உதயசங்கர்
என்னுடைய சித்தப்பா சண்முகநாதனின் வீட்டுக்குப் போயிருந்தேன். வீடு அமைதியாகக் கிடந்தது. போன மாதம் தான் சித்தப்பா தவறிப் போய்விட்டார். ரோட்டில் போய்க்கொண்டிருந்த மாடு கலைந்து அவரை முட்டித் தள்ளி விட்டது. தடுமாறிக் கீழே விழுந்ததில் பிட்டியில் நல்ல அடி. வெளியே காயம் எதுவும் இல்லை. ஆனால் பத்து நாட்களுக்குள் சிறுநீரகச் செயலிழப்பு, கைகால்களில் விரைப்பு, என்று ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாக வந்து அவரை மரணத்துக்கு இட்டுச் சென்று விட்டது. எனக்குத் தொலைபேசியில் தகவல் வரும்போது நான் மும்பையில் எங்கள் கம்பெனி வேலை விஷயமாகப் போயிருந்தேன். போனவாரம் தான் அங்கேயிருந்து திரும்பி வந்தேன். இந்த ஒரு மாதமாகச் சித்தப்பாவின் ஞாபகங்கள் மனதில் அலையடித்துக் கொண்டேயிருந்தது. எதிர்பாராத தருணங்களில் மனிதர்களை வீழ்த்துவதில் மரணத்துக்குத் தான் எத்தனை குரூர திருப்தி.
லீவுக்காக மன்றாடிக் கேட்டு வாங்கி கோவில்பட்டிக்கு வந்து இறங்கியதிலிருந்தே மனம் நிலை கொள்ளவில்லை. மனம் இறுகி பாறை மாதிரி கனத்துப் போனது. எல்லாஊர்களையும் போல கோவில்பட்டியும் மாறியிருக்கிறது. ஆனால் என் சித்தப்பா குடியிருந்ததெருவும் வளவும் இந்த மாற்றத்திற்கு சவால் விட்டுக் கொண்டு மாறாமல் அப்படியே இருந்தன. சுற்றிலும் சாக்கடைகள் சூழ்ந்திருக்க அதில் கால்களை அளைந்தபடி பன்றிகள் மேய்ந்து கொண்டிருந்தன. அந்த வளவில் இருந்த ஆறு வீடுகளில் மூன்றாவது வீட்டில் – அதாவது ஒரேஒரு பத்தி உள்ள குச்சில் என் சித்தப்பா குடியிருந்தார். வீடு நெருங்க நெருங்க மனம் இளகியது. சித்தியைப் பார்த்தவுடன் அழுது விடுவேனோ என்று பயந்தேன்.
எப்போதும் வெளித்தெரியும் எத்துப்பல் சிரிப்புடன் என் கைகளை ஆவலுடன் பற்றிக் கொள்ளும் என் சித்தப்பா இப்போது இல்லை. அந்தக் கைகளின் காய்ப்பையும் மீறி அன்பின் துடிப்பை நான் உணர்வேன். என் மீது ஒரு அலாதிப் பிரியத்தை வைத்திருந்தார் என் சித்தப்பா அல்லது அப்படி வைத்திருப்பதாக நினைப்பதில் நான் பெருமைப்பட்டேன்.
ஆனால் எதிர்பார்த்ததைவிட சித்தி தைரியமாக இருந்தாள். துக்கத்தை அடக்கிக் கொள்கிற பக்குவம் சித்திக்கு இருந்ததைப் பார்த்து எனக்கு ஆச்சரியம். சாதாரணமாய் என் வேலையைப் பற்றி, அம்மாஅப்பாவைப் பற்றி, தம்பி தங்கையைப் பற்றி விசாரித்தாள். ஒவ்வொரு விசாரிப்புக்கும் நடுவே ஒரு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்டாள். எனக்குச் சங்கடமாக இருந்தது. எப்பவுமே இந்த மாதிரி துக்கம் விசாரிக்கும் தருணங்களில் என்ன மாதிரியான வார்த்தைகளைப் பேச வேண்டும் என்று எனக்குத் தெரியாது. பாவமாய் முழித்துக் கொண்டிருப்பேன். பரிதாபமான என் முகத்தைப் பார்த்து துக்கவீட்டுக்காரர்கள் எனக்கு ஆறுதல் சொல்லி அனுப்புவார்கள். அப்படித்தான் இப்போதும் முழித்துக் கொண்டிருந்தேன்.
