Monday 4 June 2012

ஏன் எழுத வேண்டும்?

AthavanTheedchanya  

- ஆதவன் தீட்சண்யா

 

கதை கவிதை கட்டுரை நாவல் என்று எதையாவது எழுதித்தான் ஆகவேண்டுமென்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்திவிட முடியாது, கூடாது. அப்படி கட்டாயப்படுத்துவதைப் போன்றதொரு வன்முறையும் அத்துமீறலும் வேறெதுவுமில்லை. அதிலும் ஒருவேளை நீங்கள் எழுத்தறிவற்றவராக இருந்து விடுகிறபட்சத்தில் உங்களிடத்தில் எழுத்து என்று பேசுவதேகூட உங்களை அவமதிப்பதாகிவிடும்.

எழுத்தறிவற்றவருக்கு எழுத்தறிவு மட்டும்தான் இல்லையே தவிர மற்ற அறிவுகள் இல்லாமல் போய்விடுதில்லை. எனவே கதைசொல்லியாகவோ, கவிவாணராகவோ, இட்டுக்கட்டியும் மெட்டுப்போட்டும் பாடுகிறவராகவோ, நடிக்கிறவராகவோ, பச்சிலை சாறெடுத்து வரைகிறவராகவோ, சிற்பம் செதுக்குகிறவராகவோ இயங்குவதற்கு உங்களுக்கு எழுத்தறிவே தேவையில்லை. ஆனால், கலைஇலக்கியச் செயல்பாட்டுக்கும் வெளிப்பாட்டுக்கும் எழுத்தறிவு என்பதை முன்னிபந்தனையாக்க வேண்டியதில்லை என்கிற ஒரு காரணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு, ஏதாவதொரு கலைஇலக்கிய வடிவத்தில் நீங்கள் இயங்கத்தான் வேண்டும் என்று கூறிவிட முடியாது. அப்படியே யாராவது கூறினாலும், ஏதாவது தோன்றியிருந்தால் நானே வெளிப்படுத்தியிருப்பேனே என்பதுதான் உங்களது பதிலாக இருக்கக்கூடும். இது சரியான பதிலும்கூட. நீங்கள் எழுத்தறிவுள்ளவரோ அல்லாதவரோ, ஏதேனுமொரு விசயம் உங்களுக்கு தோன்றினால் அதை எழுத்திலோ வேறு வடிவிலோ வெளிப்படுத்திவிட நீங்கள் மனதளவில் ஒரு உடன்பாட்டுத் தன்மையுடன் தயாராகவே இருக்கிறீர்கள். (இவ்விடத்தில் நீங்கள் எழுப்பிக்கொள்ள வேண்டிய கேள்வி என்னவென்றால், ‘நமக்கு ஏன் எதுவும் தோன்ற மறுக்கிறது?)

நம்மில் இன்னொரு பகுதியினர், அவர்களைச் சுற்றிலும் அவர்களை உள்ளடக்கியும் ஒவ்வொரு நொடியிலும் நடக்கின்ற ஓராயிரம் விசயங்கள் குறித்தும் தீவிரமாக யோசிப்பார்கள். சுயமாக பல கருத்துகளை உருவாக்கிக் கொள்வார்கள். அக்கம்பக்கத்தாரிடம் அங்கலாய்ப்பார்கள் அல்லது கிளர்ந்த மனநிலையோடு உரையாடுவார்கள். ஆனால் எழுத்திலோ வேறு வடிவிலோ வெளிப்படுத்தமாட்டார்கள். ஏனென்றால், இவர்களைப் பொறுத்தவரை, கலை இலக்கியம் சார்ந்து வெளிப்படக்கூடியவை இவையல்லாத வேறுவிசயங்கள். நடப்புலகிலிருந்தும் சாமான்யர்களிடமிருந்தும் வெளிப்படுவதல்ல கலை இலக்கியம் என்கிற இவர்களது மனப்பதிவே இவர்களை செயலற்றவர்களாக முடக்கிவிடுகிறது. அல்லது கலைஇலக்கியத்தின் ஊற்றுக்கால் எதுவென்று அறியாதிருப்பதும்கூட காரணமாயிருக்கலாம்.

