Friday 9 November 2012

கேள்விகளில்லா உலகம்

குழந்தைகளின் அற்புத உலகில் little-boy-reading

 

உதயசங்கர்

 

 

ஏன்? எதற்கு? எப்படி? இந்தக் கேள்விகள் தான் மனிதகுலத்தின் அறிவு வளர்ச்சிக்கு ஆதாரம். குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய வரலாற்றில் உழைப்புக்கு பெரும் பாத்திரம் இருக்கிறது. நான்கு கால்களால் நடந்து கொண்டிருந்த மனிதக்குரங்குகள் எப்போது தன் கைகளை உயர்த்தி விரல்களைப் பயன்படுத்த ஆரம்பித்ததோ அப்போதிருந்து மூளையின் வளர்ச்சியில் ஒரு பெரும்பாய்ச்சல் நிகழ்ந்து விட்டது. இதெல்லாம் ஒன்றிரண்டு வரிகளில் சொல்லி விடுவதைப் போல நிகழவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சின்னச் சின்ன மாற்றங்களினால் உருவாகியது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். சின்னச் சின்னதான அந்த ஒவ்வொரு மாற்றத்துக்கும் பின்னால் ஏன்? எதற்கு? எப்படி? இருக்கிறது. இந்தக் கேள்விகள் தான் இன்று மனிதகுலம் அறிவியல், இலக்கியம், கலை, தத்துவம், அரசியல், தொழில்நுட்பம், என்று சகலவிதமான துறைகளிலும் பிரம்மாண்டமான வளர்ச்சியடைய அடிப்படைக் காரணம். ஆனால் எல்லாக் காலங்களிலும் ஆளுகின்ற வர்க்கத்துக்கு எல்லா நாடுகளிலும் எல்லா மொழிகளிலும் பிடிக்காத மூன்று வார்த்தைகள் ஏன்? எதற்கு? எப்படி?.

ஆதிப்பொதுவுடைமைச் சமூகம் துவங்கி இன்றைய முதலாளித்துவகாலம் வரை சமூக மாற்றங்களைத் தூண்டியதும், மாற்றங்களைக் கொண்டு வந்ததும் இந்தக் கேள்விகள் தான். எனவே தான் அடிப்படை மாற்றத்தை எப்போதும் விரும்பாத ஆளும் வர்க்கம் இந்தக் கேள்விகளையும் விரும்புவதில்லை. எனவே பெரும்பான்மை மக்கள் இந்தக் கேள்விகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். இந்தக் கேள்விகள் அவர்கள் மனதில் தோன்றாதபடி மதம், கடவுள்கொள்கை, விதி, ஜோதிடம், என்று மயக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். மக்கள் மனதை வசப்படுத்துவதற்காக எல்லாவித தந்திரங்களையும் சாம, தான, தண்ட, பேதங்களையும் பயன்படுத்தத் தயங்கமாட்டார்கள். அதாவது சட்டம், ராணுவம், போலீஸ், என்று அரசின் வன்முறை அமைப்புகளுக்கு ஈடாக கல்வி, மதம், நீதி, ஊடகங்கள், ( பத்திரிகை, சினிமா, தொலைக்காட்சி ) சூட்சுமமாக மக்கள் மனதை வசப்படுத்தும் கருவிகளை ஆளும் வர்க்கம் பயன்படுத்துகிறது. இதில் கற்பிக்கும் முறை இளம் வயதிலேயே கேள்வி கேட்கும் தீராத ஆவலை முளையிலேயே கிள்ளியெறிகிறது.

குழந்தைகள் வளர, வளர, அவர்கள் இந்த உலகத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். அவர்களுடைய புரிகிற இந்த முயற்சி தான் கேள்விகள். அநேகமாக மூன்று வயதிலிருந்தே குழந்தைகள் கேள்விகள் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆமாம். முதலில் தாயிடம், தந்தையிடம், பின்னர் எல்லோரிடமும் கேள்விகள் கேள்விகள் லட்சக்கணக்கான கேள்விகளைக் கேட்கத் துவங்குகிறார்கள். அது என்ன? இது என்ன? சூரியன்னா என்ன? நட்சத்திரம் ஏன் ராத்திரி வருது? சாமி யார்? ஏன் கும்பிடணும்? எப்படி மூச்சா போகுது? ஏன் சாப்பிடணும்? இப்படி கேள்விகளால் திணறடிக்கிறார்கள் குழந்தைகள். இவைகள் எல்லாம் அவர்கள் திட்டமிட்டு கேட்பதில்லை. இயற்கையின் உந்துதலால் உள்ளுணர்வின் வெளிப்பாடாக இந்தக் கேள்விகள் அவர்களிடமிருந்து ஊற்றெடுக்கின்றன. கேள்வி கேட்பதையே மறந்து போய் விட்ட மரத்துப் போன பெரியவர்களின் மூளை இத்தகைய கேள்விகளைக் கண்டு திகைத்து விடுகிறது. முதலில் நம்முடைய குழந்தை இப்படிக் கேள்வி கேட்கிறானே என்று ஆனந்தப் படுகிறார்கள். பெரிய அறிவாளியாய் வருவான் என்று ஊரிலுள்ள எல்லோரிடமும் சொல்லி மகிழ்கிறார்கள். ஆனால் குழந்தைகளின் கேள்விகளுக்கு அவர்களுக்குச் சரியான பதில் சொல்லத் தெரியாது. இல்லையென்றால் மூடத்தனமான பதில்களைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் குழந்தைகளின் ஆர்வத்தை மட்டுப்படுத்துவார்கள். சிலர் குழந்தைகளை அவர்களுடைய கேள்விகளினால் சலிப்புற்று திட்டவும் செய்வார்கள். ஏனெனில் பெரியவர்களின் அறியாமையை குழந்தைகள் அறிந்து கொள்ளக் கூடாது என்று வரட்டுக் கௌரவம் தான். ஆனால் குழந்தைகள் அவர்களுடைய கேள்விகளை நீங்கள் எப்படி எதிர் கொள்கிறீர்கள்? அதற்கு என்ன மாதிரியான பதில்களைத் தருகிறீர்கள் ? என்று உன்னிப்பாகக் கவனிக்கவும் செய்கிறார்கள். உங்கள் பதில்களை அவர்கள் உடனே புரிந்து கொண்டு விடுவார்கள் என்று அர்த்தமில்லை. ஆனால் அந்தப் பதில்களின் உள்ளார்ந்த உணர்வுகள் அவர்களைப் பாதிக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

நான் என் குழந்தைகளிடம் அவர்கள் சிறு பிராயத்தில் கேட்ட கேள்விகளுக்கு முறையான விஞ்ஞானபூர்வமான விளக்கங்களைக் கொடுத்தேன். பூமி எப்படி உருவானது? உயிர்கள் எப்படி உருவானது? மனிதன் எப்படி உருவானான்? கடவுள் எப்போது , எதனால், ஏன் மனிதனால் படைக்கப்பட்டார்? என்றெல்லாம் எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். அவர்களுக்கு அது புரியுமா? புரியாதா? என்றெல்லாம் யோசிக்கவில்லை. அதற்காக அவர்களை வலுக்கட்டாயமாக உட்காரவைத்துச் சொல்லவுமில்லை. அவர்கள் கேள்விகள் கேட்கும் போது அவற்றைப் பற்றியெல்லாம் சொன்னேன். அரைமணி நேரம் ஒருமணிநேர வகுப்பெல்லாம் இல்லை. ஒரு நிமிடம், இரண்டு நிமிடம், அவ்வளவு தான். குழந்தைகள் அடுத்த கேள்விக்குத் தாவி விடுவார்கள். அதைப்பற்றிக் கவலைப்படக்கூடாது. ஆனால் நான் சொன்ன பதில்கள், என்னுடைய நடைமுறை வாழ்க்கையெல்லாம் பார்த்து, என் குழந்தைகள் சாதிய, மத, தெய்வநம்பிக்கை இல்லாத குழந்தைகளாக வளர்ந்தார்கள்.

பல குடும்பங்களில் குழந்தைகள் கேள்விகள் கேட்கும் போதல்ல.. பேச ஆரம்பித்தவுடனேயே நர்சரியில் கொண்டு போய் விட்டு விடுவார்கள். எப்போதும் ஓட்டமும் சாட்டமும் பேச்சும் கேள்விகளுமாய் இருக்கிற குழந்தைகளை அங்கே கையில் அடிஸ்கேலுடன் அடக்கி ஒடுக்கி உட்காரவைத்து கையைக் கட்டி வாயைப் பொத்தி ஒழுங்கு படுத்தி சர்க்கஸில் மிருகங்களைப் பழக்குவதைப் போல குழந்தைகளை வசக்குகிறார்கள். அதில் இருண்டு ஒளியிழந்து போகிற குழந்தைகள் கடைசி வரை அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதில்லை. ஒரே நேரத்தில் அடி, உதை, என்ற தண்டனைகளாலும், ஆசிரியர்கள் சொல்லித் தருவதைத் திரும்பச் சொல்கிற கிளிப்பிள்ளைகளாகவும் பள்ளி என்றாலே பயந்து நடுங்குகிற அளவுக்கு நம்முடைய கல்வி முறை அமைந்துள்ளது. ஒருவழிப்பாதையாகவே கற்பிக்கும்முறை இருக்கிறது. அதில் எப்போதும் ஆசிரியர் தான் சின்னஞ்சிறு குழந்தைகளின் மீது எல்லாவிதமான அதிகாரங்களையும் செலுத்துகிற சர்வாதிகாரியாக விளங்குகிறார். அந்த சர்வாதிகாரியிடமிருந்து தப்பிப்பதற்கு குழந்தைகளுக்கு மார்க்கமேயில்லை. ஏனென்றால் அவர் தான் மார்க்கும் போடுபவராக இருக்கிறார். கல்வி மனப்பாடக்கல்வியாக, பரீட்சைகள், மதிப்பெண்கள் வழியாக ஒரு குழந்தையின் திறமையைத் தீர்மானிக்கிற கல்வியாக இருக்கிறது. இப்போது சில பாரதூரமான மாற்றங்கள் வந்திருக்கின்றன என்ற போதிலும் இன்னும் முழுமையான ஜனநாயகபூர்வ இனிமையான சமத்துவக்கல்விமுறை மலரவில்லை. அதற்கு பெற்றோர்களும் ஒரு காரணம். தங்கள் குழந்தை பெரிய அறிவாளியாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதற்காக பெரிய பள்ளிக்கூடத்தில் பெரிய சிபாரிசுடன், நிறையப் பணம் கட்டி சேர்க்கிறார்கள். அந்தப் பள்ளிக்கூடங்கள் குழந்தைகளை வசக்குகிற கொடுஞ்சித்திரவதைக்கூடங்களாகின்றன. பெற்றோர்களுக்கு நம்முடைய கல்விமுறை குறித்த எந்த சிந்தனையும் இல்லை. அது ஏதோ அரசாங்கத்தின் வேலை என்றோ, அல்லது கல்வியாளர்களின் வேலை என்றோ நினைத்து கை கழுவி விடுகிறார்கள். உண்மையில் பெற்றோர்களின் செயலூக்கமான பங்கேற்பு கற்பிக்கும்முறை குறித்து இருந்தால் நிலைமை வெகு தூரத்துக்கு முன்னேறியிருக்கும். ஆனால் இன்னமும் பள்ளிக்கூடங்கள் அதிகார மையமாகவே செயல்படுகின்றன. வியாபாரநோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, அதிகாரமையமாக பள்ளிக்கூடங்கள் மாறி வருவதற்கு அரசின் ஆதரவும் ஒரு காரணம். குடிமக்களின் அடிப்படை உரிமையான கல்வியை அரசு கை விட்டு விடுவதற்கான முயற்சிகளே இத்தகைய தனியார்மயம்.

குழந்தைகள் கேள்விகள் கேட்பதை ஆசிரியர்கள் விரும்புவதில்லை. அவர்கள் சொல்லிக் கொடுப்பதை, அல்லது நோட்ஸில் உள்ளதை அப்படியே சொல்பவன் அல்லது எழுதுபவன் சிறந்த மாணவன்/ மாணவி. ஆசிரியர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது. பெற்றோர்கள் பயப்படுவார்கள். குழந்தைகளை டார்ச்சர் செய்வார்களோ என்று பயந்து எதுவும் பேச மாட்டார்கள். அதை மீறி ஏதாவது புகார் செய்து நடவடிக்கை எடுத்து விட்டால் அவர்களுக்குச் சங்கம் இருக்கிறது. ஆனால் பெற்றோர்களுக்குச் சங்கம் இல்லை. முக்கியமாகக் குழந்தைகளுக்குச் சங்கம் இல்லை. தாங்கள் பேரன்பும் பெரும் மரியாதையும் வைத்திருக்கிற பெற்றோர்களும் கைவிட்டு, ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் போது பாவம் குழந்தைகள் என்ன செய்வார்கள்! எல்லாக்கொடுமைகளையும் தாங்கிக் கொள்கிறார்கள். மனதளவில் பாதிக்கப் படுகிறார்கள். அந்தப் பாதிப்புடனே அவர்கள் வளர்கிறார்கள். அவர்கள் தான் எதிர்காலத் தலைமுறையென்றால் எப்படியிருக்கும்? நாம் அவர்களுக்கு என்ன கொடுத்தோமோ அதைத் தானே அவர்களும் திருப்பி இந்தச் சமூகத்துக்குக் கொடுப்பார்கள். நாம் என்னென்ன நம்முடைய குழந்தைகளுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று ஒரு முறை எல்லோரும் தங்களுடைய மனதுக்குள் ஆராய்ந்து பாருங்கள்! மற்றெல்லாவற்றையும் விட முக்கியமாகக் குழந்தைகளிடமிருந்து கேள்விகளைப் பிடுங்கி விட்டோம். கேள்விகளில்லா உலகத்தில் அவர்களை ஊமைகளாக்கி விட்டோம். கேள்விகளின்றி வாழ்க்கையா?

No comments:

Post a Comment