Wednesday 26 December 2012

எக்ஸிஸ்டென்சலிசமும் எமனின் அழைப்பும்

shutterstock_35113210-300x300

உதயசங்கர்

எழுத்தாளன் என்பவனுக்கு அனுபவங்கள் அவசியம் என்று நண்பர்கள் நாங்கள் அடிக்கடி பேசிக் கொண்டோம். அப்போது தான் கல்லூரி முடித்திருந்த எங்களுக்கு உலக அனுபவங்களே இல்லை என்று மனதார நம்பினோம். அதனால் அநுபவங்களைத் தேட வேண்டும் என்றும், எல்லா அனுபவங்களும் பெற வேண்டும் என்று முடிவு செய்தோம். நாங்கள் எழுத்தாளர்களை அவதானித்ததில் எல்லா எழுத்தாளர்களுக்கும் அப்படிப்பட்ட அநுபவங்கள் வாய்த்தன அல்லது அப்படி அவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். செவிவழிச் செய்திகளாகவும், புத்தகங்கள் வாயிலாகவும் நாங்கள் தெரிந்து கொண்டதெல்லாம் எழுத்தாளன் என்பவன் களவும் கற்று மறக்க வேண்டும். வாழ்வின் அத்தனை சூழ்நிலைகளையும் அநுபவித்து உணர வேண்டும் என்று ஆசைப்பட்டோம். பாரதி தொடங்கி ஜி.நாகராஜன் வரை எல்லா ஆளுமைகளின் வாழ்வனுபவங்களும் எங்களுக்கு பொறாமையூட்டின. அது மட்டுமல்ல அப்போது எதை எழுதினாலும் இது உங்கள் வாழ்க்கையில் நடந்திருக்கிறதா நீங்கள் அநுபவித்திருக்கிறீர்களா? என்றெல்லாம் கேள்விக்கணைகளை எதிர் கொள்ள வேண்டியதிருந்தது.

இடைசெவல் கி.ரா.வைப் போய் பார்க்கும்போது அவர் பீடி குடித்துக் கொண்டிருந்தார். எங்களூர் எழுத்தாளர்கள், இடது சாரித் தோழர்கள் பலருக்கும் பீடி அல்லது சிகரெட் குடிக்கும் பழக்கம் இருந்தது. டீ குடித்துவிட்டு ஒரு பீடியையோ சிகரெட்டையோ பற்ற வைத்து அவர்கள் ஆழ்ந்து இழுத்து விட்டுப் பேசும்போது அபூர்வமான விஷயங்கள் வந்து விழுந்தன. நாங்கள் பார்க்காத கோணத்தில், புதிது புதிதாய் இந்த உலகைப் பற்றிய வியாக்கியானங்கள், இலக்கியம் பற்றிய ஆச்சரியமான சொல்லாடல்கள் பீடிப் புகை வழியே வந்து விழுந்து கொண்டேயிருந்தன. நாங்கள் அந்த அறிவின் ஊற்றுக்கண் பீடியிலோ, சிகரெட்டிலோ தான் இருக்கிறது என்றும் ஒரு தீவிரமான மனநிலையை, படைப்பின் உக்கிரத்தை அடைவதற்கு அவை தான் உதவுகிறது என்றும் அப்பாவிகளாய் நம்பினோம். நாங்களும் அறிவுஜீவியாக வேண்டாமா? எனவே அப்போதைய சூழ்நிலைக்கேற்ப பீடி குடித்தோம். ஆனால் நாத்தம் தாங்க முடியவில்லை. அதோடு இருமல் வேறு. அதற்காக அறிவுஜீவித்தனத்தை விட்டு விட முடியுமா? சரி என்று சிகரெட் பிடிக்கப் பழகினோம். ஒருத்தன் மூக்கு வழியாகவே புகைவிட்டான் என்றால் இன்னொருத்தன் பீப்பி வாசித்தமாதிரி புகையை எச்சிலோடு வழிய விட்டான். மற்றவனோ ஆழ்ந்து உள்ளே இழுத்தான், புகை வெளியே வரவில்லை என்றதும் பயம் வந்து விட்டது. ஒரு மாதிரி முழித்துக் கொண்டு நின்றான்.