சமூக நடப்புகளுக்கு முகம் கொடுப்பது, அவைபற்றி யோசிப்பது, கருத்துருவாக்கம் செய்துகொள்வது, விமர்சிப்பது என்பதோடு நில்லாமல் அவை பற்றி எழுத்து அல்லது வேறு வடிவங்களில் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கிற ஒரு பிரிவினரும் உண்டு. ஆனால் நினைப்பதோடு நிறுத்திக் கொள்வார்கள். என்ன ஆகிவிடப்போகிறது என்கிற விரக்தி, ஏற்படும் விளைவுகள் குறித்த அச்சம், பெரிதாக ஆதாயம் கிடைக்கப் போவதில்லை என்பதால் ஏற்படுகிற உதாசீனம், சரியாக வருமா என்கிற தயக்கம் போன்ற காரணங்களால் இவர்களும் தங்களுக்குள் சுருங்கிக்கொள்கிறவர்களாகவே இருக்கிறார்கள். கலை இலக்கிய ஆக்கப்பணிகளில் ஈடுபட ஆசைதான், ஆனால் நேரமும் இடமும் பொருந்திவரவில்லை என்று பஞ்சாங்கம் கணிக்கிறவர்களும் இவர்களோடு இணைந்துகொள்கிறார்கள்.

எழுதாமலும் வேறு இலக்கிய வடிவங்களில் வெளிப்படுத்தாமலும் இருப்பவர்கள் இப்படியான காரணங்களைக் கொண்டிருப்பதைப்போலவே எழுதிக் கொண்டிருக்கிறவர்களும் பல்வேறு காரணங்களை கைக்கொண்டிருக்கிறார்கள். சரஸ்வதி கடாட்சம் இருப்பதால் எழுதுகிறேன், கருவிலே திருவுடையோனாய் இருப்பதால் எழுதுகிறேன், ரூம் போட்டு யோசித்து யோசித்து எழுதுகிறேன், தோன்றுவதால் நான் எழுதுகிறேன், அதுவாக தோன்றி அதுவே எழுதிக்கொள்கிறது- என்று இவர்களது காரணப்பட்டியல் நீள்கிறது. இவர்களில், தோன்றுவதால் எழுதுகிறேன் என்று சொல்கிறவர்களைத்தான் பொருட்படுத்த வேண்டியுள்ளது. எழுதுவதற்கு காரணம் ‘தோன்றுவது’. தோன்றுவதற்கு காரணம் எது? என்று அவர்களோடுதான் உரையாட முடியும். தோன்றுவது என்பது வெறும் விளைவுதான், காரணம் வேறொன்று என்கிற புரிதலுக்கு அவர்களால்தான் எளிதில் வந்து சேரமுடியும். ஒரு தனிமனிதர்களாகிய தமக்கும் இந்தச்சமூகத்திற்குமான தொடர்புகளையும் தொடர்பின்மைகளையும் மனிதக்கண் கொண்டு பார்ப்பதன் (புதுமைப்பித்தன்) வழியே கலைஇலக்கிய ஆக்கங்களுக்கான மூலகங்களை தமக்குள் அனுமதித்துக் கொள்கிறவராக மாறும் சாத்தியங்களோடு இவர்கள் மட்டுமே மிஞ்சுகிறார்கள்.

எதனால் எழுதுகிறோம் என்பதில் தெளிவுள்ள பலரிடமும்கூட எதற்காக எழுதுகிறோம் என்பதில் தெளிவின்மையையே காணமுடிகிறது. ஒரு சமூகத்தின் உறுப்பினர் என்ற வகையில் தாம் நேரடியாக பங்கேற்று செயலாற்ற வேண்டிய வேலைகளை தமது எழுத்தின் மூலமாகவே செய்துவிட முடியும் என்கிற குழப்பம் இவர்களுக்கு எப்போதுமே இருந்துவருகிறது. அதாவது சமூகச்செயல்பாடுகளில் அதன் அங்கத்தவர் என்ற அடிப்படையில் நேரடியாக பங்கேற்க வேண்டிய நிலையில் மற்றவர்கள் இருக்கும்போது, தமக்கு பதிலாக தமது எழுத்தை அனுப்பிவைக்கிறவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். மற்ற மனிதர்களுக்கு மேலானவர்களாக, தனிப்பிறவிகளாக தம்மை கருதிக் கொள்கிற நோய் இப்படியாகத்தான் இவர்களைப் பீடிக்கிறது. தம்மைத்தாமே மேடிருத்திக் கொள்கிற இந்த மனநிலைதான் சமுதாயத்தை திருத்துவதற்காக/ நல்வழிப்படுத்துவதற்காக/ குப்புறக் கவிழ்ப்பதற்காக/ மாற்றுவதற்காக/ மீட்பதற்காக/ எழுதுகிறேன் என்றெல்லாம் நினைத்துக்கொள்வதற்கும் இட்டுச் செல்கிறது. ‘குரலற்றவர்களின் குரலாக’ எழுதிக்கொண்டிருப்பதாக அலட்டிக் கொள்வதும்கூட இவ்வகையானதே. குரலற்றவர்கள் தமது சொந்த மொழியில் தம்மை வெளிப்படுத்திக்கொள்வார்கள் என்பதை ஒப்புக்கொள்ள மறுப்பது எவ்வளவு பெரிய அராஜகம்?

கலைஇலக்கியத்தின் அதிகபட்ச நோக்கமும் சாத்தியமுமே தன்னை/ சுயத்தை வெளிப்படுத்திக் கொள்வதுதான். ‘தான்’ என்பது இங்கு ஒரு தனிநபரளவில் சுருங்கக்கூடியதாகவும் அதேவேளையில் ஒரு குழுவாகவோ இனமாகவோ தேசமாகவோ வர்க்கமாகவோ தன்னை உணர்ந்து விரியக்கூடியதாகவும் இருக்கிறது. அதாவது தான் என்கிற வடிவம் தனக்குள் இயல்பாக பொருந்திக் கொள்கிற வேறொரு உள்ளடக்கத்தை ஏற்கும் சாத்தியத்துடன் இருக்கிறது. ஆனால் பொருத்தமற்ற உள்ளடக்கத்தை அதற்குள் வலிந்து திணிக்கவோ துருத்தவோ முயற்சிக்கும்போது அது மிகவும் செயற்கையாக, நம்பகத்தன்மையற்ற ஒன்றாக மாறும் ஆபத்தில் சிக்கிக்கொள்கிறது.

பால், இனம், சாதி என்று எல்லாநிலைகளிலும் அசமத்துவமான ஒரு சமூக அமைப்பில் ஒருவரது இருப்பு என்னென்னவாக இருக்கிறதோ அதற்கேற்ற உணர்வுகளால் வழிநடத்தப்படுகிறவராக அவர் இருப்பதுதான் இயல்பு. இந்த இயல்பான உணர்வுடனேயே உலகத்துடன் ஊடாடும் அவர், அவ்வுணர்வின் இருப்பும் சமநிலையும் குலைக்கப்படும் போதெல்லாம் அதற்குரிய உடன்பாட்டையோ இணக்கமின்மையையோ எதிர்ப்பையோ துக்கத்தையோ அச்சத்தையோ தெரிவித்தாக வேண்டிய மனநிலைக்கு ஆளாகி தனக்குகந்த வழியில் தன்னை/ தனது கருத்தை வெளிப்படுத்துகிறார். வெளிப்படுத்தும் கருத்தை எந்தளவிற்கு அதன் தீவிர நிலையில் வைத்தே வெளிப்படுத்த முயற்சிக்கிறாரோ அதற்கு தோதான மொழியும் வடிவமும் வாய்க்கப்பெறுகிறது. வாசிப்புக்காகவோ, பிரசுரத்திற்காகவோ, புகழுக்காகவோ, எழுத்தாளர் என்கிற அந்தஸ்துக்காகவோ எந்த சமரசத்தையும் செய்துகொள்ளாமல், அச்சுறுத்தல்களுக்கும் கண்டனங்களுக்கும் அஞ்சி சுயதணிக்கை செய்து கொள்ளாமல் தன்னை அப்பட்டமாக வெளிப்படுத்த அவர் தயாராயிருக்கும் பட்சத்தில் அவரிடமிருந்து மிகவும் அசலானதொரு மனவுலகத்தைக் காட்டும் இலக்கிய ஆக்கம் வெளிப்படுகிறது. தன்னை வெளிப்படுத்திக்கொள்வதன்றி அவருக்கு வேறு நோக்கங்கள் இல்லை என்பதால் அவரது ஆக்கம் சொந்தக் கண்ணோட்டம் கொண்டதாகவும் அதனாலேயே பொதுப்புத்திக்கு எதிரானதாகவும் அமைந்துவிடுகிறது. அவர் தன்னிலையில் இருந்து எழுதியதானது உள்ளுறையாகவே அவரது எழுத்திற்கு ஒரு நோக்கத்தையும் ஏற்றுவிடுவதைக் காணமுடிகிறது. பொதுப்புத்தியை குலைப்பதற்காகத்தான் எழுதுகிறேன் என்று அவர் ஆரவாரமான பிரகடனம் எதையும் செய்யாமல்தான் எழுதுகிறார் என்பதை மட்டும் இவ்விடத்தில் கவனியுங்கள். ஆகக்கடைசியில் பார்த்தால் அவர் தன்னைப் பற்றி பொத்தாம்பொதுவாக உலவிக்கொண்டிருந்த யூகங்களுக்கும் மதிப்பீடுகளுக்கும் மாற்றான உண்மையை தனது சொந்த மொழியில் சொந்த வடிவில் வெளிப்படுத்துவதுதான் நடந்துமுடிகிறது. ஆமாம், அவரவர் பற்றின உண்மைகளைஅவரவர்தானே வெளிப்படுத்த முடியும்?

