Showing posts with label சாதத ஹசன் மாண்டோ. Show all posts
Showing posts with label சாதத ஹசன் மாண்டோ. Show all posts

Monday, 16 August 2021

மானுட மனசாட்சியின் உரத்த குரல் சாதத் ஹசன் மண்டோ

 


மானுட மனசாட்சியின் உரத்தகுரல் சாதத் ஹசன் மண்டோ

உதயசங்கர்

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிறுகதை எழுத்தாளரான சாதத் ஹசன் மண்டோ தன்னுடைய கல்லறை வாசகத்தைத் தான் இறப்பதற்கு முந்திய வருடத்தில் அதாவது 1954 ஆம் ஆண்டு ஆகஸ்டு 18 ஆம் தேதி இப்படி எழுதி வைத்திருந்தார்,

“ இங்கே கிடக்கிறான் சாதத் ஹசன் மண்டோ. அவனுடன் சேர்ந்து சிறுகதைக்கலையின் அத்தனை மர்மங்களும், கலைத்திறன்களும் புதைக்கப்பட்டு விட்டன. டன் கணக்கிலான மண்ணுக்கடியில் கிடக்கும் அவன், கடவுளை விட மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளன் அவன் தானோ என்று வியந்து கொண்டிருக்கிறான்..”

தன்னுடைய கலையின் மீது எத்தகைய நம்பிக்கை இருந்திருந்தால் இத்தனை கர்வத்துடன் எழுதமுடியும் அதுதான் சாதத் ஹசன் மண்டோ. உலகத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும், ஆசியக்கண்டத்தின் ஈடு இணையற்ற எழுத்தாளருமான சாதத் ஹசன் மண்டோ 1912-ஆம் ஆண்டு மே மாதம் 11 – ஆம் தேதி பஞ்சாபிலுள்ள லூதியானா மாவட்டத்திலுள்ள சம்ராலா என்ற நகருக்கு அருகிலுள்ள பாப்ரௌடி என்ற கிராமத்தில் பிறந்தார். அவருடைய முன்னோர்கள் காஷ்மீரைச் சேர்ந்த பணக்கார வியாபாரிகள். மண்டோவின் தாத்தா பாஷ்மானியா என்று சொல்லப்படும் காஷ்மீரில் வீடுகளில் வளர்க்கப்படும் சங்தாங்கி ஆடுகளின் கம்பளிரோமங்களை வாங்கி விற்கும் வியாபாரியாக இருந்தார். பின்னர் அமிர்தசரஸை நோக்கி குடும்பம் குடிபெயர்ந்தது. மண்டோவின் அப்பா மௌல்வி குலாம் ஹசன் தீவிரமான மத அபிமானியாக இருந்தார்.  அவர் இரண்டு திருமணம் முடித்து மொத்தம் 12 குழந்தைகளுக்கு தந்தையாக இருந்தார். மண்டோ மௌல்வி குலாம் ஹசனின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தார். மண்டோ தன்னுடைய மூத்த சகோதரர்களிடம் மிகுந்த பயபக்தியுடன் இருந்தார். ஏனெனில் அவர்கள் அவரைவிட வயது மிகவும் மூத்தவர்களாக மட்டுமல்ல நன்கு படித்தவர்களாகவும் இருந்தார்கள். மண்டோவின் அப்பா கண்டிப்பானவர். சம்ராலாவின் நீதிமன்றத்தில் துணை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற மண்டோவின் அப்பாவுக்கு கத்தியைப் போன்ற கூர்மையான நாக்கும் கண்டிப்பான வழிமுறைகளும் கொண்டிருந்தார். அதனால் மண்டோ அப்பாவைக் கண்டு எப்போது பயந்து கொண்டேயிருந்தார். அவரிடம் ஏற்பட்ட கலகக்குணத்துக்கு அவருடைய அப்பா ஒரு காரணமாக இருக்கலாம். அம்மாவின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த மண்டோ.  மற்ற குடும்பத்தினருடன் அவ்வளவு நெருக்கமாக இல்லை.

