Saturday, 28 April 2012

கலையாத ஒப்பனையுடன் காற்றில் கலந்தவர்

safther  
எங்கள் நால்வரில் நாறும்பூநாதன், சாரதி, முத்துச்சாமி நான் ‡ முத்துச்சாமி தான் வயதில் இளையவர். அதே போல உருவிலும் சற்று குள்ளமானவர். அவர் நாறும்பூநாதனின் வீட்டுக்கு அருகில் இருந்தார். இன்னும் சொல்லப் போனால் நாறும்பூநாதனை விட்டு இணைபிரியாமல் இருந்தார். அவருடைய லட்சியக்கதாநாயகனாக அநேகமாக நாறும்பூநாதனே இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். நாறும்பூநாதன் என்ன செய்தாலும் அதை உடனே அவரும் செய்துபார்த்து விடுவார். இது இளம்பருவத்துக்குப் பின்னும் தொடர்ந்தது என்பது என் அனுமானம்.

எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும் எங்களில் வயதில் இயைவரான முத்துச்சாமியுடன் நானும் சாரதியும் அதிகமாகச் சண்டை போடுவோம். எல்லாம் சில்லரைச் சண்டையாக சில்லரைக்கான சண்டையாக இருக்கும். முத்துச்சாமியிடம் சில குணவிசேஷங்கள் இருந்தன. மிகுந்த சிக்கனமும், கட்டுப்பாடும் உறுதியான மனமும் கொண்டவராக இருந்தார். எதனாலும் சபலம் கொள்ளாத சித்தம் அவருக்கு. நாங்கள் அப்படியல்ல எல்லாவிதமான அலைக்கழிப்புகளுக்கும் எங்களை ஆட்படுத்திக் கொண்டிருந்தோம். அதனால் சிலபல நன்மைகளும் தீமைகளும் நிகழ்ந்தன என்பது வேறுவிஷயம். ஆனால் முத்துச்சாமியின் அந்த உறுதி எங்களுக்குப் பொறாமையையும் சிலசமயம் எரிச்சலையும் ஏற்படுத்தியது.

நண்பர்களுக்குள் கணக்கு வழக்குபார்க்கக் கூடாது என்பது எங்கள் கட்சி. நண்பர்களாயிருந்தாலும் கணக்குன்னா கணக்குத் தான் என்பது அவருடைய கட்சி. இதனால் அடிக்கடி சண்டை போட்டு பின் பேசிக்கொள்வோம். ஆனால் நான்குபேரும் சேர்ந்தே தான் சுற்றிக்கொண்டிருந்தோம் கையயழுத்துப் பிரதி நடத்தினோம். எழுத்தாளர்களிடமும் இலக்கியவாதிகளிடமும், தொழிற்சங்கத் தலைவர்களிடமும். பழகினோம். நிறைய்யப் பேசினோம். நிறைய்யக் கேள்விகள் கேட்டோம். நிறைய்ய வாசித்தோம். நிறைய்ய நிறைய்ய அவர்கள் பேசுவதைக் கேட்டோம். ஆனால் இவை எல்லாவற்றிலும் முத்துச்சாமி பார்வையாளராக மட்டுமே இருந்தார். ஊக்கத்துடன் பங்குபெற்றதாக என் ஞாபகத்தில் இல்லை.

தீடீரென ஒரு நாள் இரவில் காந்தி மைதானத்தில் எழுத்தாளர்கள் கெளரிஷங்கர், துரை, மனோகர் (திரைக்கலைஞர் சார்லி) தேவதச்சன், மாரீஸ், திடவைப்பொன்னுச்சாமி நான் நாறும்பூநாதன் முத்துச்சாமி, சாரதி, ராம், அப்பாஸ் எல்லோரும் கூடிப்பேசிக் கொண்டிருந்த போது திடீரென தர்சனா என்று நிஜநாடக இயக்கம் கருக்கொண்டது உடனே ஒரு வாரத்திற்குள் நாடகங்கள் தயாராகி நாடகம் நடத்துவதற்கு தர்சனா களமிறங்கியது. தேவதச்சனின் பத்துரூபாய் பேரா. ராமனுஜத்தின் வேலை, தலைவர் மரணம் என்று எல்லாம் பத்து அல்லது இருபது நிமிடநாடகங்கள். அப்போது தான் சென்னையில் பாதல்சர்க்கார் மூன்றாவது அரங்கம் பற்றியும் வீதிநாடகங்களைப் பற்றியும் பயிற்சிப்பட்டறை நடத்தி முடித்திருந்தார். தமிழ்நாட்டின் தென்பகுதியில் தர்சனா ஏறத்தாழ ஒரு வருடத்திற்குள் நூறு முறைகளுக்குமேல் நாடகங்களை நிகழ்த்தியது. கோவில்பட்டி வீதிகளிலும் தொழிற்சங்க அரங்குகளிலும், சுற்றிலுமுள்ள கிராமங்களிலும், இந்திய சோவியத் நட்புறவுக்கழகத்தின் சார்பாகவும் ஏராளமான இடங்களில் நாங்கள் இந்த நாடகங்களை நிகழ்த்தினோம்.