குத்துவிளக்கின் அருகில் கதம்பமாலை சூடிய போட்டோவுக்குள்ளிருந்து என் சித்தப்பா என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். சித்தி தரையை விரலால் தேய்த்துக் கொண்டிருந்தாள். அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. அதனால் தானோ என்னவோ என்மீது மிகுந்த பிரியம் வைத்திருந்தார் என் சித்தப்பா. பாலிய காலத்தில் பெரும்பகுதி நேரத்தை என் சித்தப்பாவுடனேயே கழித்திருக்கிறேன். என்னைத் தூக்கி வைத்துக் கொண்டு அவருடைய எத்துப்பல் உதடுகளால் சும்மா முத்திக் கொண்டேயிருப்பார். எனக்கு வெட்கமாகவும், சந்தோஷமாகவும், இருக்கும். என் அப்பாவுக்கு மாறுதல் கிடைத்து மதுரை செல்லும்வரை என் சித்தப்பா என்னைத் தூக்கிக் கொண்டே திரிந்தார். இதனால் சித்திக்கும் அவருக்கும் சண்டைகூட வந்திருக்கிறது.
“ ராமநாதா..மேலே அட்டாலையில் இருக்கிற அவுக டிரங்குப்பெட்டியை இறக்கணும்.. அந்த ஸ்டூலைப் போட்டுக்கோ.. எனக்கு ஸ்டூல் மேலே ஏறணும்னால பயமாருக்கு…எங்க..அவுகள மாதிரி விழுந்துருவேனோன்னு…”
சித்தி என்னைப்பார்த்து விரக்தியுடன் சிரித்தாள். நான் எழுந்து ஸ்டூலைப் போட்டு அட்டாலையிலிருந்து அந்தப் பழைய டிரங்குப்பெட்டியை இறக்கினேன்.
” வேற ஏதும் எடுக்கணுமா..சித்தி..”
”வேற என்ன இருக்குன்னு பாரு..”
என்றாள் சித்தி. நான் மறுபடியும் ஸ்டூலில் ஏறிப்பார்த்தேன். நீள்சதுரமாய் துணியினால் மூடப்பட்ட ஒரு பார்சல் இருந்தது. பிறகு குட்டிச்சாக்குகளில் கட்டப்பட்டிருந்த பாத்திரமூட்டைகள். நான் அந்த நீள்சதுரப்பார்சலை இழுத்து இறக்கினேன். டைப்ரைட்டர் மிஷின் மாதிரி தெரிந்தது. ஒரே தூசி. அப்படியே அசங்காமல் மேலே சுற்றியிருந்த துணியைச் சுருட்டி எடுத்தேன். வித்தியாசமான ஒரு இசைக்கருவி என் முன்னால் இருந்தது.
” இது என்னது சித்தி..”
ஒரு கணம் அதையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் சித்தி. பின் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு,
” இதுவா தம்பி.. புல்புல்தாரா.. உஞ்சித்தப்பாவுக்கு உசிரு.. எப்பவும் இதில உட்காந்து வாசிச்சிக்கிட்டே இருப்பாரு.. ரூப்பு தேரா மஸ்தானா அப்ப ரெம்ப பேமஸ் யார் கேட்டாலும் உடனே அந்த இடத்திலே உட்கார்ந்து இதை வச்சி வாசிக்க ஆரம்பிச்சிருவாரு.. நான் சின்னப்பிள்ளையா இருக்கறப்ப எவ்வளவு பாட்டு கேட்டிருக்கென்.. அதுக்காகவே இவரைக் கலியாணம் செய்ஞ்சிக்கிடணும்னு நெனச்சேன்.. ஆனா எல்லாம் உங்கம்மா கலியாணத்தோட போச்சு.. அதுக்கு மறுநாள் மூட்டை கட்டி வைச்சவர் தான்.. ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கொரு நாள்னு எடுத்து வைச்சு ஒரே ஒரு பாட்டை மட்டும் திரும்பத் திரும்ப வாசிச்சிக்கிட்டேயிருப்பாரு.. ஏன் வேற பாட்டை வாசிக்கறதானேன்னு கேட்டா ஒரு சிரிப்பு.. அவ்வளவு தான். எப்பேர்க்கொண்ட குணவான்.. எனக்கு ஒரு குறை உண்டுமா.. என்னமா வைச்சிருந்தாக.. இப்படித் தனியாத் தவிக்கவிட்டுட்டுப் போயிட்டாகளே..”
