யார் இந்த குடிமைச் சமூகம்?
(Civil society)
1. எல்லாக்காலங்களிலும் எல்லா அரசமைப்புகளிலும் அரசு என்ற இயந்திரம் இரண்டு விதங்களில் மக்கள் மீது தன் அதிகாரத்தை செலுத்துகிறது.
2. நிர்வாக அடக்குமுறை இயந்திரங்களான போலீஸ், ராணுவம், ஆகியவை. இந்த இயந்திரங்களின் அடக்குமுறையும் அதிகாரமும் ஆளுகின்ற வர்க்க நலன்களுக்காகவே செயல்படும். சுயேச்சையாகச் செயல்படமுடியாது.
3. இந்த அடக்குமுறையின் மூலம் மக்களை பயமுறுத்தி தண்டனைகள் வழங்கி தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும். ஆனால் இது மட்டும் போதாதே. தொடர்ந்த அடக்குமுறை மக்கள் எழுச்சியை உண்டு பண்ணிவிடும். எனவே இன்னொரு வகையான மென்மையான அடக்குமுறைக் கருவிகளைப் பயன்படுத்தும்.
4. அவை, சட்டங்கள், நீதிமுறை, கல்வி, கலை, இலக்கியம் ஆகியவை. இவற்றின் பணியென்பது ஆளுகின்ற வர்க்கத்தின் நலன்களுக்கேற்ப மக்கள் மனைதை மாற்றுவது.
5. உதாரணத்துக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சட்டமோ, நீதிமுறைகளோ, கல்விமுறையோ, கலை இலக்கியங்களோ இப்போது இல்லை. அவை அந்தக் காலத்தினைப் பிரதிபலிக்கும் அருங்காட்சியகமாக மாறிவிட்டன. அவை ஒருபோதும் மீண்டும் நடைமுறைக்கு வரமுடியாது. காலாவதியாகி விட்டன.
6. அப்போது போற்றப்பட்டு நடைமுறையிலிருந்தவை இப்போது கடைப்பிடிக்க முடியாத அல்லது கடைப்பிடிக்கத் தேவையில்லாததாக எப்படி மாறியதென்று யோசித்துப் பாருங்கள்.
7. அப்போது நிலவுடமைச்சமூகம் அதிகாரத்திலிருந்தது. அரசு அதிகாரம் அரசரிடமோ, அல்லது ஒரு குழுவிடமோ இருந்தது. அதனால் அரசரின் அதிகாரத்தை போற்றுகின்ற விதமாக, குடிகளின் ஒழுக்கம், பண்பாடு, நடைமுறை, சாதிகள், சமயங்கள் எல்லாம் அரச நலன்களுக்காக உருவாக்கப்பட்டன.
8. நிலவுடைமைச் சமூகத்தில் அறிவுப்பரவலாக்கல் இல்லை. சனநாயகமென்றால் என்னவென்றே தெரியாது. பொருளுற்பத்தி முறையும் சந்தையும் கட்டுப்படுத்தப் பட்டிருந்தது.
9. முதலாளித்துவத்துக்கு மூலதனமும் சந்தையும் லாபமும் தான் ஒரே குறிக்கோள். அதற்குப் பழைய கட்டுப்பெட்டித்தனமான நிலவுடமைச் சமூக நடைமுறைகள் பயன்படாது.
10. முதலாளித்துவ அரசு பழைய இயந்திரத்தின் சில பாகங்களை விட்டு விடாமல் ( சாதி, மதம், ) சேர்த்துக் கொண்டு புதிய இயந்திரம் போல இயங்குகிறது.
11. நிலவுடமைச் சமூகத்தில் கலை இலக்கியம் உட்பட அனைத்து பொருளுற்பத்தி முறைகளும் தனிநபர்களின் திறமையாக இருந்தது.