தன்னை வெளிப்படுத்துவதுதான் இலக்கியம் என்றால், தானல்லாத மற்றமையை பற்றி எழுதுவதே கூடாதா என்கிற நியாயமானதொரு கேள்வி உங்களுக்கு வரக்கூடும். மற்றமைக்கும் உங்களுக்கும் என்னவகையான உறவு நிலவுகிறதோ அந்த உறவை வெளிப்படையாக முன்வைத்து அதுகுறித்த உங்களது கண்ணோட்டத்துடன் எழுதுவதைக் குற்றம் சொல்ல யாரிருக்கிறார்கள்.

2.

இப்போது நீங்கள் எழுதுகிறவர். பால்/இன/சாதி/மதம்/வர்க்கம் உங்களுக்கு வழங்கியுள்ள இடத்தை உணர்ந்தவர். தனிமனிதராகிய உங்களையும், நீங்கள் சார்ந்த பால்/ இன/ சாதி/மதம்/ வர்க்கத்தையும் ‘தான்’ என்கிற உங்களுக்குள் ஏற்றுக்கொண்டவர். உங்களையும் மற்றமைகளையும் அவரவர்க்குரிய இருப்பில் வைத்து வெளிப்படுத்தத் தயங்காதவர். சரி, இப்போது சொல்லுங்கள் ஏன் எழுதுகிறீர்கள் என்று?

எப்படியேயாயினும், சுயம்புலிங்கம் எழுதியதைப்போல வயிறில்லாத மனிதரென்று ஒருவருமே இன்னும் பிறந்திடவில்லை. எண்சாண் உடம்புக்கு வயிறுதான் பிரதானமா என்றால், ஆமாம் வயிறுதான் பிரதானம் என்பதே பூசி மழுப்பாத நேர்மையான பதிலாக இருக்கமுடியும். அந்த வயிற்றின் காந்தலை தணித்துக்கொள்ள வேண்டித்தான் மனிதகுலம் பிறந்தநாள் முதல் அலைந்து கொண்டேயிருக்கிறது. ஆனாலும் பசியும் பட்டினியும் இன்னும் தீராநோயாய் நம்மில் ஒருபகுதியினரை தின்றுகொண்டிருக்கிறது. ஒருகவளச் சோற்றுக்கு தெருநாயிடம் மல்லுக்கட்டிச் சாகிறவர்களும் பெற்றக் குழந்தைகளை விற்றுப் பிழைக்கிறவர்களும் பல்கி வரும் காலமாயிருக்கிறது இது. கடனுக்கு ஈடாக தமது உடலுறுப்புகளை அறுத்துக்கொடுத்துவிட்டு செத்தும்சாகாமல் சீவனங் கழிப்பவர்களை நீங்கள் அறிவீர்கள்தானே? விலையில்லா அரிசி கொடுத்தாலும் பொங்கித்திங்க சட்டியில்லாதவர்களில் ஒருவராக நீங்களும் இருக்கிறபட்சத்தில் உங்களது வறுமையை உலகறியச்செய்ய, கருணைவான்களால் நிரம்பியது இவ்வுலகம் என்கிற மாயையை அம்பலப்படுத்த நீங்கள் எழுதித்தானாக வேண்டியுள்ளது.

பரந்த இவ்வவுலகம் என்பது அடிப்படையில் பூமியை/ மண்ணைத்தான் குறிக்கிறது. இந்த மண்ணை அபகரிப்பதற்கும் ஆக்கிரமிப்பதற்குமான போர்களும் சூதுகளும் நின்றபாடில்லை. அண்டைவீடு, அடுத்தவன் வரப்பு, ஊர்விட்டு ஊர், நாடுவிட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் போய் மண்ணை அபகரிக்கும் வல்லாதிக்கம் உங்களது விளைநிலத்திற்கும் குடிமனைக்கும் குறிவைக்கிறதென்றால் அதை எதிர்ப்பதற்கும் உங்களையொத்தவர்களை ஒருமுகப்படுத்தி திரட்டுவதற்கும் எழுத்தைத் தவிர உங்களிடம் வேறு என்ன இருக்கிறது? ஒவ்வொரு அரைமணிநேரத்திற்கும் ஒருவர் என்கிற வீதத்தில் இந்தநாட்டின் விவசாயிகள் தங்களை மாய்த்துக்கொள்கிறார்கள். இந்த மூன்றுநாள் முகாமை முடித்துக்கொண்டு நாம் வீடு திரும்புவதற்குள் தங்களது கதையை முடித்துக்கொள்கிற 144 விவசாயிகளில் நமது குடும்பத்தவரோ உற்றார் உறவினரோ இருக்கமாட்டார்கள் என்பதற்கு உத்திரவாதமில்லாதபோது அந்த அவலத்தை உங்களையன்றி வேறு யார் எழுத முடியும்?

