Saturday 16 June 2012

கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுகின்றனவே, நான் என்ன செய்ய?

உதயசங்கர்


எனக்குள் ஏற்பட்ட புத்தக வேட்கைக்கும் வாசிப்பு ருசிக்கும் துவக்கப்
புள்ளியாக என் அம்மா இருந்தாள். அந்தக் காலத்து நான்காவது பாரம்
படித்திருந்த அம்மா குமுதம், கல்கண்டின் தீவிரமான வாசகி. ஒவ்வொருDSC01504
வெள்ளிக்கிழமை மாலை அல்லது சனிக்கிழமை காலை கோவில்பட்டி கடைத்
தெருக்களிலிருந்து வெகுதூரத்தில் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத ரயில்வே
ஸ்டேஷனுக்குப் போய் அங்கே உள்ள குமுதம் ஏஜெண்ட் திரு. ஏகாந்தலிங்கம்
புத்தகக் கட்டு பிரிக்கும்போதே வாங்கிக்கொண்டு வீட்டிற்கு ஓடி வருவேன்.
வரும் வழியிலேயே கல்கண்டில் வந்து கொண்டிருந்த தமிழ்வாணனின் துப்பறியும்
சங்கர்லால் தொடரைப் படித்து விடுவேன்.
என்னுடைய அம்மா குமுதத்தில் வந்து கொண்டிருந்த சாண்டில்யன்,
ரா.கி.ரங்கராஜன், லஷ்மி, இவர்களின் தொடர்களைத் தொடர்ந்து வாசிப்பார்
வாரப்புத்தகத்திலுள்ள தொடர்களைக் கிழித்து வரிசைக் கிரமமாகச் சேகரித்து
வைப்பேன். இப்படித்தான் எங்கள் வீட்டில் புத்தகங்கள் உருவானது.
வீடு எட்டுக்குப் பத்து குச்சுதான். அதுவே எனக்கு அப்பா, அம்மா,
தம்பிகள், தங்கை எல்லோருக்கும் வரவேற்பறை படிப்பறை, படுக்கையறை என்று
காலத்தின் மாற்றத்திற்கேற்ப உருமாறிக் கொண்டேயிருக்கும். இதைவிடச் சிறிய
ஒரு ஓட்டுச் சாய்ப்பு சமையலறை. முன்னால் சிறிய வானவெளி. அதன் ஓரத்தில்
ஓடும் சாக்கடை. அதுவே எங்களுக்கு முற்றம், குளியலறை, இரவு நேரங்களில்
அங்கணக்குழி. காற்றில் எப்போதும் முனகிக் கொண்டேயிருக்கும் தகரக் கதவு.
மூன்று பக்கங்களிலும் சாக்கடை ஓடும் ரெண்டடிச் சந்தும் ஒரு பக்கத்தில்
தார்சா போட்ட பெரிய வீட்டின் பின்புறமும் இருந்தது. எங்களுடைய வரவேற்பறை,
படிப்பறை, படுக்கையறையில் அட்டாலை மீது இருந்தது அந்தப் பெட்டி.
கன்னங்கரேலென்று கருப்பாய் ஒரு அடி உயரத்தில் இரண்டடி அகலத்தில் பாதி
அடைக்கப்பட்ட, மீதியில் சொருகு பலகை கொண்டு சொருகி மூடுகிற மாதிரியான
மூடியுடன் கூடிய பெட்டி. அது தான் என் முதல் புத்தகப் பெட்டி.
நான் ஆறாவது வகுப்பு படிக்கிறபோது எனக்கு அந்த அலாவுதீனின் அற்புத
விளக்கு கிடைத்தது. அதில்தான் என்னுடைய பள்ளிக்கூடப்
பாடப்புத்தகங்களையும், நோட்டுக்களையும், ஒரு கைக்கடக்கமான சிறிய
பாரதியார் கவிதைப்புத்தகமும், பென்சில்கள், தீப்பெட்டிப் படங்கள்,
சிகரெட் அட்டைகள், கோலிக்குண்டுகள், பம்பரம், புளியமுத்து, குன்னிமுத்து,
கீழே கண்டெடுத்த அழகிய நைலான் பொத்தான்கள், கலர் பாட்டில்களின் சிப்பி
மூடிகள், எங்கள் வீட்டுப் பின்புறமுள்ள புளிய மரத்தில் எப்போதாவது
வந்தமரும் கருப்பும் வெள்ளையும் கலந்த சாமரவால் கொண்ட குருவியின் ஒற்றை
இறகும், எம்.ஜி.யார், சிவாஜி படங்களின் பிலிம் துண்டுகளுமாக இருந்தன.
இவற்றை யார் தொடவும் விடமாட்டேன்.
மிகுந்த தயக்கமும், தாழ்வுணர்ச்சியும் கொண்ட நான் பள்ளிக்கூடத்தில்
நடக்கும் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, பாட்டுப்போட்டி என்று
எல்லாவற்றிலும் கலந்து கொள்ள பேராவல் கொள்வேன். ஆனால் எனக்கே என் மீது
நம்பிக்கை கிடையாது. அதனால் ஒன்று சேரமாட்டேன் அல்லது தெரியாத்தனமாகச்
சேர்ந்து விட்டால் போட்டி நடைபெறும் நாளன்று பள்ளிக்கூடத்துக்கு மட்டம்
போட்டுவிடுவேன். அபூர்வமாகக் கலந்துகொண்ட போட்டிகளில் பரிசுகள் எதுவும்
வாங்கியதில்லை. ஆனால் பரிசு வாங்குகிறவர்களைப் பார்த்தால் முதலில்
பொறாமையுணர்ச்சியும் ஈர்ப்பும் ஏற்படும். நான் ஒன்பதாவது வகுப்பு
கோவில்பட்டி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது பதினொராவது வகுப்பு
படித்துக் கொண்டிருந்த, பேச்சுப் போட்டியில் கண்களைச் சிமிட்டிச்
சிமிட்டி திராவிட இயக்கப் பேச்சாளர்களைப் போல நீட்டி முழக்கிப் பேசிய
இளங்கோவைப் பார்த்தேன். எதுகைமோனையோடும் ஒரு சங்கீத லயம்போல அவர் பேசி கை
தட்டல் வாங்கியதைக் கண்டு வியந்திருக்கிறேன். பின்னாளில் அவர் என்
நெருங்கிய நண்பராக தமிழ் இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக கோணங்கியாக
உருமாறுவார் என்று அனுமானிக்க முடியவில்லை. அதேபோல அருமை நண்பர்
நாறும்பூநாதன் நிறைய்யப் பரிசுகள் வாங்குவார்.  நான் பரிசு வாங்க முடியாத
ஏக்கத்தைப் பரிசு வாங்கியவர்களோடு நட்பு பாராட்டி நெருக்கம் கொள்வதில்
திருப்தியடைய முயற்சி செய்தேன்.
குமுதம், கல்கண்டு, தொடர்களைக் கிழித்து சேகரித்து புத்தகங்களாக்கி
வாசித்த ருசியிலிருந்துதான் கல்லூரி சென்ற பிறகு கவிதை எழுதுகிற ஆர்வம்
வந்தது. அபி, சிற்பி, புவியரசு, நா.காமராசன், இன்குலாப், கங்கைகொண்டான்
என்று வாசித்துத் தள்ளினேன். அப்படியே என் சின்னஞ்சிறிய கருத்து புத்தகப்
பெட்டி நிறைந்து வழியத் தொடங்கியது. வேலையின்றித் திரிந்த காலங்களில்
கோவில்பட்டியில் போட்டிபோட்டுக் கொண்டு வெறித்தனத்துடன் வாசித்தோம். ஒரே
நாளில் மூன்று நான்கு, புத்தகங்களைக்கூட வாசித்திருக்கிறோம்.
கோணங்கி சென்னையிலிருந்து அவர் சேகரித்த புத்தகங்களை அனுப்பி வைத்தார்.
தமிழ்ச்செல்வன் வீட்டில் ஒரு நூலகம் துவங்கினோம். எல்லோரிடமிருந்தும்
புத்தகங்களை வாங்கி அவற்றைத் தொகுத்து, பிரித்து, பட்டியலிட்டு,
வரிசைப்படுத்தி, எண்கள் இட்டு இப்படி அந்த நாட்களின் இருபத்தி நான்கு மணி
நேரமும் புத்தகங்களின் வாசனையோடு கழிந்தது. இப்படி சேகரிக்கிற
காலங்களிலும், அவரவர்கள் அவரவர்களுக்குப் பிடித்த புத்தகங்களை;
அமுக்குகிற வேலையையும் செய்தார்கள். இதிலொன்றும் ஆச்சரியமில்லை.
புத்தகங்களைச் சுவாசிக்கிற யாவரும் செய்கிற காரியம்தான்.
புத்தகங்களுக்குள் எனக்கென்று பிரத்யேகமான ஒரு உலகம் காத்திருந்தது. நான்
அந்த உலகத்துக்குள் எந்தத் தயக்கமோ தாழ்வுணர்ச்சியோ இன்றி சுதந்திரமாகச்
சுற்றித் திரிந்தேன். ஸ்தெப்பி புல்வெளியில் அலைந்து திரிந்தேன்.
பீட்டர்ஸ்பர்க்கின் பனி இரவில் நடுங்கிக் கொண்டே வோட்கா குடித்து என்னைக்
கதகதப்பாக்கிக் கொண்டேன். இங்கிலாந்தின் நகரங்களில் சுற்றித் திரிந்தேன்.
ஜெர்மனியின் சிந்தனைப் பள்ளிகளின் விவாதங்களில் கலந்து கொண்டேன்.
பிரான்ஸின் பாரீஸ் நகர யுவதிகளோடு காதல் செய்தேன். கேரளாவிலும்,
கர்நாடகத்திலும், வங்காளத்திலும், ஆந்திரத்திலும் பறந்து திரிந்தேன்.
தமிழ்நாட்டின் எல்லாப் பிரதேசங்களிலும் என் காலடி பதிந்தது.
ஒவ்வொருமுறையும் ஒரு புதிய புத்தகத்தை வாசிக்கும்போதும் பரவச உணர்வு
பொங்க தடுமாற்றத்தோடு முதல் காதலின் ஈரம் ததும்பும் முதல் முத்தம் பெற்ற
உளக்கிளர்ச்சி ஏற்படும்.
என் சின்னஞ்சிறிய அலாவுதீனின் அற்புத விளக்கைத் தேய்க்கும் தோறும்
புத்தகங்கள் வந்து கொண்டேயிருந்தன. வேலைக்குச் சென்ற பிறகு இந்த
மாயாஜாலத்தின் வேகம் கூடிக் கொண்டேயிருந்தது. இந்த அற்புதமகிமை என்
துணைவியாருக்கு அச்சலாத்தியாக இருந்தது. ஆள்நடமாட்டமில்லாத ரயில்வே
குவார்ட்டர்ஸில் பேச்சுத்துணையின்றி அவர் தவித்துக் கொண்டிருக்க நான்
புத்தகங்களோடு உரையாடிக் கொண்டிருந்தால் என்ன நடக்குமோ அது நடந்தது.
அவருக்கு புத்தகங்களின் மீது மின்னிடும் பொறாமையுணர்வை அது வளர்க்க
ஆரம்பித்தது. தவிர்க்க இயலாமல், மிகுந்த பொறுமையோடு என் கிறுக்குத்
தனங்களைப் பொறுத்துக் கொள்பவர் மாற்றல் வந்து சாமான்களைக் கட்டும்போது
ஆரம்பித்துவிடுவார். வீட்டுச் சாமான்களுக்கு ஈடாகப் புத்தகங்களும்
இருந்தால் என்ன செய்ய முடியும்?
நானும் வருடத்தில் ஒருமுறை எப்போதாவது வேண்டாத புத்தகங்களைக் கழிக்கிற
வேலையில் ஈடுபடுவதாகச் சொல்லி உட்காருவேன். என் துணைவியாரும் மிகுந்த
நம்பிக்கையுடன் காத்திருப்பார். ஆனால் நான் கஞ்சன் தன் சேகரத்தை
திரும்பத் திரும்ப எண்ணிப்பார்ப்பதைப்போல ஒவ்வொரு புத்தகமாக எடுத்து
விரித்து அதன் வழியே மின்னல் பொழுதில் பயணம் சென்று வருவேன். ஒரு
வேட்டைநாயைப் போல என் வாசிப்பின் பழைய தடங்களை முகர்ந்து ரசிக்கின்ற
தருணங்களாக அது மாறிவிடுவதை யார் என்ன செய்ய முடியும்? எல்லாப்
புத்தகங்களையும் என்னைச் சுற்றிப் பரத்தி வைத்துக்கொண்டு மிகப் பெரிய
செல்வந்தனைப் போன்ற பெருமித உணர்விலோ, முற்றிய பைத்தியக்காரனின்
மோனநிலையிலோ நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்து கொண்டிருப்பேன்.
துணைவியாரின் எச்சரிக்கைக் குரலின் சூடு கொஞ்சம் கொஞ்சமாக கூடிக் கொண்டே
போகும். வேறுவழியின்றி, மனசேயில்லாமல் எழுந்து வந்து, நான் ரொம்பக்
கஷ்டப்பட்டுக் கழித்ததாக ஒரு நாலைந்து புத்தகங்களைக் கொண்டு போய் என்
துணைவியாரிடம் காட்டுவேன். பாவம் என் துணைவியார் என்ன செய்வார்?
சொந்தவீடு கட்டி வீட்டில் புத்தகங்களுக்கென்று நான்கு பெரிய அலமாரிகள்
கட்டியாயிற்று. ஆனாலும் ஒவ்வொருமுறையும் என் சின்னஞ்சிறிய கருத்த அற்புதப்
பெட்டியை நினைக்குந்தோறும் புத்தகங்கள் கூரையைப் பிய்த்துக் கொண்டு
கொட்டுகின்றனவே நான் என்ன செய்ய? அலமாரிகளை நிறைத்து அங்கிருந்து
துணிமணிகள் வைத்திருக்கும் அலமாரியிலும், குழந்தைகளின் கல்லூரிப்
புத்தகங்களுக்கு நடுவிலும், சீப்பு பவுடர் வைத்திருக்கும் ஷெல்பிலும்,
டி.வி. ஸ்டாண்டிலும் ஏறி உட்கார்ந்து கொள்கின்றன. மேஜை மீது புத்தகங்கள்
அலைந்து திரிந்து விளையாடிப் புழுதிக் காடாக்கி விடுகின்றன. யாராவது
நண்பர்கள் வந்தால் டீப்பாயில் டீ வைக்க முடியவில்லை. புத்தகங்கள் எம்பிக்
குதித்துத் தட்டி விடுகின்றன. இப்போதும் என் துணைவியாரின் குரல் கேட்டுக்
கொண்டேயிருக்கிறது. அந்தக் குரலைக் கேட்டதுமே நல்ல பிள்ளைகளைப் போல
புத்தகங்கள் ஒழுங்காக கையைக் கட்டி வாயைப் பொத்தி வரிசையாக
உட்கார்ந்திருக்கின்றன.
கொஞ்ச நேரத்திற்குப் பிறகு எனக்கே அந்த அமைதியும் ஒழுங்கும்
பிடிக்கவில்லை. சுதந்திரமாக விளையாட விடுகிறேன். புத்தகங்கள் ஓவென்ற
இரைச்சலோடு என் வீடெங்கும் இரைந்து கிடக்கின்றன. அதைப் பார்த்து  என்
முகத்தில் தோன்றும் பைத்தியக்காரப் புன்னகையை மறைக்க முயற்சி செய்து
கொண்டிருக்கிறேன். வைக்கம் முகமதுபஷீர் அவருடைய அறையில் குவிந்து
கிடக்கும் புத்தகங்களுக்கு நடுவே உட்கார்ந்திருந்த அபூர்வமான புகைப்படம்
என் கண்ணில் நிழலாடுகிறது. அதோ பஷீர் சுருக்கங்கள் விழுந்த, பல்லில்லாத
பொக்கைவாய் வழியே பீடிப் புகையை ஊதுகிறார் என்னை நோக்கி. அது சுழன்று
சுழன்று என்னைத் தூக்கிக் கொண்டு பறக்கிறது. பஷீர் சிரிக்கிறார். அது
அவருடையதா இல்லை என்னுடையதா குழம்பிக் கொண்டிருக்கிறேன். புத்தகங்கள்
என்னை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

 

நன்றி- புத்தகம் பேசுது

1 comment:

  1. நல்ல எழுத்து.

    வரிகளுக்கிடையில் இன்னும் கொஞ்சம் இடைவெளி விட்டால் படிப்பதற்கு இலகுவாக இருக்கும். அதே போல் பாராக்களுக்கிடையே ஒரு காலி வரி விட்டால் பாராக்கள் நன்றாகத் தெரியும்.

    ReplyDelete