12. முதலாளித்துவம் அதை மாற்றுகிறது. அறிவையும், தொழில்திறன்களையும் பரவலாக்குகிறது. தொழிற்சாலை உற்பத்தி முறையைக் கொண்டு வருகிறது. அபரிமிதமான உற்பத்தியை மக்களிடம் விற்பதற்கு சந்தையை உருவாக்குகிறது.
13. அதற்காக மக்கள் மனதைத் தகவமைக்கிறது. ( முதலில் டீ, காபி, பீடி எல்லாம் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று ஓசியாகக் கொடுத்துப் பழக்கப்படுத்தியிருக்கிறார்கள். ) அதன் மூலம் பொருட்களைச் சந்தைப் படுத்துவதற்கும் லாபமீட்டுவதற்குமேற்ற அரசை உருவாக்குகிறது.
13. பின்னாலிருந்து இயக்கும் முதலாளித்துவத்துவத்துக்கு மக்களைத் தன்வசப்படுத்தும் கவர்ச்சிகரமான ஒப்பனைகள் தேவைப்படுகிறது. அதுதான் இப்போது நடைமுறையிலிருக்கும் சனநாயகம், சட்டம், கல்வி, அறிவியல், கலை இலக்கியம் யாவும்.
14. நவீன முதலாளித்துவம் மனிதர்களுக்காகப் பொருட்கள் என்றிருந்த நிலையை மாற்றி பொருட்களுக்காக மனிதர்கள் என்று உருவாக்குகிறது. அதற்காக விளம்பரம், சமூக ஊடகங்கள், சினிமா உள்ளிட்ட ஊடகங்களுக்குக் கட்டற்ற சுதந்திரத்தை வழங்குகிறது. அவை தனக்கு எதிராக மாறாத வரை அனுமதிக்கிறது.
15. போலீஸ், ராணுவத்துறைகளைப் போல சமூகத்தின் மனசாட்சியைக் கட்டுப்படுத்தி தன்வழியில் திருப்பும் அறிவுத்துறைகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சித்துக் கொண்டேயிருக்கிறது. ஏனெனில் இவர்கள் தான் சோசியல் இன்புளுயர்ஸ்.
16. பொருளாதாரச் சுரண்டலாலும் ஏற்றதாழ்வுகளாலும் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் விழிப்படையாமல் பார்த்துக் கொள்ளவும், தாங்கள் சட்டப்படியே எல்லாம் செய்கிறோமென்ற பிரமையை உருவாக்கவும் தாயாரித்திருக்கிற வர்க்கம் தான் குடிமைச் சமூகம்.
17. ஒவ்வொரு சமூக அமைப்பிலும் அது இனக்குழு சமூகமாக இருந்தாலும் சரி நிலவுடமை சமூகமாக இருந்தாலும் சரி முதலாளித்துவ சமூகமாக இருந்தாலும் சரி அந்த அந்த சமூகத்தின் விழுமியங்களை அதை பரப்புரை செய்பவர்களும் அதை நிலை நிறுத்துபவர்களும் தான் குடிமை சமூகமாக மாறுகிறார்கள். குடிமை சமூகம் என்பது மிக சிறியதொரு சமூகம் என்று கூட சொல்லலாம். அறிவு ஜீவி சமூகம் என்றும் சொல்லலாம் இந்த அறிவு ஜீவிகள் தான் அந்தந்த வர்க்க சமூகத்திற்கு சேவை செய்பவர்களாக மாற்றப்படுகிறார்கள் இந்த அறிவு ஜீவிகள் தான் சமூகத்தின் மனசாட்சி என்ற பெயரில் செயல்படுகிறார்கள் வெகு மக்களின் ஒழுக்கம் சார்ந்த பண்பாடு சார்ந்த விழுமியங்களை பரவலாக கொண்டு செல்கிறார்கள். அத்துடன் இந்த குடிமை சமூகத்திலிருந்து புரட்சிக்கான விழுமியங்களும் சமூக மாற்றத்திற்கான செயல்பாடுகளும் தொடங்குகின்றன அதனால் இந்த குடிமை சமூகத்தை கட்டுக்குள் வைத்திருப்பதும் அதை தன் வசப்படுத்துவதையும் முக்கியமான குறிக்கோளாக முதலாளித்துவம் கருதுகிறது.