தோழர்கள் சத்தம் போட்டார்கள். பழகாதீர்கள் பழகி விட்டால் பின்னர் அதை விட முடியாது என்று அறிவுரை சொல்லத்தான் செய்தார்கள். இதை அவர்கள் பீடி பிடித்துக் கொண்டே சொன்னது தான் எங்களுக்கு வேடிக்கையாக இருந்தது. அதோடு பீடி, சிகரெட் புகைப்பவர்களுக்கு அப்படி புகைக்கிற மற்றவர்களோடு ஒரு அந்நியோன்யம் இருந்த மாதிரி தோன்றியது. எங்களுக்குள் இரண்டு கருத்துகள் வந்தன. ஒன்று நாங்களும் அறிவுஜீவியாவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. இரண்டாவது அப்படி பீடியோ சிகரெட்டோ பிடிக்கவில்லையென்றால் அவர்களுடன் அந்நியோன்யமாக பழக முடியாது. இதில் கூடுதலாக இன்னொரு பாயிண்ட் பீடி குடிப்பது என்பது பாட்டாளி வர்க்கக்கலாச்சாரம். இத்தனையும் சேர்ந்த பிறகு விடுவோமா? தினசரி ஒன்றோ இரண்டோ பீடிகள் வீதம் குடித்து பழகிக் கொண்டிருந்தோம். அப்படி இருக்கும் நாளையிலே ஒரு நாள் சிவசு என்ற சிவசுப்பிரமணியன் சாயங்காலவேளையிலே நாங்கள் எப்போதும் கூடிப் படிக்கிற, விவாதிக்கிற, சிவகிரி மடத்தைச் சேர்ந்த துணை மடமான முத்தானந்தசாமி மடத்தின் புளியமரத்தடியில் கூடியிருக்கிற நேரத்தில் ஒரு விபரீதமான திட்டத்தோடு வந்தான். அவன் மிகுந்த தைரியசாலி. எங்கிருந்தோ கஞ்சாவை வாங்கிக் கொண்டு வந்திருந்தான். நாங்கள் பயந்தோம். அவன் தான் இது ராஜபோதை. பாரதியின் தீக்குள் விரலை வைத்தால் எப்படி வந்துச்சின்னு நெனக்கிறே.. இந்த அநுபவமெல்லாம் இல்லாமல் நீங்கள்லாம் என்னத்த கவிதை, கதை எழுதப் போறீங்களோ என்று உசுப்பேத்தி விட்டான். ஏற்கனவே எழுத்தாளனாகி இந்த உலகை உய்விக்க ( ! ) வேண்டுமென்று வெறியுடன் இருந்த நாங்களும் அவனுடைய தந்திரத்தில் தூண்டில் புழுவாய் சிக்கினோம். புகைக்க முடியாது வெளியே தெரிந்து விடும் என்று சாரதி ஆட்சேபித்தான். சரி என்று ராஜு வீட்டுக்குப் பால் வாங்கக் கொண்டு வந்த தூக்குவாளியைக் கொண்டு போய் முகைதீன்பாய் கடையில் கடனுக்கு மூன்று டீ வாங்கி வந்தான். அதில் கஞ்சாத்தூளைப் போட்டு ஆளுக்குக் கொஞ்சமாய் குடித்தோம். ராஜபோதையை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தோம். ஒருவருக்கொருவர் ஏதாச்சும் தெரியுதா ஏதாச்சும் தெரியுதா என்று கேட்டுக் கொண்டோம். ஒரு சித்தெறும்பு கூடக் கடிக்கவில்லை.

நாங்கள் சிவசுவை முறைக்க அவனோ ஆமா ஒரு ஆள் குடிக்க வேண்டியதை நாலுபேர் குடிச்சா மயிரா வரும்.. என்று முந்திக் கொண்டான். சரி இன்னொரு நாள் ஆளுக்கொரு பொட்டலமாக வாங்கிக் குடித்துப் பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். அன்று காலையில் நான் படித்த கவிஞர் பாலாவின் எக்ஸிஸ்டென்சலிசம் புத்தகத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தேன். மார்ட்டின் ஹைடேக்கர், கீர்க்கேகாடு, சார்த்தர், ஆல்பர்ட் காம்யு, என்று நவீன தத்துவாதிகளைப் பற்றியும் சர்ரியலிசம், எக்ஸ்சிஸ்டென்சலிசம், பற்றியும் பேசினோம்.

