற்றின் மூளை வளர்ச்சியடையவில்லை.
பரிணாமக் கோட்பாட்டின்படி இயற்கையான வாழும்நிலையில் மாற்றம் இல்லாதபோது, எந்த உயிரும் மாற்றமடைவதில்லை. புரிகிறதா?
வாழும்நிலை என்றால் உணவு, இனப்பெருக்கம், பாதுகாப்பு, சூழல் ஆகியவற்றில் பெரிதாக எந்த மாற்றமும் நிகழாதபோது, அந்த உயிரினங்களும் தலைகீழாக மாறவேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. எனவேதான், ஒரு புலி புலியாகவே இப்போதும் நீடிக்கிறது. அல்லது கரப்பான்பூச்சி இன்னமும் கரப்பான்பூச்சியாகவேதான் இப்போதும் இருக்கிறது.
இதிலிருந்து ஒரு
விஷயத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். அதாவது வாழும்நிலை என்பதே ஒவ்வொரு உயிரின் இருப்பைத்
தீர்மானிக்கிறது.
வாழும்நிலைதான் அந்த உயிரின் உணர்வையும் அறிவையும் முடிவு செய்கிறது. வாழும்நிலையில் மாற்றம் ஏற்பட்டால் உயிர்களின் வாழ்க்கையும் கேள்விக்குள்ளாகிறது.
ஒரு புலி காட்டில் வாழ்கிறது. ஏனெனில் காட்டில்தான் அதற்கான உணவு கிடைக்கிறது. இனப்பெருக்கம் செய்ய முடிகிறது. பாதுகாப்பு இருக்கிறது. சுதந்திரமாக இருக்க முடிகிறது. அதனால் புலி காட்டில் வாழ்கிறது.
சரியா?
ஆனால், காடு அழியும்போது என்ன நடக்கிறது?
உணவு கிடைக்காது, இனப்பெருக்கம் செய்ய முடியாது., பாதுகாப்பு இல்லை.
புலி என்கிற
இனம் அந்தக் காட்டில் அழிந்துவிடும்.
நாம் யோசித்துப்
பார்த்திருக்கிறோமா?
புலி ஏன் மரங்களை நட்டு காட்டை உருவாக்கக் கூடாது?
நினைத்துப் பார்த்தாலே சிரிப்பு வருகிறது இல்லையா?
கார்ட்டூன் படங்களிலோ, அனிமேஷன் படங்களிலோ அப்படி நடக்கலாம். உண்மையில் புலிக்கு அப்படி எல்லாம் செய்யமுடியும் என்று கனவில் கூடத் தெரியாது. வாழ்வதற்குச் சாதகமான சூழல் இருந்தால் வாழும். இல்லையென்றால் அழிந்துவிடும். இயற்கையை மாற்ற முடியும், கட்டுப்படுத்த முடியும், திருத்த முடியும் என்று அதற்குத் தெரியாது.
ஆனால், யானையும் வண்ணத்துப்பூச்சியும் காட்டை உருவாக்குகின்றனவே என்று உங்களுக்குத் தோன்றுகிறதா?
உண்மைதான் யானையும் வண்ணத்துப்பூச்சியும் மட்டுமல்ல, வேறு பல உயிரினங்களும் காட்டை உருவாக்குகின்றன. ஆனால், யானை தன்னுடைய சாணத்தின் வழியே விதைகளையும் கொட்டைகளையும் வெளியேற்றும்போது நான் மரம் நடுகிறேன். நான் காட்டை உருவாக்குகிறேன் என்று யோசித்துச் செய்கிறதா?
அல்லது
வண்ணத்துப்பூச்சி மகரந்தச் சேர்க்கை மூலம் மரங்களின், செடிகளின் இனப்பெருக்கத்துக்கு நான் உதவுகிறேன் என்று தெரிந்து, ஒவ்வொரு பூவாகப் போய் உட்காருகிறதா?
இல்லையே.
யானைக்கோ வண்ணத்துப்பூச்சிக்கோ தாம் செய்வதால் என்ன விளைவு ஏற்படும் என்று தெரியாது. தங்களுடைய செயலால் காடு உருவாகும் என்று சுத்தமாகத் தெரியாது.
அவற்றின்
உயிரியல் இயல்பும், உடலியல்
செயல்பாடுகளும் இயற்கையாக நடப்பவை.
அப்படி என்றால்?
அவை சிந்தித்துச் செயல்படவில்லை.
மனித இனம் மட்டுமே சிந்தித்துச் செயல்படுகிறது.
மனிதர்களும் திடீரென சிந்திக்கவில்லை. மற்ற விலங்குகளைப் போலவே இயற்கையோடு இயற்கையாக மனிதர்களும் கலந்தே இருந்தார்கள்.
எப்படி மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள்?
எப்போது அவர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள்?
மனிதர்களிடம் சிந்தனைவிதையை ஊன்றியது எது? என்கிற கேள்விகள் வருகின்றனவா?
இந்தக் கேள்விகளுக்கான பதில் உங்களுக்கு ஆச்சரியமளிக்கும். சிந்தனை என்றால் அது மூளையின் செயல்பாடு என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால், மனித இனத்தின் முதல் சிந்தனை தோன்றியது எங்கே தெரியுமா?
கை விரல்களில் இருந்துதான்.
கேளுங்கள்!
எப்படி?
( தத்துவம் அறிவோம் )
நன்றி - www.iyal.net
No comments:
Post a Comment