மாதத்திற்கு ஆறுலட்சம் யூனிட் மின்சாரம் எரியுமளவுக்கான பிரம்மாண்ட வீடும், ஓரிரவின் விருந்துக்கு பல கோடிகளை செலவழிக்கும் ஊதாரிகள் உள்ள ஒரு நாட்டில் வெறும் 32ரூபாயில் தினசரி வாழ்வை ஓட்டும் உங்களை வறுமைக்கோட்டைத் தாண்டியவர் என்று ஒரு அரசாங்கம் சொல்கிற அபத்தத்தை பகடி செய்யவும் பழித்துரைக்கவும் இலக்கியம் ஒன்றுதான் உங்களுக்கு துணைநிற்கிறது என்பதை மறவாதீர்கள்.

மனிதரை மனிதர் சமமாகப் பாவிப்பதற்குத் தடையாகி மறிக்கிற சாதியத்தை அதன் வேர்வரை சென்று தாக்குவதற்கு எழுத்தும் ஒரு ஆயுதமாக இருக்கிறது என்பதை அம்பேத்கர் நிறுவிப்போயிருக்கிறார். ஒவ்வொரு ஊருக்கும் வெளியே ஒதுக்கப்பட்டிருப்பதையும், ஒவ்வொரு பதினெட்டு நிமிடங்களுக்கும் ஒரு வன்முறையை எதிர்கொள்ள வேண்டியிருப்பதையும் எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் இலக்கியத்திற்கு எந்தப் பங்கும் இல்லையென்று கருதினால் நீங்கள் எழுதாமல் இருந்துவிட்டுப் போங்கள். ஆண்டுதோறும் செப்டிக் டேங்கிற்குள் இறங்கிச் செத்துப்போகிற 22ஆயிரம் பேரை வெறும் எண்ணிக்கையாக மட்டுமே பார்ப்பதற்கு உங்களால் முடியுமானாலும்கூட நீங்கள் எழுதாமலே இருந்துவிடலாம்.

யாரோ ஒரு ஆணுக்கு உத்திரவாதப்படுத்தப்பட்ட அடிமையாகவும் அவனது இச்சைகளை பூர்த்திசெய்துவிடுகிற சதையாகவும் இருந்துவிட்டுப்போவதில் சம்மதமற்ற பெண்ணொருத்தி தனது தனித்துவத்தையும் விழைவுகளையும் தேர்வுகளையும் பாலின மற்றும் பாலியல் சமத்துவதற்கான முன்வைப்புகளையும் நுட்பமாக வெளிப்படுத்த எழுத்தையே பயன்படுத்துகிறார்கள்.

பாவத்திற்கான சாபம்போல பழித்துரைக்கப்பட்ட பாலின மாற்றத்தை, உடலியல் மாறுபாடென நிறுவிடவும் இந்தச்சமூகத்தில் தங்களது இருப்பிற்கான நியாயத்தை நிலைநிறுத்தவும் தங்களைப் புறக்கணிக்கறவர்களின் மனசாட்சியை உலுக்கும் விதமாக திருநங்கைகள் எழுதத் தொடங்கிய பிறகே அவர்கள் மீதாக உலகின் கவனம் திரும்பியது.

உலகின் வளங்களும் உற்பத்திகளும் உழைப்பின் பயனும் ஒரு நீதியான முறையில் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும் என்கிற மார்க்சின் எழுத்துதான் புதிய உலகுக்கான கனவுகளை பரப்பியது செயலுக்குத் துண்டியது என்பதை இங்கே சொல்வது முத்தாய்ப்புக்காக அல்ல, தொடக்கத்திற்காக.

(தமுஎகச மாநில படைப்பூக்க முகாமில் உரையாடலக்காக முன்வைக்கப்பட்ட குறிப்புரை 2012 மே 18, ஒசூர் )

No comments:

Post a Comment