மனிதனுக்கு வாழ்க்கையில் மரணம் தான் பெரிய பிரச்னை. மரணத்தைக் கடப்பது எப்படி என்று தான் எல்லா மதங்களும் எல்லா தத்துவங்களும் ஆய்வு செய்து ஒவ்வொரு முடிவுக்கு வந்திருக்கின்றன. மரணத்துக்குப் பிறகு மனிதன் என்னவாகிறான்? மரணம் கடந்த பெருவாழ்வு வாழ்வது எப்படி? இந்திய உபநிஷதத்தில் நசிகேதனின் மரணம் என்றால் என்ன ? என்ற கேள்விக்குப் பதில் என்ன என்று விலாவாரியாகப் பேசத் தொடங்கியிருந்தோம். இருபதுகளில் இருந்த எங்களுடைய பேச்சை யாராவது கேட்டிருந்தால் என்னடா இது சாவைப் பத்தி பேசிக்கிட்டிருக்காங்க என்று முகம் சுளித்திருக்கவும் கூடும். ஆனால் நாங்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுகிற நிலைமையில் இல்லை. நாங்கள் தான் அறிவுஜீவிகளாயிற்றே

எப்போதும் கொஞ்சம் விதண்டாவாதமாகவும் நான் என்ன பேசினாலும் மறுப்பு சொல்லும் ராஜு அப்போதும் கீழே தரையில் போய்க் கொண்டிருந்த ஒரு எறும்பை காலால் மிதித்து நசுக்கினான். பின்னர் இந்தா இந்த எறும்பு செத்துப்போச்சு.. அது மரணத்துக்குப் பின்னால எங்கே போச்சு.. மரணத்தைக் கடக்க அது என்ன செய்ஞ்சுச்சு சொல்லேன்.. மரணத்தைக் கடப்பதாம்.. மயிரு.. செத்தா அவ்வளவு தான் அதுக்கப்புறம் உங்களைத் தூக்கிச் செமந்துகிட்டேவா இருப்பாங்க.. என்று கத்தினான். நான் அவன் முகத்தைப் பார்த்தேன். முகம் துடிதுடிக்க கண்கள் கோவைப்பழமாய் இருந்தன. அவன் சொல்லி முடித்ததும் சிவசு சிரித்தான். சிரித்தான். சிரித்தான்.. சிரித்துக் கொண்டேயிருந்தான். சிரிப்பை நிறுத்தவே முடியாது என்பதைப் போலச் சிரித்துக் கொண்டேயிருந்தான். சிரிப்பின் ஒலி நீண்டு கொண்டே போய் அழுகையின் ஈளக்கம் போல ஒலித்துக் கொண்டேயிருந்தது. சாரதி விரலால் மண்ணில் மரணம் மரணம் என்று எழுதியெழுதி அழித்துக் கொண்டேயிருந்தான். எனக்கு ஒரு மாதிரி புரிந்து விட்டது. மருந்து வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. நான் உடனே சபையைக் கலைத்து விடலாம் என்று சிவசுவிடம் சொல்கிறேன். நேரமும் இருட்டி விட்டது. அவர்கள் ஒவ்வொருவராய் எழுந்து கிளம்பத் துவங்கும் முன்பே நான் மடத்தின் திட்டிவாசல் வழியே ரோட்டிற்கு வந்து விட்டேன். தலை பாரமாக இருந்தது. தலையைத் தவிர உடம்பு இல்லாததைப் போல காற்றாய் இருந்தது. பிடதியில் ஒரு தீக்கங்கு கனன்று எரிந்து கொண்டிருந்தது. அடுத்த தெருவில் தான் என்னுடைய வீடு இருந்தது. நான் நடந்து கொண்டிருந்தேன். நடக்க நடக்க தொலையாத தூரமாகிக் கொண்டிருந்தது. ஒரு வேளை நடப்பதைப் போல ஒரே இடத்தில் நின்று கொண்டு கால்களை அசைத்துக் கொண்டிருக்கிறோமோ என்ற சந்தேகமும் வந்தது. இல்லை நடந்து கொண்டுதானிருந்தேன். யாரோ என்னிடம் ஏதோ கேட்டார்கள். ஏதோ பதில் சொன்னேன். எதுவும் நினைவிலில்லை. நான் நடந்து கொண்டிருப்பது மட்டும் தான் என் ஞாபகத்திலிருந்தது. நடப்பது மட்டுமே நானாக, நானே நடையாக மாறிக் கொண்டிருந்தேன். நன்றாக இருந்தால் ஐந்து நிமிடங்களில் வந்து சேர்ந்திருக்கக் கூடிய என் வீட்டை அன்றிரவு முழுவதும் நடந்தாலும் அடைய முடியாது என்று தோன்றியது.