என்று அழுகையும் புலம்பலுமாகச் சொன்னாள் சித்தி. எனக்கு எதுவும் பேசத்தோணவில்லை. நான் புல்புல்தாராவின் பொத்தான்களை அமுக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன். நீண்ட நாட்களானதால் பொத்தான்கள் கிறீச்சிட்டன. ஓரத்திலிருந்த சிறு பெட்டியில் கம்பிகளை மீட்டுகிற கார்டுகள் கிடந்தன. அதில் ஒன்றை எடுத்து கம்பிகளை மீட்டிக் கொண்டே பொத்தான்களை அமுக்கிப் பார்த்தேன். திடீரென “ டொய்ங்ங்ங்…” என்று கம்பி அதிர்ந்தது. அந்த சத்தம் நாராசமாய் இருந்தது. எப்படி சித்தப்பா இதை வசப்படுத்தினார் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
அதன்பிறகு எழுந்து சித்தி சமைக்கப்போனாள். நான் கொஞ்சநேரம் அந்தப் புல்புல்தாராவுடன் போராடினேன். பின்னர் நாலுக்குநாலு குச்சுக்குள்ளேயே அங்குலம் அங்குலமாக நடந்தும் உட்கார்ந்தும் பொழுதை நகர்த்திக் கொண்டிருந்தேன். சாப்பிட்டுவிட்டு கிளம்பப்போன என்னை சித்திதான்,
” ஏண்டா.. கொஞ்சம் வெயில்தாழ போயேன்..”
என்று சொன்னாள். எனக்கும் அசதியாகத் தான் இருந்தது. படுத்த உடனேயே தூக்கம் சுழலாய் என்னைச் சுருட்டி விழுங்கியது.
திடீரென புல்புல்தாராவின் இசையொலி கேட்டது. கண்களைத் திறக்க நினைத்தாலும் திறக்க முடியவில்லை. ஆனால் அந்த இசை ஒரு பழைய தமிழ்த்திரைப்படப்பாடலாக மாறிக்கொண்டேயிருந்தது. கூடவே கலியாணவீட்டு ஆரவாரம். கலகலப்பு.
திருமணத்துக்கு முதல் நாளிரவாக இருந்தது அந்தக்காட்சி. ஊரிலிருந்து ஒவ்வொருத்தராக வந்து கொண்டேயிருந்தார்கள் ஒவ்வொரு குடும்பமாய் வர வர அறிவிப்புகளும் வந்து கொண்டேயிருந்தன.
சங்கரங்கோயில் கோமதி மயினி வந்தாச்சி.. புதூர் வேலம்மையாச்சி வந்தாச்சி.. திருநெவேலி நெல்லையப்பன் வந்துட்டான்..
உடனே ஒரு அலை போல குசலங்களும், கேலியும், சிரிப்பும், கும்மாளமும் எழுந்து அடங்கும். இந்த ஆரவாரங்களுக்கு மத்தியில் வாடகைக்கு எடுத்திருந்த ஜமுக்காளத்தில் இளவட்டங்கள் உட்கார்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அது போரடித்தபோது பாட்டுப்பாடினார்கள். சிலர் இராச்சாப்பாட்டை முடித்துவிட்டு இரண்டாம்பிளே சினிமாவுக்குப் போனார்கள். சிலர் இங்கும் அங்கும் உட்கார்ந்துகொண்டோ நின்று கொண்டோ குடும்பப்பிரச்னைகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள். பொடிசுகள் ஒவ்வொருவர் கால்மாட்டுக்குள்ளும் நுழைந்து ஓடி விளையாடிக்கொண்டிருந்தனர்.