கிராமங்களில் எங்களை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள் பேண்ட், சட்டையுடன் ஸ்டெப் கட்டிங் முடியுடன் நாங்கள் விவசாயியாக தொழிலாளியாக நடித்தது அவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது. நாங்கள் நாங்களாகவே நடித்தோம். மக்களிடம் மிகுந்த வரவேற்பும் பெற்றோம். எங்கள் நாடகங்களில் நடிப்பதற்கான ஒத்திகை என்பது ஒரு கூட்டு விவாதம் மட்டுமே மற்றபடி நடித்து பார்ப்பதோ, வசன மனப்பாடமோ கிடையாது. நடிக்கும் போது புதிது புதிதாய் பேசுவோம். நாடகங்களும் புதிய புதிய பரிமாணங்களுக்கு மாறிக் கொண்டிருக்கும். நாடகக் குழுவின் முக்கிய நடிகர்களாக மனோகர், (திரைக்கலைஞர் சார்லி) கெளரிஷங்கர், துரை, திடவைபொன்னுச்சாமி, நான் நாறும்பூநாதன், இருந்தோம். எங்களுடன் முத்துச்சாமியும் இருந்தார், எல்லாவற்றிலும் பார்வையாளராக மட்டும் இருந்தவர் நாடகங்களில் நடிப்பதற்கு பேராவல் கொண்டிருந்தார். எந்தச் சிறிய வேடமாக இருந்தாலும் மனமுவந்து ஏற்றுக்கொண்டார். வழக்கமாக நடிக்கிறவர்கள் யாரும் வரவில்லையென்றால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார். சுருண்ட தன் தலைமுடியை அடிக்கடி வாரிக்கொண்டும் கருத்த தன்முகத்தை அடிக்கடிக் கர்ச்சீப்பால் துடைத்துக் கொண்டு நாடகம் தொடங்குமுன்னரே ஒரு பதட்டநிலைக்கு வந்து விடுவார். தர்சனா நாடகங்கள் துவக்குவதற்கு முன்னால் நாடகக்குழுவினர் மொத்தமாக மேடையேறி நாடகக் குழுவைப் பற்றி பிரகடனப்படுத்துவோம்.

தர்சனா ஒரு கண்ணாடி
தர்சனா ஒரு விதைக்கலயம்
தர்சனா ஒரு கருப்பை
தர்சனா ஒரு கிட்டதர்சனி
தர்சனா ........................................
தர்சனா ........................................
நாங்கள் இந்துக்களல்ல, முஸ்லீம்களல்ல... கிறித்தவர்களல்ல, நாங்கள் தாகூரின் கீதாஞ்சலிகள் ...
பாரதியின் குயில்பாட்டுக்கள் ...
பாடித்திரியும் வானம்பாடிகள் ...

இந்த விதமான ஒரு பிரகடனத்திற்குப் பின் எங்கள் நாடகங்கள் தொடங்கும். இதில் எப்போதும் வரிசையில் நின்று சொல்லும் போது யாராவது சொல்வதற்கு மறந்து போய் மேடைப்பதட்டத்தில் அப்படியே நின்று விடுவார். முத்துச்சாமி அப்படி மறந்து போனவருக்குச் சரியாக எடுத்துக்கொடுப்பார். தர்சனாவில் நடித்த மனோகர், துரை, கெளரிஷங்கர் வேலை காரணமாக ஊரை விட்டுப்பிரிந்து சென்றனர். அதற்குள் நாங்கள் தமிழ்ச்செல்வன் தலைமையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் செயல்பட ஆரம்பித்திருந்தோம். எனவே புதிதாய் சிருஷ்டி என்றொரு நாடகக்குழு உருவானது. மற்றெல்லா விவாதக்களன்களிலும் ஒதுங்கியே இருந்த முத்துச்சாமி நாடகக்களத்தில் மட்டும் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்குகொண்டார்.
நானும் வேலை கிடைத்து தமிழ்நாட்டின் வடபகுதிக்குச் சென்று விட்டேன். எப்போதும் கோவில்பட்டியை எனது தலையில் சுமந்து கொண்டே அலைந்தேன். ஊருக்கு வரும் பொழுதுகளை என் நண்பர்களுடனேயே கழிக்க விரும்பினேன். அப்போது முத்துச்சாமியும் போஸ்ட் ஆபீசில் வேலைக்குச் சேர்ந்து விட்டார். அவரைச் சந்தித்த போது, என்னைப் பார்த்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி,

“என்னப்பா ... இப்படியாயிருச்சி ...” என்றார். எனக்கு எதுவும் புரியவில்லை.