இப்பொழுது நினைத்தாலும் ஆச்சரியமாய் இருக்கிறது. எப்படி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன் என்று தெரியவில்லை. வீட்டுக்கு வந்தவுடன் செய்த முதல் காரியம் வீட்டு மூலையில் போர்வையை விரித்து முடங்கிக் கொண்டேன். என்னுடைய அம்மா ஏதோ கேட்டார்கள். ஏதோ பதில் சொன்னேன். அப்படியே பூமி கீழேயே போவது போலிருந்தது. நான் அதலபாதாளத்துக்குப் போய்க் கொண்டிருந்தேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் மூழ்கிப் போய் விட்டேன். காலையில் எழுந்தவுடன் பிரெஷ்ஷாக இருந்தது. தி.ஜானகிராமனின் மோகமுள் நாவலைப் படிக்க உட்கார்ந்து விட்டேன். அன்று மாலைக்குள் நான் அதை ராஜுவிடம் கொடுக்க வேண்டும். ஆனால் நினைத்த மாதிரி சாயந்திரத்துக்குள் மோகமுள்ளைப் படித்து முடிக்க முடியவில்லை. சாயங்காலம் வீட்டிலிருந்து கிளம்பி சாரதியைப் பார்க்கப் போனேன். அவன் அப்போது தான் ராஜுவின் வீட்டிலிருந்து வந்திருந்தான். டேய் ஒரு முக்கியமான விஷயம் என்றான். இரண்டு பேரும் பாய் டீக்கடைக்குப் போனோம். நேற்று எல்லோரும் பிரிந்து போன பிறகு சாரதி இன்று மதியம்வாக்கில் ராஜுவின் வீட்டிற்குப் போயிருக்கிறான். ராஜு வீட்டிலில்லை. அவனுடைய அம்மா அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள்.

உள்ளுக்குள் பதைபதைப்புடன் ஏன் என்னாச்சு.. என்று கேட்டிருக்கிறான் சாரதி. ராஜுவும் வீட்டிற்குப் போய் என்னை மாதிரியே படுத்திருக்கிறான். அவனுடைய அம்மா கேட்டதுக்கு ஏதோ சம்பந்தமில்லாமல் உளறியிருக்கிறான். அப்போதே அவனுடைய அம்மாவுக்குச் சந்தேகம் வந்து என்னடா உடம்பு சரியில்லையா காய்ச்சல் எதும் அடிக்குதா.. என்று கேட்டிருக்கிறார்கள். அவன் எதுவும் சொல்லாமல் தூங்கியிருக்கிறான். நடுராத்திரியில் அவனுக்கு நாவறண்டு தொண்டையிலிருந்து சத்தம் போட முடியாமல் யாரோ மேலே விழுந்து அமுக்குற மாதிரி தோன்ற அவன் என்ன முயற்சி செய்தும் கையையோ காலையோ அசைக்க முடியாமல் போய் விட தான் செத்துப் போய் விடப் போகிறோம் என்று நினைத்து விட்டான். போதாக்குறைக்கு சாயங்காலம் நாங்கள் பேசிய மரணம் பற்றிய பேச்சு சித்திரங்களாகக் கண்முன்னால் ஆட அவன் உண்மையில் பயந்து போய் விட்டான். அம்மா என்று குரலெழுப்ப முடியவில்லை. சற்று தள்ளிக் கட்டிலில் படுத்திருக்கும் அப்பாவைக் கூப்பிட கையை அசைக்க முடியவில்லை. என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் தன் முழு பலத்தையும் திரட்டி ஐயோ..அம்மா.. ஐயோ அம்மா என்று கூப்பிட்டு விட்டான். அவன் கூப்பிட்டு விட்டதாய் நினைத்தான். ஆனால் அவன் போட்ட கூப்பாட்டில் அந்த வளவே எழுந்து விட்டது. அவனுடைய அப்பாவும் அம்மாவும் அலறியடித்து எழுந்து லைட்டைப் போட்டு அவனருகில் வந்து என்னடா என்ன? என்று கேட்க என்னால கையக் கால அசைக்க முடியல.. என்னமோ மாதிரியா இருக்கு உடனே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போங்க என்று சொல்லியிருக்கிறான். அவனுடைய அம்மா அழுது விட்டார்கள். அப்பா உடனே தெரு முக்கில் இருக்கும் குதிரை வண்டியைப் பிடித்து அதில் அவனைப் படுக்க வைத்து வீட்டோடு ஆஸ்பத்திரி வைத்திருக்கும் சுகுமாரிதாஸிடம் கூட்டிக் கொண்டு போயிருக்கிறார். குதிரை வண்டியில் போகும் போது பின்னால் வந்த லாரியின் ஹெட்லைட் வெளிச்சத்தைப் பார்த்து ஐயோ எமன் வரானே.. ஐயோ எமன் வரானே.. என்று கத்தியிருக்கிறான். அவனைச் சமாதானப்படுத்துவதற்குள் அவனுடைய அப்பாவுக்கு போதும் போதும் என்றாகி விட்டது. அவருக்கு பையனுக்கு ஏதோ கோட்டிகீட்டி பிடிச்சிருச்சோ என்று சந்தேகமும் வந்திருக்கிறது. எப்படியோ ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள். டாக்டர் என்ன சாப்பிட்டே என்று கேட்டதற்கு சாயங்காலம் ஒரு டீக்கடையில் டீ குடித்ததுக்கப்புறம் தான் என்று சொல்லியிருக்கிறான். அவருக்கும் ஒன்றும் புரியவில்லை. சரி எதற்கும் இருக்கட்டும் என்று தூங்குவதற்கு ஊசி போட்டு விட்டார். இந்தக் கூத்து பண்ணிட்டானே என்று சாரதி சொன்னான். எனக்கு ராஜுவின் அப்பாவைப் பார்த்தாலே பயம்.

