Monday, 17 December 2012

என்றாலும் நான் எழுதுகிறேன் எனவே நான் இருக்கிறேன்..

 

உதயசங்கர்Uthayasankar

ஒருவர் எழுத்தாளராவது எப்படி நிகழ்கிறது என்று யாராவது துல்லியமாகச் சொல்லி விட முடியுமா என்று தெரியவில்லை. எந்தக் கணத்தில் மனதில் எழுத்தின் மீதான தீராதமோகம் அல்லது வெறி உருவாகி அலைக்கழிக்கத் துவங்குகிறது. எந்தக் கணத்தில் வாழ்க்கையை அதன் பரிபூர்ண அர்த்தத்தில் உள்வாங்கி மீண்டும் படைக்கத் தொடங்குகிறது. எந்தக் கணத்தில் கலையின் பலி பீடத்தில் தன்னையே அர்ப்பணிக்க மனம் துணிகிறது. எந்தக் கணத்தில் வாழ்வின் முழுஅர்த்தமே எழுத்து தான் என்று தன்னையே நம்பச்செய்கிறது. இப்படிச் சொல்லிக் கொண்டே போகமுடியும். ஆனால் ஒரு எழுத்தாளன் உருவான அந்தக் கணம் பிடிபடுமா என்று தெரியவில்லை. இப்படியெல்லாம் சொல்லுவதனால் எழுத்தாளன் அபூர்வமான பிறவி என்றோ அவனுடைய எழுத்து பிறவிக்கொடை என்றோ சொல்லுவதாக அர்த்தமில்லை. வாழ்வின் எத்தனையோ விசித்திரங்களில் ஒன்றாக எழுத்தாளனும் உருவாகிறான். எனக்குத் தெரிந்து எந்தக் குழந்தையும் தான் எழுத்தாளனாக வேண்டும் என்ற லட்சியவெறியுடன் விரும்பி எழுத்தாளனானதாகத் தெரியவில்லை. இல்லை பெற்றோர்கள் தங்கள் குழந்தை எழுத்தாளனாக வேண்டும் என்று விரும்புவதுமில்லை. எழுதுவதை பொழுதுபோக்கு வகையறாவில் தான் சமூகத்தின் பொதுப்புத்தி வைத்திருக்கிறது. இதை விடக்கொடுமையும் இருக்கிறது. நான் தற்போது குடியிருக்கும் பகுதிக்கு மகாகவி நகர் என்று பெயர் வைக்கும் வைபவம் நடந்தபோது அங்கிருந்த ஒருவர் அதென்ன தரித்திரம் பிடித்தவன் பெயரை வைக்கிறீங்க என்றார். ஆக எழுத்தாளன் என்பவன் அதாவது எழுத்தை மட்டும் நம்பி வாழ்க்கை நடத்துபவன் தரித்திரத்துக்கு வாக்கப்பட்டவன். அவனால் குடும்பத்துக்கு ஒரு பிரயோசனமுமில்லை. பொதுப்புத்தியில் எழுத்தாளர்களைப் பற்றிய இந்த அழகான ( ? ) சித்திரம் இருக்கிறது என்னும்போது யார் தான் நான் எழுத்தாளராகத் தான் ஆகப் போகிறேன் என்று பிடிவாதம் பிடிக்கப் போகிறார்கள். அப்புறம் எப்படி எழுத்தாளர்கள் உருவாகிறார்கள்?

கலையே போலச் செய்வது தான். ஏற்கனவே நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கிற, நிகழப்போகிற, யதார்த்தத்தை எழுத்தாளன் போலச் செய்கிறான். இதில் அவன் விரும்புகிற யதார்த்தத்தைத் தான் போலச் செய்கிறான் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். எழுத்தாளனின் உழைப்பு, அர்ப்பணிப்பு இவற்றைப் பொறுத்து சுயம்புவான யதார்த்தத்தைச் சிருஷ்டிப்பது போலவும் மாயாஜாலம் நடக்கும். சரி. ஏன் ஒருவன் போலச் செய்ய வேண்டும்? குழந்தைகள் போலச் செய்தலை தன் வளரிளம் பருவத்தில் இயற்கை உள்ளுணர்வால் செய்து பார்க்கின்றன. அதன் மூலம் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளவும், மற்றவர் கவனத்தை ஈர்க்கவும் செய்கின்றனர். அநேகமாக எழுத்தாளர்களும் அந்தப்படியே செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். முதலில் எழுத்தின் மூலம் மற்றவர் கவனத்தை ஈர்த்து, தன்னுடைய இருத்தலை, இருத்தலுக்கான அர்த்தத்தை உறுதிப்படுத்துகின்றனர். அதோடு யதார்த்தத்தை புரிந்து கொள்ளவும், அதைப் புரிந்து கொண்ட விதத்தில் தன் கலையின் மூலம் விளக்கவும் முயற்சிக்கின்றனர். அதனால் எப்போதும் வேறொரு உலகத்தில் வாழ்பவரைப் போல மிதந்து கொண்டிருப்பதால் நடைமுறை வாழ்க்கையில் சரியாகப் பொருந்தமுடியாமல் போகிறது. யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள எழுத்தாளன் தன் வாழ்நாளையே செலவழிக்கிறான். ஆனால் நடைமுறை வாழ்வில் தோற்றுப் போகிறான். இது இங்கே தமிழ் எழுத்தாளர்களின் நிலை. வெளிநாடுகளில் எழுத்தாளர்களுக்கு இருக்கும் மரியாதையும் செல்வாக்கும் நம்மைப் பொறாமைப் பட வைக்கிறது. ஏன் மலையாள இலக்கிய உலகில் கூட எழுத்தாளர்களைக் கொண்டாடுகிறார்கள். விஜயதசமி அன்று கேரளாவில் எழுத்தாளர்கள் வீட்டு முன்பு குழந்தைகளோடு பெற்றோர்கள் வரிசை காத்து நிற்பார்களாம். எழுத்தாளர்கள் குழந்தைகளுக்கு முதல் அட்சரம் எழுதச் சொல்லிக் கொடுக்க வேண்டி. அதற்குத் தட்சிணையும் உண்டு. எனக்கு இதைக் கேள்விப்பட்ட போது மலையாளஎழுத்தாளர்கள் மீது பொறாமையாய் இருந்தது. ஆனால் இங்கே எழுத்தாளனுக்கு இருக்கும் மரியாதையைக் கண்கொண்டு காணமுடியாது. இந்த அழகில் எழுத்தாளன் ஆகியே தீருவேன் என்று சிறுவயதிலேயே பிடிவாதம் பிடித்து யார் வரப்போகிறார்கள்? அப்படியே தான் நானும் எந்தப்பிடிவாதமும் பிடித்து எழுத்தாளனாகவில்லை.

. நான் எழுத்தாளன் தானா என்ற கேள்வி இப்போதும் அவ்வப்போது மனசில் அலையடித்துக் கொண்டேயிருக்கத் தான் செய்கிறது. எழுதுவதற்கான எந்த முகாந்திரமும் என் இளம்பருவத்தில் இருக்கவில்லை. என் குடும்பத்தில் யாரும் பெரிய படிப்பாளிகளோ, கலை, இலக்கிய ஆர்வலர்களோ இல்லை. மிகச் சாதாரணமான கீழ்மத்திய தரக்குடும்பத்தில் மிகுந்த கஷ்டத்துக்கும், கஷ்டத்துக்கும் நடுவில் ஊஞ்சலாடிக் கொண்டே தான் எங்கள் குடும்பம் இருந்தது. கரிசக்காட்டு மக்களின் வெக்கையையெல்லாம் தீப்பெட்டியாபீசுகள் குடித்தன. எல்லாவீடுகளிலும் ஏதோ ஒரு வகையில் தீப்பெட்டி சம்பந்தப்பட்ட ஒரு வேலை நடந்து கொண்டிருந்தது. அதன் மூலம் கிடைத்த சொற்ப வருமானம் சொர்க்கம் கிடைத்த மாதிரி மக்களுக்குத் திருப்தியளித்தது. நானும் என் தம்பிகளும் தீப்பெட்டிக்கட்டைகளைச் சுமந்து கொண்டு தீப்பெட்டியாபீசு போகவும், ( பழைய )தீப்பெட்டியில் உள்ள மேல்பெட்டி, அடிப்பெட்டி, ஒட்டிக் கொண்டு போய் அளந்து விட்டு வரவும் இருந்தோம். எங்கள் விளையாட்டு நேரங்கள் மிகவும் குறைவு. தெருக்காட்டுப் புழுதியில் பம்பரக்குத்து, செதுக்குமுத்து, பாண்டி, கபடி, சிகரெட் அட்டை சீட்டு விளையாட்டு, கோலிக்குண்டு, விளையாட்டுகள் அம்மாவின் கூப்பாடுகளுக்கிடையில் நடக்கும். பல நேரங்களில் வீட்டில் அடி உதையும் விழும். எல்லாவிளையாட்டுகளிலும் நான் உப்புக்குச் சப்பாணி மாதிரி தான். அதனால் பசங்களோடு விளையாடுவதைக் காட்டிலும் பொம்பிளைப் பிள்ளைகளோடு உட்கார்ந்து கட்டு ஒட்டிக் கொண்டோ, கட்டை அடுக்கிக் கொண்டோ சினிமா கதைகள் பேசிக் கொண்டிருப்பதில் அலாதி விருப்பமிருந்தது. அப்படியே நான் கேட்ட, கேட்டதிலிருந்து உருவாக்கிய ராஜாராணி கதைகள், மந்திரவாதிக் கதைகள், எம்.ஜி.ஆர், நம்பியார் கதைகள், பேய்,பிசாசுக் கதைகள், என்று அளந்து விட்டுக் கொண்டிருந்தேன்.

பள்ளிக்கூடத்தில் குட்டைக்கத்தரிக்காய் என்ற பட்டப்பெயர், வகுப்பில் உதயசங்கரானதால் கடைசி வரிசை, வீட்டில் மூத்த பையனானதால் வீட்டு வேலைகள் அனைத்திலும் அம்மாவுக்கு ஒத்தாசை செய்வது, ஏனோ என்னுடைய இளமைப் பருவத்தை நினைக்கும் போது மிகுந்த மனஅழுத்தத்துடன் கழிந்த மாதிரியே தான் தோன்றுகிறது. அதனால் எனக்குள் ஒரு தனி உலகத்தைச் சிருஷ்டித்துக் கொண்டேன். அதில் வெகுநேரம் தனியே இருக்கவும் எனக்குள்ளே பேசிக்கொண்டிருக்கவும் செய்தேன். அதில் கொஞ்சம் சுதந்திரமாக உணர்ந்தேன். பள்ளி இறுதி வகுப்புவரை அம்மாபிள்ளையாகவே இருந்தேன். அம்மாவை எப்போதும் தேடிக் கொண்டேயிருந்தேன். இதையெல்லாம் வாசிக்கும் நீங்கள் என்னை மனநலம் குன்றியவனாக நினைத்தால் நான் எதுவும் செய்வதற்கில்லை. எனக்கும் எல்லோரையும் போல தன்முனைப்புடன் விளையாட்டு, படிப்பு, குறும்பு, சுட்டித்தனம், எல்லாம் செய்ய ஆசை தான். ஆனால் சின்னவயதிலிருந்தே எனக்குள் எப்படியோ நுழைந்து விட்ட தாழ்வுமனப்பான்மையும், தயக்கமும் என்னை கண்ணுக்குத் தெரியாத மந்திரக்கயிற்றினால் இன்னமும் கட்டிப் போட்டிருக்கிறது.

எங்கள் வீடு ஒரு விசித்திரமான அமைப்பில் இருந்தது மூன்று பக்கங்களிலும் சாக்கடை ஓடும் சந்துகளால் சூழப்பட்டிருந்தது. ஒரு புறம் இன்னொரு வீட்டின் புறவாசல் இருந்தது. ஒரு பக்கச் சந்தில் ஒரு கோட்டைச் சுவரும் அந்தக் கோட்டைச் சுவருக்கு அப்பால் என்னுடைய அற்புத உலகமும் இருந்தது. அந்தக் கோட்டைச் சுவர் இருளப்பசாமியின் கோவில் இருந்த காட்டைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்தது. அடர்ந்த செடிகளும் புதர்களும் நிறைந்திருந்தது. எத்தனையோ நாட்களில் அந்த செடிகளுக்குள் ஏதோ அமேசான் காட்டுக்குள் தேடியலைகிற மாதிரி எதையோ தேடிக் கொண்டு திரிந்திருக்கிறேன். ஏன் அப்படி செய்தேன் என்று இப்போது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அப்படித் தேடித் தேடி சட்டை பொத்தான்கள், சோடா பாட்டில் மூடிகள், குட்டிக்குரா பவுடர் டப்பா, மண் மூடி பாசம் பிடித்திருக்கும் ஒரு பைசா, எப்போதோ தொலைந்து போன கோலிக்குண்டு, ஆக்கர் குத்தில் உடைந்து போன பம்பரம், புழுக்கைப் பென்சில், சிலேட்டுக்குச்சிகள்,ஊக்குகள், பழைய ஆணிகள் என்று பலவிதமான பொருட்களைக் கண்டெடுத்திருக்கிறேன். ஒவ்வொரு முறை கோலிக்குண்டோ, பென்சிலோ, பொத்தானோ கிடைக்கும் போது புதையல் கிடைத்த மாதிரி சந்தோஷம் வரும் அதைப் பத்திரமாக ஒரு பழைய ஜாமிட்ரி பாக்ஸில் போட்டு என்னுடைய நோட்டுப் புத்தகங்களுக்கென்று நான் அழுது அடம் பிடித்து வாங்கிய கறுத்த சொருகு பலகை பூட்டிய சிறுகருங்காலிப் பெட்டியில் பூட்டி வைத்திருந்தேன்.இப்போதும்கூட போகும்போதும் வரும்போதும் எதையாவது தேடிக் கொண்டே அலைகின்றன என் கண்கள்.

என்னுடைய அம்மா குமுதம், கல்கண்டு வாசகியாக இருந்தாள். பள்ளிக்கூடப் பாடப்புத்தகத்தைத் தவிர நான் வாசிக்க நேர்ந்த புத்தகங்கள் முதலில் இது தான். ஒவ்வொரு சனிக்கிழமை ( என்று தான் நினைக்கிறேன் ) யும் கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் புத்தக ஸ்டால் வைத்திருந்த ஏகாந்தலிங்கம் கடைக்கு ஓடுவேன். அவர் கட்டைப் பிரிக்கும் போதே புத்தகங்களை வாங்கிக் கொண்டு திரும்பி வரும்போது கல்கண்டில் வெளிவந்து கொண்டிருந்த தமிழ்வாணனின் துப்பறியும் சங்கர்லால் கதையை வாசித்து முடித்து விடுவேன். அப்புறம் அம்புலி மாமா, அணில், முத்து காமிக்ஸ், என்று நண்பர்களிடம் இரவல் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். இது ஒரு கட்டத்தில் என் அம்மாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தவே என்னுடைய வகுப்பாசிரியரிடம் வந்து புகார் தெரிவித்தாள். என் கற்பனையின் வேகம் கூடிக் கொண்டே போனது. அதனுடைய விளைவாக எனக்கு உவப்பான பையன்களை சேர்த்துக் கொண்டு தந்தையும் மகனும் என்ற சமூக நாடகம் எழுதி எங்கள் தெருவில் வீடு வீடாக துட்டு வசூல் செய்து ரோஸ்பவுடர், பஞ்சுமீசை, தாடி, கலைஞர்கள் குடிப்பதற்கு சாக்ரீன் கலந்த குளிர்பானம், என்று ஏகதடபுடலாய் அரங்கேற்றினோம். என் உயரத்தை விட இரண்டு பங்கு உயரமான ராஜு தான் மகன் நான் தந்தை, பஞ்சு மீசை, தாடியெல்லாம் ஒட்டி அவிழ்ந்து அவிழந்து விழுகிற வேட்டியை ஒரு கையில் பிடித்துக் கொண்டே கெட்ட வழியில் போகிற மகனைத் திருத்துவேன். தெருவே அல்லோகலப்பட்டது.

பள்ளியில் நடத்திய எந்தப் போட்டியிலும் ஆறுதல் பரிசு கூட வாங்கியதில்லை. ஆனால் எல்லாப்போட்டிகளிலும் கலந்து கொள்வேன். பேச்சுப்போட்டியில் முதல் இரண்டு வரிகளுக்குப் பின் என் வாய் பேசாது. என்ன முயற்சி செய்தும் ஒரு வார்த்தை வராது. பாட்டுப்போட்டியில் என்னுடைய ஃபேவரைட் சாங்கான தூங்காதே தம்பி தூங்காதே தம்பி என்ற நாடோடி மன்னன் படப்பாடலைப் பாட ஆரம்பிப்பேன். அவ்வளவு தான். ஆயிரம் தடவை வீட்டிலிருக்கும் போது பாடிப் பாடி அக்கம்பக்கம் வீடுகளில் இருந்தவர்களை தூங்கவிடாமல் பண்ணிய அந்தப் பாடலின் மூன்றாவது வரி என்னைக் கை விட்டு எங்கோ நிரந்தரமாய் மறதியெனும் புதைசேற்றில் மறைந்து கொள்ளும். அப்படியே விக்கித்துப் போய் நின்று கொண்டிருக்கும் என்னை போட்டி நடத்தும் நடுவர்கள் தான் கரை சேர்ப்பார்கள். அவமானத்தால் கூனிப் போய் இன்னும் சின்ன உருவமாகி விடுவேன். கட்டுரைப் போட்டிகளில் என் சொந்த சரக்குகளை எழுதிக் கொட்டுவேன். அதற்கெல்லாமா பரிசு கொடுப்பார்கள்? எனக்கு மூன்று வருடசீனியராக இருந்த இளங்கோ( கோணங்கி ) பேச்சுப்போட்டியில் திராவிடக்கழகப் பேச்சாளர்களைப் போல சண்டமாருதமாய் பொழிவான். அடுக்குமொழியில் கண்களைச் சிமிட்டிச் சிமிட்டி அவன் பேசிய காட்சி இன்னமும் கண்களில் நிழலாடுகிறது. அதே போல நாறும்பூநாதனும். எல்லாப்போட்டிகளிலும் ஏதாவது ஒரு பரிசு வாங்காமல் இருக்கமாட்டான். நான் நாறும்பூநாதனோடு நட்பு பாராட்டினேன். அவனுக்கு ஏற்கனவே ஒரு நண்பர் குழாம் இருந்தது. அவர்கள் அவனைப் போற்றி வழிபட்டார்கள். அந்த குழாமுக்குள் நுழைவது அத்தனை சுலபமாயில்லை. நாறும்பூவின் மீது உரிமை கொண்டாடுவதில் சாரதியும், முத்துவும் போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள். அதனால் எனக்கு சற்று சிரமமாகவே இருந்தது. ஆனால் தொடர்ந்த என் முயற்சிகளுக்கு விரைவில் பலன் கிடைத்தது.

நாறும்பூநாதன் மூலமாக என் உலகம் விரிந்தது. அதோடு அந்தப் பருவத்துக்கேயுரிய பொறாமையும் வந்ததால் நானும் கண்டதை வாசிக்கவும், நூலகத்துக்குச் செல்லவும், நாறும்பூவிடம் இருந்தே புத்தகங்கள் வாங்கி வாசிக்கவும், அதன் வழியாக எனக்கென சொந்தக் கருத்துகளை உருவாக்கவும், அதை நண்பர்கள் மத்தியில் பேசவும் தலைப்பட்டேன். சாரதியும் முத்துவும் நாறும்பூதாசர்களாக இருந்ததால் அவன் என்ன சொன்னாலும் தலையாட்டினார்கள். நான் விவாதிக்கத் தொடங்கினேன். பல சமயங்களில் அது விதண்டாவாதமாகவும் இருந்தது. பள்ளியிறுதி வகுப்பு முடிந்து கல்லூரியில் புகுமுகவகுப்பில் நாங்கள் வேறு வேறு பிரிவுகளில் சேர்ந்தாலும் எங்கள் நட்பில் எந்தக் குறையுமில்லை. அங்கே தான் கவிதைகள் வாசிக்க ஆரம்பித்தேன். அப்போது கல்லூரியின் நூலகத்தில் ஏராளமான கவிதைத் தொகுப்புகள் இருந்தன. அதையும் கிரிக்கெட் சம்பந்தமான புத்தகங்களையும் சேர்த்தே வாசித்தேன். கவிதைப் புத்தகங்களை வாசித்ததால் கவிதை எழுத ஆரம்பித்தேன். முதலாமாண்டு மாணவர்களை வரவேற்றும், மூன்றாமாண்டு மாணவர்களை வழியனுப்பியும் கவிச்சரங்களைத் தொடுத்தேன். அதை யாராவது பொருட்படுத்தினார்களா என்று தெரியவில்லை. நானும் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.முதன்முதலாக கல்லூரி ஆண்டு மலரில் கல்லூரியிலிருந்து சென்று வந்த சுற்றுலாவைப் பற்றி ஒரு கட்டுரை எழுதிக் கொடுக்கச் சொல்லி தமிழ்ப்பேராசிரியர் அரங்கராசன் கேட்டார். அது வெளிவந்தது. அடுத்த ஆண்டு தமிழ்ப்பேராசிரியர் விஜயராகவன் ஒரு கதை எழுதிக் கொடுக்கச் சொன்னார். அது தான் பிரசுரமான என் முதல் கதை. அந்த உற்சாகத்தில் கதைப்புத்தகங்களாக வாசிக்க ஆரம்பித்தேன். கையெழுத்து பத்திரிகை நடத்தினோம். கோவில்பட்டி இலக்கியவட்டமும் அறிமுகமானது. இடதுசாரிகள் எங்களைத் தூண்டில் போட்டு பிடித்தனர். இயல்பாகவே நாங்கள் சென்று சேர்ந்திருக்க வேண்டிய இடமாகவும் இடது சாரி இயக்கம் இருந்தது.

அப்போதிருந்த கனவுகளை இப்போது சொல்லி மாளாது. எழுத்தாளன் என்ற கர்வம் தலைக்குப் பின்னால் ஒளிவட்டமாய் சுற்றிக் கொண்டிருக்க தலைகால் தெரியாமல் தான் அலைந்தேன். என்னைத் தின்று கொண்டிருந்த தாழ்வுமனப்பான்மை இந்த ஒளிவட்டத்தின் வெக்கையில் ஓடி ஒளிந்து கொண்டது. நானும் ஒரு ஆள் தான் என்று நம்பிக்கை வளர்ந்தது. எழுத்தாளர்களைத் தவிர இந்த உலகத்தில் யாரும் இல்லாதது போல நினைப்பு. கோவில்பட்டி ஊரும் அப்படித் தான் இருந்தது. தெருவுக்குத் தெரு எழுத்தாளர்கள் என்றால் ஊர் தாங்குமா? ஆனால் கோவில்பட்டி தாங்கியது. ஊரை உண்டு இல்லையென்று பண்ணினோம். எத்தனையோ பரிசோதனை முயற்சிகளையும் செய்து பார்த்தோம். கார்ட்டூன் கண்காட்சி, பிகாசோ ஓவியக்கண்காட்சி, புகைப்படக்கண்காட்சி, யுத்தஎதிர்ப்பு கண்காட்சி, உலகசமாதானக்கண்காட்சி, என்று கண்காட்சிகள் ஒரு பக்கம், தர்சனா, சிருஷ்டி, என்று வீதி நாடகக்குழுக்கள், ஊர் முழுவதும் உள்ள மின்கம்பங்களில் பாரதி, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, மார்க்ஸ், லெனின், மாவோ, கிராம்ஷி, சே குவாரா, என்று உலகச்சிந்தனையாளர்களின் சிந்தனைகளை எழுதி தொங்கவிட்டிருந்தோம். த்வனி என்று ஒரு பத்திரிகை ஒரே ஒரு இதழ் மட்டும் கொண்டு வந்தோம். நாங்கள் செய்யாத காரியங்கள் இல்லையென்று தான் நினைக்கிறேன். அதோடு 1980 களில் இதெல்லாம் பெரிய விஷயம் தான். எவ்வளவோ படித்தோம். எவ்வளவோ எழுதினோம். உலகத்தை மாற்றும் மந்திரக்கோல் எழுத்தாளர் கைவசமே இருக்கிறது என்ற இறுமாப்பு இருந்தது. அது ஒரு காலம்.

ஏன் இப்படி விலாவாரியாக இருளப்பசாமி கோவில் புதர்க்காட்டுக்குள் எதையோ தேடி அலைந்த மாதிரி சொல்லிக் கொண்டு போகிறேன். அப்படியாவது நானும் எழுத்தாளன் என்று சொல்லிவிடுவதற்கான தடயங்கள் கிடைக்கிறதா என்று பார்ப்பதற்காகத் தான். கோவில்பட்டியில் இருந்தகாலம் வரை இருந்த எழுத்தாளன் என்ற கர்வம் எனக்கு வேலை கிடைத்து நான் வெளியுலகத்தை எதிர்கொள்ளத் தொடங்கியதும் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்து கொண்டது.. இரக்கமேயில்லாமல் என்னுடைய பழைய தயக்கமும் தாழ்வு மனப்பான்மையும் மீண்டும் என்னை வதைக்கத் தொடங்கி விட்டது. என்னுடைய புத்தகங்கள் வெளிவந்தன, வெளி வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த சந்தோஷமெல்லாம் ஓரிரவு மதுபோதை மாதிரி கலைந்து போய் விடுகிறது. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.

நான் என் சக எழுத்தாளர்களைப் பொறாமையுடன் படித்தேன். கொஞ்சகாலம் எழுதாமலும் இருந்தேன். நான் எழுத்தாளன் இல்லையோ என்ற சந்தேகம் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. என் கண்முன்னால் தன் வாழ்நாள் முழுவதும் எழுதி எழுதியேக் காணாமல் போய் விட்ட எழுத்தாளர்படையே தெரிந்தது. அவர்களைப் பற்றி எந்த ஒரு சிறு இலக்கியக்குறிப்பும் கிடையாது. அவர்கள் ஆவிகளாக என் கனவில் வந்து என்னைப் பயமுறுத்தினார்களென்றால் நேரில் பல இலக்கிய ஆர்வலர்கள், புது எழுத்தாளர்கள், அமைப்பிலுள்ள தோழர்கள் இன்றும்கூட

1. நீங்க கதையெல்லாம் எழுதுவீங்களா?

2. நீங்க கதை எழுதியிருக்கிறீங்களா?

3. நீங்க புக் எதுவும் போட்டிருக்கீங்களா?

4. அப்படியொண்ணும் பெரிசா எழுதலியே… நீங்க

5. யாரு புதுசா இருக்கு.. உதயசங்கர்னு போட்டிருக்கே யாருப்பா?

கேட்டுப் பயமுறுத்துகிறார்கள். அதனால் எழுத்தாளராவதற்கு எழுதுவதைத் தவிர வேறு நிறையத் தகுதிகள் வேண்டும் என்று நான் புரிந்து கொண்டிருக்கிறேன். குழு சேர்க்க வேண்டும். இலக்கியஅரசியல் செய்ய வேண்டும். இலக்கிய மையம் ஒன்று துவங்கி எல்லாஎழுத்தாளர்களையும் அழைத்து கூட்டங்கள் நடத்த வேண்டும். அங்கே நடக்கும் எல்லாச்சண்டைகளையும் பஞ்சாயத்து பண்ண வேண்டும். எப்படியும் அந்தப் பஞ்சாயத்தில் உங்களுக்கென்று ஒரு கோஷ்டி சேர்ந்து விடும் அல்லது நீங்கள் ஒரு கோஷ்டியில் சேர்ந்து விடுவீர்கள். பின்பு என்ன எல்லோர் கவனத்தை ஈர்க்க கையெறி குண்டுகளை வீச வேண்டும் தமிழில் நாவல் இல்லை, சிறுகதை இல்லை, கவிதை இல்லை, விமர்சனம் இல்லை, தமிழிலக்கியவாதிகள் சினிக்குகள் அல்லது ஹிப்போகிரைட்டுகள், தமிழில் எதுவுமே இல்லை .இப்படி இப்படி.. இப்படி.. குறைந்தது ஒரு வெங்காயவெடியாவது வீச வேண்டும். புழுதியாவது கிளம்புமே. ஏற்கனவே பிரபலமாக இருப்பவர்களுடன் எப்படியாவது நட்பு பாராட்டி ஒட்டிக் கொள்ள வேண்டும். அல்லது அவர்களுடைய அடிப்பொடியாக ஆக வேண்டும். அவர்கள் உங்கள் பெயரை மறக்காமலிருக்க தினமும் ஒரு முறை யாவது தொலைபேசியில் வாழ்த்த வேண்டும். அல்லது அவருக்குப் பிடிக்காதவர்களைப் பற்றிக் கோள் மூட்ட வேண்டும். இந்தச் சிறிய முதலீட்டினால் பல பெரிய லாபங்கள் கிடைக்கும். அவர்கள் உங்கள் பெயரை எல்லாப்பொது இடங்களிலும் உச்சரிப்பார்கள். பலசமயம் பரிசுகளுக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். இல்லையென்றால் ஒரு பத்திரிகை அப்படியே கொசுறாக ஒரு பதிப்பகம் நடத்த வேண்டும். இல்லையென்றால் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டும். ஊர், உலகத்திலுள்ள எல்லா எழுத்தாளர்களையும் வரவேற்று ரூம் போட்டு பகலிரவில் விருந்தோம்பல் நடத்த வேண்டும். அதையும் அடிக்கடி செய்ய வேண்டும். அவர்களும் நன்றிக்கடனாக உங்கள் பெயரை தங்களுடைய குழுவிலோ, பட்டியலிலோ, சேர்த்துக் கொள்வார்கள்.

முழு இலக்கிய உலகமும் இப்படித்தான் இயங்குகிறதென்றோ, இல்லை பொச்சரிப்பினால் இப்படிச் சொல்கிறேனென்றோ நினைத்து விட வேண்டாம். மேலே சொன்ன எல்லாவகையிலும் பகுதியளவுக்காவது இயங்கிக் கொண்டிருக்கிறது இலக்கிய உலகம் என்று இதில் புழங்கிக் கொண்டிருக்கிற எழுத்தாளர்களுக்குத் தெரியும் என்று நம்புகிறேன். இதெல்லாம் இல்லாம என்னப்பா இலக்கிய உலகம் ?. உப்பு உரப்பு இல்லாத பத்தியச்சாப்பாடு மாதிரியா இருக்கமுடியும் என்று சொல்லலாம். அதுவும் உண்மை தான். ஆனால் இவையெல்லாம் ஒருவரின் எழுத்தாளத்தகுதியைத் தீர்மானிக்கிற விஷயங்களாக மாறுகிறதே என்ற ஆதங்கம் தான். அதெல்லாம் காலம் பாத்துக்கிடும்பா என்று ஒரு அசரீரி கேட்கிறது. அரூபமான காலத்தின் ஊடே ரூபமான மனிதர்கள் தானே இயங்குகிறார்களில்லையா? இயல்பிலேயே மேலே குறிப்பிட்ட எந்தத் தகுதிகளும் வசதிகளும் இல்லாத என்னைப் போல இன்னும் பல எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். தயக்கமிக்க எங்களால் இந்த ரேஸில் ஒரு போதும் கலந்து கொள்ளவே முடியாது. என்ற குறிப்புடனும், என்றாலும் நான் எழுதுகிறேன், எனவே நான் இருக்கிறேன் என்ற பஞ்ச் டயலாக்குடன் முடிக்கலாம் என்று நினைக்கிறேன். இதையெல்லாம் வாசித்து முடிக்கும் சிலருக்கேனும் ” யாருப்பா இந்த உதயசங்கர்? என்ன எழுதியிருக்காரு?” என்ற கேள்விகள் வரவும் கூடும் என்ற ஆச்சரியமின்மையோடு இங்கே நிறுத்திக் கொள்கிறேன்.

நன்றி- நற்றிணை காலாண்டிதழ்SketchGuru_20121121212036

4 comments:

  1. I follow your blog, very nice. I read Mathava blog that you working in kumarapuram railway station, I passed thro. Many times since my native is Malaipatti, near ilavelangal rail

    ReplyDelete
  2. இந்த தலைப்பை பார்த்தவுடன் எங்கேயோ கேட்டமாதிரி இருக்கிறது. யார் என்று தான் தெரியவில்லை?

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு. சமீபத்தில் ஒரு சிறுகதை தொகுப்பு வெளியிட்டிருந்தேன். அதில் ஒரு கதாபாத்திரத்தை கொன்று விட்டேன் என்று புத்தகத்தை முழுதாக வாசிக்காத சில நபர்கள் கூட்டு சேர்ந்து விமர்சிப்பது பயண்படுத்தும் சொல்லாடல் என பல விமர்சங்கள். சரி ஒரு படைப்பாளியாக என் கருத்தை பதிய வைத்து விட்டேன் என ஆறுதல் பட்டு கொள்ள வேண்டியது தான்.

    ReplyDelete
  4. அருமையான பதிவு.
    நிறைய விபரங்கள் - புத்தகப் பதிப்பு பற்றி - நிஜம் தான். நமக்கு பின்னால் ஒரு God Father வேண்டும்.
    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete