Sunday, 30 December 2012

புதிய உலகைக் காணப் புதிய கண்கள்

images

உதயசங்கர்

 

முதலாளித்துவம் தன் ஆக்டோபஸ் கரங்களால் இந்த உலகைக் கபளீகரம் செய்து இரண்டு மூன்று நூற்றாண்டுகளாகி விட்டது. உற்பத்திசக்திகளில் ஏற்பட்ட மாற்றம் உற்பத்தி உறவுகளிலும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. எல்லாம் சந்தைமயமாகவும், நுகர்வின் பெருவெளியாக இந்தப் பிரபஞ்சமே மாறி விட்டது. மைதாஸின் பேராசையாய் எந்த அறவிழுமியங்களுமின்றி தொட்டதையெல்லாம் பொன்னாக்கி தன் செல்வத்தைக் குவித்துக் கொண்டிருக்கிறது முதலாளித்துவம். மக்களுக்காக பொருட்களும், பொருட்களுக்காக மக்களும் தயாரிக்கப் படுகிறார்கள். மக்களையே பண்டங்களாக்கி பொருட்களிடம் விற்று விடுகிறார்கள். அதற்கு ஏற்றாற்போல மக்கள் மனங்களைத் தகவமைக்கிற வேலைகளை கலை, இலக்கியம், ஓவியம், இசை, என்று பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் விலை பேசி வாங்கி தங்களுக்குச் சேவகம் செய்ய வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் விலையுண்டு என்பதே முதலாளித்துவத்தின் தாரகமந்திரமாக மாறி விட்டது. முதலாளித்துவத்தின் உச்சகட்ட கண்டுபிடிப்புகளான உலகமயம், தாராளமயம், தனியார்மயம் உலகநாடுகளை ஏகாதிபத்தியத்தின் வேட்டைக்காடாக்கி விட்டது. தங்களுக்குச் சாதகமான அரசாங்கங்களை அமைக்கவும், தங்களுக்குச் சாதகமாக இல்லாத அரசுகளைக் கவிழ்க்கவும் சதிகளைச் செய்கிறது. இதற்கு அந்தந்த நாடுகளின் பிரத்யேகத் தன்மைகளைத் தெரிந்து கொண்டு இனவெறி, மதவெறி இவற்றைப் பயன்படுத்தவும் செய்கிறது. இதற்கான ஆய்வுகளையும் அந்தந்த நாட்டு அறிவுஜீவிகளைக் கொண்டே நடத்துகிறது. ஊடகங்களை விலைக்கு வாங்கியோ, அல்லது பின்னிருந்து இயக்கியோ தங்களுடைய தாரகமந்திரமான உலகமயம், தாராளமயம், தனியார்மயம், நிகழ்ச்சிநிரலுக்கு ஆதரவாக மக்கள் மனதைத் தகவமைக்கிறது. மக்களுடைய பொதுப்புத்தியில் மிகத் தந்திரமாக புதிய பண்பாட்டு விழுமியங்களை, உணவு, உடை, உறைவிடம், வீட்டு உபயோகப்பொருட்கள் தொடங்கி அழகு சாதனப்பொருட்கள், என்று எல்லாவற்றிலும் புதிய உலகமயப்பண்பாட்டை மக்கள் ஆதரவோடு திணித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் இன்னும் கொஞ்சம் பிரத்யேகமான சூழ்நிலை. முதலாளித்துவம் இந்தியாவில் காலூன்றத் துவங்கும் போது சாதிஅமைப்பு முறை என்ற புதிய சவாலை எதிர்கொள்ள வேண்டியதிருந்தது. ஈராயிரம் ஆண்டுகளாகப் புரையோடிப் போயிருக்கும் இந்த சாதிய அமைப்பை ஒழிக்க முடியாதென்று உணர்ந்து அதனோடு சமரசம் செய்து கொண்டது. எனவே ஒரே நேரத்தில் நிலப்பிரபுத்துவத்தின் சாதியவேரோடும் முதலாளித்துவத்தின் முகமும், தலையுமற்ற உடலாகவும் இந்திய மனிதன் மாறிவிட்டான். நிலப்பிரபுத்துவத்தை முறியடித்து அதிலிருந்து முற்போக்கான அமைப்பாக மற்ற தேசங்களில் நிலை பெற்ற முதலாளித்துவம் இந்தியாவில் நிலப்பிரபுத்துவத்தோடு கை கோர்த்துக் கொண்டது. எனவே தான் இந்திய மனிதன் ஒரே நேரத்தில் இரண்டு முகங்களுடன், நிலப்பிரபுத்துவப்பழமை வழியும் ஒரு முகமும், முதலாளித்துவ ஜனநாயகம் பொங்கும் ஒரு முகமும் கொண்டு ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்று தத்தளித்துக் கொண்டிருக்கிறான். ஒரே நேரத்தில் சுதந்திரமானவனாகவும் அடிமையாகவும் உணர்கிறான். காலில் கட்டிய சநாதனச் சங்கிலியின் ஓசை அவனைப் பொதுவெளியில் கலந்துறவாடும் போது கேட்டுக் கொண்டேயிருக்கிறது. தொழிற்சாலையில், கம்பெனியில், சினிமா தியேட்டரில், உணவகங்களில், கடைகளில், மக்கள் கூடுகிற இடங்களில் எல்லாம் அவன் இந்தச் சங்கிலியின் ஓசையைச் சங்கடத்தோடு உணர்கிறான். இந்தச் சங்கட உணர்வை மறைப்பதற்காகவே அடிக்கடி பாரம்பரியம்,என்றும் பண்பாடு என்றும் பழைய சம்பிரதாயங்கள், என்றும் நோஸ்டால்ஜியா ( பழமை போற்றும் ) பேசி சமனப்படுத்திக் கொள்கிறான்.

இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்களுக்கு வர்ணாசிரமக்கோட்பாடு என்றால் என்னவென்றோ மனுதர்ம சாஸ்திரம் என்றால் என்னவென்றோ, வேதங்கள் என்றால் என்னவென்றோ தெரியாது. ஆனால் இவற்றின் நடைமுறைத் தத்துவங்களை தங்களுடைய வாழ்க்கையில் பிடிவாதமாய் கடைப்பிடித்துக் கொண்டு வருகிறார்கள். அந்த அளவுக்கு பிராமணியம் பெரும்பான்மை மக்களின் பொதுப்புத்தியில் வலுவாக ஊடுருவியிருக்கிறது. தாங்கள் தங்களுடைய சொந்த வர்க்கத்துக்கு எதிராக சாதியின் பேரால் போராடுகிறோம் என்றே இவர்களுக்குத் தெரியாது. அதனால் தான் வர்க்கரீதியில் ஓரணியில் திரள வேண்டிய தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். எல்லா இடைநிலைச்சாதிகளும், பிற்படுத்தப்பட்ட சாதிகளும் வர்க்கபேதமின்றி தாழ்த்தப்பட்ட மக்களை எதிரியாக நினைப்பதும், அவர்கள் மீது நூற்றாண்டுகளாய் நடத்தி வரும் தீண்டாமைக் கொடுமைகளை நியாயப்படுத்துவதும் நம்முடைய வர்க்க அணி திரட்டலை மேலும் கடினமாக்கியுள்ளது. இன்னும் நாம் போக வேண்டிய தூரம் மிக மிக அதிகம் என்று உணர வைக்கிறது. இந்த சாதியப்பிளவுகளை, அதன் பின்னுள்ள பிராமணியத் தந்திரங்களை, மக்களுடைய பொதுப்புத்தியில் பாதிப்பை ஏற்படுத்துகிற வகையில் பிரச்சாரம் செய்ய வேண்டியதிருக்கிறது. வர்க்கபேதத்தையும், சாதி பேதத்தையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள மிகப் பெரிய கடமை இடதுசாரிகளுக்கு இருக்கிறது.

மார்க்சியம் என்பது மக்களுக்காக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தத்துவம் மட்டுமல்ல. அது ஒரு வாழ்வியல் நடைமுறை. உலகைப் பற்றிய விளக்கமல்ல. அசமத்துவமான இந்த உலகை மாற்றவல்ல பேராயுதம். ஒரு புதிய உலகைப் படைக்கின்ற படைப்பாளி மார்க்சியம். அந்தப் புதிய உலகம் இது வரை மனிதகுலம் கண்டிராத அற்புதங்களால் உருவானது. பழமையின் முற்போக்கான கூறுகளோடு புதிய முற்போக்கான வாழ்வியல் நடைமுறைகளைக் கொண்டிருக்கும். எங்கும் எதிலும் சமத்துவநெறியே மேலோங்கி நிற்கும். புதிய அறமும், புதிய பண்பாட்டு விழுமியங்களும் கோலோச்சும். இல்லை என்ற சொல் அகராதியில் இல்லாமல் போய்விடும். வர்க்கபேதம் மட்டுமல்ல சாதிபேதமும் அழிக்கப்படும். அந்த உலகைக் காணப் புதிய கண்கள் வேண்டும். புதிய சிந்தனை வேண்டும். புதிய செயல்திட்டங்கள் வேண்டும். புதிய பண்பாடு வேண்டும். பாட்டாளி வர்க்கப் பண்பாட்டை இப்போதிருந்தே வளர்த்துச் செல்ல வேண்டும். பாட்டாளி வர்க்கப் பண்பாடு வர்க்க பேதமற்றது. மதபேதமற்றது. சாதி பேதமற்றது.பால்பேதமற்றது. பாட்டாளி வர்க்கப் பண்பாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய மகத்தான கடமை இடதுசாரிகளுக்கு இருக்கிறது.

பாட்டாளி வர்க்கப்பண்பாடு குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். ஆளுகின்ற முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் பண்பாட்டு விழுமியங்களின் மீது மக்களின் பொதுப்புத்தியில் இருக்கிற நம்பிக்கையைத் தகர்க்க வேண்டும். சாதியும் வர்க்கமும் என்றும் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கையில் உடைப்பை ஏற்படுத்த வேண்டும். ஒரே வர்க்க அணிகளுக்கிடையில் சாதி மதம் கடந்த ஒற்றுமையுணர்வை ஏற்படுத்த வேண்டும். நாங்கள் இடது சாரிகள் என்ற பெருமித உணர்வோடு கூடிய ஒரு புதிய அடையாளத்தை உருவாக்க வேண்டும். அதற்கு சுயசாதி நிராகரிப்பும், சுயவர்க்க நிராகரிப்பும் வேண்டும். சாதி அழிப்பும் வர்க்க அழிப்பும் நமது நீண்ட நாளையக் கனவு. ஆனால் சுயசாதி நிராகரிப்பும் சுயவர்க்க நிராகரிப்பும் உடனடியாக நடைமுறைப் படுத்தக் கூடியது. இதற்கு மிகப்பெரிய மனோபலம் வேண்டும். இந்த மனோபலத்தை இடதுசாரி அமைப்புகள் தர வேண்டும். அதற்கான புதிய பண்பாட்டு நடைமுறைகளை கண்டுணர வேண்டும்.

1 comment:

  1. தங்களுக்குச் சாதகமான அரசாங்கங்களை அமைக்கவும், தங்களுக்குச் சாதகமாக இல்லாத அரசுகளைக் கவிழ்க்கவும் சதிகளைச் செய்கிறது.

    அருமையான பதிவு. நன்றி.

    ReplyDelete