இரவு பந்தி பலுமாறலில் இருந்த சம்முகநாதன் அப்போது தான் முன்னால் வந்து முற்றத்திற்கு வந்து யாரையோ எதிர்பார்த்த மாதிரி சுற்றும் முற்றும் பார்த்தான். அவனைப் பார்த்தவுடன் செல்லையா,
“ சம்முகண்ணே.. வாங்க ஒரு கை போடலாம்..”
என்று கூப்பிட்டான்.
” இல்லடே சோலி கிடக்கு.. அடிக்கடி என்னயத்தான் கூப்பிடுவாக..”
என்று பெருமையுடன் சொன்னான். அப்போது செல்லையாவுக்குப் பக்கத்திலிருந்த வேலுமாமா,
” ஏல சம்முகம்.. உனக்கு யோகமில்லேயடா.. என்ன ஒழைச்சி என்ன செய்ய.. எல்லாம் மிஸ்ஸாயிருச்சேடா..”
என்று சொல்லவும் சம்முகநாதனின் முகம் இருண்டுபோய் விட்டது. நிலைமையை சங்கரநாராயணன் தான் சமாளித்தான்.
” சும்மா இரிங்க….மாமா.. எந்த நேரத்தில என்ன பேசுதுன்னே தெரியாது.. சம்முகம் நீ போய் உன்னோட புல்புல்தாராவ எடுத்துட்டு வந்து ரெண்டு பாட்ட அவுத்துவிடுடே..”
என்று சொன்னவுடன் சம்முகநாதனின் முகம் பிரகாசமாகிவிட்டது. உடனே உள்ளே போய் புல்புல்தாராவை எடுத்துக் கொண்டு வந்தான். அவன் எடுத்து வருவதைப் பார்த்த கோவிந்தமாமா ” எந்த நேரத்தில என்ன வேல பாக்கல தலைக்கு மேல சோலி கிடக்கு “ என்று சொன்னதைப் பொருட்படுத்தவில்லை சம்முகநாதன். சபைக்கு நடுவில் அதை வைத்து கம்பிகளை முறுக்கி கார்டை எடுத்தான். செல்லையா உடனே,
” சம்முகண்ணே.. ரூப்பு தேரா மஸ்தானா?”
என்று கேட்டான். அதைக்கேட்டதும் சங்கரநாரயணன்,
” என்னா அழகுடா அந்தப்பய ராஜேஷ்கன்னா..”
என்று சொல்ல, அதை இடைமறித்து வேலுமாமா,
” ஏல சர்மிளாடாகுர் அந்தப்பிள்ளைக்கென்ன கொறச்சலா..”
என்று தன்னுடைய ஓட்டைப்பல்லைக் காட்டிச் சிரித்தார். சம்முகநாதன் ஒரு கணம் கண்களை மூடினான். கைவிரல்கள் பொத்தான்களில் வேகவேகமாகத் தாளமிட பாட்டு அந்த முரட்டுக்கம்பிகளிலிருந்து கசிந்து பரவியது. எந்தப் பாட்டை வாசித்தாலும் அந்தப் பாட்டின் அத்தனை நெளிவுசுளிவுகளையும் வாசித்தான். மனம் ஒன்றி ஒருவித லயத்துடன் தலையாட்டிக் கொண்டே அவன் வாசித்ததைப் பார்த்துக் கொண்டிருந்த எல்லோரும் அசையாமல் உட்கார்ந்திருந்தனர். அந்த இரவின் அமைதியில் அவர்கள் எல்லோருடைய மனங்களும் ததும்பிக் கொண்டிருந்தன.
அந்தத் ததும்பலின் உச்சகட்டமாக ஒரு சோகமான இசைப்பனுவல் வந்தது. யாருக்கும் அது என்ன பாட்டு என்றே புரியவில்லை. ஆனால் செல்லையா மகாபளுவன். மெதுவாகப் பக்கத்திலிருந்த சங்கரநாராயணனிடம் முணுமுணுத்தான். மன்னாதி மன்னன் படத்தில் வருகிற கண்களிரண்டும் உன்னை எங்கே என்று தேடுமோ என்ற பாட்டு. அதை ஒருவருக்கொருவர் சொல்லித் தெரிந்து கொண்டபோதும் சம்முகநாதன் கண்களைத் திறக்காமல் மெய்ம்மறந்து வாசித்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்க்கும்போது வேறு ஒரு லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்ததைப் போல இருந்தது. அவன் முகபாவம் கணத்துக்குக் கணம் மாறிக் கொண்டேயிருந்தது. கண்களும் புருவமும் சுருங்கின. வாய்கூட லேசாய் கோணியது. ஒரு அபூர்வமான பாவம் அவன் முகத்தில் கூடி வந்தது. எல்லோரும் வைச்சகண் வாங்காமல் சம்முகநாதனையே பார்த்துக் கொண்டிருக்க கடையநல்லூர்கலியாணம் பெரியப்பாவின் குரல் கேட்டது,
” ஏல சம்முகம் போதும்ல..காலைல..ஆறுமணிக்கு கோயில்ல இருக்கணும் பாத்துக்க.. போய்த்தூங்குங்க..”
கர்ணகடூரமாய் ஒலித்த அந்தச் சத்தத்தில் ஒருகணம் சம்முகநாதன் உடல் நடுங்கி விட்டது. இசையின் கடைசித்துணுக்கோடு ஒரு விம்மலும் கேட்டது. கேட்டது என்று சங்கரநாராயணனும், ச்சே..ச்சே.. அதெல்லாம் ஒண்ணுமில்லை.. என்று செல்லையாவும் பேசிக் கொண்டனர். அவர்கள் திரும்பிப் பார்க்கும்போது சம்முகநாதன் புல்புல்தாராவைக் கையில் எடுத்துக் கொண்டு உள்ளே போய்க் கொண்டிருந்தான்.
என் காதுக்குள் யாரோ கிசுகிசுப்பாய் சொல்லிக்கொண்டேயிருந்த மாதிரி இருந்தது. கண்களைத் திறக்க முடியாமல் திறந்தேன். இருட்டத் தொடங்கியிருந்தது. சித்தி அடுக்களையிலிருந்தாள். சித்திதான் கதை சொல்லிக் கொண்டிருந்தாளா? ஆனால் நேரில் பார்த்த மாதிரியே இருந்ததே. சித்தப்பாவின் அந்த முகம். அதில் தெரிந்த உணர்ச்சிகள். எல்லாவற்றுக்கும் மேல் அந்த விம்மல். குழப்பத்துடன் எழுந்து கைகால் முகம் கழுவினேன். சித்தி கொடுத்த காப்பியைக் குடித்துவிட்டு புறப்படத்தயாரானேன்.
சித்தி, குத்துவிளக்குக்கு அருகில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த சித்தப்பாவின் புகைப்படத்தைக் கயில் எடுத்து முந்தானையால் துடைத்து மீண்டும் கீழே வைத்தாள். பின்னர் மெலிந்து நீண்ட கரங்களால் குத்துவிளக்கை ஏற்றினாள். அப்படியே சித்தப்பாவின் படத்துக்கு முன்னால் மண்டியிட்டு வணங்கினாள். எழுந்து நிமிரும்போது,
” அவுகளுக்கு உங்கம்மாவைக் கட்டணும்னுதான் ஆசை..உங்கம்மாவுக்கும் அந்த நெனப்பு இருந்திருக்கு..உங்க சித்தப்பாவை யாருக்குத்தான் பிடிக்காது! என்ன செய்ய? உங்கம்மாவக் கட்டியிருந்தா இன்னும் கொஞ்சநாள் இருந்திருப்பாரோ என்னமோ? எல்லாம் எந்தலையெழுத்து அவரைக் கூட்டிட்டுப்போயிட்டு…”
என்று முணுமுணுத்தாள். அது ஏதோ அசரீரி மாதிரி எனக்குள் இறங்கியது. நான் உள்ளுக்குள் நடுநடுங்கிப் போனேன். அதற்குப் பிறகு எனக்கு வந்த யோசனையெல்லாம் என் அம்மாவை எப்படி நான் எதிர்கொள்ளப்போகிறேன் என்பது தான்.
நன்றி- கணையாழி அக்டோபர்2012
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு சிறுகதை வாசிக்கிறேன். மனதை தொட்டு விட்டது, நேரில் கண்டது போல கதை நயம். மிகவும் அருமை.
ReplyDeleteநெகிழ வைக்கும் அருமையான பதிவு.
ReplyDeleteஎனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி திரு உதயசங்கர்.