தேன்சிட்டின் பாடல்
உதயசங்கர்
எப்போதும் போல தேன்சிட்டு அதிகாலையில்
எழுந்து விட்டது.. எழுந்ததும் சிறகுகளை விரித்து சோம்பல் முறித்தது. கிழக்கில் வெளிச்சம்
தெரிய ஆரம்பித்தது. லேசான குளிரும் கதகதப்பும் சேர்ந்த காற்று வீசியது. தேன்சிட்டுக்கு
உற்சாகம். உடனே அந்த வேப்பமரத்தின் கிளகளில் அங்கும் இங்கும் துள்ளிக்குதித்தது. கருநீலநிறத்தில் இருந்த அந்தக் குட்டித் தேன்சிட்டு
தன் சிறகுகளை விர்ரெனெ அடித்து வானத்தில் ஒரு சுற்று சுற்றித் திரும்பியது. ஆகா. எவ்வளவு
ஆனந்தம்! உடனே தேன்சிட்டு பாட ஆரம்பித்தது.
“ ட்வீக் ட்வீக் ட்வீக் ட்வீக்
ட்வீக் ட்வீக்
விர்ரெனெப் பறப்பேனே ட்வீக் ட்வீக்
சர்ரெனக் குதிப்பேனே ட்வீக் ட்வீக்
பூக்களைப் பார்ப்பேனே ட்வீக் ட்வீக்
தேன் துளி குடிப்பேனே ட்வீக் ட்வீக்
ட்வீக் ட்வீக் ட்வீக் ட்வீக் ட்வீக்
ட்வீக்”
என்று பாடிக்கொண்டே அங்கும் இங்கும்
பறந்தது. அப்போது அருகில் ஒரு கரகரத்த குரல் கேட்டது.
“ கா கா கா கா கா.. யார்ராது காலையிலே
பாடி பிள்ளைக தூக்கத்தைக் கெடுக்கிறது..”
அருகிலிருந்த வேப்பமரத்தின் உச்சியில்
கூடு கட்டியிருந்த காகத்தக்கா தான் அப்படிக் குரல் கொடுத்தது. உடனே தேன்சிட்டு தன்
பாடலை நிறுத்திவிட்டது. ஒரே இடத்தில் சிறகுகளை அடித்துக் கொண்டே என்ன செய்யலாம்? என்று
யோசித்துக் கொண்டிருந்தது. தேன்சிட்டுக்குப்
பசிப்பது போல இருந்தது. வேப்ப,மரத்தில் பூக்கள் கொய்யென பூத்துக் குலுங்கிக்கொண்டிருந்தன.
அந்தப் பூக்கள் தேன்சிட்டை தலையாட்டி தலையாட்டி அழைத்தது.
“ வா வா தேன்சிட்டே சொய்ங் சொய்ங்
வண்ணப்பூந்தேன்சிட்டே சொய்ங் சொய்ங்
துளித்துளியாய் தேனிருக்கு சொய்ங்
சொய்ங்
அள்ளிப்பருகிப் பறந்து போ சொய்ங்
சொய்ங்”
என்று ஆடியபடி அழைத்தன வேப்பம்பூக்கள்.
வேப்பம்பூக்களில் உள்ள தேன் கொஞ்சம் கசக்கும். அதனால் தேன்சிட்டு பாடியது.
“ ஆயிரம் பூக்கள் இங்கே இருக்கு
ட்வீக் ட்வீக்
எனக்கு வேண்டாம் கசப்புத்தேன்
ட்வீக் ட்வீக்
மதுரத்தேனை உறிஞ்சிக்குடிப்பேன்
ட்வீக் ட்வீக்
மகரந்தச்சேர்க்கையை செய்து பறப்பேன்..ட்வீக்
ட்வீக் “
என்று சொல்லிவிட்டு தேன்சிட்டு பூக்களைத் தேடிப் பறந்து சென்றது.
ஒரு மல்லிகைத் தோட்டத்துக்குச்
சென்றது. அங்கே மல்லிகைப்பூக்கள் இன்னும் பூக்கவேயில்லை. எல்லாம் மொட்டுகளாக இருந்தன.
“ மல்லியக்கா மல்லியக்கா ட்வீக்
ட்வீக் ட்வீக்
தேன் கொடுங்க மல்லியக்கா ட்வீக்
ட்வீக் ட்வீக்
பசிக்குதக்கா பசிக்குதக்கா ட்வீக்
ட்வீக் ட்வீக்
பசியாறப் பரிமாறுங்க மல்லியக்கா
ட்வீக் ட்வீக் ட்வீக் “
மல்லிகை மொட்டுகள் பதில் சொல்லவில்லை.
எல்லாம் அமைதியாக இருந்தன. தேன்சிட்டு தோட்டம் முழுதும் சுற்றி வந்தது. ஒரு பூ கூட
பூக்கவில்லை.
தேன்சிட்டு அங்கிருந்து விர்ரெனப்
பறந்து ஒரு ரோஜாத்தோட்டத்துக்கு சென்றது. அங்கே வெள்ளைரோஜா, சிவப்புரோஜா, மஞ்சள்ரோஜா,
இளம்சிவப்பு ரோஜா, என்று எல்லாவண்ணங்களிலும் ரோஜாச்செடிகள் இருந்தன. ஆனால் அங்கேயும்
மலர்ந்த பூக்கள் ஒன்று கூட இல்லை. எல்லாப்பூக்களையும் பறித்துக் கொண்டு போய் விட்டார்கள்.
செடிகளில் மிகச்சிறிய மொட்டுகளே இருந்தன. தேன்சிட்டு பாடியது.
” மொட்டுகளே மொட்டுக்களே ட்வீக்
ட்வீக்
என்னைக்கொஞ்சம் பாருங்க ட்வீக்
ட்வீக்
பசியினால் வாடுறேன் ட்வீக் ட்வீக்
துளியளவு தேனாவது தாருங்க.ட்வீக்
ட்வீக்.”
வெள்ளைரோஜா மொட்டின் அருகில் சென்று
பாடியது. வெள்ளைரோஜா மொட்டு பதில் சொல்லவில்லை. சிவப்பு ரோஜாமொட்டின் அருகில் சென்று
பாடியது. சிவப்புரோஜா மொட்டு பதில் சொல்லவில்லை. மஞ்சள் ரோஜா மொட்டின் அருகில் சென்று
பாடியது. மஞ்சள்ரோஜா மொட்டு பதில் சொல்லவில்லை. இளம்சிவப்பு ரோஜா மொட்டின் அருகில்
சென்று பாடியது. இளம்சிவப்பு ரோஜா மொட்டும் பதில் சொல்லவில்லை. தேன்சிட்டின் பசி அதிகமாகி
விட்டது. களைப்புடன் அங்கிருந்து சர்ரெனப் பறந்தது.
வழியில் செண்பகப்பூ மரத்தைப் பார்த்தது.
அதில் பூக்களே இல்லை. தங்க அரளிச் செடியைப் பார்த்தது. அது காய்ந்து போயிருந்தது.
அடுக்குமல்லிச்செடி துளிர் விட்டிருந்தது.
பிச்சியில் ஒரு இலை கூட இல்லை.
சம்பங்கிப்பூ காய்ந்து போய் விட்டது. சாமந்திப்பூக்களில்
பூவிதழ்கள் காய்ந்து உதிரத்தொடங்கியிருந்தன.
தேன்சிட்டின் பசி அதிகமாகி விட்டது.
உடல் சோர்ந்து விட்டது. சிறகுகளை அடிப்பதே சிரமமாக இருந்தது. நாக்கு வறண்டு விட்டது.
எப்படியாவது ஒரு துளி தேன் குடிக்கவேண்டும். இல்லையென்றால் அவ்வளவு தான். தேன்சிட்டு
களைத்து சோர்ந்து தான் புறப்பட்ட வேப்பமரத்துக்கே திரும்பி வந்தது. அப்போதும் வேப்பம்பூக்கள்
காற்றில் தலையாட்டி பூச்சிகளையும், வண்டுகளையும், எறும்புகளையும் அழைத்துக் கொண்டிருந்தன.
அதைப் பார்த்த தேன்சிட்டுக்கு வெட்கமாக இருந்தது.
அது தயக்கத்துடன்,
“ வேம்பு மாமா வேம்பு மாமா
தேன் தருவீங்களா?
குட்டி வயிறு பசிக்குது
தேன் தருவீங்களா? “
என்று கேட்டது. வேப்பம்பூக்கள்
அதைக்கேட்டதும் மகிழ்ச்சியில் துள்ளித்துள்ளி ஆடின.
” வா வா தேன்சிட்டே
விரைந்து வா தேன்சிட்டே
கசப்பும் ஒருசுவை தேன்சிட்டே
கனிவுடன் பருகு தேன்சிட்டே “
தேன்சிட்டு தன்னுடைய நீண்ட அலகுகளால்
வேப்பம்பூக்களில் ஊறியிருந்த தேன் துளிகளை உறிஞ்சிக் குடித்தது. இப்போது அந்தத்தேன்
கசக்கவில்லை. இனித்தது.
ஆஹா அற்புதம்
ReplyDeleteஅருமை....
ReplyDeleteகவிதையில் ஒரு கதை...
இசையோடு ஒரு கதை...
கிடைத்ததை வைத்து வாழ...
கருத்தைச் சொன்னக் கதை...
நன்றி!!!
Kathaiyim paadalkalum kathai nakrum nerthym manangkavarum vakayil ullana kasappaiyum suvaikka oru kathaik kavithai
ReplyDeleteSuperb
ReplyDeleteஅருமை.
ReplyDelete