Monday 26 November 2012

கலாமோகினியின் கடைக்கண்பார்வை

Impressionism-Oil-Painting-001-  

உதயசங்கர்

 

80 களின் துவக்கத்தில் இலக்கியக்கோட்டி பிடித்து எழுத்தாளராவதைத் தவிர வேறு மார்க்கமேயில்லை என்று நாங்கள், நான், நாறும்பூநாதன், சாரதி, திடவைபொன்னுச்சாமி, அப்பணசாமி, கோவில்பட்டி காந்திமைதானத்து பொட்டல்வெயிலில் சத்தியம் செய்திருந்தோம். காணாததைக் கண்ட மாதிரி அவதி அவதியாய் புத்தகங்களைத் தின்று தீர்த்தோம். அதுவரை தெரிந்த உலகமே இப்போது வேறொன்றாய் தெரிந்தது. உலக, இந்திய, தமிழ், எழுத்தாளர்களோடு ஏற்பட்ட பரிச்சயம் எங்கள் நடையையே மாற்றி விட்டது. தரையில் கால் பாவியதாக நினைவில்லை. நாங்கள் வேறு பிறவிகள் என்ற நினைப்பு. பாரதி, புதுமைப்பித்தன், மௌனி, கு.அழகிரிசாமி, கு.பரா., சுந்தரராமசாமி, கு.சி.பா, டி.செல்வராஜ், கி.ரா, வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி, என்று வாசித்து வாசித்துத் தீரவில்லை. வாசிக்கும்போதும் வாசித்து முடித்தபிறகும் எங்களுக்கு தோன்றும் முதல் கேள்வி “ எப்படிரா எழுதறாங்க..? “ என்பது தான். அப்படியே அழுவதற்கும், சிரிப்பதற்கும், கோபப்படுவதற்கும், காதலிப்பதற்கும் வைக்கிறதே எழுத்து. எழுத்தாளர்கள் தான் இந்த உலகத்தை ஆளமுடியும் என்று அப்பாவியாய் நினைத்திருந்தோம். எங்கள் கனவுகளில் எழுத்தாளர்கள் வந்தார்கள்.எனவே எழுத்தாளர்களைச் சந்திப்பதில் பேராவல் கொண்டிருந்தோம். ஒவ்வொரு எழுத்தாளரின் எழுத்துகளையும் படிக்கும்போது ஒரு சித்திரம் அந்த எழுத்தாளரைப் பற்றி உருவாகும். எழுத்தாளர்களை இந்த பூமியில் பிறந்த அதிசயப்பிறவிகளாக எண்ணி மணிக்கணக்காக அவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்திருக்கிறோம்.

யாரையேனும் எழுத்தாளர்களைச் சந்திக்க நேர்ந்தால் கண்களில் பக்தியுணர்வு தோன்றிவிடும். அவர்களுடைய நடையுடை பாவனைகளை, அவர்கள் பேசும் முறையை, அவர்கள் சிரிப்பதை, அவர்கள் வாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு வார்த்தையையும் மிகக் கவனமாகக் கவனிப்போம். அவர்களுடன் இருக்கும் நேரம் முழுவதும் ஒரு பணிவு எங்களிடம் இருக்கும். எல்லா எழுத்தாளர்களிடமும் தவறாமல் கேட்கிற கேள்வி “ நீங்க எப்ப சார் எழுதுவீங்க? ராத்திரியிலா காலையிலா எந்த நேரம் வேணும்னாலும் எழுத உட்கார்ந்திருவீங்களா? “ அவர்கள் சொல்கிற பதிலில் தான் எங்கள் எதிர்கால எழுத்துலகமே இருப்பதைப் போல அவர்கள் முகத்தையே பார்த்துக் கொண்டிருப்போம். மாக்சிம் கார்க்கியின் எப்படி எழுதுவது? அலக்ஸி டால்ஸ்டாயின் எழுதும் கலை என்று எழுதுவதைப் பற்றிய வியாக்கியானங்களை வேறு படித்திருந்தோமா. எங்களைப் பாடாய்ப்படுத்தியது சந்தேகங்கள். நாங்கள் சந்தித்த எழுத்தாளர்களையும் அந்தச் சந்தேகங்களின் கொடுக்குகளால் கொட்டிக் கொண்டிருந்தோம். அவர்கள் என்ன சொன்னாலும் எங்களுக்குத் திருப்தியில்லை. எதையோ மறைக்கிறார்கள். அந்த சூக்குமத்தைச் சொல்லிக் கொடுக்க மறுக்கிறார்கள் என்று பின்னர் பேசிக் கொண்டிருப்போம். ஏனெனில் நாங்கள் அப்போது வேலையின்றிச் சுற்றிக் கொண்டிருந்ததால் எப்போது வேண்டுமானாலும் எழுதிப்பார்க்கும் சுதந்திரம் இருந்தது. ஆனால் எழுதினால் எழுத்து தான் எழுத்து..எழுத்து.. வரவில்லை. அதனால் தான் எழுத்தாளர்களின் நடவடிக்கைகளை உற்றுக் கவனித்து ரகசியத்தைக் கண்டுபிடிக்க முயற்சித்தோம்.

