உதயசங்கர்
கோடிக்கணக்கான ஆண்டுகளாக இந்தப் பிரபஞ்சத்தில் உருவாகி, உருமாறி, வந்துள்ள அனைத்து ஜீவராசிகளும் அதன் இருத்தல் வழியேயும், உயிரியக்கத்தின் வழியேயும் இந்த உலகத்தை உயிர்ப்புடன் வைத்துக் கொண்டுள்ளன. எந்த ஒரு சிறு உயிரியும் ஒன்றை விட ஒன்று குறைவானதோ தாழ்ந்ததோ இல்லை. எல்லாமே சமமான மதிப்புடையவையே. உயிர்களின் ஆயுட்காலம் ஒரு விநாடியோ, ஒரு நிமிடமோ, ஒரு மணி நேரமோ, ஒரு நாளோ, ஒரு மாதமோ, ஒரு ஆண்டோ, ஒரு நூற்றாண்டோ, எல்லா உயிர்களும் தங்களின் இருத்தலின் மூலம் மற்ற உயிர்களின் இருப்பையும் அங்கீகரிக்கின்றன. எனவே ஒன்றின் இருத்தல் மற்றொன்றின் இருத்தலுக்கு அவசியமானது. ஒன்றின் மறைவு மற்றொன்றின் மறைவுக்கு வித்திட்டு விடும். இதைச் சுற்றுச்சூழல், இயற்கையியலில் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆக எல்லா உயிர்களுமே சமமான மதிப்புடையவை.
ஒரே இனத்தைச் சேர்ந்த எந்த உயிரும் இருத்தலுக்கான போராட்டத்திற்காகவன்றி மற்றபடி தங்களுடைய சொந்த இனத்தின் மீது நிரந்தரமான வெறுப்புணர்வையோ, உயர்வு தாழ்வையோ, அதிகாரத்தையோ, தீண்டாமையையோ கடைப்பிடிப்பதில்லை. ஆனால் மனித இனத்தில் மட்டுமே இத்தகைய கொடிய சிந்தனைகள் வேர்விட்டு கிளைபரப்பி மனித வாழ்வின் ஆரம்பம் முதல் இறுதி வரை நடைமுறைப்படுத்தப் படுகின்றன. இத்தனைக்கும் இப்போது உலகம் முழுவதும் பரவியிருக்கிற மனித இனம் ஆப்பிரிக்காவிலிருந்து தான் முளைவிட்டு பரவியிருக்கிறது என்று அறிவியல்பூர்வமாக நிரூபித்த பிறகும் இனம், மொழி, மதம், சாதி, என்று வேறுபாடுகளைக் கடைப்பிடிப்பதும், அதை வெறியாக வளர்த்தெடுப்பதும் மனித இனத்தில் மட்டும் தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் சகமனிதர் மீது இத்தகைய வெறுப்புணர்வை பேணி, வளர்த்து, காப்பாற்றி, நிலை நிறுத்தியதில் பிராமணியமே முக்கியப்பங்கு வகிக்கிறது.
சுத்தம் அசுத்தம், தூய்மை, தூய்மையின்மை, என்ற இயற்கை,சூழல், சுகாதாரம், சார்ந்த புறவயமான செயல்களை பண்பாட்டுரீதியில் மாற்றி அதைச் சமூகவயமாக்கியதில் பிராமணியம் பெற்ற வெற்றி தான் இன்று வரை நாம் அநுபவித்து வரும் வருணாசிரமக்கோட்பாடு. இயற்கையின் செயல்பாடுகளையும் பண்பாட்டுத்தளத்திற்குள் மாற்றுகிற காரியங்களில் நமது சொந்த உடலையே தீண்டாமையின் களமாக மாற்றியிருக்கிறது பிராமணியம். முதலில் வர்ணம் என்ற சொல்லுக்கு நிறம் என்றே பொருள். ஆக ஆரம்பத்தில் தோலின் நிறமும் சாதியக்கட்டமைப்புக்கு ஒரு காரணியாக இருந்திருக்கிறது. மேற்குலகில் அது வெள்ளை, கறுப்பு, என இனரீதியாக பிரிவினையை உருவாக்கியிருந்தது. ஆனால் இங்கே தோலின் நிறம் இனரீதியாக மட்டுமல்ல இன்னும் நுட்பமாக வேலைப்பிரிவினை, நிலம், சுற்றுச்சூழல், கலாச்சாரம், என்று வாழ்வின் சகல அம்சங்களிலும் ஊடுருவி பிறப்பு ரீதியான சாதிப்பிரிவினையை உருவாக்கி நிலைநிறுத்தியுள்ளது. மக்களது பொதுப்புத்தியில் சிவந்த உடல்கள் சிறந்தவை. கருத்த உடல்கள் கீழானவை என்ற எண்ணத்தை தங்களது அதிகாரப்படிநிலை மூலமாக பதிய வைத்துள்ளது பிராமணியம். எனவே இன்றும் கூட கறுத்த நிறமுடைய பெண்களுக்கு அவர்களுடைய சாதியிலும் திருமணம் முடிப்பது பெருங்கஷ்டமாக இருக்கிறது. கறுத்த நிறமுடைய ஆண்களை சாதிப்படிநிலையில் கீழே இருப்பவர்களோ என்ற சந்தேகத்தோடு மற்ற சாதியினர் பழகுகிறார். நகரங்களில் நாசூக்காகவும், கிராமங்களில் அப்பட்டமாகவும் இதைக் கேட்டு விடுகிறார்கள். எனவே உடலின் நிறமே சாதியப்படிநிலையை பார்த்தவுடன் தீர்மானிக்கிற விஷயமாக இருக்கிறது.
நமது உடலின் எல்லாப்பாகங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. சமமான மதிப்புடையவை. எல்லா உறுப்புகளும் நம்முடைய ஒட்டு மொத்த உயிரியக்கத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் தான். அதில் ஏற்ற தாழ்வோ, சமத்துவமின்மையோ சுத்த, அசுத்தமோ, கிடையாது. ஆனால் நடைமுறையில் நமது உடலில் வலது பாகத்துக்குக் கொடுக்கக் கூடிய முக்கியத்துவத்தை இடது பாகத்துக்குக் கொடுப்பதில்லை. வலது பாகத்தினால் செய்யக்கூடிய வேலைகளை இடது பாகத்தினால் செய்வதில்லை. அதே போல இடது பாகத்தினால் செய்யக்கூடிய வேலைகளை வலது பாகத்தினால் செய்வதில்லை. செய்யக்கூடாது என்று நம்முடைய பொதுப்புத்தியில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. இயற்கையில் நமது மூளையின் இடதுபாகமே நமது உடலியக்கத்தின் வலது பாகத்தைச் செயல்படுத்துகிறது. அதே போல வலதுபாகம் உடலியக்கத்தின் இடதுபாகத்தைச் செயல்படுத்துகிறது. உழைப்பின் வரலாற்றில் இயற்கையின் உள்ளுணர்வினால் உந்தப்பட்ட மூளை உடலின் வலது பாகத்தை அதிகமாகப் பயன்படுத்தியதால் மூளையின் இடது பாகம் வலுப்பெற்று பாரம்பரியமாகவே உடலின் வலது பாகத்தை செயலூக்கம் பெறச் செய்தது. இப்படி இயற்கையான, உயிரியல்பூர்வமான உடலியக்கத்தை தங்களுடைய கோட்பாடுகளுக்குச் சாதமாக்கிக் கொண்டிருக்கிறது பிராமணியம்.
வலது கை, வலது கால், உட்பட உடலின் வலது பாகம் மங்களகரமானது. உயர்வானது. சுத்தமானது. வலது கையினால் கொடுப்பது, வலது கையினால் வாங்குவது, அதை எந்தெந்தச் சாதினருக்கு எப்படியெப்படி செய்ய வேண்டும் என்று மனுதர்மம் சொல்கிறது. இடது கை அமங்களமானது, அசுத்தமானது, எனவே தீட்டுக்குரியது. இடது கையினால் மலம் கழுவுவது, இடது கையினால் அசுத்தமான, வேண்டாத பொருட்களைத் தூக்கி எறிவது, சாதியப்படியில் கீழ்நிலையில் உள்ளவர்களுக்கு இடது கையினால் தூக்கிக் கொடுப்பது, உட்பட இடது கை முக்கியத்துவம் குறைந்ததாக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. தீட்டுக்கழிப்புச் சடங்குகளில் இந்த வலது கை, இடது கை, விவகாரங்களைக் காணலாம். சமூகத்தில் இப்போதும் இடது கையினால் சாப்பிடுவது, கொடுத்து வாங்குவது, வித்தியாசமாகவும், அருவெறுப்புடனும் பார்க்கப்படுகிறது. சில சமயம் வெளிப்படையாகவே “ வலது கையில கொடுங்க..” என்றுசொல்வதும் நிகழ்கிறது
அதே போல புதுவீடு, புது இடம் என்று எங்கு சென்றாலும் வலது காலை எடுத்து வைத்து வரச்சொல்லுதல், வலது கால் மங்கலம், இடது கால் அமங்கலம் என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே உருவானது. இந்தக் கோட்பாடு கடவுளரையும் விட்டு வைப்பதில்லை. அர்த்தநாரீஸ்வரர் என்ற ஆணூம் பெண்ணும் இணைந்த உருவத்திலும் ஆண் வலது பாகத்தில் இருப்பதையும், பெண் இடது பாகத்தில் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. பிராமணீயம் எவ்வளவு நுட்பமாக நம் வாழ்வின் அணுத்துகளிலும் தன்னுடைய கோட்பாட்டைக் கலந்து நமது மனதை வசப்படுத்தி நமக்கே தெரியாமல் நம்முடைய ஓப்புதலை வாங்கி நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை யோசிக்க வேண்டியுள்ளது.
நம் வாழ்வின் சகல அம்சங்களிலும் பிரிக்கமுடியாமல் கலந்திருக்கும் பிராமணியத்தின் அனைத்துக் கூறுகளையும் மிகுந்த விழிப்புணர்வுடன் இனங்காண வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம்.
No comments:
Post a Comment