Wednesday, 4 March 2020

துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாமலர் - மதிப்புரை


துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாமலர்

ஜெகநாத் நடராஜன்
சீண்டுவார் யாரும் அற்ற எளிய மனிதர்களின் கதைகள், உதயசங்கரின் கதைகள். அந்த மனிதர்களுக்கு தங்கள் நிலையைப் பற்றிய எவ்வித அசூயையும் இல்லை. யாவரின் உதவியுமில்லாம்ல் தாங்களே தங்கள் வாழ்வினின்று தடம்மாறி விலகிச்செல்ல அவர்கள் எத்தனிக்கிறார்கள். அடுத்தவர் இடைஞ்சலாக இல்லாமலிருந்தாலே அது ஒரு அற்புதம் போல நிகழ்ந்து விடும். இங்கிருந்து அங்கு சென்றால் என்ன இருக்கிறது என்று தெளிவாகத் தெரியாவிட்டாலும் இங்கிருந்து வெளியேறுவது என்பது அவர்களின் பிரயத்தனமாக இருக்கிறது. ஆனால், ஒவ்வொருவருக்கும் இன்னொருவர் இடைகட்டையாக இருக்கிறார்கள்.
அது வாழ்வில் சாதாரணவிஷயம் தான். இயல்பாக நிகழ்வது தான். ஆனால் சில நேரங்களில் தங்களுக்கு தாங்களே இட்டுக்கட்டிக்கொண்ட விசித்திரக்கற்பனைகளும், அது இட்டுச்செல்லும் மீண்டும் திரும்ப முடியாத முனைகளும் அவர்களைச் சிக்கலுக்கு உள்ளாக்குகின்றன. எனினும், இக்கதைகளின் மனிதர்கள் எளிய மனிதர்களாக இருப்பதால் வாழ்விற்கு மிக நெருக்கமானதாக இருக்கிறது. நுட்பமான சித்தரிப்புகளால் ஒரு ரசனைக்குரிய படைப்புகளாக மாறியிருக்கிறது. இத்தகைய ரசனை அந்தக் கதாபாத்திரங்களிலும் இருக்கிறது.
ஏதோ ஒன்றைச் செய்ய விரும்புபவர்களாக, ஏன் என்ற கேள்வியுடையவர்களாக, எதிர்பாராத சந்திப்புகள் தரும் வாழ்வின் திடீர் திருப்பங்களில் அதிர்ச்சியுறுபவர்களாக, சகமனிதர்களின் அன்பை ஆச்சரியத்தோடு பார்க்கும் அற்பத்தனத்தை சில நேரம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
பால்யகாலம், வாலிபக்காலம், வயோதிகக்காலம், என்ற மூன்று நிலைகளில் இக்கதைகள் இருக்கின்றன. நாம் அன்றாடம் பார்த்த மனிதர்களோடு நாமும் உலா வந்து கொண்டே இருக்கிறோம்.
திருநெல்வேலி, கோவில்பட்டி பகுதிகளில் வாழ்கின்ற மனிதர்களின் வாழ்க்கை அவர்களின் பார்வையிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. அன்பைச் செலுத்த விரும்பும், அனுதாபத்தைப் பெற விரும்பும் மனிதர்கள். காதல், வேலையின்மை, வேலை, குடி, திருமணம், தற்கொலை, மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருத்தல் என்று சஞ்சரிக்கிறார்கள். தங்கள் கடந்த கால வாழ்வைப் பரிகாசித்து சிரிக்கிறார்கள். அதில் நொய்மை இல்லை. எப்படியாகினும் வாழ்வை வாழ்கிறார்கள்.
தன் மனைவி சார்ந்த இன்னொரு மதக்கடவுளோடு பேசும் அம்மாவை ஆச்சரியமாகப் பார்க்கும் மகன்; தன் காதலி தான் காதலிப்பது தெரியாமலேயே இன்னொருவனுக்கு மனைவியாகி, தன் வீட்டுக்கு எதிரே குடிவந்த போது இன்னும் காதலித்து அதுவும் கண்டுகொள்ளப்படாமல் மனநோய்க்கு ஆளாகிற ஒருவன்; பெண்களைத் திருடிக்கொண்டுபோய் ஒற்றை மார்பை அறுக்கும் கூட்டம் பற்றிய கதையை இன்னொரு நாட்டில் கேட்கும் ஒருவன்; குடித்தபின் உலாவும் உலகிற்கும், நிஜ உலகிற்குமிடையே இருக்கும் முரண் என எல்லோர் கதைகளும் சொல்லப்படுகின்றன. எல்லோரும் ஏதோ ஒரு பயம் உந்தித்தள்ள நடமாடுகிறார்கள். எல்லாமனிதர்களுக்குமுள்ள அற்பத்தனத்தைக் கொண்டிருக்கும் சிலர், அதை நேரம் கிடைக்கையில் அள்ளிப்போட்டு வேடிக்கை பார்க்கவும் தவறுவதில்லை.
மதுரைக்கு நேர்முகத்தேர்வுக்கு பேருந்தில் பயணம் செய்யும் ஒருவன், தனக்கு முன்னாலிருந்த பெண்ணைச் சீண்டி அனைவராலும் அடிக்கப்பட்டு பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட கதையைச் சாதாரணமாக எங்கோ ஒரு இடத்தில் சொல்கிறான்.
மரப்பாச்சி பொம்மை மீது ஈர்ப்பு கொண்டு அதே ஈர்ப்பை தன் ஆச்சியின் மீதும் கொண்டு அவளை முகர்ந்து பார்க்கவும், அவளது விரலி மஞ்சள் மணத்தை நுகரவும் தலைப்படும் ஒருவன், ஒரு கட்டத்தில் ஆச்சியை நிர்வாணமாகப் பார்த்து விட அவன் கையில் கிடைக்கும் மரப்பாச்சியெல்லாம் ஆச்சியின் உருவம் போல சேர்ந்து அவனை வதைக்கின்றன. அவன் மணமானபோதும் அந்த மரப்பாச்சிகளை பத்திரமாக வைத்துக்கொள்கிறான். பக்கத்தில் படுக்க வைக்கிறான். அவன் மனைவியிடம் இதெல்லாம் உன்னை ஒன்றும் செய்யாது என்று மன்றாடுகிறான். அவள் சண்டைக்கு வர, அவன் கொடுக்கும் ஒரே அடியில் அவள், அவனிடமிருந்து காணாமல் போகிறாள்.
அப்பாவின் கைத்தடி கதையில் நடக்கமுடியாமல் படுக்கைப்புண் வந்து கிடக்கும் அப்பாவை மீறி ஒருமுறை காதலனோடு ஓட முடிவெடுத்தவள், இருளில் நடக்கும்போது கால்கள் கைத்தடியில் பட்டுவிட, விழிக்கும் அப்பாவின் கைத்தடியால் அடி வாங்குகிறாள். இன்னொரு முறை ஜாக்கிரதையாக வீட்டை விட்டுச் செல்லும்போது கண்டுவிட்ட அவள் சகோதரி அமைதியாக அழுகிறாள். எண்ணற்ற கேள்விகள் அவள் கண்ணீரோடு சுரந்து தலையணையை நனைக்கின்றன.
சில கேள்விகளை வாழ்வின் வெளியினின்றுதான் கேட்கவேண்டும். ஆனால் பதிலே கிடைக்காத கேள்விகள் அவை. உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றி சம்பாதித்த தன் கணவன் இல்லாத குறையைத் தீர்க்கும் குடும்பத்தின் மூத்தமகனுக்கு பெண் பார்க்க ஏன் அவன் அம்மா விரும்பவில்லை என்று அவன் நண்பன் தன்னையே கேட்டுக்கொள்கிறான்.
படிப்பே வராத தன் பள்ளித்தோழன் மிகப் பெரிய பணக்காரனானதும் படித்தவன் பரிகாசிக்கப்படுகிறான். ‘ பாரு உங்கூடப் படித்தவன் எப்படி இருக்கான்னு.’ என்று அவன் காதருகே கேட்கும் குரல்கள் வாழ்வின் ஒழுங்கு என்று கட்டப்பட்டு வந்திருப்பதை சீட்டுக்கட்டு போல கலைத்துப் போடுகின்றது.
கிராக்கி தேடி அலையும் பாலியல் தொழிலாளி, லாட்ஜ் ஒன்றில் பார்க்கும் அம்மை கண்ட ஒருவனை தன் வீட்டுக்கு அழைத்து வந்து பணிவிடை செய்து கணவனாக அவனைக் கனவு கண்டு தோற்கிறாள். மலம் அள்ளி, மூத்திரம் பிடித்து ஊற்றி, அவனோடு புதிதாய் கல்யாணம் செய்து கொண்டவள் போல பேசிப்பேசி முதன்முறையாக உறவு கொள்பவள் போல் வெட்கி நாணி வாழும் வாழ்வின் முடிவில் அவனைப் பார்த்துக் கொண்டதற்குக் கூலியாகத் தலையணைக்குக் கீழ் நூறு ரூபாயை வைத்து விட்டு காணாமல் போகிறான். அவள் அவனை சீ என்று கோபத்தோடு காறித்துப்பும்போது அவள் உடம்பிலும் அம்மை துளிர்த்திருக்கிறது. வாழ்வு அப்படித்தான்.
தன் மனைவி பூனையைக் கொஞ்சுவது போல் தன்னைக் கொஞ்சாத கோபத்தில் ஒருவர் பூனைகளைக் கொல்கிறார். அது அவர் மகன் பார்வையில் கதையாகச் சொல்லப்படுகிறது.
