Showing posts with label காட. Show all posts
Showing posts with label காட. Show all posts

Saturday, 11 January 2025

மாயக்காட்சி

 

மாயக்காட்சி

உதயசங்கர்





” ஓடு ஓடு ஓடு.. ‘ என்று கத்தியது அம்மா. 

அவ்வளவு தான். 

தலை தெறிக்க குட்டி மான் ஓடியது. 

எவ்வளவு தூரம் ஓடியது என்று தெரியவில்லை. ஒரு புதருக்கடியில் நின்று அங்குமிங்கும் பார்த்தது. பயத்தில் நெஞ்சு பட பட என துடித்தது. அம்மாவைக் காணவில்லை. 

லேசாய் கனைத்தது. பின்னால் ஏதோ சத்தம் கேட்டது. மறுபடியும் ஓட வேண்டுமோ? மான் குட்டிக்குக் கால்கள் நடுங்கின. 

ஓடுவதற்காகக் கால்களைத் தூக்கியது. அதற்குள் அம்மாவின் வாசனை குட்டி மானுக்குத் தெரிந்தது. உடனே குட்டி மான் குரல் கொடுத்தது. 

அம்மாவின் குரல்  காற்றில் பறந்து வந்தது.

குட்டி மானுக்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது. அம்மாவின் முகத்தை அண்ணாந்து பார்த்தது. குட்டி மானின் முகத்தோடு முகம் வைத்து உரசியது. அதன் நெற்றியில் நாவினால் நக்கிக் கொடுத்து ஆற்றுப்படுத்தியது.

குட்டிமானுக்கு இனி பயமில்லை. அம்மா வந்து விட்டாள்.

” அம்மா ஏன் ஓடச் சொன்னீங்க? “

” புலியின் வாசனை அடிச்சதும்மா..கொஞ்சம் அசந்திருந்தால் புலி அடிச்சிக்கும்..”

மானின் உடல் நடுங்கியது.

“ புலியே இல்லாமல் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும். நாம் எந்தப் பயமும் இல்லாமல் வாழலாம் இல்லையா .”

குட்டி மான் அம்மாவின் காதருகே முணுமுணுத்தது.

அம்மா குட்டிமானைப் பார்த்துச் சிரித்தது.

“ ஏன் சிரிக்கிறீங்க? “

” அங்கே பாரு..”

குட்டி மான் நிமிர்ந்து பார்த்தது. அங்கே ஒரு காடு தெரிந்தது.

அந்தக் காட்டில் புலியோ, நரியோ, சிங்கமோ, ஓநாயோ, இல்லை.

கூட்டம் கூட்டமாய் மான்கள் மட்டுமே மேய்ந்து கொண்டிருந்தன.

கொய் கொய் என்று மான்கள்.  எங்கு பார்த்தாலும் மான்கள். நிற்க இடமில்லை. உட்காரமுடியவில்லை.

மான்கள் ஒன்றோடு ஒன்று சண்டை போட்டன. உணவில்லாமல் சண்டை போட்டன. மான்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகியது.

காட்டில் புல் இல்லை.

செடி இல்லை.

கொடி இல்லை.

நிழலுக்குப் புதர்கள் கூட இல்லை.

மான்களின் தீராதபசியில் காடு அழிந்து விட்டது.

மான்கள் உணவில்லாமல் ஒவ்வொன்றாய் மயங்கி விழுந்து இறந்தன. மான்கள் மட்டுமா?

இலை தழை புல் பூண்டுகள் இல்லை. அதனால் அவற்றில் வாழும் புழு, பூச்சிகள் இறந்தன.

புழு, பூச்சிகளைச் சாப்பிடும் பறவைகள் இறந்தன.

விலங்குகள் இறந்தன. 

பூச்சிகள் இல்லை என்பதால் மகரந்தசேர்க்கை நடக்கவில்லை.

மகரந்தச்சேர்க்கை நடக்காததினால் பூக்கள் பூக்கவில்லை.

காய்கள் காய்க்கவில்லை.

கனிகள் இல்லை.

கனிகள் இல்லாததால் விதைகள் இல்லை.

விதைகள் இல்லாததால் புதிய மரங்கள் முளைக்கவில்லை.

இருந்த மரங்களும் இறந்தன.

மனிதர்களும் இறந்தனர்.

அனைத்து உயிர்களும் இறந்தன.

பூமி பாலைவனமாகி விட்டது.

குட்டி மானின் கண்ணில் கண்ணீர்.

அந்தக் காட்சியைப் பார்க்கவே முடியவில்லை. தலையை ஆட்டி அந்தக் காட்சியை அழித்தது. குட்டிமானின் வாயிலிருந்து,

” அம்மா எல்லோரும் இருக்கட்டும்ம்மா. “

என்ற சொற்கள் வந்தன.

தூரத்தில் புலியின் உறுமல் கேட்டது.

குட்டிமான் துள்ளிக்குதித்தது. 

இனி எதற்கும் பயமில்லை.

நன்றி - சூரியனைத் தொட ஆசை

வெளியீடு - சுவடு பதிப்பகம்


 

 

 

Saturday, 28 December 2024

யாருக்குக் காடு சொந்தம்?

 

 யாருக்குக் காடு சொந்தம்?

உதயசங்கர்



கொம்பன் யானைக்கு பெருமை தாங்கவில்லை. யானைகளால் தான் காடு உருவாகிறது என்று எல்லாரும் பேசினார்கள். பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் எல்லாவற்றிலும் கொம்பன் யானையின் நேர்காணல். கொம்பன் யானை கம்பீரமாக தன்னுடைய நீண்ட தந்தங்களை ஆட்டி ஆட்டி தும்பிக்கையை நீட்டி நீட்டிப் பேசியது.

“ இலைதழை, காய்கனி, ஆகியவற்றைச் சாப்பிட்டு நாங்கள் போடும் சாணத்தில் காட்டு மரங்களின் விதைகள் இருக்கின்றன. அந்த விதைகள் முளைத்து புதிய மரங்கள், செடி   ,கொடிகள் வளர்கின்றன..அதனால் நாங்கள் காட்டைப் பாதுகாக்கிறோம்.. வளர்க்கிறோம்.. “ என்று தலையை உயர்த்திப் பேசியது.

அப்போது இன்னொரு குரல், இர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று இரைந்ததை யாரும் கேட்கவில்லை. ஆனால் பூஞ்சிட்டு பத்திரிகையின் நிருபர் பூவிழிக்கு மட்டும் கேட்டது. பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்தது. எல்லாரும் போய் விட்டார்கள். கொம்பன் யானையும் பிளிறிக்கொண்டு போய் விட்டது. பூஞ்சிட்டு அங்கேயே நின்று,

“ யாரோ பேசினீர்களே யார் அது ? “

என்று கேட்டது. சுற்றிச் சுற்றிப் பார்த்தது. கீழே ஏராளமான சாணி வண்டுகள் யானையின் சாணியை உருட்டிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு வண்டும் ஒவ்வொரு திசையில் சாணியை உருட்டிக் கொண்டு போய் மண்ணைத் தோண்டி உள்ளே பாதுகாப்பாய் வைத்து மண்ணால் மூடி வைத்தன.

பூஞ்சிட்டு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு சாணிவண்டை வழி மறித்தது.

“ ஏன் நீங்க சாணியை உருட்டி உருட்டிக் கொண்டு போறீங்க..”

என்று கேட்டது. பின்னங்கால்களால் சாணி உருண்டையைப் பிடித்துக் கொண்டு நின்றது சாணி வண்டு.

“ முதலில் எங்களுக்கும் எங்கள் குஞ்சுகளுக்கும் இதுதான் உணவு.. அடுத்தது இதிலிருக்கும் விதைகள் வேறு வேறு இடத்தில் புதைப்பதால்  இடைஞ்சல் இல்லாமல் முளைக்கும்..” என்று சொன்னது. பூஞ்சிட்டுக்கு முதலில் புரியவில்லை.

“ யானையின் சாணியில் எல்லாவிதைகளும் ஆலமரம், அரசமரம், அத்திமரம், புன்னை மரம், இப்படி எல்லாமரத்தின் விதைகளும் சேர்ந்து இருந்தால் எப்படி எல்லாம் முளைக்குமா? நாங்கள் தான் அவற்றைப் பிரித்துத் தூராதூரத்துக்குக் கொண்டு போய் மண்ணில் புதைக்கிறோம்..”

என்று சொல்லிவிட்டு மீண்டும் சாணியை உருட்ட ஆரம்பித்தது.

“ அட ஆமால்ல.. காட்டை உருவாக்குவதில் உனக்கும் பங்கிருக்கு..”

என்று ஆச்சரியத்தில் கூவியது பூஞ்சிட்டு.

“ புரிஞ்சா சரி..”

என்று சொல்லிவிட்டு வேகமாக மண்ணைத் தோண்டியது சாணி வண்டு. சாணி உருண்டையை உள்ளே தள்ளி மண்ணைப் போட்டு மூடியது.

நன்றி - மந்திரத்தொப்பி

வெளியீடு - நிவேதிதா பதிப்பகம்