ஒருவேளை எல்லாவற்றையும் அவன் டாக்டரிடமோ, அவனுடைய அம்மா அப்பாவிடமோ சொல்லியிருந்தால் என்ன ஆகும்? அவ்வளவு தான். வேலையில்லாமல் தெண்டச்சோறு சாப்பிட்டுகிட்டு சுத்திகிட்டு திரியுதுமில்லாமல் இது வேறயா என்று வாரியலால நாலு சாத்து விழுமே. என்ன செய்ய? மார்ட்டின் ஹைடேக்கரும், கீர்க்கேகாடுமா வந்து காப்பாத்தப் போகிறார்கள். என்ன சொல்லித் தொலைச்சிருக்கானோ என்று பயந்தபடியே நானும் சாரதியும் மெல்ல அரவமில்லாமல் ஆஸ்பத்திரிக்குப் போய் எட்டிப் பார்த்தோம்.. அவனுடைய அப்பா எங்களை வரவேற்றவிதத்திலேயே தெரிந்து விட்டது பிள்ளையாண்டன் எதையும் உளறவில்லை. ராஜு அசட்டுத்தனமாய் எங்களைப் பார்த்துச் சிரித்தான். அவனுடைய அப்பா எங்களைத் தனியே கூப்பிட்டுப் போய், நீங்க கொஞ்சம் அவனை வாட்ச் பண்னுங்க.. அவன் எங்க போறான்.. எங்க வாறான்.. எந்தக் கடையில டீக் குடிக்கான்னு பாருங்க.. டீக்கடையில தான் அவனுக்கு யாரோ எதையோ கலந்து கொடுத்திருக்காங்க.. ஒரு வேள செய்வினை ஏதும் வைச்சிருக்காங்களான்னு. பாக்கணும் என்று ரெம்ப சீரியஸாகச் சொல்லிக் கொண்டிருந்தார். சாரதி ரெம்ப அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு அப்படியா நாங்க அவனை வாட்ச் பண்றோம் என்று அவருக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். அதுமட்டுமல்லாமல் அவருக்கு செய்வினைகள் எடுப்பது பற்றி ஆலோசனைகளும் வேறு சொல்லிக் கொண்டிருந்தான். எனக்கானால் நடந்து கொண்டிருந்த கூத்தைப் பார்த்து சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. ரெம்பக் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டேன். ஆனால் ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்ததும் பாய் டீக்கடையில் வைத்து சிரியோ சிரியென்று சிரித்து முடித்தோம்.

இன்றுவரை ராஜுவுக்குச் செய்வினை வைத்த வில்லன்கள் நாங்கள் தான் என்று அவனுடைய வீட்டாருக்குத் தெரியாது. இப்போதும் ராஜுவிடம் ஹைடேக்கர் என்றால் போதும். சிரிக்காமல் ரெண்டு நல்ல வார்த்தை சொல்லுவான்,

போடா மயிரு!

நன்றி- சொல்வனம் இணைய இதழ்

3 comments:

 1. கொஞ்சம் வரிகளுக்கிடையில் இடைவெளி விட்டால் படிக்க சௌகரியமாக இருக்கும். இப்போது ஏதோ கொசகொசவென்று எறும்புகள் ஊருகிற மாதிரி இருக்கு.

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. அருமையான பதிவு.
  நன்றி.

  ReplyDelete