தங்களுக்குள் யாரோ பேசும் பிரமையில் தாங்கள் செல்ல விரும்பாத இடங்களுக்குச் செல்வதை நிறையப்பாத்திரங்கள் உணர்கின்றன. பயந்து நடுங்குகின்றன. தனக்கென ஒருத்தி இருந்தாலும் தன் கற்பனைக்கென ஒரு உருவைக் கொண்டு சிலர் திரிகிறார்கள். ஆசைகள் சர்ப்பத்தைப் போல ஆங்காங்கே நெளிகின்றன. மோகினிகள், நிர்வாணமான பெண்கள், விரிந்த யோனிகள், காமத்தின் பூச்சாரல் அடித்துக் கொண்டேயிருக்கிறது.
சில கதாபாத்திரங்களால் கணநேரத்தில் இந்த உலகை விட்டு இன்னொரு மாய உலகிற்கு செல்லமுடிகிறது. அவர்களுக்குப் பிரத்தியேகமான உலகை அவர்கள் உருவாக்கி மீட்சி அடைகிறார்கள். பல்வேறு காரணங்களால் அல்லது ஏதோ ஒரு இனம் காணாத அச்சுறுத்தலால் ஒடுங்கி, உலகைப்பார்க்கும், சகமனிதர்களை வேடிக்கை பார்க்கும் இந்தக் கதாபாத்திரங்களின் எளிமை தான் கதைகளின் மிகப்பெரிய பலம்.
அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அத்தை, ஆச்சி, அப்பா, நண்பன், மனைவி, என்று பல்வேறு உறவுகள் இக்கதைகளை மேவி நிரவுகின்றன. சந்தோஷத்தையும், சந்தோஷத்தின் வாயிலாக நிம்மதியையும் தேடும் இந்தக் கதாபாத்திரங்கள் ஓரளவு அதனை அடைகிறார்கள். ஆனால் அடைவதற்கு முன் களைத்துச் சோர்ந்து விடுகிறார்கள்.
பல கதைகளில் மரணம் ஒரு ரகசிய கதாபாத்திரமாக உலா வந்து கொண்டிருக்கிறது. இருமுறை தற்கொலை செய்துகொள்ள முயன்ற ஒருவனை, “ போகணும்ன்னா போய் விடு “ என்று சிகிச்சை பார்க்கும் மருத்துவர் கேலி செய்கிறார். மூன்றாவது முறை அவன் தற்கொலை செய்யத் திட்டமிட்டு இன்னொரு ஊருக்குப்போய் லாட்ஜுக்குச் செல்லும்போது அவனுக்கு முன்னால் பலர் அங்கு தற்கொலை செய்து கொண்ட ஆல்பமிருக்கிறது. அதில் ஒரு படத்தில் அவனும் இருக்கிறான்.
மனிதர்களோடு கூடவே இருந்து வேடிக்கை பார்க்கிற சகமனிதர்கள் திடீரென்று வீட்டை விட்டு காணாமல் போகிறார்கள். நிஜவாழ்வின் பீதி தாங்காமல் சில கதைகளின் பாத்திரங்கள் கானகம், மலைகள், சிகரங்கள், நதிகள், குகைகள், என்று ஓடி ஒளிகிறார்கள். நொண்டி நகரம், துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாமலர் கதையின் ஒவ்வொரு இதழும் இன்னும் சொல்லாத கதையெல்லாம் சொல்லும்போலும்.
முதலிரவில் தன்னைக்கூர்ந்து பார்த்த கணவனின் கண்கள் தந்த பயம், அவன் சாவுக்கு இழுத்துக் கொண்டு கிடக்கும்போதும் வருகிறது, கருப்பையாவின் வனம் சிறுகதையில்.
சமகால பகடிகள் நிறைய இடங்களில் இயல்பாக நிகழ்கின்றன. த்தோலக்க எனும் வார்த்தைகள் காரணகாரியத்தோடு ஒலிக்கின்றன. அவனோடது இனிக்குதா? என்று காதல் கொண்ட மகளை அப்பன் கேட்பது, காதலியோடு இன்னொரு ஜாதிக்காரன் பேசினால் அவன் தலை கொய்யப்படுவது என்று நுண்ணிய சமகாலச்சித்திரங்களும் உண்டு.
புனைவின் யுக்தி என்று எதற்கும் உதயசங்கர் மெனக்கெடவில்லை. பதாகையாக இக்கதைகளைத் தாங்கிப்பிடிக்கும் முன்னுரை என்னுரை கூட இதில் இல்லை. அது கர்வமாக இருப்பின் மகிழ்ச்சி.

நன்றி - அம்ருதா 

துண்டிக்கப்பட்ட தலையில் சூடிய ரோஜாமலர்
சிறுகதைத்தொகுப்பு
உதயசங்கர்
வெளியீடு – நூல்வனம்
விலை – ரூ.200/
தொடர்பு -91765499913 comments:

  1. நூலினைப் படிக்கத் தூண்டும் அருமையான விமர்சனம்

    ReplyDelete
  2. படிக்கத் தூண்டும் பதிவு. படித்துவிடுகின்றேன்.

    ReplyDelete