Sunday 8 April 2012

எதிர்பாராமல்

ethirpaaraamal 

எவ்வளவு நாள் பொறுமையாகக் காத்திருப்பது

கரைந்து கொண்டிருக்கின்றன

என் வானவில்லின் வண்ணங்கள்

வற்றிப் போய்க்கொண்டிருக்கிறது

என் குளத்தின் தண்ணீர்

அருகிப் போய்க்கொண்டேயிருக்கின்றன

என் மரத்தில் வந்தமரும் பறவைகள்

நிறமிழந்து விட்டன

என் மலரில் ஓரிரண்டு இதழ்கள்

கலைந்து போய்க் கொண்டிருக்கிறது

என் கனவுகளின் சாயம்

பலகீனமாகிக் கொண்டிருக்கிறது

என் இதயத்தின் துடிப்பு

ஏன் இன்னும் நீ வரவில்லை

என்று கேட்கும் அருகதை எனக்கில்லை

எப்பொழுது நீ வருவாயெனெ

உறுதியாகவும் தெரியவில்லை

கண்மூடித்திறக்கும் மின்னல் நொடியில்

கடந்து விடுவாயோ என

இமையாமல் விழித்திருக்கிறேன்

காத்திருப்பின் சலிப்பைத்

துளித்துளியாய் விழுங்கியபடி

நிராகரிப்பின் விஷத்தினால்

நீலம் பாரித்துக் கொண்டிருக்கிறது என் உடல்

என்றாவது ஒரு நாள்

எதிர்பாராமல் நீ வரும் போது

என்னிடம் எதுவும் மிச்சமிருக்காதே.

அப்போது நீ என் செய்வாய்?

2 comments:

  1. சார் அருமையாக உள்ளது. எதிர்பாராமல் எது நடந்தாலும் அது நம்மை வியக்க வைக்கும்.

    ReplyDelete