ஒரு கணஇடை வெளிக்குப்பிறகு, சப்தர் ஹஸ்மியை... அநியாயமாக் கொன்னுட்டாங்களே...” என்றார் தீவிரமான குரலில். பேசிக்கொண்டிருந்த கொஞ்சநேரமும் சப்தர்ஹஸ்மியைப் பற்றியும் பழைய நாடக நினைவுகளைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்.

சப்தர் ஹஸ்மி மகத்தான மக்கள் நாடகக் கலைஞன் ஆட்சியாளர்களின் உயிர்நாடியை தன் கலையால் உலுக்கிய கலைஞன் இடதுசாரி இயக்கத்தின் கலைஞர்களில் தலைசிறந்தவன். வீதி நாடகங்களில் புதிய புதிய சோதனை முயற்சிகளை மேற்கொண்டு மக்களிடம் நேரடியாகச் சென்ற கலைஞன் அதிகாரத்திற்கெதிரான ஓங்கி ஓலித்த அந்தப்புரட்சிக்குரலை அடித்துக் கொலை செய்து கலையின் வரலாற்றுப்பக்கங்களில் தன் கறைபடியச் செய்துவிட்டது அன்றைய காங்கிரஸ் அரசு. ஆனால் சப்தர் மறையவில்லை நாடெங்கிலும் பல்லாயிரக்கணக்கான நாடகக்குழுக்களாக முளைத்தெழுத்தார். அதிகாரம் நடுநடுங்க இன்னும் இன்னும் உரத்து உரத்து முழங்கிக் கொண்டிருக்கிறார்.

எப்படியாவது ஊருக்கு வந்தால் போதும் என்று பதினான்கு வருடங்களுக்குப்பின் ஊர்வந்து சேர்ந்தேன் ஊரைப்பற்றிய என் பிம்பம், பிரமை ஊர்வந்து சேர்ந்ததும் சிதைந்து விட்டது. வந்த கொஞ்சநாட்களிலேயே நான் கண்ட கனவு கலைந்து விட்டது. ஆனால் இன்னமும் சில பழைய நண்பர்கள் பழைய ஞாபகத்தின் மெலிதான சாயலோடு இருந்தார்கள். முத்துச்சாமியும் இருந்தார். அவ்வப்போது சந்திக்கிற பொழுதுகளில் சிறு குசலவிசாரணை ஒரு தேநீர் என்று போய்க்கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் முத்துச்சாமி என்னை தொலைபேசியில் அழைத்து பேச வேண்டும் என்று சொன்னார்.

எங்களுடைய பாலியகால நினைவுச் சின்னமான அதே டீக்கடை முக்கில் சந்தித்தோம். அப்போது தான் அந்த அதிர்ச்சியான தகவலைச் சொன்னார். தனக்கு கேன்சர் இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும், சோதனைச்சாலை முடிவுகளுக்காக சென்னை சென்றிருப்பதாகவும் சொன்னார். கேட்ட ஒரு கணம் உள்ளுக்குள் அதிர்வு தொடங்கிவிட்டது. சமாளிப்பதற்கு வெகுவாக முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஆனால் முத்துச்சாமியும் அவருடைய கலக்கத்தை வெளிக்காட்டாமல் பேசிக்கொண்டிருந்தார். ஒரு வேளை கேன்சர் தான் என்றால் என்னென்ன வழிகளில் வைத்தியம் செய்யலாம் என்று நிதானமாகக் கேட்டார். நான் எனது உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் எனக்குத் தெரிந்த வழிமுறைகளை குறிப்பாக ஹோமியோபதி மருத்துவமுறைச்சிகிச்சை பற்றியும் அவரிடம் சொன்னேன். விடைபெறும் போது நம்பிக்கையுடன் சென்றார்.

அதற்கு சில நாட்களுக்குப்பிறகு நான் கேள்விப்பட்ட செய்தி நல்லதாயில்லை. சென்னையில் புற்றுநோய் சிகிச்சையில் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. பின்னர் மூன்று மாதங்கள் கழிந்தபிறகே ஊர் வந்து சேர்ந்த அவரைப் பார்க்கப் போயிருந்தேன். புற்றுநோய்ச் சிகிச்சையினால் சுருண்டு அடர்ந்த அவருடைய முடி உதிர்ந்து எலும்புக்கூடாக காட்சியளித்தார். பொங்கி வந்த விம்மலை அடக்கிக்கொண்டேன். வலிந்து ஏற்படுத்திக் கொண்ட உற்சாகத்தோடு அவரிடம் இனி எல்லாம் சரியாகிவிடும். சிகிச்சை அறிக்கைகளைப் பார்த்து விட்டு, குணமாகிவிட்டது என்று எழுதப்பட்டிருக்கிறது, என்று சொன்னேன். முத்துச்சாமி முன்பு நான் சொன்னதை நினைவில் வைத்திருந்ததாலோ என்னவோ இனிமேல் வராமலிருக்க ஹோமியோபதி சிகிச்சை எடுக்கலாமா யாரிடம் எடுக்கலாம் ? என்று கேட்டார் அதற்கான வழிவகைகளைச் சொன்னன். அவரும் கோட்டயம் சென்று ஹோமியோபதி டாக்டர். ஆர்.பி. பட்டேல் அவர்களைச் சென்று சந்தித்து மருந்து சாப்பிட்டுவந்தார்.

ஆனால் நாளுக்குநாள் உடல்நிலை நலிந்துகொண்டே வந்தது கண்கூடாகத் தெரிந்தது. இடையில் பல வருடங்களாக சந்திக்காமலே இருந்த நாங்கள் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தோம். வாரம் இரண்டு தடவையோ மூன்று தடவையோ அவர் வீட்டுக்குச் சென்று பழைய பாலியகால மகிழ்ச்சியான வேடிக்கையான நிகழ்வுகளை ஞாபகப்படுத்தி உற்சாகப்படுத்தி நம்பிக்கையூட்டினேன். அதிலும் குறிப்பாக தர்சனா சிருஷ்டி நாடக நிகழ்வுகளைப் பற்றி அதன் நிகழ்வுகளில் நடந்த சம்பவங்களைப் பற்றியும் பேசும் போது நான் மறந்து போயிருந்த பல விஷயங்களை அவர் நினைவுபடுத்தினார். புற்றுநோய் சிகிச்சையினால் ஒளியிழந்த அவர் கண்கள், இந்தத் தருணங்களில் மட்டும் தன்னிடம் மீந்திருந்த ஒளியை பிரகாசிக்கச் செய்தன என்று நினைக்கிறேன் பளபளக்கும் அந்தக் கண்களின் கனவுப்பாதை வழியே அவர் பழைய நாட்களின் சந்தோஷ நிழலில் இளைப்பாறினார். புன்னகை சிந்தும் முகத்தோடு நான் பேசுவதையே கேட்டுக் கொண்டிருப்பார். நானும் அவரும் மட்டும் அந்த வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதான பிரமை அவ்வப்போது வரும். அவர் குடும்பத்து உறுப்பினர்கள் நிழலாக நடமாடிக்கொண்டிருப்பார்கள். அப்போது அவர் நினைவுபடுத்திச்சொன்னது தான் தர்சனா நாடகக் குழுவின் பிரகடனம். கொஞ்சநாட்களில் என் வருகை அவருக்கு அவசியமாகிவிட்டது. நான் பேசிவிட்டுசென்ற பிறகு கொஞ்சம் தெம்பாக இருக்கிறார் என்று அவர் குடும்ப உறுப்பினர்கள் சொன்னபோது நானும் எல்லாம் சரியாகி முத்துச்சாமி மீண்டும் நடமாடி விடுவார் என்று தான் நம்பியிருந்தேன்.

திடீரென ஒரு நாள் இரவு நான் பணி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது முத்துச்சாமியின் வீட்டிலிருந்து அலைபேசி அழைப்பு உடனே வீட்டுக்கு வரச் சொன்னார்கள். அப்போதே எனக்குள் ஒரு பதட்டம். அவர் வீட்டில் பலர் கூடியிருந்தார்கள். படுக்கையில் முத்துச்சாமி கிடந்தார். ஏற்கனவே சிறிய உருவம் இன்னும் சிறிதான மாதிரி ஒடுங்கிக் கிடந்தார். கண்கள் பாதி திறந்த நிலையில் கைகளில் நாடி ஒடுங்கிக்கொண்டிருந்தது. நான் எதுவும் பேசுகிற மனநிலையில் இல்லை. சுற்றிலும் அவர் மனைவி உறவினர்கள் என் முகத்தைப் பார்த்தே தெரிந்து கொண்டார்கள். ஒரு ஓலம் கிளம்பியது. என் வயிற்றை பிசைந்த துக்கம் ஒரு பெரும் விம்மலாக வெளிப்பட கண்களில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே நான் வெளியே வந்துவிட்டேன். முத்துச்சாமி எங்கள் பாலியகால நண்பர் தர்சனாவை தன் கனவாக அடைகாத்த அருமைத் தோழன் தன் கலையாத ஒப்பனையுடனேயே காற்றில் கலந்து விட்டார். 

No comments:

Post a Comment