Saturday, 22 December 2012

சாலையோரமாக…

 

சாதத் ஹசன் மண்ட்டோ

ஆங்கிலத்தில் – காலித் ஹசன்

தமிழில் – உதயசங்கர்manto2

ஆமாம், ஆண்டின் இதே நேரம் அது. வானம் அவனுடைய கண்களைப் போல கழுவி விடப்பட்ட நீலநிறத்தில் இருந்தது. சூரியன் ஒரு இனிய கனவைப் போல மென்மையாக இருந்தது. மண்ணிலிருந்து கிளம்பிய மணம் என் இதயத்தில் நுழைந்து என் உயிரை சேர்த்தணைத்துக் கொண்டது. இதோ அவனருகில் படுத்துக் கொண்டிருக்கிற நான் துடிக்கும் என் ஆத்மாவை அவனுக்கு அர்ப்பணித்துக் கொண்டிருந்தேன்.

அவன் என்னிடம்,

” எது என் வாழ்க்கையில் எப்போதும் இல்லாமலிருந்ததோ அதை நீ தந்தாய்.. உன்னுடன் பகிர்ந்து கொள்ள நீ அநுமதித்த இந்த மாயக்கணங்கள் என் வாழ்வின் வெறுமையை நிரப்பியது. உன் காதலில்லாத என் வாழ்க்கை சூனியமாக, ஏதோ ஒன்று பூரணமில்லாததாக நிலைத்து இருந்திருக்கும். உன்னிடம் என்ன சொல்வது? எப்படிச் சொல்வது? என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இன்று நான் முழுமையடைந்து விட்டேன். நான் நிறைவடைந்து விட்டேன். அதனால் நீ எனக்குத் தேவையில்லை…”

என்று சொன்னான். பின்பு அவன் ஒரு போதும் திரும்பி வராதபடி போய் விட்டான்.

நான் அழுதேன். எனக்குப் பதில் சொல்லும்படி கெஞ்சினேன்.

” என்னுடைய ஒட்டு மொத்த உயிரும் பேராவலோடும், பெருங்காதலோடும் தீயாக எரிந்து கொண்டிருக்கிறபோது ஏன் உனக்கு நான் இனிமேல் தேவைப்படமாட்டேன். உன்னுடைய ஆத்மாவில் உள்ள வெறுமை நிரம்பிவிட்டது என்று நீ சொன்ன கணங்கள் என் ஆத்மாவில் ஒரு வெறுமையை உருவாக்கி விட்டதே..”

அதற்கு அவன்,

” நாம் பகிர்ந்து கொண்ட இந்தக் கணங்களே என் வெறுமையை நிரப்பிவிட்டது. உன் உயிரின் அணுக்கள் என்னை முழுமையானவனாக்கி விட்டது. நம்முடைய உறவு முன் தீர்மானிக்கப்பட்ட முடிவுக்கு வந்து விட்டது..”

என்று சொன்னான்.

உயிரோடு கல்லாலடிக்கிற மாதிரியான குரூரமான வார்த்தைகள் இவை. நான் கதறினேன். ஆனால் அவன் முடிவு செய்து விட்டான். நான் அவனிடம்,

” நீ பேசிய என் உயிரின் அணுக்கள், உன்னை முழுமையடையச் செய்த இந்த அணுக்கள் என் உடலின் ஒரு பகுதி தானே.. நான் உனக்கு அவற்றைக் கொடுத்தேன். அங்கேயா நம் உறவு முடிவுக்கு வந்தது? என்னிடமிருந்து பிரிந்து வந்தது உன்னிடம் நான் என்ன கொடுத்தேனோ அது என்னிடமிருந்து எப்போதும் துண்டிக்கப்பட்டு விடுமா? நீ முழுமையடைந்து விட்டாய். ஆனால் என்னைக் குறையுள்ளவளாக்கி விட்டாய். உன்னை நான் கடவுளைப் போல் பூஜிக்கவில்லையா? “

என்று சொன்னேன். அதற்கு அவன்,

” பாதி திறந்த மலர்களிலிருந்து தேனீக்கள் உறிஞ்சிய தேன் மீண்டும் ஒரு போதும் அந்த மலர்களை அலங்கரிக்கவோ, அவர்களுடைய கசப்பை இனிப்பாக்கவோ போவதில்லை. கடவுள் என்றாலே பூஜிக்கப் படவேண்டியவர். ஆனால் அவர் யாரையும் பூஜிப்பதில்லை. பெருஞ்சூனியத்தில், அவர் உயிர்களை உயிரற்றவைகளோடு இணைத்து உலகை சிருஷ்டித்தார். அதன் பிறகு சூனியம் இல்லாதொழிந்தது. ஏனென்றால் அவருக்கு அது தேவைப்படவில்லை.. புதிய உயிரைத் தந்து விட்டு தாய் இறந்து விட்டாள்..”

என்று சொன்னான். ஒரு பெண் அழலாம். அவள் விவாதிக்கக்கூடாது. அவளுடைய உச்சபட்ச விவாதமென்பதே அவள் கண்களிலிருந்து ஊற்றெடுக்கும் கண்ணீர் தான். நான் அவனிடம்,

என்னைப் பார்… நான் அழுது கொண்டிருக்கிறேன். நீ பிரிந்து போவதென்று முடிவு செய்து விட்டால் என்னால் உன்னை நிறுத்த முடியாது..ஆனால் இந்தக் கண்ணீர்த்துளிகளை உன்னுடைய கைக்குட்டை மடிப்புகளில் சுருட்டி எடுத்துக் கொண்டு எங்காவது எரித்து விடு. ஏனென்றால் நான் மீண்டும் அழும்போது எனக்கு நீ ஏற்கனவே காதலின் இறுதிச் சடங்குகளைச் செய்து விட்டாய் என்று தெரிந்து விடும். எனக்காக, என்னுடைய சந்தோஷத்திற்காக இந்தச் சிறிய விஷயத்தைச் செய்து விடு..”

என்று சொன்னேன். அதற்கு அவன்,

” நான் உன்னைச் சந்தோஷப்படுத்தினேன்.. நான் வரும்வரை உன் வாழ்வில் கானலைப் போல இருந்த அந்த உன்னதமான மகிழ்ச்சியை நான் உனக்குக் கொடுத்தேன்.. நான் உனக்களித்த அந்த மகிழ்ச்சியின் ஞாபகத்தில் மீதி வாழ்நாள் முழுவதையும் உன்னால் கழிக்க முடியாதா? என்னுடைய முழுமை உன்னைக் குறையுள்ளவளாக்கி விட்டதென்று நீ சொன்னாய் முழுமையின்மையைத் தொடர்ந்து கொண்டிருப்பது வாழ்வுக்கு அவசியமில்லை. நான் ஒரு மனிதன் இன்று நீ என் வாழ்வில் முழுமையைக் கொண்டு வந்தாய். நாளை வேறொரு பெண். பலப்பலமுறை அதே உன்னதமான மகிழ்ச்சித் தருணத்தை அநுபவிக்க, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட மூலக்கூறுகள் என்னைக் கவர்ந்திழுத்துக் கொண்டேயிருக்கின்றன. இன்று நீ நிரப்பிய வெறுமை மறுபடியும் தோன்றும். அப்போது அங்கே அதை நிரப்ப மற்றவர்கள் இருப்பார்கள்..”

என்று சொன்னான். நான் தொடர்ந்து அழுது கொண்டிருந்தேன், நான் நினைத்தேன். என் கையில் பிடித்திருந்த குறைந்த அந்தச் சில கணங்கள் போய் விட்டன. நான் அதன் மாயாஜாலத்தால் அடித்துச் செல்லப்படுவதற்கு ஏன் என்னை அநுமதிக்க வேண்டும்? ஏன் நான் அமைதியற்றுத் துடித்துக் கொண்டிருக்கும் ஆத்மாவை வாழ்வின் கூண்டில் அடைக்க வேண்டும்? ஆமாம். அது வார்த்தைகளைத் தாண்டிய பரவசம். ஆமாம் நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டிருந்தது ஒரு கனவைப் போல இருந்தது. ஆமாம்.. ஆமாம். அது ஒரு விபத்து. ஆனால் அவன் அதிலிருந்து முழுதாக எந்தச் சேதாரமுமில்லாமல் எழுந்து நடந்து போய் விட்டான். சிதைந்து போன என்னை விட்டு விட்டு. அவன் மீதான என்னுடைய ஆசையின் உக்கிரம் எனுடம்பையும் உயிரையும் நெருப்பாய் எரித்துக் கொண்டிருக்கிறபோது ஏன் அவனுக்கு நான் இனிமேல் தேவைப்படாமல் போனேன்? நான் என்னுடைய சக்தியை அவனிடம் கொடுத்து விட்டேன். நாங்கள் வானத்தில் இரண்டு மேகங்களைப் போல இருந்தோம்.ஒன்று மழை. மற்றொன்று காட்டுமின்னலின் ஒளி. இரண்டும் விலகிப் போய் விட்டது. இது என்ன விதமான தீர்ப்பு? வானத்தின் சட்டங்களா? பூமியின் சட்டங்களா? இல்லை இவைகளையெல்லாம் சிருஷ்டித்த சிருஷ்டிகர்த்தாவின் சட்டங்களா?

ஆமாம். நான் இந்த விஷயங்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். இரண்டு ஆத்மாக்கள் சந்தித்தன. அதில் ஒன்று முடிவின்மையின் வெளியை சென்றைடைந்து விலகிப் போய்விட்டது. இதெல்லாம் என்ன கவிதையா? இரண்டு ஆத்மாக்கள் சந்தித்தால் அவர்கள் அந்தச் சிறு புள்ளியில் கூடி இனைந்து பிரபஞ்சத்தின் கருவைப் போல ஆகி விடுகிறார்கள். ஆனால் ஏன் இரண்டில் ஒன்று இணைவிலிருந்து உடைத்துக் கொண்டுப் பிரிந்து போய் விடும்படி விதி செய்கிறது? பிரபஞ்சத்தின் கருவான அந்தச் சிறு புள்ளியைக் கண்டுபிடிக்க மற்றவருக்குச் செய்த உதவிக்குக் கிடைத்த தண்டனையா?

ஆமாம். ஆண்டின் இதே நேரம் அது. இன்று போலவே வானம் அவனுடைய கண்களைப் போல நீலமாக இருந்தது. இதோ அவனருகில் படுத்துக் கொண்டிருக்கும் நான் துடிக்கும் என் ஆதமாவை அவனுக்கு சமர்ப்பணம் செய்து கொண்டிருந்தேன்.

அவன் இங்கு இல்லை. அவன் வேறு வானத்தில் வேறு மேகங்களோடு விளையாடிக் கொண்டிருக்கும் மின்னல் கீற்று. அவனுடைய முழுமையை அவன் கண்டடைந்து விட்டதால் அவன் போய் விட்டான். அவன் ஒரு பாம்பு. அது என்னைக் கடித்து விட்டு சென்று விட்டது. ஆனால் என் அடிவயிற்றில் முன்பு அவன் எங்கே இயங்கினானோ அங்கே என்ன ஒரு விசித்திரமான அமைதியின்மை? என் முழுமையின் ஆரம்பமா?

இல்லை. அப்படி இருக்க முடியாது. இது என்னுடைய அழிவு. என்னுடைய முடிவு. ஆனால் ஏன் என் உடலின் வெற்று வெளிகள் நிரம்பிக் கொண்டிருக்கின்றன? இந்த பிளவுகளுள்ள துளைகளுக்கு உணவளிக்க என்னவிதமான குப்பைகள் பயன்படுத்தப் படுகின்றன? என்ன இந்த இரத்தக் குழாய்களில் விசித்திரமான உணர்வுகள்?ஏன் நான் என்னுடைய மொத்த உயிரும் சுருங்கி என்னுடைய அடி வஇற்றில் குடியிருக்கும் அந்தச் சிறிய புள்ளியாக மாற விரும்புகிறேன்? இந்தப் பெருங்கடல்களில் மூழ்கிக் கொண்டிருக்கும் காகிதப்படகான என் இதயம் மீண்டு வருமா?

என்னுடைய உடலின் நெருப்பில் பாலைக்கூட கொதிக்க வைத்து விடலாம் என்று உணர்ந்தேன். நான் எதிர்பார்க்கிற அந்த விருந்தாளி யார்> யாருக்காக என்னுடைய இதயம் இரத்தத்தை இறைத்து மென்மையான பட்டிழைகளை நெய்து கொண்டிருக்கிறது? என் மனதில் அற்புதமான நிறங்களில் லட்சக்கணக்கான பட்டு நூலிழைகள் இணைந்து சிறிய ஆடைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன?

யாருக்காக என்னுடைய உடல் தங்கநிறமாக மாறிக் கொண்டிருக்கிறது?

ஆண்டின் இதே நேரம் அது. அந்த வானம் அவனுடைய கண்களைப்போல கழுவி விடப்பட்ட நீலநிறமாக இன்று போலவே இருந்தது. ஆனால் ஏன் அந்த வானம் என் அடிவயிற்றில் தன்னுடைய கூரையைக் கட்டுவதற்கு இறங்கி வந்தது? ஏன் என்னுடைய இரத்தத்தில் அவனுடைய நீலநிறம் ஓடிக் கொண்டிருப்பதாக உணர்கிறேன்?

ஏன் என்னுடைய வட்டமான முலைகள் மசூதிகளின் மீது அலங்கரித்துக் கொண்டிருக்கும் பளிங்கு வட்டக் க்ப்புரத்தின் புனிதத்தைப் பெற்றுக் கொண்டது?

ஈலை. நடந்த நிகழ்வில் புனிதம் என்று எதுவும் இல்லை. நான் இந்தக் கோபுரங்களைத் தகர்த்து விடுவேன். என்னுடைய உடலில் எரியும் நெருப்பை அணைத்து விடுவேன். அது தான் அழையாத விருந்தாளிக்காக உணவு தயாரித்துக் கொண்டிருக்கிறது. நான் லட்சக்கணக்கான நிறங்களுள்ள அந்தப் பட்டிழைகளை அறுத்து விடுவேன்.

ஆண்டின் இதே நேரம் அது.அந்த வானம் அவனுடைய கண்களைப்போல கழுவி விடப்பட்ட நீலநிறமாக இன்று போலவே இருந்தது. ஆனால் ஏன் நான் அவனுடைய காலடித்தடங்கள் இனி கேட்காத அந்த நாட்களின் ஞாபகங்களை மீட்டெடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்? ஆனால் என் அடி வயிர்றின் ஆழத்தில் நான் என்ன உணர்கிறேன்? சிறிய காலடிச் சத்தமா? எனக்கு அது தெரியுமா?

நான் அதை அழித்து விடுவேன். அது ஒரு புற்று நோய். ஒரு ராஜபிளவை. ஒரு பயங்கரமான ஒட்டுண்ணி.

ஆனால் ஏன் அதையே என் வலியை இதமாக்குகிற, குணப்படுத்துகிற மருந்தாக நான் உணர்கிறேன்? அது மருந்தாக இருந்தால் எந்தக் காயத்தைக் குணப்படுத்தப் போகிறது? அவன் விட்டுச் சென்ற காயத்தையா?

இல்லை. இந்தக் காயம் நான் பிறந்ததிலிருந்தே நான் என்னுடன் சுமந்து கொண்டிருக்கிறேன். என் கர்ப்பப்பையில் எப்போதும் இருந்த காயம். பார்க்கமுடியாத, உறங்கிக் கொண்டிருந்த காயம்.

என் கர்ப்பப்பை என்ன உபயோகமில்லாத களிமண் பானையா? ஒரு குழந்தையின் பொம்மையா? நான் அதை துண்டு துண்டாக உடைத்து நொறுக்குவேன்.

ஆனால் என் காதில் ஒரு குரல் கிசுகிசுக்கிறது. இந்த உலகம் சிக்கலானது. அதற்கு மத்தியில் உன்னுடைய களிமண் பானையை உடைக்காதே. குற்றம் சாட்டுகிற விரல்கள் உன்னைக் குறி வைத்து நீளும்.

இந்த உலகம் சிக்கலானது. ஆனால் அவன் என்னை இரண்டு சாலைகளின் நடுவே விட்டுவிட்டான். இரண்டுமே முழுமையின்மையையும் கண்ணீரையும் நோக்கி கூட்டிச் செல்பவை.

ஒரு கண்ணீர்த்துளி என்னுடைய சிப்பிக்குள் நழுவி விழுந்து ஒரு முத்தை உருவாக்கியது. யாரை அலங்கரிக்கப்போகிறது அது?

சிப்பி திறந்து அதன் முத்தை வெளிப்படுத்துகிற போது குற்றம் சாட்டுகிற விரல்கள் உயரும். முச்சந்தியில் அதைத் துப்பிவிடும். அந்த விரல்கள் பாம்புகளாக மாறி சிப்பியையும் முத்தையும் கடித்து தன் விஷத்தினால் நீலநிறமாக்கி விடும்.

வானம் அவனுடைய கண்களைப்போல கழுவி விடப்பட்ட நீல நிறத்தில் இன்று போலவே இருந்தது. ஏன் அது விழவில்லை? அதை எந்தத் தூண்கள் தாங்கிக் கொண்டிருக்கின்றன? இந்த மிகப்பெரியக் கட்டிடத்தின் அஸ்திவாரங்களை அசைக்க பூகம்பம் வருமா? ஏன் என் தலைக்கு மேலே வானம் ஒரு கூரையைப் போல இருக்கிறது?

நான் வியர்வையில் நனைகிறேன். என் உடலின் துவாரங்கள் எல்லாம் திறந்து கொண்டன. எங்கும் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. என்னுடைய மண்பானையில் தங்கம் உருக வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தீயின் பிழம்புகள் தாவிக் கொண்டிருக்கின்றன. தங்கம் உருகிய லாவா குழம்பைப் போல பொங்கிக் கொண்டிருக்கிறது.அவனுடைய நீலநிறக் கண்கள் என் ரத்த நாளங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. மணிகள் ஒலித்துக் கொண்டிருப்பதை நான் கேட்டேன். யாரோ வருகிறார்கள். கதவுகளை அடைக்கிறார்கள்.

அந்த மண்பானை தலைகீழாகத் திரும்புகிறது. உருகிய தங்கம் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. மணிகள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

அது அதன் வழியே போய்க் கொண்டிருக்கிறது. என்னுடைய கண்களில் உறக்க்ம அழுத்துகிறது. அந்த நீல வானம் கறை படிந்து விட்டது. சீக்கிரத்திலேயே அது கீழே விழுந்து நொறுங்கி விடும்.

நான் கேட்பது யாருடைய அழுகைக்குரல்கள் இவை? அவற்றை நிறுத்துங்கள். அவை என் இதயத்தில் சுத்தியல் அடிகளாக விழுகின்றன.

அதை நிறுத்து. அதை நிறுத்து. அதை நிறுத்து.

நான் ஒரு காத்துக் கொண்டிருக்கும் மடி. என்னுடைய கைகள் அதை ஏந்திக் கொள்வதற்காக நீள்கின்றன. என் உடலில் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் பால் கொதித்துக் கொண்டிருக்கிறது. என்னுடைய உருணட முலைகள் கோப்பைகளாக மாறி விட்டன. என்னிடம் அதைக் கொண்டு வாருங்கள். மெதுவாக என்னுடைய கரங்களில் அதைப் படுக்க வையுங்கள்.

இல்லை. என்னிடமிருந்து அதைப் பறிக்காதீர்கள்.என்னிடமிருந்து அதை எடுத்துச் செல்லாதீர்கள். கடவுளின் பெயரால் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

விரல்கள்..விரல்கள்.. அவர்கள் விரல்களை உயர்த்தட்டும். இனி எனக்குக் கவலையில்லை. இந்த உலகம் சிக்கலானது. என்னுடைய மண்பானை அதன் நடுவே உடைந்து சிதறட்டும்.

என் வாழ்வே மூழ்கி விடும். இருந்து விட்டுப் போகட்டும். என் சதையை என்னிடம் தாருங்கள். என்னுடைய ஆத்மாவை என்னிடமிருந்து பறிக்காதீர்கள். அது எவ்வளவு மதிப்பு மிக்கது என்று உங்களுக்குத் தெரியாது. அது என் வாழ்வில் என் உடல் இன்னொருவரை முழுமையாக்கிய தருணங்களில் விளைந்த உன்னதமான கனி. இது தான் என் முழுமையின் கணமா?

நீங்கள் நம்பவில்லையென்றால் பள்ளமாகி வெற்றிடம் நிறைந்த என்னுடைய அடிவயிற்றைக் கேளுங்கள் பால் நிறைந்த என்னுடைய முலைகளைக் கேளுங்கள். என் உடலின் ஒவ்வொரு துளையிலிருந்தும் எழுகிற தாலாட்டுகளைக் கேளுங்கள். மென்மையான ஊஞ்சலாக மாறிவிட்ட என் கரங்களைக் கேளுங்கள்.

குற்றம் சாட்டுகிற விரல்கள். உயரட்டும் அவை. நான் அவற்றைத் துண்டுகளாக வெட்டி எடுத்து என் காதில் வைத்து அடைத்துக் கொள்வேன். நான் ஊமையாகி விடுவேன். நான் செவிடாகி விடுவேன். நான் குருடாகி விடுவேன். ஆனால் இந்தச் சின்னஞ்சிறியது என்னுடைய பகுதியான அது என்னை அறியும். என் கரங்களால் அதைத் தடவித் தடவி நானும் அதைத் தெரிந்து கொள்வேன்.

நான் உங்களைக் கெஞ்சுகிறேன். என்னிடமிருந்து எடுத்துச் செல்லாதீர்கள்.

ததும்பி வழியும் என் பால் கோப்பைகளை கவிழ்த்து விடாதீர்கள். என் ரத்தத்தினால் நான் நெய்த பட்டுக்கூட்டை தியில் எரித்து விடாதீர்கள். என் கரங்களின் ஊஞ்சலை வெட்டாதீர்கள். அதன் அழுகையின் சங்கீதத்தை என் காதுகள் கேட்கவிடாதபடி செய்யாதீர்கள்.

என்னிடமிருந்து அதை எடுத்துச் செல்லாதீர்கள்.

லாகூர் ஜனவரி 21

சாலையோரமாக பிறந்த குழந்தையொன்றை போலீஸ் கண்டெடுத்தார்கள். அதன் வெற்றுடல் நனைந்த லினன் துணியினால் சுற்றப்பட்டிருந்தது. குளிரினால் அது விரைத்துச் சாக வேண்டும் என்ற நோக்கத்திலேயே அப்படிச் செய்யப் பட்டிருந்தது. ஆனாலும் அந்தக் குழந்தை உயிருடன் இருந்தது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதற்கு அழகான நீலநிறக்கண்கள் இருந்தன.

நன்றி – தி எண்ட் ஆப் கிங்டம் அண்டு அதர் ஸ்டோரிஸ்

நன்றி- அடவி இலக்கிய இதழ்

1 comment:

  1. வாழ்த்துகள் சிறப்பான கட்டுரை, அருமையான எழுத்துநடை!

    ReplyDelete