Wednesday, 18 March 2020

அம்மா எங்கே?


அம்மா எங்கே?

உதயசங்கர்

வயநாட்டிலுள்ள அம்புகுத்தி மலையடிவாரம் அடர்ந்த காட்டின் நடுவில் ஒரு புல்வெளியில் வேங்கை மரத்தின்கீழ் ஒரு குட்டியானை துள்ளிக்குதித்து விளையாடிக் கொண்டிருந்தது. குட்டியானை அப்பு பிறந்ததிலிருந்தே சுட்டி தான். ஒரு இடத்தில் நிற்காது. அங்கேயும் இங்கேயும் துள்ளிக்குதிக்கும். அம்மாவின் கால்களில் போய் முட்டும். ஒரு செடியிடம் போய் சண்டை போடும். தும்பிக்கையால் பூவைப்பறித்துக்கொண்டு ஓடும். கோரம்புல்லைப் பிடுங்கி வாய்க்குள் திணிக்கும். அவை நாக்கை அறுத்தவுடன் அப்படியே துப்பி விடும். மேலே பறக்கும் காகத்தைப் பார்த்துப் பிளிறும்.
“ வா வா என்கூட விளையாட வா “ என்று தும்பிக்கையை அலைத்துக் கூப்பிடும். மரத்தில் புள்ளிக்குயில் கூவினால் அதற்குப் போட்டியாக அப்புவும் குட்டிக்குரலால் கத்தும். அம்மா அப்பு செய்கிற குறும்புகளைப் பார்த்து ரசித்துக் கொண்டே நிற்கும். கூட்டத்தை விட்டு குட்டியானை தூரமாய் போய் விட்டால் அம்மா பெருங்குரலில் பிளிறும். உடனே அப்பு ஓடி வந்து கூட்டத்துடன் சேர்ந்து கொள்ளும்.
கூட்டத்திலிருந்த மற்ற யானைகளும் அப்புவைப் பார்த்துப் பெருமைப்படுவார்கள். அவர்களிடமும் குறும்புகள் செய்யும் அப்பு. எல்லோரும் அவரவர் வேலையைப் பார்த்தாலும் அவ்வப்போது ஹாங்.. என்று சிறுகுரல் கொடுத்து அப்பு இருப்பதை உறுதி செய்து கொள்வார்கள். ஏதாவது ஆபத்தான காரியங்களை அப்பு செய்தால் அம்மா கடுமையாக அதட்டும். அந்தக் குரலைக் கேட்டதும் அப்பு நல்லபிள்ளை மாதிரி அம்மாவிடம் வந்து ஒட்டிக்கொள்ளும். தும்பிக்கையால் அம்மாவின் தும்பிக்கையைத் தடவிக்கொடுத்து சமாதானப்படுத்தும். அம்மா நடக்கும்போது அதன் கால்களை ஒட்டியே உரசிக்கொண்டே நடப்பதில் அப்புவுக்கு அவ்வளவு ஆனந்தம்.
திடீரென அப்படியே நின்று அம்மாவைப் பார்க்கும். அம்மா எவ்வளவு அழகு.
“ என் அம்மா! என் அம்மா!” என்று குதூகலிக்கும். ஆனால் அப்புவால் பசி பொறுக்க முடியாது. ஓடி வந்து அம்மாவின் மடியில் முட்டி பால் குடிக்கும். வயிறு நிறைந்தவுடன் கடைவாயில் பால் ஒழுக அம்மாவைப் பார்த்து மகிழ்ச்சியாகக் குரல் கொடுக்கும். மற்ற நேரங்களில் அம்மா சாப்பிடுகிற இலை தழைகளை வாயில் சவைத்துத் துப்பிக்கொண்டிருக்கும். ஒரு வெட்டுக்கிளியையோ, வண்ணத்துப்பூச்சியையோ, பூணில் குருவியையோ, கொண்டலாத்தியையோ, விரட்டிக் கொண்டு திரியும்.
இன்று இரவு அவர்களுடைய கூட்டம் வலசை போகவேண்டும். வயநாட்டிலிருந்து சத்தியமங்கலம் காட்டுப்பகுதிக்கு போய்ச்சேரவேண்டும். இப்போது கிளம்பினால் ஒரு மாதத்திற்குள் அந்தக் காட்டை அடைந்து விடலாம். அப்புவை அம்மா கவனித்துக் கொண்டேயிருந்தது. பாதையெல்லாம் பழக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான வருடங்களாக அவர்களின் முன்னோர்கள் போய் வந்த பாதை. எல்லோரின் ஞாபகத்திலும் அந்தப் பாதை அப்படியே மனப்பாடமாய் இருந்தது. அன்று அவர்கள் நட்சத்திரங்களின் ஒளியில் புறப்பட்டார்கள்.
ஒரு வாரம் நடந்திருப்பார்கள். திடீரென வழி முட்டி நின்றது. அங்கே ஐந்து மாடிக்கட்டடம் ஒன்று முளைத்திருந்தது. அதை விட்டு விலகி வெகுதூரம் சுற்றி நடந்தார்கள். மறுபடியும் ஒரு இடத்தில் வழி முட்டியது. அந்த இடத்தில் வேலி போட்டு அடைத்திருந்தார்கள். கரும்பு, வாழை பயிரிட்டிருந்தார்கள். கரும்பின் வாசனையால் வேலியின் அருகில்போன ஒரு யானை தும்பிக்கையால் தொட்டதும் விர்ரென மின் அதிர்ச்சி ஏற்பட்டது. அப்படியே துள்ளி ஓடி விட்டது. மற்ற யானைகளையும் எச்சரித்தது. அப்பு எல்லாவற்றையும் பார்த்து மிரண்டு போயிருந்தது. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.
மறுபடியும் பழைய பாதையைத் தேடி யானைக்கூட்டம் நடந்தது அப்போது தூரத்தில் நெருப்பு வெளிச்சம் தெரிந்தது. பெரிய நெருப்பும் அதிலிருந்து டம்டமார் என்று ஓசைகளும் கேட்டன. நெருப்பைச் சுற்றிலும் மனிதர்கள் ஆடிக்கொண்டிருந்தார்கள். யானைகளுக்கு ஒன்றும் புரியவில்லை. பாதை மாறி வந்து விட்டோமோ என்று ஒன்றுக்கொன்று முணுமுணுத்தன. அப்பு இதுவரை நெருப்பைப் பார்த்ததில்லை. முதல்முறையாக அதைப் பார்த்ததும் பயந்து நடுங்கியது. அம்மாவின் பின்னாலேயே அண்டிக் கொண்டு நடந்தது.
” டமார் “ என்று வேட்டுச்சத்தம் கேட்டது. அத்துடன் வானத்தில் நெருப்பின் வெளிச்சம் தெரிந்தது. அப்புவின் மூளை குழம்பி விட்டது. என்ன நினைத்ததோ திரும்பி காட்டுக்குள் ஓட ஆரம்பித்தது. இருட்டில் முட்டி மோதி ஓடியது. அம்மாவின் பிளிறல் சத்தம் கேட்டது. ஆனால் அப்பு நிற்கவில்லை. ஓட ஓட அம்மாவின் சத்தம் கேட்கவேயில்லை.  ஒரு பெரிய பள்ளத்தில் தடுமாறி விழுந்தபோது தான் அதன் ஓட்டம் நின்றது.
கும்மிருட்டு. பூச்சிகளின் ரீங்காரம் மட்டுமே கேட்டது. இரவாடிகளான ஆந்தைகளின் குரல் விட்டு விட்டு கேட்டது. புலியின் உறுமலும் நரிகளின் ஊளைச்சத்தமும் மான்களின் செருமலும், காட்டெருமைகளின் பொருமலும் கேட்டது. அப்பு மெல்ல எழுந்து பள்ளத்திலிருந்து எழுந்தது. ஒரே இருட்டு. வழி தெரியவில்லை. அம்மாவைத் தேடிப் பிளிறியது.
” ஹாங்ஹாங்..அம்மா அம்மா எனக்குப் பயமாருக்கு அம்மா “
அம்மாவைக் காணவில்லை. அம்மாவின் செல்லமான அதட்டலும் கேட்கவில்லை. வயிறு பசித்தது. எப்படிப் பாதை மாறியது? அம்மா தேடிக்கொண்டிருப்பாளே. எங்கெல்லாம் அலைகிறாளோ. அப்பா அண்ணன், அக்கா எல்லோரும் தேடுவார்களே. என்ன நடந்தாலும் அம்மா கூடவே இருந்திருக்க வேண்டும். வலசை போகாமல் அலைவார்களே என்று வருந்தியது. அம்மாவை விட்டு ஓடி வந்திருக்கக்கூடாது என்று அப்பு நினைத்தது.
“ அம்மா.. அம்மா.. நீ எங்கேருக்கே?..ஹூங் ஹூங் அம்மா அம்மா ”
என்று அழுது கொண்டே தட்டுத்தடுமாறி திசை தெரியாமல் நடந்து போய்க்கொண்டிருந்தது. அதன் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
அம்மா அம்மா அம்மா நீ எங்கே?
அன்று இரவு முழுவதும் அலைந்தது அப்பு
இப்போதும் அம்மாவைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறது.
அம்மா அம்மா அம்மா நீ எங்கேருக்கே?
அப்புவின் குரல் உங்களுக்கு கேட்கிறதா?
அப்புவை அதன் அம்மாவிடம் சேர்த்து விடுங்கள்.
நன்றி - மாயாபஜார்

1 comment:

  1. Touching... It's only humans crossed d animal world by constructing buildings, fences, etc. If they react badly, they are within their rights!

    Ventriloquist Shanthakumar

    ReplyDelete