குரங்கிலிருந்து உழைப்பின் வழியாகவே மானிட இனம் பரிணாம வளர்ச்சியைப் பெற்றது. அந்தப் பரிணாமவளர்ச்சியின் பாதையில் விலங்கின் மூளை மனித மூளையாக மாறத் தொடங்குகிறது. அதன் வரையறை குட்பட்ட சைகை மற்றும் ஒலிக்குறிப்புகள் தன் எல்லையை விரிகிறது. அதற்கு முன்புவரை விலங்குகள், பறவைகள்,பூச்சிகள், எல்லாமும் சில குறிப்பிட்ட ஒலிக்குறிப்புகளின் மூலம், சைகை மற்றும் உடல் மொழியின் மூலம் தங்கள் தேவைகளான பசி, கோபம், பயம், இணைவிழைச்சு, என்று எல்லா உணர்வுகளையும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்கின்றன. இந்த சைகை, உடல், ஒலி, மொழியை அவைகள் கற்றுக் கொள்வதில்லை. பிறக்கும்போதே அதன் உள்ளுணர்வின் ஆழத்தில், தலைமுறை தலைமுறையாக, தொடர்ந்து வருகின்றன. அவை புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது திகைத்துப் போய்விடுகின்றன. தங்கள் ஆதிஞாபகச் சில்லுகளில் தேடிப்பார்த்து ஏமாந்து போகின்றன. குறிப்பிட்ட, வரையறைக்குட்பட்ட,சைகை,மற்றும் உடல் மொழி, ஒலிக்குறிப்புகளைத்தாண்டி அவற்றால் புதிதாகச் சிந்திக்க முடிவதில்லை.
ஆனால் மனிதன் அப்படியில்லை. எந்தச் சூழ்நிலையிலும் தன்னைக்குறித்தும் தன்னுடைய சூழல் குறித்தும் புறவயமாகச் சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கிறான். தன்னைக்குறித்து தனியாகவும், சூழலோடு பொருத்தியும், சிந்திக்கிற மனிதனின் ஆற்றலையே பகுத்தறிவு என்கிறோம். மற்ற உயிரினங்களுக்கோ தன்னைச் சூழலில் இருந்து பிரித்துணரும் ஆற்றல் கிடையாது. இயற்கையோடு இணைந்தே அவை தங்களுடைய தகவமைப்புகளைப் பெற்றிருக்கின்றன. எனவே அந்த இயற்கைச் சூழல் மாறும்போது அல்லது அழியும்போது மாறிய சூழலுக்கேற்ப தங்களுடைய தகவமைப்புகளை மாற்ற முடியாத உயிரினங்கள் அழிந்து விடுகின்றன். பரிணாமக்கோட்பாட்டின் மூலமாக மனிதகுல வரலாற்றில் ஒரு மகத்தான புரட்சியை ஏற்படுத்திய டார்வினின், தகுதியானவைகளின் உயிர்மீட்சி (survival of the fittest ) என்ற கொள்கையின்படி இயற்கையின் மாற்றத்திற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ளாத எல்லா உயிரினங்களுமே வாழ்வதற்கான தங்களுடைய தகுதியை இழந்து விடுகின்றன.ஆனால் மனிதர்கள் மட்டுமே தன்னுடைய உழைப்பின் மூலமும் பகுத்தறியும் திறன் மூலமும், இயற்கையின்மீது வினை புரிந்து தாங்கள் வாழத்தகுதியாக இயற்கையை மாற்றுகிற வல்லமை பெற்றவர்களாக மாறியிருக்கின்றனர்.
உழைப்பு சகமனிதர்களுடனான உறவில் பெரும் மாற்றத்தை உருவாக்குகிறது. தங்களுடைய வாழ்வனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள, விலங்கு பருவத்திலிருந்த பழைய சைகை மற்றும் உடல்மொழியும், ஒலிக்குறிப்புகளும், போதுமானவைகளாக இல்லை. அப்போது புதிய சைகை மற்றும் உடல்மொழியும் புதிய ஒலிக்குறிப்புகளை சிருஷ்டிக்கின்றனர். சிந்தனையின் ஒளி தன் கிரணங்களை மெல்ல முகிழ்க்கிறது. மனிதமூளையின் மடிப்புகளின் எண்ணிக்கையும் கூடுகிறது.
ஏற்கனவே நடந்து முடிந்த சம்பவங்களை, தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை, தன் சக மனிதனிடம் பகிர்ந்து கொள்ளும் பேராவல் அதிகரிக்கின்றது. இந்தப் பேராவலில் விளைந்த பயிர் தான் கதை என்று சொல்லலாம். கடந்த காலத்தைச் சொல்கிற சமூகச் செயல்பாடாகவே ஆதியில் கதைசொல்லுதல் தொடங்கியிருக்கலாம். முதலில் இது குகைப்பாறைக் கீறல்களாக, ஓவியங்களாக, குறியீடுகளாக,அடையாளச் சின்னங்களாக, மெல்ல மெல்ல மனிதனின் நனவிலி மனதில் பெரும் விருட்சமென வளர்ந்திருக்கிறதுகதை. மொழி தோன்றியவுடன் கதைகள் ஆயிரங்கால் பூச்சிகளைப் போல ஊர்ந்து சென்று மனித உயிரில் குடியேறிவிட்டது. பின்னர் கற்பனைகளும், புனைவும் பிறந்து கதைகளை மனித இனத்தின் மூச்சாக மாற்றி விட்டது.
ஆதியில் வேட்டைச் சமூகமாக மனிதன் இருந்த போது தன்னுடைய வேட்டையனுபவங்களைக் கதையாக மாற்றினான். ஆற்றங்கரை நாகரிகத்தில் வேளாண்சமூக அனுபவங்களை கதையாக மாற்றினான். மனித சமூகத்தின் உற்பத்திசக்திகளின் மாற்றத்திற்கேற்ப கதைகளும் மாறிக் கொண்டே வந்தன. கதையின் உடல் முழுவதும் மனிதகுலவரலாறு எழுதப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு கதை சொல்லப்படுகிறபோது புதிது புதிதாகப் பிறக்கிறது. கதை சொல்வது படைப்பூக்கஉணர்வைத் தூண்டிக் கொண்டேயிருக்கிறது. எத்தனை பழைய கதையாக இருந்தாலும் கதை சொல்பவர் அதை அப்படியே சொல்வதில்லை. கதை கேட்பவரும் அதை அப்படியே கேட்பதும் இல்லை. எனவே தான் கதைகளுக்கு என்றும் மூப்பில்லை. அன்றலர்ந்த மலர் போல மலர்ந்து கொண்டேயிருக்கின்றன கதைகள்.
ஒவ்வொரு இனக்குழுவும் தங்களுடைய வெற்றிகளை, தோல்விகளை, வேட்கைகளை, கொண்டாட்டங்களை, கனவுகளை, கதைகளுக்குள் நேரிடையாகவும், மறைமுகமாகவும், பொதிந்து வைத்திருக்கின்றன. அதை தலைமுறை தலைமுறையாகக் கடத்தவும் செய்கின்றனர். ஒவ்வொரு குறிப்பிட்ட பிரதேசமும், மண்ணும் நீர்வளமும், இயற்கையும், வாழ்நிலையும் அந்தக் குறிப்பிட்ட பிரதேசத்துக்கென்றே பிரத்யேகமான கதைகளை உருவாக்குகின்றன. இந்தக் கதைகள் அந்த இனக்குழுவின், அந்த வட்டாரத்தின் மொழிப்பிரயோகம், பழக்க வழக்கங்கள், வரலாறு, பண்பாட்டைத் தெரிவிக்கின்றன.
இன்று ஒற்றைக் கலாச்சாரத்திணிப்பினால் நம் பன்முகக் கலாச்சாரத்தின் வேர்கள் அரிக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன. அதே போல தொலைக்காட்சி, வீடியோகேம்ஸ், செல்போன் கேம்ஸ்,என்று நவீன சாதனங்கள் பெருகி கதை சொல்லும் நம் மரபினை அரித்துக் கொண்டிருக்கின்றன. பழங்கதைகள்,நாடோடிக் கதைகள், கிராமியக்கதைகள், நாட்டுப்புறக் கதைகள், வீரகதைகள், துப்பறியும் கதைகள், மந்திரக்கதைகள், ராஜாராணிக்கதைகள், புதிர்க்கதைகள், விடுகதைகள், பஞ்சதந்திரக் கதைகள், என்று கதைகள் தான் எத்தனை வகை?
இன்று குழந்தைகளுக்குக் கதை சொல்வதற்கு தாத்தாக்களோ,பாட்டிகளோ, வீடுகளில் இல்லை. அப்பா, அம்மாவுக்கு இதற்கெல்லாம் நேரமும் இல்லை. பள்ளிக்கூடங்கள் வெறும் மனப்பாடப் பயிற்சிக் கூடங்களாகி விட்டன. ஆனாலும் குழந்தைகள் கதைகளைத் தங்களுக்கே உரிய பாணியில் சிருஷ்டித்துக் கொண்டேயிருக்கிறார்கள். குழந்தைகளிடம் தான் கதையின் மலர் பூத்துக் கொண்டேயிருக்கிறது. ஒரு குழந்தை இப்படிக் கதை சொல்லியது; ஒரு வீட்ல களவாணிப்பய வந்து எல்லாத்தையும் சுருட்டி எடுத்துகிட்டுப் போகும் போது அந்த வீட்ல இருந்த குழந்தை பாத்துருச்சி.. அது உடனே களவாணிப்பய கிட்ட என்ன சொல்லுச்சி தெரியுமா? மரியாதையா என் ஸ்கூல் பேக்கையும் எடுத்துகிட்டுப் போயிரு..இல்லேன்னா அப்பாவை எழுப்பிருவேன்.
No comments:
Post a Comment