இடைசெவல் போய் கி.ரா.வைப் பார்த்தால் அப்படி ஒரு ஒழுங்கு. சுத்தம். நறுவிசு. குடிக்கிற செய்யது பீடியைக் கூட தேர்வு செய்து அதன் முனையை, அருகிலேயே வைத்திருக்கும் கத்தரிக்கோலை வைத்து கத்தரித்து பற்றவைப்பார். அவருடைய நடையுடை பாவனைகளில் இருக்கும் நேர்த்தி யாவரையும் கவர்ந்து விடும். பூமணியிடம் பேசிக் கொண்டிருந்தால் தினமும் அதிகாலை எழுந்து எழுதுவேன் என்று சொல்லுவார். சுந்தரராமசாமி டைப்ரைட்டரில் தான் கதை எழுதுவார் என்று கேள்விப்பட்டிருந்தோம். இப்படி ஒவ்வொரு எழுத்தாளர்களிடமும் கேட்டாலும் எங்களுக்கு ஒரு கருத்து உருவாகிக் கொண்டிருந்தது. அது கோவில்பட்டி இலக்கியவட்டத்தின் கருத்து. அப்படியெல்லாம் தினசரியோ, காலையோ, மதியமோ, இரவோ, நள்ளிரவோ, எழுத முடியாது. கலைஎழுச்சி வரவேண்டும். அருள் வந்த மாதிரி, காய்ச்சல் வந்த மாதிரி உடம்பு சூடு ஏற வேண்டும். கைகளில் ஒரு நடுக்கம். இனி எழுதாமலிருக்க முடியாது என்கிற மாதிரி ஒரு வெறி, இடம், பொருள், காலம், பற்றிய பிரக்ஞை ( அப்போது இந்த வார்த்தையைப் பயன்படுத்தாத இலக்கிய உரையாடல்களே கிடையாது. அதான் அந்த வார்த்தையே ஓடி ஒளிஞ்சிருச்சி போல ) இருக்கக் கூடாது. என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்போம். என்ன வேப்பிலையடிச்சாலும் எங்களுக்கு அருள் வரவில்லை என்பது வேறு விஷயம்.

ஆனால் நாங்கள் விட்டுவிடுவோமா? தினசரி ஒரு கதை எழுதிக் கொண்டு வரவேண்டும் என்று எங்கள் சபையில் முடிவு செய்தோம். ஒரு பக்கமாக இருந்தாலும் சரி. எழுதவேண்டும். எப்படியாவது கலாமோகினியின் கடைக்கண்பார்வையை எங்கள் பக்கம் திருப்பி விடவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டோம். கலைஎழுச்சி அல்லது கலைஅருள் வருவதற்கு வேறு வெளி உபகரணங்களைப் பயன்படுத்தவும் யோசித்தோம். மற்ற எழுத்தாளர்கள் என்னென்ன உபகரணங்களை பயன்படுத்துகிறார்கள் என்று ஆராய்ச்சி செய்தோம். நிறைய டீக்களைக் குடித்தோம். பீடி பிடித்துப் பார்த்தோம். காசு இருந்தால் அல்லது ஓசியென்றால் வில்ஸ்பில்டர் வாங்கிக் குடித்தோம். பாரதி கஞ்சா அடித்து விட்டுத்தான் கவிதை எழுதுவானாமே என்று ஒரு நண்பர் சொல்ல எப்படியோ கஷ்டப்பட்டு கஞ்சாவைச் சம்பாதித்து அதை சிகரெட்டிலோ பீடியிலோ அடைக்கத் தெரியாததினால் சூடான டீயில் கலந்து குடித்துப் பார்த்தோம். சிரிசிரியென்று சிரித்து உருண்டதும், நடை நடையென்று ஒரே தெருவில் நடந்து கொண்டேயிருந்ததும் தான் மிச்சம். கலாமோகினி எங்கே போனாள் என்றே தெரியவில்லை. நாங்கள் இருந்த திசைப்பக்கம் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை.

இதற்கிடையில் தினமும் எழுதிக் கொண்டுவரவேண்டும் என்ற எங்கள் முடிவு ஒரு வாரத்தில் காலமாகி விட்டது. மறுபடியும் “ எப்படிரா எழுதறாங்க..? “ என்ற முதல்கேள்வியில் வந்து நின்றோம். சிலசமயம் வண்ணதாசனின் கலைக்கமுடியாத ஒப்பனைகளைப் படித்து விட்டு அதன் அதிர்வுகளிலிருந்து மீளுமுன்னே கதை எழுதிப் பார்ப்பதுண்டு. அப்படியே வண்ணதாசன் கதை மாதிரியே இருக்கும். வண்ணநிலவனின் எஸ்தர் படித்து விட்டு அதன் உணர்ச்சி வேகம் அடங்குமுன்னே கதை எழுதுவோம். அப்படியே வண்ணநிலவன் கதை மாதிரியே இருக்கும். ஒருவருக்கொருவர் வாசித்து விட்டு “ எலேய் வண்ணதாசன் இதை விட நல்லா எழுதியிருக்காருடா..” என்றோ “ டேய் காப்பியடிக்காதே வண்ணநிலவனைக் காப்பியடிக்காதே..” என்றோ திட்டிக் கொள்வோம். அப்புறம் என்ன கதையெழுதினாலும் இது கு.அழகிரிசாமி கதை மாதிரி இருக்கோ, பூமணி கதை மாதிரி இருக்கோ, மௌனி கதை மாதிரி இருக்கோ, ஜானகிராமன் கதை மாதிரி இருக்கோ என்ற பயம் வந்து விடும். பாதியில் எழுத்து நின்று விடும்.

பலசமயம் எழுதிக் கையெழுத்துப்பிரதியாக நண்பர்களிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லி அவர்கள் படித்து முடிக்கும்வரை இருக்குமே பாருங்க ஒரு அமைதி ஆளையேக் காலி பண்ணிரும். அதிலேயும் படித்து முடித்ததும் நண்பர் ஒரு பார்வை மேலும் கீழும் பார்ப்பார். பின்னர் திரும்ப ஒரு தடவை எழுதிய தாள்களை புரட்டுவார். ஏதோ ஒரு பக்கத்தில் ஏதோ ஒரு இடத்தைத் திரும்ப வாசிப்பதைப் போல அவர் பாவனை இருக்கும். பேச ஆரம்பிக்கப் போகிற மாதிரி லேசாக தொண்டையைச் செருமிக் கொள்வார். அவர் வயையே பார்த்துக் கொண்டிருக்கும்போது பொன்னம்போல மெல்ல உதடுகளை அசைப்பார். அவர் கதையைப் பத்தித்தான் ஏதோ சொல்லப் போறார் போல என்று ஆவலின் மீது “ ஒரு டீ சொல்லேன்..அப்படியே ஒரு வில்ஸ்பில்டரும் வாங்கிரு..” என்ற வார்த்தைகளைச் சிந்தி அடக்குவார். எல்லாம் நேரம்டா நேரம்.. நீயும் கதை எழுதிட்டு வராமலா போயிரப்போறே பாத்துக்குகிறேன் என்று மனசுக்குள் கறுவிக் கொண்டே அவர் கேட்டதை வாங்கிக் கொடுத்தபிறகும் நீண்ட புகைமேகங்களை அனுப்பிக் கொண்டே ஏராளமான வெளிநாட்டு உள்நாட்டு, தமிழ்நாட்டு, உள்ளூர் எழுத்தாளர்களின் கதைகளைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை யெல்லாம் வாசிப்பார். அதில் இல்லாதது பொல்லாததும் இருக்கும். மற்ற நேரமாக இருந்தால் வந்து பாருன்னு சொல்லிரலாம். ஆனால் இப்போது வாயைத் திறக்க முடியாதே. அவர்கிட்டே கதை இருக்கே. எனவே பல்லைக் கடித்துக் கொண்டு அவர் சொல்றதையெல்லாம் பொறுமையின் சிகரத்தில் ஏறியபடியே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். அப்படியே ஒரு இரண்டுமணி நேரம் கழியும். பொறுமையின் உச்சியில் நின்று கொண்டு இனி பொறுக்க முடியாது தற்கொலை தான் வழி. விழும்போது அவரையும் சேர்த்துத் தள்ளிர வேண்டியதான் என்ற முடிவின் வாசல்கதவைத் திறக்கும்போது “ உன்னோட இந்தக் கதை..” என்று ஆரம்பித்து உலகச்சிறுகதைகளை ஒப்பிட்டுப் பேச ஆரம்பித்து சுற்றி வளைத்து கடைசியில்” கதை சரியில்லை ” என்ற இரண்டு வார்த்தையைத் தான் இவ்வளவு நேரமாகச் சொல்லியிருப்பார்.

எப்படியிருக்கும்? ஏதோ இந்த ஒரு கதையிலதான் என்னோட உயிரே இருக்கிற மாதிரி துடிக்கிற துடிப்பு கடைசியில் அடங்கி விடும். முகம் தொங்கிப்போக சரி தான் நமக்கு எழுத வராது போல என்ற எண்ணம் தோன்றி விடும். இது வரை நான் எழுதி கையெழுத்துப் பிரதியில் படிக்கக் கொடுத்த கதைகளில் ஒரு கதையைக் கூட நல்லாருக்குன்னு ஒருத்தர் கூடச் சொன்னதில்லை. எல்லோருக்கும் அதுவும் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கு உள்ளுக்குள் ஒரு பொறாமை நதி ஓடிக் கொண்டிருக்கும் போல. மற்றவர்கள் பிரதிகளைப் படிக்கும்போது அந்த நதியில் முங்கி முங்கி எழுந்திரிப்பார்கள் போல. ஆனால் இப்படி பொத்தாம் பொதுவாய் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. பல சமயம் இந்த மாதிரி விமர்சனங்கள் நம்மைப் புடம் போடவும் செய்யும். நம்மைச் செப்பனிட, செழுமைப்படுத்த, இன்னும் தீவிரமாய் எழுதத் தூண்டும். நான் அப்படியே எடுத்துக் கொண்டேன். கதை சரியில்லை என்று சொல்கிற சமயங்களில் வருத்தம் வந்தாலும் அந்த வருத்தத்தின் மீது இன்னும் நாலு கதைகளை எழுதிப் போட்டு அமுக்கிவிடுவேன்.

இப்பவும் அந்தக் கேள்வி இருக்கத்தான் செய்கிறது. அதுவும் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் முக்கியமான எழுத்தாளர்களான வண்ணதாசன் , கோணங்கி, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜாகிர்ராஜா, இன்னும் பலரிடமும் இப்பவும் கேட்க நினைக்கிற கேள்வி இது தான் “ எப்படி எழுதுறீங்க? “ “ இதென்ன கேள்வி பேனாட்டு தான்..” ( டேய் எந்தக் காலத்தில் இருக்கே எல்லாம் கணிணியில் தான் என்று நாறும்பூநாதன் சொல்கிறான்.) என்று சொல்லிவிடாதீர்கள். அருள் வந்தோ, கலாமோகினியின் கடைக்கண் பார்வை பட்டோ, தியானம் செய்தோ, பிரக்ஞை விழிப்பு நிலையினாலோ, பிறவித்திறமையாலோ, கடின உழைப்பாலோ, கடுமையான முயற்சியாலோ, தீவிரப்பயிற்சியாலோ எப்படியோ எழுத்தாளராகி விட வேண்டும் என்று நாங்கள் செய்த, யோசித்த, மேற்சொன்ன விஷயங்களால் நான் அல்லது நாங்கள் எழுத்தாளராகவில்லை, அது வேறு விஷயம். ஆனால் அந்த வேறு விஷயம் தான் என்னவென்று தெரியவில்லை. மறுபடியும் முதல்லருந்தா..ஐயோ சாமி ஆள விடுடா என்று நீங்கள் ஓடத் துவங்குவதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

நன்றி- சொல்வனம் இணைய இதழ்

1 comment:

  1. உங்களின் அனுபவத்திற்கு நன்றி.நீங்க நல்லா எழுதறீங்க

    ReplyDelete