18. எப்படி நிலவுடைமை சமூகத்தில் புரோகித வர்க்கம் தங்களுடைய கருத்துக்களை நிலை நிறுத்த நில உடமை சமூக விழுமியங்களை காப்பாற்ற புராண இதிகாச கட்டுக்கதைகளை உருவாக்கினார்களோ அப்படியே நவீன முதலாளித்துவ சமூகத்திலும் இந்த குடிமைச் சமூகம் என்று சொல்லப்படுகிற அறிவு ஜீவிகள் இந்த சமூகத்தை முதலாளித்துவ சமூகத்தின் நவீன விழுமியங்களை நிலை நிறுத்துபவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் நீதிபதிகளாக இருக்கலாம் இந்திய ஆட்சிப் பணியில் ஆட்சிப் பணி அதிகாரிகளாக இருக்கலாம் காவல்துறையில் இருக்கலாம் எழுத்தாளர்களாக இருக்கலாம் ஓவியர்கள் ஆக இருக்கலாம் திரைக்கலைஞர்களாக இருக்கலாம் பத்திரிக்கையாக இருக்கலாம் இவர்கள் தான் மக்களுடைய மனதை வசப்படுத்துகிறார்கள் கட்டமைக்கிறார்கள் அல்லது அவர்கள் எப்படி சிந்திக்க வேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எப்படி உண்ண வேண்டும் உடை உடுத்த வேண்டும் . எதைப் பின்பற்ற வேண்டும். பின்பற்றக்கூடாது என்று தீர்மானிக்கிறார்கள். இப்போது பத்தாண்டுகளில் ஏற்பட்ட விளைவுகளை அகற்றுவதற்கு இன்னும் 25 ஆண்டுகள் ஆகும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகாலன் சொல்கிறாரென்றால் மக்கள் மனதில் எந்த அளவிற்கு மத துவேஷத்தையும் பழமை வாத சிந்தனைகளையும் மூடநம்பிக்கைகளையும் விதைத்திருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
19. இவர்களிலிருந்தே புதிய சமூகத்துக்கான புதிய குடிமைச் சமூகமும் உருவாகிறதென்பதையும் மறந்து விடக்கூடாது. அந்த புதிய சமூகத்துக்கான ஆதரவாளர்களான அறிவுச்சமூகத்தை இனங்கண்டு ஒருங்கிணைக்க வேண்டும். அவர்களுடைய சிந்தனைகளை, படைப்புகளை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். சிறிய கருத்து வேறுபாடுகளை புறமொதுக்கி, அடிப்படையான ஒற்றுமை மேடையை உருவாக்க வேண்டும். முதலாளித்துவம் தன் கருவறைக்குள்ளேயே தன்னை அழிக்கும் தொழிலாளிவர்க்கத்தை உருவாக்கி வளர்க்குமென்பது மார்க்சீய இயங்கியல்.
இத்தாலிய கம்யூனிச அறிஞர். கிராம்ஷி குடிமைச்சமூகத்தைக் கைப்பற்றி கருத்தியல் மேலாண்மை பெறுபவர்களே ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவார்கள் என்கிறார்.
20. 2006 என்று நினைக்கிறேன் அத்வானி , ஆட்சியதிகாரத்தை விட குடிமைச்சமூகத்தைக் கைப்பற்றுவதே எங்களது நோக்கம் என்று சொன்னார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஹிட்லரும் முசோலினியும் மக்களின் அங்கீகாரத்துடன் தான் சர்வாதிகாரத்தை அரங்கேற்றினார்களென்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதற்கு பக்கபலமாக உறுதுணையாக இருந்தது அப்போதிருந்த அதிகார வர்க்கம், நீதித்துறை, உள்ளிட்ட அறிவுஜீவிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், தானென்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
மக்களிடம் மட்டுமல்ல குடிமைச் சமூகத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment