Monday, 31 December 2012

ஆபத்தான சமூகமா? ஆபத்தான காலமா?

1 nature scenery (www  

உதயசங்கர்

 

சமீபகாலமாக நமது சமூகத்தில் நடந்து வருகிற நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது நாம் வாழும் இந்தக் காலம் ஆபத்தானதாக மாறியிருக்கிறதா? இல்லையெனில் நமது சமூகமே ஆபத்தானதாக மாறி விட்டதா? என்ற அச்சம் தோன்றுகிறது. ஆபத்தான காலகட்டம் என்றால் நாம் அதைப் போராடிக் கடந்து விடலாம். ஏனெனில் இந்தக் காலகட்டம் மாறுவதற்கான, மாற்றுவதற்கான, காரணிகள் காலத்தின் கர்ப்பத்திலேயே உருக்கொண்டுவிடும். ஆனால் சமுகமே ஆபத்தானதாக மாறிவிட்டால் பெரும்நாசம். சீரழிவு. பெரும்பான்மை சமூகம் மனசாட்சியற்றுப் போய் விட்டதோ என்ற பயம் தோன்றுகிறது. எப்போதுமே சமூகத்த்தின் மேன்மை குறித்து சிந்திக்கும் முற்போக்கான சக்திகள் செயல்திட்டமின்றி செயலிழந்து நிற்கிறதோ என்ற சந்தேகம் தோன்றுகிறது. சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதி, மத வேறுபாடுகள் மீண்டும் எழுச்சி கொண்டிருக்கிறன. உலகமயமாக்கலின் நவீன நுகர்வுக்கலாச்சாரத்தினால் நமது அறமாண்புகள் இழிவுப்படுத்தப்படுகின்றன. பழமைவாதத்தையும் நவீனத்தையும் தனித்தனியே போற்றிப் பாதுகாப்பாய் நமது மனங்களில் கொலுவிருக்கச் செய்வதில் ஆட்சியாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பழமைவாதத்தை, சாதிவேர்களை, வர்ணாசிரமத்தை, பெண்ணடிமைத்தனத்தைக் ஆணாதிக்கத்தைக் காப்பாற்றும் பொறுப்பைப் பெண்களே செய்கிற அவலத்தைக் கண்கூடாகக் காணமுடிகிறது. நாம் எங்கே நிற்கிறோம்? காட்டுமிராண்டிக்காலத்திலா? கற்காலத்திலா? மனிதமனதில் இத்தனை நூற்றாண்டுகளாக உருவாகிவந்த அறம், தயை, நேசம், அன்பு, கருணை, எல்லாம் எங்கே போயின? எந்த ஒரு கணத்திலும் மனிதன் விலங்காக இப்படிச் சொல்வதுகூட தவறு, கொடூரமான காட்டுமிராண்டியாக மாறி விடுகின்ற சந்தர்ப்பங்களைப் பார்க்கும்போது மனித இனத்தின் பெரும் அவநம்பிக்கை தோன்றுகிறது. இப்படி ஒரு இனம், சமுகம் இல்லாதொழியட்டும் என்று சாபமிடத் தோன்றுகிறது.

உலகமயமாக்கலின் ஏகாதிபத்தியத்தின், வேட்டைக்காடாக நமது சமுகத்தை மாற்றுகிற வேலையை நமது ஆட்சியாளர்கள் திறம்பட செய்து கொண்டிருக்கிறார்கள். ஏகாதிபத்தியநாடுகள் எதை விற்றாலும் வாங்குவதற்குத் தயாராக இந்தியா இருக்கிறது. அதில் ஒன்று தான் அணு உலை விற்பனையும். ஜான் பெர்கின்ஸின் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் புத்தகத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த பிறகு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் எல்லாம் எப்படி முன்கூட்டியே திட்டமிடப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டு அரசமைப்பு, அரசு நிர்வாகம், முதலாளித்துவ ஊடகங்கள், அரசியல் கட்சிகள் எல்லாம் அந்த ஒத்திகையின் அட்சரம் பிசகாமல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சொந்த நாட்டு மக்களின் அச்சத்தை விட அந்நிய நாட்டு நலன் முக்கியமானதாக போய்விட்டது. தங்களூக்காக மட்டுமல்ல ஒட்டு மொத்த சமூகத்தின் பாதுகாப்புக்காக போராடிக் கொண்டிருக்கும் கூடங்குள மக்களின் மகத்தான போராட்டம் ஓராண்டைத் தாண்டியும் அதற்கான எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. அடக்குமுறைகளால் அந்த மக்களின் போரட்ட உணர்வை அழித்து விட நினைக்கும் அரசு நிர்வாகம் அந்த ஊரைத் தனித்தீவாக்கி போகும் பாதைகளிலெல்லாம் அடக்குமுறை யந்திரங்களை நிறுத்தி பயமுறுத்திக்கொண்டிருக்கிறது. முதலாளித்துவ ஜனநாயகத்தின் கோரமுகத்தை அங்கே பார்க்கமுடிகிறது., சமுகத்தின் வாழ்வு, தங்கள் வாழ்வாதாரம், அழிந்துவிடும் என்ற அச்சத்தில் போராடிக் கொண்டிருக்கும் மக்களின் மீது தேசத்துரோக வழக்குகள், சதி வழக்குகள் லட்சக்கணக்கில் போடப்பட்டுள்ளன. எந்த அரசியல், பொருளாதாரப்பின்புலமற்ற அந்த எளிய மக்களின் போராட்டம் நமது சமூகத்தின் மனசாட்சியை ஏன் உலுக்கவில்லை. எல்லா நிகழ்வுகளும் நமக்கு சாயங்காலநேரத்து ஸ்னாக்ஸ் ஆகி விட்டதா? பயமாக இருக்கிறது. இது ஆபத்தான காலமா? இல்லை ஆபத்தான சமூகமா?

அடையாள அரசியலின் ஒரு முகமாக சாதி அரசியல் முன்னெப்போதையும் விட இப்போது நமது சமூகத்தில் ஓங்கியிருக்கிறது. துரதிருஷ்டவசமாக இந்த சாதி அரசியலை அதன் ஆரம்பகாலத்தில் ஊக்குவித்து அதற்குத் தத்துவார்த்தபின்புலத்தை நமது அறிவுஜீவிகளில் இலக்கியவாதிகளில் பலர் கொடுத்ததை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. ஏற்கனவே வர்ணாசிரமக் கோட்பாட்டினால் ஈராயிரம் ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு சமுகத்தில் இந்தச் சாதி அரசியல் என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தமிழ் அறிவுஜீவிகள் முன்னுணரவில்லை. தங்களை முன்னிறுத்தும் போராட்டகளத்தில் இதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். தன்வாழ்நாள் முழுவதும் வர்ணாசிரமத்துக்கு எதிராக, பிராமணியத்துக்கு எதிராகப் போராடிய நமது சமுகத்தின் கலகக்காரச் சிந்தனையாளர் பெரியாரின் அத்தனை உழைப்பையும் மிகச் சில வருடங்களிலே துடைத்தழித்து விட்டது சாதி அரசியல். விளைவு சாதிகள் தோறும் புதிய மனிதக்கடவுள்களின் தோற்றம், வழிபாடு, அந்தக் கடவுள்களின் பெயரால் வன்முறை, கொலை, கொள்ளை. சமுகத்தின் மனசாட்சி என்னவாயிற்று? பரமக்குடி, மதுரை, சம்பவங்களின் உள்ளர்த்தம் இது தானே.

அகமணமுறையின் மூலமே சாதியத் தூய்மையைக் காப்பாற்ற முடியும் என்ற மனுதர்மசிந்தனையை யார் யாருக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்? ஆனால் சமுகம் அதைக் கடைப்பிடிக்கிறதே. அதுவும் சாதிப்படிநிலையில் கீழ்நிலையில் வைக்கப்பட்டிருக்கிற சாதிகளுடனான திருமணம் என்றால் ரத்தம் கொதித்து, கௌரவக்கொலை தொடங்கி, தருமபுரியில் நடந்திருப்பதைப் போல கூட்டுக்கொள்ளை, என்று சமூகமே திரண்டு நடத்திய வன்முறை அரங்கேற்றத்தைப் பார்க்கும்போது நாம் மீண்டும் நமது கற்காலத்திற்குத் திரும்பி விட்டோமா? என்ற அச்சம் எழுகிறது. இது ஆபத்தான காலமா? இல்லை ஆபத்தான சமூகமா?

தனித்தனியாக இருக்கும்போது எத்தனை நல்லவனாக அறவுணர்ச்சி மிக்கவனாக, சமூகமனிதனாக, அன்பு, தயை, கருணை, மிக்கவனாக இருக்கிறான் மனிதன்! ஆனால் கும்பலாக மாறும்போது அவனிடம் காட்டுமிராண்டித்தனத்தைத் தவிர வேறு எதுவும் இல்லாமல் போகிறதே. இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக மானுடம் தன் அநுபவத்தின் வழியாகக் கற்றுணர்ந்த நாகரீகம், பண்பாடு, அறவிழுமியங்கள் எல்லாம் வேஷம் தானோ? இல்லை போர்வை போர்த்திய காட்டுமிராண்டி தானோ மனிதன்? பண்பாட்டு அறிஞர் கே.என். பணிக்கர் மதச்சார்பின்மைக்கான கலாச்சார நடவடிக்கைகளைப் பற்றிப் பேசும்போது எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் எல்லாமத, இன, மொழி, மக்களையும் உள்ளடக்கிய கலாச்சார அமைப்புகளை உருவாக்கி பரஸ்பரம் அந்நியோன்யத்துடன் அனைத்து விழாக்கள், நிகழ்ச்சிகள், என்று உறவுகளைப் பலப்படுத்தச் சொல்லுவார். ஆனால் தருமபுரியில் நடந்த பொருளாதார அழித்தொழிப்பு சம்பவத்தை நடத்தியிருப்பது எங்கிருந்தோ வந்த வேற்று மனிதர்களல்ல. அந்தந்த ஊர்களின் வழியே போய்வந்து கொண்டிருக்கும், வியாபாரம், கொடுக்கல் வாங்கல், என்று உறவுகளைக் கொண்டிருந்தவர்கள் தான். வன்முறை நடக்கும் போது ஒரு பெண் கேட்கிறார், “ ஐயா, பழகுன ஆட்களே இப்படிச் செய்யுறீங்களே..” அதற்கு கொள்ளையடித்துக் கொண்டிருந்த மனிதர் சொல்லியிருக்கிறார், “ பழகுனா சம்பந்தம் பண்ணிக்க முடியுமா..” அங்கே பிராமணர்கள் யாரும் கிடையாது. பிராமணியம் என்றால் என்னவென்றே அவருக்குத் தெரியாது. வேதங்கள் என்றால் என்னவென்றோ, மனுதர்மம் என்றால் என்னவென்றோ தெரியாது. வருணாசிரமக் கோட்பாட்டின் படி தான் எந்த இடத்தில் இருக்கிறோம். தன்னுடைய சாதியைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றும் தெரியாது. மனுதர்மத்தில் எப்படியெல்லாம் தான் இழிவு படுத்தப்பட்டிருக்கிறோம் என்றும் தெரியாது. ஆனால் அவருடைய பொதுப்புத்தியில் வருணாசிரமும், மனுதர்மமும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கிறதே. அது தான் அவரை இப்படிப் பேசச் சொல்கிறது. அது தான் அவருடைய கட்சித்தலைவரையும் பேசச்சொல்கிறது. தன்னுடைய அரசியல் பதாகைகளில் பெரியாரையும், அம்பேத்கரையும், காரல்மார்க்ஸையும், வைத்துக் கொண்டே பிராமணியத்தின் கொடிய நடைமுறையைக் கடைப்பிடிக்கச் சொல்கிறது. சமூகமும் இந்த பலவேசத்தைப் பார்த்து வாளாவிருக்கிறது. இது ஆபத்தான காலமா? இல்லை ஆபத்தான சமூகமா?

சமீபத்தில் மறைந்த இனவெறி அரசியலின் பிதாமகர் பால்தாக்கரேயின் அரசியல் வாழ்க்கை பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் அத்தகைய வெறுப்புஅரசியலை நடத்திய அவருடைய இறுதி நிகழ்ச்சிக்கு ஐந்திலிருந்து பத்து லட்சம் பேர் கூடியிருந்தார்கள் என்ற செய்தி உண்மையில் அதிர்ச்சியளித்தது. அதை விட பெரிய அதிர்ச்சி. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, இடதுசாரிகளைத் தவிர மற்றவர்கள் அவர் ஏதோ நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தலைவரைப் போல எந்த விமர்சனமுமின்றி உரைச்சித்திரம் நிகழ்த்தியது அதை விட பெரிய கொடுமை. எல்லோருக்குள்ளும் ஒரு ஹிட்லர் இருக்கிறானா? சந்தேகமாயிருக்கிறது. இது ஆபத்தான காலமா? இல்லை ஆபத்தான சமூகமா?

இது எல்லாவற்றுக்கும் உச்சகட்டமாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போவது. பெண் பிறப்பதற்கு முன்பே கருவாக இருக்கும்போதே அவளுடைய போராட்டம் தொடங்கி விடுகிறது. பிறந்து, நோய், ஊட்டச்சத்துக்குறைபாடு, குடும்பத்தில் அலட்சியம், அவமானம், வீட்டுவேலைகள் என்ற ஆபத்துகளோடு வளரும்வரை குடும்பத்தோடு போராட்டம் என்றால் கல்வி கற்கத் தொடங்குவதிலிருந்து தன் இறுதிக் காலம் வரை சமூகத்தோடு போராட்டம். ஒரு சமூகத்தையே எதிர்த்து வளர்கிறாள். பிறந்ததிலிருந்தே ஆண்சமூகம் அவளை ஒரு பாலியல்கருவியாக நினைக்கிற அவலத்தை என்னவென்று சொல்ல? தந்தை, சகோதரன், சொந்தக்காரன்கள், அக்கம்பக்கத்துகாரன்கள், பழகியவன்கள், அந்நியன்கள், எங்கும் ஒரு பெண்ணுக்கு எதிரிகளாகவே இருக்கிற சமூகம் உயிர்வாழ வேண்டுமா? திரைப்படம், பத்திரிகைகள், மின்னணு ஊடகங்கள், இணையதளங்கள், என்று எங்கும் பெண் உடல் காட்சிப்பொருளாய் மாற்றப்பட்டுள்ள, அதற்கு எதிராக ஒரு சுட்டுவிரலைக் கூட அசைக்காத இந்த ஆணாதிக்கக்குடிமைச் சமூகம் உயிர்வாழத்தான் வேண்டுமா?

டெல்லியில் நிர்பயா, தாதன்குளத்தில் புனிதா, இன்னும் இன்னும் தினசரிகளில் பெண்குழந்தைகளுக்கு நேரும் பாலியல்வன்முறைகளைக் கேள்விப்படும் போது உடல் நடுங்குகிறது. இப்போது தான் நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு பெண்கள் படிக்கவும், மிகக்குறைந்த சதவீதமானவர்கள் வேலைக்குச் செல்லவும், சற்றே பொருளாதார ரீதியாகச் சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கவும் ஆரம்பித்திருக்கும் வேளையில் பெண்ணுடலைச் சிதைத்து அவர்களை மீண்டும் முடமாக்க நினைக்கிற இந்த ஆணாதிக்கச் சமூகம் உயிர் வாழத்தான் வேண்டுமா? இது ஆபத்தான காலமா? இல்லை ஆபத்தான சமூகமா?

குடிமைச்சமூக மக்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியாது. போலி அரசியல்வாதிகள் பின்னால் அணிதிரள்கிறார்கள். பொருளாதாரச்சுரண்டல் என்றால் என்னவென்று தெரியாது. தமக்கு வாய்ப்புக் கிடைத்தால் முதலாளியாகி விட நினைக்கிறார்கள். குறுக்குவழியில் சம்பாதிக்க ஓடுகிறார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் கவலையில்லையென்று குவாட்டருக்கும் பணத்துக்கும் ஓட்டளிக்கிறார்கள். இனவெறி, மதவெறி, சாதிவெறி, என்று எல்லா வெறிகளுக்கும் மிகச்சுலபமாக பலிகடா ஆகிறார்கள். தன்னைத்தவிர வேறு யாரும் இந்த உலகத்தில் இல்லையென்ற எண்ணத்திலோ, இருக்கக்கூடாதென்ற ஆசையிலோ சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள். சமூகத்தின் ஏற்றதாழ்வுகளைப்பற்றிக் கவலைப்படாதவர்களாக, ஏழ்மை, இல்லாமை, சமூக அவலங்கள் இதைப் பற்றிக் கவலைப்படாதர்களாக இருக்கிறார்கள். பகுத்தறிவற்றவர்களாக, மூடநம்பிக்கையின் முடைநாற்றமெடுப்பவர்களாக இருக்கிறார்கள். உண்மை எது? பொய் எது? என்று தெரியாதவர்களாக இருக்கிறார்கள். எளிமை கண்டு இகழ்கிறார்கள். ஆடம்பரத்தைக் கண்டு பிரமிக்கிறார்கள். கேளிக்கைகளில் மூழ்குபவர்களாக, குடிகாரர்களாக, அறமற்றவர்களாக, பண்பாடற்றவர்களாக, நாகரீகத்தைப் பவுடர் பூச்சைப்போல பூசிக் கொள்பவர்களாக, கொடியவர்களாக, வாய்ப்பு கிடைத்தால் ஏமாற்றுபவர்களாக, பிறர் சொத்தை அபகரிப்பவர்களாக, இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பவர்களாக, மலைகளை உடைப்பவர்களாக, மணல்கொள்ளையர்களாக, பல்லுயிரிகளைக் கொல்பவர்களாக, இயற்கைச் சமன்பாட்டை குலைப்பவர்களாக, சகமனிதன் மீது குரோதம் கொண்டவர்களாக, குடிநீரை விற்பவர்களாக, விவசாயத்தை மதிக்காதவர்களாக, மனோதிடமில்லாதர்களாக, கோழைகளாக, அடிமைகளாவதற்குத் தயாராக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள்திரளைக் கொண்ட இந்தக் குடிமைச் சமூகம் ஆபத்தான சமூகமா இல்லையா?

ஒரு ஆபத்தான காலகட்டத்தில் ஒரு ஆபத்தான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதோ இன்னும் ஒரு ஆண்டு கழிந்து விட்டது. காலத்தின் பேராற்றில் ஒரு துளி. நம்முடைய வாழ்நாளில் முந்நூற்றுஅறுபத்தைந்து நாட்கள் கடந்து விட்டன. எல்லா ஆண்டுகளையும் போல இனி வரும் ஆண்டும் கருப்பு ஆண்டாகவே மலருமா? சமூகத்தின் அத்தனை கொடுமைகளும் இப்படியே மாறாமல் கூடிக் கொண்டே போகுமா? நாம் நம்முடைய எதிர்காலச்சந்ததியினருக்கு எந்த மாதிரியான சமூகத்தைக் கொடுக்கப் போகிறோம்? நமக்கு முன்னால், நம் மனசாட்சியின் முன்னால் இந்தக் கேள்வி பெரும்பாறையென நிற்கிறது. உண்மையில் இப்போது நெருக்கடி முற்றிவிட்டதென்றே தோன்றுகிறது. சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள், சமூகத்தை மாற்ற வேண்டும் என்று லட்சியம் கொண்டவர்கள் ஒன்றிணைந்து தங்கள் செயல்திட்டங்களை உருவாக்க வேண்டிய காலம் இது. இடதுசாரிகள், பெரியாரியவாதிகள், அம்பேத்கரியவாதிகள், பெண்ணியவாதிகள், சமூக மாற்றத்தில் அக்கறையுள்ள அறிவுஜீவிகள், இலக்கியவாதிகள், முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள், உண்மையான ஜனநாயக எண்ணம் கொண்டவர்கள், பாலினச்சிறுபான்மையினர், என்று எல்லோரும் இணைந்து பொதுத்தளத்தில் எல்லோருக்கும் பொதுவான ஒரு செயல்திட்டத்தை உருவாக்கி சமூகத்தின் பொதுப்புத்தியில் தலையிட வேண்டும். குறைந்தபட்ச பண்பாட்டு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயல்படுவதின் மூலம் மட்டுமே இந்த ஆபத்தான காலத்திலுள்ள நம்முடைய ஆபத்தான சமூகத்தை மாற்ற முடியும். இது தான் நம்முடைய இன்றைய தலையாயக்கடமை. காலமும் கழிந்து கொண்டிருக்கும் இந்த ஆண்டும் நமக்கு விடுக்கும் செய்தி. காலமும் வரலாறும் அழைக்கிறது நம்மை. அதன் குரலுக்குச் செவிமடுப்போம்.

4 comments:

  1. உங்கள் கருத்துகள் என்னுடைய கருத்துகளுடன் முழுமையாக ஒத்துப் போகின்றன. இந்த நிலையை மாற்ற என்ன செய்யலாம் என்று இந்நாட்டின் தலைவர்கள், அறிவுஜீவிகள் சிந்திக்கவேண்டும்.

    ReplyDelete
  2. உங்கள் எழுத்துக்கள் வலிமையாக் வும்கூர்மையாக வும்இருக்கின்றன. அறியாமையே பலருக்கு அமைதி தருகிறது , அறிவு பெற்றுசின்தி ப் பவர்களெ சமுகத்தை எண்ணிகவலை ப் படுகிறார்கள் .
    ராமதசை த் தொடர்ன்து இன்னும் பல சாதிகள் அணிதிரட்ட பெஸ் புக் முலம் ஆரம் பித்திருக்கின்றன என் பதை காணுற்ற் பொது அச்சமாகயிருக்கிறது.

    ReplyDelete
  3. சிந்திக்கவைக்கும் கருத்துக்கள்

    ReplyDelete
  4. பெரும்பான்மை சமூகம் மனசாட்சியற்றுப் போய் விட்டதோ என்ற பயம் தோன்றுகிறது. எப்போதுமே சமூகத்த்தின் மேன்மை குறித்து சிந்திக்கும் முற்போக்கான சக்திகள் செயல்திட்டமின்றி செயலிழந்து நிற்கிறதோ என்ற சந்தேகம் தோன்றுகிறது.

    நிஜம் தான்.
    அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். நண்பர்கள் தயவு செய்து வாசிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete