ஒரு வகையில் சமூகம் மாறித்தான் இருக்கிறது. மின்னணு ஊடகங்களும், இணைய தள வசதிகளும் தங்களுடைய பகாசுரப்பசிக்கு அவ்வப்போது சென்சேஷனலாக செய்திகளை, நிகழ்வுகளை, சம்பவங்களை, பயன்படுத்திக் கொண்டாலும் அது பொதுச்சமூகவெளியில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தவே செய்கிறது. சிவில் சமூகம் முன்னெப்போதும் இல்லாதவகையில் இப்போது இந்த மாதிரியான செய்திகளுக்கு, நிகழ்வுகளுக்கு, சம்பவங்களுக்கு, முகம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. விமரிசிக்கிறது. கோபம் கொள்கிறது. கொதித்தெழுகிறது. ஆவேசங்கொள்கிறது. ஆத்திரப்படுகிறது. ஆலோசனைகள் சொல்கிறது. சிவில் சமூகத்தின் இந்த உணர்ச்சிவேகத்தினால் அரசியல்கட்சிகளும், சமூகவியலாளர்களும், எழுத்தாளர்களும், கலைஞர்களும், சாமியார்களும், இத்தகைய நிகழ்வுகள் குறித்து பேச வேண்டியவர்களாகின்றனர். எல்லோரும் தங்களுடைய அறிவின் சிகரத்திலிருந்து சமூகத்தை உய்விக்க தங்களுடைய கருத்துகளை, ஆலோசனைகளை, அபிப்ராயங்களைச் சொல்கின்றனர். சிலர் இயக்கங்களை நடத்துகின்றனர். இவையெல்லாவற்றிற்கும் விளைவுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இவையெல்லாம் எது வரைக்கும் என்று ஒரு கேள்வி வருகிறது. அடுத்த சென்சேஷனல் செய்தியை ஊடகங்கள் தருகின்ற வரை மட்டுமா? அப்படி ஒரு செய்தி வந்தவுடன் அதை நோக்கி எல்லோரும் படையெடுக்கத் தொடங்கி விடுவார்களா? கருத்து சொல்ல ஆரம்பித்து விடுவார்களா? அப்படி நிகழுமென்றால் இன்றைய நவீன முதலாளித்துவ அமைப்புக்கு தான் நினைத்தது நடக்கிறதென்ற ஆணவம் வந்து விடும். ஏனெனில் தன்னுடைய அஸ்திவாரத்தின் சிறுகல்லையும் அசைக்காத எந்தவொரு சீர்திருத்தத்தையும், இயக்கத்தையும் அது ஆதரிக்கவும், ஏன் முன்னெடுக்கவும் செய்யும். அதற்காக இப்படியான சீர்திருத்தங்கள், இயக்கங்கள், தேவையில்லை என்பதில்லை. இதனூடாக நாம் எங்கே பயணம் செய்யப்போகிறோம்? இந்த எல்லாச் சமூகச்சீரழிவுகளுக்கும் அடிப்படையான சாராம்சமான காரணங்களை நோக்கிய பயணமாக இது இருக்கப்போகிறதா? இல்லை இது இப்படியான மேலோட்டமான சுயதிருப்தியாக முடியப்போகிறதா? இது தான் இன்று முக்கியமாய் நம்முன் உள்ள கேள்வி.
டெல்லியில் நடந்த கொடூரமான பாலியல் வன்முறையில் நேரடியாக ஈடுபட்டவர்கள் ஐந்து பேர்களாக இருக்கலாம். ஆனால் அந்த சம்பவத்தில் ஒட்டுமொத்த சிவில் சமூகமும் மறைமுகமாக ஈடுபட்டதாகவே கருத வேண்டும். ஏனெனில் ஒரு நிர்பயா அல்ல. ஆயிரக்கணக்கான நிர்பயாக்கள் அன்றாடம் பாலியல் வன்முறைக்காளாகின்றனர். வீடுகளில் இப்படிப்பட்ட வன்முறை நிகழவில்லையென்று யாராலாவது சொல்ல முடியுமா? அடித்து, உதைத்து, பயமுறுத்தி, வற்புறுத்தி, கெஞ்சி, வீட்டுப்பெண்களை அவர்களுடைய கணவர்கள் பாலியல்வன்கொடுமைக்கு ஆளாக்குவதில்லை என்று சொல்லமுடியுமா? சொந்தக்காரர்களால், நண்பர்களால், அப்பா, சகோதரர்களால், வீட்டுப்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதில்லையா? பள்ளிகளில், கல்லூரிகளில், பஸ்ஸில், ரோட்டில், தெருக்களில், அலுவலகங்களில்,சினிமாக்களில், பத்திரிகைகளில், ஊடகங்களில், இணையதளங்களில், வயது வித்தியாசமில்லாமல் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்காளாக்கப்படுவதில்லையா? அவமானப்படுத்தப்படுவதில்லையா? காவல்துறையால், ராணுவத்தால், சாதித்துவேஷத்தால், இனத்துவேஷத்தால், மதத்துவேஷத்தால், யுத்தத்தால், பிரிவினையால், பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாவதில்லையா? இதெல்லாம் எங்கே நிகழ்ந்து கொண்டிருந்தன? நிகழ்ந்து கொண்டிருக்கின்றன? இதே சிவில்சமூகத்தில் தானே. ஏதோ அந்த ஐந்து சமூகவிரோதிகள் மட்டும்தான் பாலியல்வன்கொடுமை செய்த மாதிரியும் சமூகத்தில் மீதம்உள்ள அத்தனை பேரும் யோக்கியர்கள் மாதிரி வேடம் போடுகிறோமே. எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?
இப்போது யோசித்துப்பார்த்தால் ஒட்டு மொத்த சமூகமே பெண்களுக்கு எதிரான சமூகமாக இருக்கிறது. ஏனெனில் இது ஆண்களின் சமூகம். தங்களுடைய பாலியல் தேவைகளுக்காக மட்டுமே இந்த ஆண்கள் சமூகம் பெண்களை தங்களுடன் வாழ அனுமதித்திருக்கிறது. அதிகாரத்தின் குரூரத்தை மட்டுமே சுவைக்கப்பழகிய ஆண்கள் சமூகம் தங்களுடைய ஆதிக்கத்தைச் செலுத்த, அதிகாரத்தை நிலைநாட்ட தனக்குக் கீழே ஒரு பெண்உயிரியை வைத்து தனக்குச் சேவகம் செய்ய, தன் தேவைகளைப் பூர்த்தி செய்ய, வைத்துள்ளது. இது எந்த வர்ணாசிரம்க்கோட்பாடுகளையும் தாண்டிய அடிமைத்தனத்தைப் பெண்கள் பேண அநுமதித்திருக்கிறது. பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர், என்று எல்லா சாதியினரும் பெண்களை அடிமைகளாகவே வைத்திருக்கின்றனர். ஏனெனில் சாதியக்கட்டமைப்பே ஆண்களின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக உருவாக்கப்பட்டது தானே.
அதேபோல குடும்பம் என்ற அமைப்பே பெண்களை அடிமைப்படுத்துவதற்கான ஒரு தந்திரம் தான். அன்று நந்தனை எரித்த மாதிரி இத்தனை நூற்றாண்டுகளாக எத்தனை பெண்களை எரித்திருப்பார்கள் ஆண்கள்? பெண்களை எக்காலத்தும் ( இளமையில் தந்தை, பருவத்தில் கணவன், முதுமையில் மகன் ) பாதுகாப்பின்மையில் வைத்து பெண்களையே பெண்களுக்கு எதிரியாக மாற்றியது ஆண்களின் மிகப்பெரும் தந்திரமல்லவா?. அதே போல பெண்ணே தன்னை உடலாக மட்டுமே பார்ப்பதற்கு அவளுடைய குழந்தைப்பருவத்திலிருந்தே அவளை அலங்காரப்பொம்மையாக்கி, நீளக்கூந்தலுக்காக, அழகான புருவத்துக்காக, அஞ்சன விழிகளுக்காக, சங்குக்கழுத்துக்காக, வடிவழகுக்காக, நிறத்துக்காக, வண்ண வண்ண ஆடைகளுக்காக, என்று தன்னை ஒரு பாலியல் பண்டமாக அறிந்தோ அறியாமலோ மாற்றிக் கொள்ள வைக்கிற தந்திரம் ஆண்களின் கைங்கர்யம் அல்லவா? இந்தியாவில் மட்டும் அழகுசாதனப்பொருட்களுக்கான நுகர்வு கடந்த இருபதாண்டுகளில் இருநூறு மடங்கு அதிகரித்துள்ளது. (தேங்க்ஸ்(!) டூ மின்னணு ஊடகங்கள்?). திரைப்படங்களில், விளம்பரங்களில், பெண்ணை நுகரும், சாப்பிடும், பொருட்களாகவே சித்தரித்து அதைக் காமெடியாகக் குடும்பத்தோடு கண்டுகளித்த இந்த ஆண்களின் சமூகம் எத்தனை சாமர்த்தியமாக தன் குரலை மாற்றிப் பேசுகிறது பாருங்களேன். போர்னோ இணையதளங்களில் மிக அதிகமான இணையதளங்களை ஒளிபரப்பும் அமெரிக்கா நிர்பயாவுக்கு வீரமங்கை விருது கொடுக்கும் வேடிக்கை போலத்தான். முறையான பாலியல் கல்வி இல்லாததினால் ஆண்கள் பருவமடைந்தவுடன் மிகச்சுலபமாக அன்று சரோஜாதேவி புத்தகங்கள் என்று சொல்லப்பட்ட செக்ஸ் பத்திரிகைகள் என்றால் இன்று வெறும் செல்போனிலேயே போர்னோ பார்த்து தன் வக்கிரத்தை வளர்த்துக் கொள்ள வழிவகுத்ததும் இந்த ஆண்கள் சமூகம் தான். முறையான பாலியல் கல்வியினால் லோகம் கெட்டுவிடும் என்று கூப்பாடு போடுவதும் இந்த சிவில் சமூகம் தான். ஆனால் இப்படி இழிவான வக்கிரமான போர்னோவினால் பாலியல்வன்முறை நிகழ்ந்தால் போட்டு விடலாம் தூக்கு என்று கொக்கரிப்பதும் இந்த சிவில்சமூகம் தான். இப்படி பலவேசம் போடும் இந்த சிவில் சமூகத்தைக் குறித்து சந்தேகப்படவேண்டியது அவசியம்.
உண்மையில் பெண்களைப் பற்றிய அடிப்படையான பார்வையே மாற வேண்டியதுள்ளது. முதலாளித்துவம் தன்னுடைய உழைப்புத்தேவைகளுக்காகவே பெண்களை வேலைக்குச் செல்ல அநுமதிக்கும்படி ஆண்களை வசப்படுத்தியிருக்கிறது. அப்படியும் கூட பெரும்பாலான பெண்கள் பொருளாதாரப்பாதுகாப்பில்லாமல் தான் இருக்கிறார்கள். முதலாளித்துவத்தின் அடிப்படைத்தத்துவமான எதையும் விற்பனை செய் என்பது தான். அந்தப்படியே அது பெண்களையும் பாலியலையும் விற்பனை செய்கிறது. ஆண்சமூகத்தின் உச்சபட்ச கொடுங்கோலன் இந்த முதலாளித்துவம். இந்த மகளிர் தினக்கொண்டாட்டங்கள் கூட விற்பனைக்கான ஒரு ஏற்பாடும் பொங்கிவரும் பெண் உணர்வுகளுக்கு ஒரு வடிகாலாக மடைமாற்றம் செய்யும் ஒரு ஏற்பாடு தான்.எனவே பெண்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதிருக்கிறது. தங்களுடைய வாழ்க்கைப்பார்வையை மாற்ற வேண்டியதிருக்கிறது. பெண்களுக்கு மோட்சம் திருமணம் தான் என்ற பார்வை மாற வேண்டும். அதே போல பெண்குழந்தைகளை வெறும் அலங்காரப்பொம்மைகளாக வளர்க்கிற மனோபாவம் மாறவேண்டும். காதல் திருமணங்களை ஊக்கப்படுத்த வேண்டும். சாதிமறுப்பு திருமணங்களை இருகரம் நீட்டி வரவேற்க வேண்டும். அதுமட்டுமல்ல பெண்களை பொதுவெளியில் கலந்து பழக, பங்கேற்க உற்சாகப்படுத்த வேண்டும். பெண்களின் இன்றைய நிலைமை குறித்து விழிப்புணர்வை பெண்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இதையெல்லாம் முதலில் நம் வீட்டிலிருந்தே துவங்க வேண்டும். முற்போக்கான, ஜனநாயக, உணர்வுள்ள ஆண்களும் பெண்களும், அமைப்புகளும் இணைந்து பணியாற்ற வேண்டும். வெறும் சடங்காக மகளிர் தினத்தைக் கொண்டாடுவதிலோ உறுதிமொழிகளை எடுப்பதிலோ எந்த பயனும் இல்லை. இன்னும் அடிப்படைகளை நோக்கி சமூகமாற்றத்தை நோக்கி நாம் பயணப்படவேண்டும்.
ஆதியில் என்று பெண் உற்பத்திசக்திகளை ஆணிடம் இழந்தாளோ அன்றிலிருந்தே பெண்ணை வெறும் பாலியல் பண்டமாக, குழந்தை பெறும் இயந்திரமாக ஆண் மாற்றி விட்டான். இதற்காகவே அரசியல்,தத்துவ, கலை, இலக்கிய, பண்பாட்டுக்களங்களில் பெண்களின்மனதை வசியப்படுத்தும் கருத்துக்களை சொல்லி அவர்களைத் தங்களைத் தாங்களே தியாகிகளாக்கி மடிவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் காவிய இதிகாசங்களிலும், காப்பியங்களிலும், செய்தான். தேவதாசி முறையை ஏற்படுத்தி பாலியல்வன்கொடுமை செய்யவில்லையா? சதி எனச்சொல்லி உடன்கட்டை ஏறச்சொல்லவில்லையா? என்ன தான் செய்யவில்லை பெண்களை. இவ்வளவும் செய்த, செய்து கொண்டிருக்கிற சிவில்சமூகம் தான் பெண்களுக்கெதிரான எல்லாக்கொடுமைகளுக்கும் பொறுப்பேற்கவேண்டும்.
உண்மையில் அந்த ஐந்து பேரையல்ல இந்த ஆண்களின் சமூகத்தைத் தான் தூக்கில் போட வேண்டும்.