மண்டோவின் அப்பா மண்டோ கஷ்டப்பட்டுப் படிக்கவேண்டும், மண்டோவின் மற்ற சகோதரர்களைப் போல வெளிநாடு சென்று படித்து பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்று நினைத்தார். ஆனால் மண்டோவிடம் வளர்ந்து வரும் மதஈடுபாடின்மையையும், மரியாதையின்மையையும் கண்டு மனம் வெதும்பினார். மண்டோவுக்கு வழக்கமான பள்ளிக்கல்வியில் ஈடுபாடில்லை. அவர் இண்டர்மீடியட்டில் இரண்டு முறை தோற்றுப்போனார். அதிலும் குறிப்பாக பின்னாளில் உருது இலக்கியத்தில் சாதனைகள் செய்த மண்டோ உருது மொழிப்பாடத்தில் தோல்வியடைந்தது முரண்நகை. இந்தத் தோல்வியின் விளைவாக அவர் சிற்றின்பக்கேளிக்கைகளில் முழுமூச்சாக இறங்கினார். 1930 – களின் துவக்கத்தில் சூதாட்டம், புகைபிடித்தல், கஞ்சா, சோம்பிக்கிடத்தல், போன்றவற்றில் மூழ்கிக்கிடந்தார். ஆனால் அவருடைய வாழ்க்கையின் திருப்புமுனையாக முஸாவர் பத்திரிகையின் ஆசிரியரான அப்துல் பாரி அலியுடனான சந்திப்பு 1933 – ல் மண்டோவின் இருபத்தியோராம் வயதில் நிகழ்ந்தது.  அவருடன் சேர்ந்து முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் அறிமுகமானது. பாரி அலி மண்டோவைச் சந்தித்தபோதே அவருடைய திறமையைக் கண்டு கொண்டார். அவர் மண்டோவின் புரட்சிமோகத்தை இலக்கியத்தின் பக்கம் திசை திருப்பினார். அவருக்கு ருஷ்ய இலக்கியத்தையும் பிரெஞ்சு இலக்கியத்தையும் அறிமுகப்படுத்தி ஈடுபாடு கொள்ள வைத்தார். ஆஸ்கார் வைல்டு, மாப்பாசான், விக்டர் ஹியுகோ போன்றவர்களின் கலைத்திறனை அறிமுகப்படுத்தினார். எழுத்தின் மூலம் வருமானம் ஈட்டலாம் என்ற பாதையையும் அவர் காட்டிக் கொடுத்தார். அவர் உடனே லூதியானாவிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தினசரியான மாசாவாத் என்ற பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். அதில் மண்டோ புரட்சிகரக்கவிதைகளையும், கட்டுரைகளையும், மொழிபெயர்ப்புகளையும் செய்யத் தொடங்கினார்.

விக்டர் ஹியுகோவின் The last days of a condemned man என்ற நாடகத்தை உருதுவில் மொழிபெயர்த்தார். அதை லாகூரிலுள்ள லாகூர் புக் ஸ்டோர் என்ற நிறுவனம் ஒரு கைதியின் கதை என்ற பெயரில் வெளியிட்டது. அதன் வெற்றியினால் அவர் ஆஸ்கர் வைல்டின் வேரா அல்லது நிகிலிஸ்டுகள் என்ற நாடகத்தை 1934 –ல் மொழிபெயர்த்தார். அந்த நாடகம் அவருக்கு மிகப்பெரும் உத்வேகத்தைக் கொடுத்தது. பின்னாளில் அவர் அந்த நாட்களைப் பற்றி எழுதும்போது அவரும் அவருடைய நண்பர்களும் அமிர்தசரசின் வீதிகளில் நடந்து போகும்போது ஏதோ மாஸ்கோவில் புரட்சியை நடத்திக் கொண்டிருப்பவர்களைப் போல உணர்ந்ததாக எழுதினார். மாவீரன் பகத்சிங்கும் அவரை மிகவும் பாதித்திருந்தார். மண்டோ ஆரம்பம் முதலே ஒரு இடதுசாரியாகவும் சோசலிஸ்டாகவும் வளர்ந்தார். பின்னாளில் முற்போக்கு எழுத்தாளர் சங்கமே கூட அவருடைய படைப்புகளின் மீது விமரிசனங்களை வைத்தபோதும் அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.

பாரி அலி மண்டோவை அவருடைய சொந்தப்படைப்புகளை எழுதும்படி வற்புறுத்தினார். மண்டோ மிகவிரைவிலேயே திறமையான எழுத்தாளராகப் பரிணமித்தார். அவருடைய முதல் கதையாகச் சொல்லப்படுகிற தமாஷா என்ற கதை ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் பின்னணியாகக் கொண்டது.

அவருடைய பாலியகால நண்பரொருவரின் வற்புறுத்தலினால் அலிகாரிலுள்ள முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் 1934 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சேர்ந்தார். வழக்கம்போல அங்கே அவரால் மாணவனாக சோபிக்கமுடியவில்லை. ஆனால் அங்கேயிருந்த ஒன்பது மாதங்களில் ஏராளமான கதைகளையும் கட்டுரைகளையும் எழுதி பத்திரிகைகளில் வெளியிட்டார்.

மண்டோவுக்கு அப்போது இருபத்திமூன்று வயதிருக்கும். அவருக்கு காசநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. நெஞ்சுவலியைக் குறைப்பதற்காக அவர் நாட்டுச்சாராயத்தை அதிகமாகக் குடிக்க ஆரம்பித்தார். ஆனால் போதிய பலன் தராததால் அவர் மலைப்பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டார். அவருடைய முன்னோர்கள் காஷ்மீரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர் இப்போது தான் காஷ்மீருக்குப் போனார். காஷ்மீரும் அந்த மக்களும் அவரைக் கவர்ந்தனர். அங்கே தான் ஒரு ஆடு மேய்க்கும்பெண் மீது அவருடைய முதல் வசந்தம் வீசியது.

அவர் அமிர்தசரஸ் திரும்பி அங்கிருந்து லாகூருக்கு பராஸ் என்ற பத்திரிகையில் நிரந்தரவேலை கிடைத்துப் போனார். ஆனால் அந்தப்பத்திரிகையின் தன்மை அவருக்கு ஒத்துவரவில்லை. 1935 – ல் மும்பைக்கு வேலை தேடி வந்தார். முசாவ்விர் என்ற சினிமா வாராந்திரியின் ஆசிரியராகச் சேர்ந்தார். மண்டோ மும்பையைத் தீவிரமாக நேசித்தார். அதன் அழகும் ஒயிலும் ஸ்டைலும் அவரை அப்படியே ஈர்த்து விட்டன. இரண்டுமுரை மும்பையை விட்டு வெளியேறியிருந்தார். ஒருமுறை ஆல் இண்டியா ரேடியோவில் வேலை செய்வதற்காக, அது குறுகிய காலம், இரண்டாவது முறை பிரிவினைக்குப் பிறகு நிரந்தரமாக மும்பையை விட்டுப் பிரிந்தார். அவர் சாகும்வரை மும்பையின் மீதான காதல் தொடர்ந்து கொண்டேயிருந்தது. 1935 – 1947 வரையில் மும்பையிலிருந்த மண்டோ முதலில் சினிமா பத்திரிகையாளராக இருந்து பின்னர் இம்பீரியல் சினிமா கம்பெனியின் ஸ்கிரிப்ட் ரைட்டராக சேர்ந்தார். முதலில் அவர் எழுதி வெளியான திரைப்படம் படுதோல்வியடைந்தது. ஒரே நேரத்தில் சினிமா அவருக்கு ஆசைகாட்டவும் ஏமாற்றவும் செய்தது. ஆனாலும் அவர் விடவில்லை.

ஒரு சமயம் அவர் சினிமாக்களுக்கு எழுதிக்கொண்டே இரண்டு பத்திரிகைகளுக்கு ஆசிரியராகவும், இடையிடையே ரேடியாவுக்கும் பங்களித்துக் கொண்டிருந்தார். அவருடைய முதல் சிறுகதைத்தொகுப்பு 1940 ஆம் ஆண்டு வெளியானது. இரண்டாவதாக 1942 –ல் அவருடைய கட்டுரைத்தொகுப்பு வெளியானது. அதன் பிறகு 1943 ஆம் ஆண்டு அவர் டெல்லிக்குப் போனார். அங்கே இருந்த இரண்டு ஆண்டுகளும் அவருடைய சொந்த வாழ்வில் பெரும் இழப்புகளைச் சந்தித்த ஆண்டுகளாக இருந்தன. அவருடைய அம்மாவும் அவருடைய மூத்தமகனும் இறந்து போனார்கள். இந்த இரண்டு இழப்புகளும் அவருக்கு பேரிடியாக இருந்தது மட்டுமல்லாமல் அவருடைய வாழ்நாள் முழுவதும் இழப்பின் துயரம் தொடர்ந்தது.

ஆல் இண்டியா ரேடியோவில் அப்போது பேர்பெற்ற இயக்குநராக இருந்த பித்ராஸ் புகாரியுடன் தீர்க்கமுடியாத முரண்பாடுகள் ஏற்பட்டன. மண்டோவுக்கு மாதாந்திரச்சம்பளம் கிடைத்த வேலை என்பதைத் தவிர மற்றபடி டெல்லியில் மண்டோ மகிழ்ச்சியாக இல்லை. அந்த வேலையைத் துறந்து மீண்டும் மும்பைக்கு வந்தார்.

முதலில் மீண்டும் முசாவ்விர் பத்திரிகையில் சேர்ந்து வேலை செய்து கொண்டே ஃப்ரீலான்சராக திரைப்படங்களுக்கு எழுதினார்.  1943 –ல் மும்பையில் ஃபிலிமிஸ்தான் என்ற படக்கம்பெனியில் சேர்ந்தார். அந்தக்கம்பெணி புகழ்பெற்ற பம்பாய் டாக்கீஸிலிருந்து பிரிந்து வந்த அவருடைய நெருங்கிய நண்பர்களான ஷியாம், அசோக்குமார், சேர்ந்து ஆரம்பித்திருந்தார்கள். அந்தக்கம்பெனிக்காக பல வெற்றிகரமான திரைப்படங்களுக்குக் கதைகளை எழுதினார்.

நாடு கொந்தளித்துக் கொண்டிருந்த காலம். தவிர்க்கமுடியாத பிரிவினையை நோக்கி இந்தியா தள்ளப்பட்டுக் கொண்டிருந்தது. மும்பையில் திடீர் திடீரென்று கலவரங்கள் வெடித்தன. 1947 – ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி நாட்டின் பிரிவினை அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே மண்டோவின் மனைவியும் குழந்தைகளும் பாகிஸ்தானுக்குப் போய் விட்டனர். மண்டோவுக்கு மும்பையை விட்டுப் போக மனமில்லை. அவர் இந்தியாவில் இருந்து விடவே விரும்பினார். ஆனால் பம்பாய் டாக்கீஸ் நிர்வாகம் இஸ்லாமியர்களை வேலையிலிருந்து நீக்கிய நிகழ்வு அவருக்கு முதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு நாள் திடீரென்று மண்டோ அவருடைய பைகளை எடுத்துக் கொண்டு பாகிஸ்தானுக்குக் கிளம்பினார். ஏன் அப்படி அவர் திடீரென்று புறப்பட வேண்டும் என்பதற்கான காரணங்கள் உடனே யாருக்கும் தெரியவில்லை. ஆனால் மண்டோ அவருடைய நினைவோடைக்குறிப்புகளில் மும்பையில் அவருடைய கடைசிநாட்களைப் பற்றி எழுதியிருக்கிறார். அதை அவருடைய மிக நெருங்கிய நண்பரான புகழ்பெற்ற திரைநட்சத்திரம் ஷியாமுக்கு அர்ப்பணித்திருந்தார்.

” ஒரு நாள் நானும் ஷியாமும் ராவல்பிண்டியிலிருந்து அகதியாக வந்திருந்த ஒரு சீக்கியக்குடும்பத்துடன் இருந்தோம். அங்கே என்ன நடந்தது என்று அவர்கள் விவரித்ததைக் கேட்டபோது திகைத்துப்போய் அதிர்ச்சியில் உறைந்திருந்தோம். அந்தக் கொடூரமான சம்பவங்களைக் கேட்ட  ஷியாம் அழுதுவிட்டான். அவனுடைய மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்தது என்பதை என்னால் உணரமுடிந்தது. நாங்கள் அங்கிருந்து கிளம்பிய பிறகு நான் ஷியாமிடம்,

“ நான் ஒரு முஸ்லீம்.. என்னைக்கொல்லணும்னு உனக்குத் தோணலையா..” என்று கேட்டேன். அதற்கு அவன் இறுக்கமாக

” இப்போது இல்லை.. ஆனால் அவங்க இஸ்லாமியர்கள் செய்த அட்டூழியங்களைச் சொன்ன போது எனக்கு அப்படித் தோன்றியது அப்போது நான் உன்னைக் கொன்றிருப்பேன்..”  என்று சொன்னான். அவனுடைய வார்த்தைகள் என்னை ஆழமாகப் பாதித்தது. அவனைப்போலவே நானும் அவனைக்கொன்றிருக்கமுடியும். அதைப்பற்றி பின்னால் சிந்தித்தபோது இந்தியாவின் மதக்கலவரத்தின் இரத்தப்பாதையின் பின்னாலுள்ள உளவியலைப் புரிந்து கொள்ள முடிந்தது. “

கிட்டத்தட்ட இதுவே மண்டோ தன்னுடைய அருமைக்காதலியான மும்பையை விட்டுப்பிரிந்து பாகிஸ்தானுக்குச் செல்ல முக்கியமான காரணமாக இருந்தது என்று சொல்லலாம். ஆனால் பலரும் பலகாரணங்களைச் சொன்னார்கள். புதிய நாட்டில் புதிய வாழ்க்கையை வளமாகத் தொடங்கலாம் என்று நினைத்துப் போய் விட்டாரென்றும். எல்லாவற்றையும் அழித்துவிட்டு மீண்டும் புதிதாக தொடங்கலாம் என்று போனாரென்றும் பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த இந்துக்கள் கைவிட்டுச் சென்ற பெரிய பெரிய மாளிகைகளை இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து வரும் இஸ்லாமியர்களுக்குக் கொடுக்கிறார்கள் என்ற செய்தியின் அடிப்படையில் மாளிகை கிடைக்கும் என்று போய்விட்டாரென்றும் அவருடைய அருமையான மனைவி, குழந்தைகளைப் பிரிந்திருக்கமுடியாமல் போய் விட்டாரென்றும், அவர் நேசித்த மும்பை சினிமா அவரை விரட்டி விட்ட விரக்தியில் போய் விட்டாரென்றும்,  

1948 ஆம் ஆண்டிலிருந்து 1955 ஆம் ஆண்டு அவருடைய மறைவு வரை அவர் பாகிஸ்தானில் லாகூரில் இருந்த காலத்தில் மிகத்தீவிரமான எழுத்தாளராக இயங்கினார். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு ஒரு என்ற விகிதத்தில் எழுதியிருக்கிறார். ஒரே கதையை வேறு வேறு மாதிரி எழுதியிருக்கிறார். ஒரே கதையை முடிவுகளை மாற்றி மாற்றி எழுதியிருக்கிறார். பல கதைகள் வெவ்வேறு தொகுப்புகளிலும் திரும்பத்திரும்ப இடம் பெற்றிருக்கின்றன. அந்த நாட்களில் இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளின் மீது துயரத்தின் கருநிழல் இரவாய் கவிந்திருக்க எப்போது வெளிச்சம் வரும் என்று யாருக்குமே தெரியாதிருந்த காலத்தில் மிகுந்த மன உளைச்சலுடன், கைக்கும் வாய்க்குமான வறுமையுடன் மனதின் உணர்வெழுச்சிகளைத் தாங்கமுடியாமல் அதீதக்குடியுடன் அலைக்கழிந்திருக்கிறார் சாதத் ஹசன் மண்டோ.

அவரைத் துரத்திக்கொண்டேயிருந்த பிரமைகளான கரும்பிசாசுகளிடமிருந்து தப்பிக்கவும் கொடூரமான கற்பனைக்காட்சிகளிடமிருந்து விடுதலையடையவும்  குடியிடம் சரணடைந்திருக்கிறார். அந்தப் பிசாசுகளை குடி வெற்றிகொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் மனநலமருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை எடுத்திருக்கிறார். எப்போதோ மருத்துவர்கள் அவருக்கு மரணஎச்சரிக்கை செய்து விட்டார்கள். இனி குடித்தால் அவ்வளவுதான். உயிருக்கு உத்திரவாதமில்லை. ஆனால் சாதத் ஹசன் மண்டோவும் குடிக்காமலிருக்க முயற்சித்தார். ஆனால் அவருக்கு மழுங்கடிக்கப்பட்ட, பாவனையான, போலியான, சமூக அக்கறையை முன்வைத்து எழுதத்தெரியவில்லை. அவருடைய  கூருர்ணவுகள் சமூகத்தின் அவலங்களைப் பார்த்து தங்களுடைய கூர்மைகளால் அவரையே குத்திக்கிழித்தன. அந்தக்காலத்தில் அவர் கேட்ட, பார்த்த, படித்த ஒவ்வொரு சம்பவமும் அவரைக் கூறுபோட்டன. உணர்வெழுச்சியை ஏற்படுத்தின. அந்த உணர்வெழுச்சியின் உக்கிரத்தை அவர் எழுதுவதின் மூலமே சமனப்படுத்தியிருக்கிறார். அதற்குக் குடி தேவையாயிருந்திருக்கிறது.

மண்டோவின் வாழ்க்கையை முன்வைத்து இரண்டு திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. மண்டோ – நந்திதா தாஸ் இயக்கத்தில் 2018 –ல் வெளிவந்த திரைப்படம். அதில் மண்டோவின் இந்திய-பாகிஸ்தான் வாழ்க்கை சுருக்கமாக ஆனால் மிகவலிமையாக வெளிப்பட்டிருக்கிறது. இன்னொரு திரைப்படம் பாகிஸ்தானில் வெளியாகியிருக்கிறது. மண்டோ – இயக்கம் - சர்மட் சுல்தான் கஸூத் ( SARMAD SULTAN KASOOT ) . அந்தத் திரைப்படம் மூன்று மணிநேரம் ஓடக்கூடிய படம். தொலைக்காட்சி தொடராக வெளியாகியிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் அந்தத் திரைப்படத்தில் மண்டோவின் பாகிஸ்தான் வாழ்க்கை மட்டுமே சித்தரிக்கப்பட்டிருக்கிறது.  இரண்டு படங்களுமே மண்டோவின் கதாபாத்திரத்தை ஓரளவுக்கு நம் கண்முன்னால் கொண்டு வந்திருக்கின்றன. மண்டோவை வாசிக்கிறவர்கள் அந்தத் திரைப்படங்களையும் பார்க்கும் போது இன்னும் கூட அவருடைய கதைகள் கூடுதல் அர்த்தத்தைக் கொடுக்கும்.

அவரைச் சதாகாலமும் போலியான மனிதசமூகம் அணிந்திருக்கும் நாகரிகமான ஆடைகளுக்குப் பின்னாலிருக்கும் அழுகிய புண்களில் வடிந்து கொண்டிருக்கும் சீழ் தொந்திரவு செய்து கொண்டேயிருந்திருக்கிறது. அதைவிட அதைக் கண்டும் காணாமல் தன்னுடைய சுயநலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கிக்கொண்டிருக்கும் மனிதர்களின் பொறுப்பின்மை, அவருக்குள் ரௌத்திரத்தை கொழுந்து விட்டெரியச் செய்து கொண்டேயிருந்தது. அதனால் எப்படிச் சொன்னால் இந்த சமூகத்துக்கு உறைக்கும் என்று ஒவ்வொரு கதையிலும் சொல்லிச் சொல்லிப் பார்க்கிறார். எந்தவித அலங்காரமுமின்றி அப்பட்டமாக பச்சையாக எழுதினார் மண்டோ. அப்படி எழுதுவதின் மூலம் மட்டுமே சமூகத்தின் சொரணையை விழிக்கவைக்க முடியும் என்று நம்பினார். ஆனால் பொதுச்சமூகம் அவருடைய கதைகளை அப்படிப் பார்க்கவில்லை. பிரிட்டிஷ் இந்தியாவிலும், சுதந்திரப்பாகிஸ்தானிலும் ஆறுமுறை அவருடைய கதைகளுக்காக நீதிமன்றத்தில் ஏறி இறங்கியிருக்கிறார். ஒரு முறை தண்டிக்கவும் பட்டிருக்கிறார். ஆனால் மேல்முறையீட்டில் அதிலிருந்து விடுவிக்கவும் பட்டிருக்கிறார். அப்படி ஒரு சம்பவத்தில்,

“ எழுத்தாளனின் உணர்வுகள் காயப்படும்போது மட்டுமே அவன் தன்னுடைய பேனாவைக் கையிலெடுக்கிறான்.. “ என்று ஒரு நீதிபதியிடம் சொல்லியிருக்கிறார்.  அவருடைய காலத்தில் ஒரு பக்கம் அரசாங்கம் அவரை கம்யூனிஸ்ட் என்று குற்றப்படுத்தியது என்றால் இன்னொருபக்கம் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் மற்ற இலக்கியவாதிகளும் கூட அவரை பிற்போக்குவாதியென்றும் ஆபாச எழுத்தாளரென்றும், இறந்தவர்களை வைத்துப் பிழைப்பு நடத்துபவரென்றும்,  தூற்றியிருக்கிறார்கள். அவருடைய கதைகளைப் பற்றிய விமரிசனங்களுக்கு,

“ என் கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லையென்றால் நம்முடைய காலத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லையென்றே அர்த்தம். என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவனவெல்லாம் உண்மையில் அழுகிப்போன இந்தச்சமூக அமைப்பினையே குறிக்கிறது. என் இலக்கியத்தை எதிர்ப்பதைக் காட்டிலும் இப்படிப்பட்ட இலக்கியங்கள் உருவாவதற்கு ஏதுவாக இருக்கும் சூழ்நிலையை மாற்ற முயற்சி செய்யுங்கள். அதுதான் சிறந்த வழி..

 என்று நெஞ்சுரத்துடன் பதிலளிக்கிறார் மண்டோ. மண்டோ மட்டுமே இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நடந்த இருண்டகாலத்தின் கதைகளை பதிவு செய்தவர். மண்டோ மட்டுமே மனிதனுக்குள் கொடூரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார். மதம் என்ற நம்பிக்கை மனித உயிர்களை எப்படியெல்லாம் பலி வாங்கியிருக்கிறது என்பதைத் தன்னுடைய படைப்புகளில் அந்தக் குரூரத்தை வாசகனும் உணரும்படிச் சொல்லியிருக்கிறார்.  சாமானியர்கள், விளிம்புநிலை மக்கள், பாலியல் தொழிலாளிகள், அடித்தட்டு மக்கள், என்று சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உலகை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டியவர் மண்டோ. அவர்களுடைய வாழ்வின் அவலங்களை, ஆசாபாசங்களை, வக்கிரங்களை, வாசகமனம் அதிரும்படி எழுதியர் மண்டோ. சமன் குலைந்த சமூகத்தில் சமன் குலையச் செய்யும் எழுத்தை எழுத்தியவர் மண்டோ. தன்வாழ்நாள் முழுவதும் கலகக்காரராகவே வாழ்ந்தார் மண்டோ. சமூகத்தின் எல்லாவிதமான அதிகாரங்களையும்,  போலித்தனமான ஒழுக்கக்கோட்பாடுகளையும் கேள்வி கேட்டார் மண்டோ.

 அவருடைய படைப்புகளின் கலையுணர்வு ஆக்ரோசமானது ஆனால் கலையின் பூரணத்துவம் கொண்டது. அவருடைய கலையில் கலகக்குரல் கேட்டுக்கொண்டேயிருந்தது ஆனால் அதில் கலையின் மகத்துவம் பொங்கிக்கொண்டேயிருந்தது. அவருடைய கலையுணர்வு உரத்தகுரலில் பேசுவது ஆனால் அந்தக்குரலில் பிரச்சாரம் கிடையாது. அவருடைய கலையுணர்வு நேரடியானது ஆனால் நுட்பங்கள் நிறைந்தது. அவருடைய கலையுணர்வு யதார்த்தமானது ஆனால் யாரும் அதுவரை போகாத வழிகளில் சென்றது. அவருடைய கலையுணர்வு வாழ்க்கையின் இருளை வெளிச்சம் போட்டுக் காட்டியது ஆனால் அந்த வெளிச்சத்தில் இந்த உலகமே பைத்தியக்காரத்தனமாகத் தெரிந்தது.

ஒருவகையில் மண்டோவின் எழுத்துகள் பிரிவினை கால இந்திய பாகிஸ்தான் மக்கள் சமூகத்தில் என்ன நடந்தது என்பதற்கான இலக்கிய வரலாற்று ஆதாரம். நாகரீக சமூகம் நெருக்கடிக்காலங்களில் எப்படி மனிதனுக்குள் இருக்கும் கொடூரகுணங்களை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறது என்பதற்கான உளவியல் பாடங்கள். குற்றவியலுக்குப் பின்னாலுள்ள சிந்தனைகள், நியாயங்கள் என்று எல்லாவற்றையும் எழுதிப்பார்த்தவர் மண்டோ. அவருடைய படைப்புகளின் வெக்கை நமது சிவில் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி தன்னையே விசாரணை செய்யத் தூண்டுபவை.

இருபத்திமூன்று வயதில் அவர் முதல் கதையை எழுதினார். அதன்பிறகான இருபது வருடங்களில் இருபத்தியிரண்டு சிறுகதை தொகுப்புகளையும், ஒரு நாவலையும், ஐந்து ரேடியோ நாடகங்களின் தொகுப்பையும், மூன்று கட்டுரைத் தொகுப்புகளையும், இரண்டு நினைவோடைத் தொகுப்புகளையும் தன்னுடைய நாற்பத்திமூன்று வயதுக்குள் எழுதியிருக்கிறாரென்றால் அவருடைய எழுத்தின் வீரியம் நமக்குப் புலப்படும்.

இந்தத்தொகுப்பிலுள்ள கதைகளெல்லாம் மண்டோ பாகிஸ்தான் போனபிறகு எழுதப்பட்டவை. பாகிஸ்தான் சென்றபிறகு அவருடைய மனவெழுச்சியும் சிந்தனைகளும் எப்படியிருந்தன என்பதற்கான சாட்சி. அவருடைய வாழ்க்கையின் மிகவும் கொந்தளிப்பான காலகட்டம் என்று கூடச் சொல்லலாம்.

மண்டோவுக்கு கிரிக்கெட்டின் மீது காதல் இருந்தது. அவர் இறப்பதற்கு முன்னால் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் டெஸ்ட் மேட்சைப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார். ஏற்கனவே லிவர் சிரோசிஸ் நோயினால் மரணத்தின் விளிம்பிலிருந்த மண்டோ அன்று பத்திரிகையில் ஒரு செய்தியைப் படித்துவிட்டு மன அமைதியின்றி தத்தளித்திருக்கிறார். குஜராத்தில் பேரூந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணையும் அவளுடைய குழந்தையையும் ஐந்தாறுபேர் கடத்திக்கொண்டு போய் அந்தப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாணமாக குளிர் இரவில் நடுரோட்டில் விரட்டி விட்டிருக்கிறார்கள். அந்த இரவின் குளிரில் அவளும் குழந்தையும் விரைத்து செத்திருக்கிறார்கள். இந்தச் செய்தியை வாசித்த மண்டோ வீட்டை விட்டு வெளியேறியவர் அளவுக்கதிகமாக குடித்திருக்கிறார். அவர் வீட்டுக்கு வந்ததும் ரத்தவாந்தி எடுத்திருக்கிறார். அதைப்பார்த்த அவருடைய சகலை ஹமீது ஜலாலின் மகனிடம், இது  வெத்திலை எச்சில் யாரிடமும் சொல்லாதே என்று சொல்லியிருக்கிறார். அந்தச் சிறுவனும் யாரிடமும் சொல்லவில்லை. நள்ளிரவில் படுக்கையில் வலியும் வாந்தியும் எடுத்து மனைவியை அழைத்துச் சொன்னபிறகுதான் மருத்துவர் அழைக்கப்பட்டிருக்கிறார். மருத்துவர் அவருடைய நிலைமையைப் பார்த்து உதட்டைப் பிதுக்க, மண்டோவின் இறுதிக்கணங்கள் தொடங்கி விட்டன.  கல்லறையில் குளிர்வதைப்போல குளிர்கிறது என்று சொன்ன மண்டோ இரண்டு போர்வைகளால் போர்த்திக்கொண்டிருக்கிறார். கடைசியாக ஒரு பெக் விஸ்கியைக் கேட்டு வற்புறுத்தியிருக்கிறார். கொஞ்சம் விஸ்கியை வாங்கிவந்து ஒரு ஸ்பூன் வாயில் ஊற்றினார்கள். இரண்டாவது ஸ்பூன் வாயிலிருந்து வெளியே வழிந்து விட்டது. உடலில் ஒரு நடுக்கம் ஓடி மறைந்தது. ஆம்புலன்சில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது ஏற்கனவே அவர் இறந்து விட்டார் என்று அறிவித்தார்கள். ஹமீது ஜலால் எழுதும்போது, பொறுப்பற்ற ஆட்டங்களை ஆடிய மண்டோவிற்கு பலமுறை அவுட் கொடுக்காமலிருந்த கடவுள் கடைசியில் 1955 ஆம் ஆண்டு ஜனவரி 18 அன்று விரலை உயர்த்தி அவுட் கொடுத்து விட்டாரென்று எழுதுகிறார்.

அவருடைய கதைகளை உருதுவிலிருந்து ஆங்கிலத்தில் பலர் பலவிதமாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். இன்னும் மொழிபெயர்க்கப்படாத ஒரு நாவல் உட்பட ஏராளமான படைப்புகள் இருக்கின்றன. மண்டோவே பல கதைகளை, தொகுப்புகளை, பலபதிப்பாளர்களிடம் அன்றைன்றையத் தேவைக்காக விற்றிருக்கிறார். அதனால் தான் பல விதமான வேறுபட்ட தொகுப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. ஆனால் வாழ்ந்தபோது தன்னுடைய எழுத்தின்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த மண்டோ அவருடைய மனைவி சஃபியா மண்டோவிடம்

“ நான் ஏராளமாக எழுதியிருக்கிறேன். நான் இறந்தாலும் நீ வசதியாக வாழலாம்.. என்று சொல்லிக் கொண்டேயிருப்பார் ஆனால் உண்மையில் பதிப்பாளர்கள் அவர் எல்லாவற்றுக்கும் பணம் வாங்கி விட்டாரென்று சொல்லி கையை விரித்து விட்டனர்…என்று அவருடைய மூத்தமகள் நுஸாத் மண்டோ சொல்கிறார்…மண்டோ இறந்தபோது அவருடைய மகள்களான நிஹாத் மண்டோ, நுஸாத் மண்டோ, நஸ்ரத் மண்டோ ஆகியோருக்கு முறையே ஒன்பது, ஏழு, ஐந்து வயது தான் பூர்த்தியாகியிருந்தது. சஃபியா மண்டோ தனியே அவர்களை வளர்த்து ஆளாக்கினார். மண்டோ தன்னுடைய கதைகளை எழுதியதும் முதலில் சஃபியாவிடம் தான் வாசித்துக்காட்டுவார். தன்னுடைய குடும்பத்தினர் மீது அளவு கடந்த பிரியம் கொண்டிருந்த மண்டோ அதைவிட ஆழமான பிரியத்தை இந்த சமூகத்தின் மீது வைத்திருந்தார். அது தான் அவருக்கு வரமாகவும் சாபமாகவும் அமைந்தது.

இந்தத் தொகுப்பிலுள்ள பத்து கதைகளும் மண்டோவின் கலைமேதைமையை உணர்த்தக்கூடியவை. இந்தத் தொகுப்பின் பெரும்பாலான கதைகள் ரக்‌ஷானந்த ஜலீல் உருதுவிலிருந்து மொழிபெயர்த்திருந்த நிர்வாணக்குரல்கள் தொகுப்பிலிருந்தும், சில கதைகள் காலித் ஹசன் உருதுவிலிருந்து மொழிபெயர்த்திருந்த ராஜ்யத்தின் முடிவு என்ற தொகுப்பிலிருந்தும் எடுக்கப்பட்டிருக்கின்றன. மண்டோ அசாதாரணத்தையே கதையாக்குகிறார். யாரும் பார்க்கத் துணியாத காட்சிகள், யாரும் பார்த்திராத கதாபாத்திரங்கள் யாரும் யோசித்திராத சம்பவங்கள், என்று கதைப்பின்னலில் எல்லோரும் சாதராணமாகத் தவறவிடுகிற அல்லது அலட்சியப்படுத்திச் செல்கிற அல்லது அருவெறுப்பு கொள்கிற வாழ்வின் சித்திரங்களை நுண்மையாகச் சித்தரிக்கிறார். இதிலுள்ள ஒவ்வொரு கதையும் அசாதாரணமானது. பிஸ்மில்லா என்ற விசித்திரமான பெயர் கொண்ட பெண்ணின் கதையின் மர்மம் கடைசியில் விலகும்போது ஏற்படும் அதிர்வின் அலை நம்மை நடுங்கச்செய்யும். ஆறுதல் கதையில் சாரதாவுக்கு நேர்ந்த அவமான உணர்வை ஆற்றுப்படுத்துகிற காட்சி மிகவும் நுட்பமானது. மெழுகுவர்த்தியின் கண்ணீர் பாலியல் தொழிலாளியின் ஒரு இரவின் இருளில் ஒற்றைக்கண்ணாய் எரியும் மெழுகுவர்த்தியின் ஒளி வரையும் சோகச்சித்திரம். நிர்வாணக்குரல்களில் வாழ்க்கையின் அடிப்படைத்தேவைகளில் ஒன்றான காமத்தின் குரல்களை ஒன்றுபோல மொட்டைமாடியில் சாக்குகள் சுற்றிலும் திரையாகக் கட்டப்பட்ட கட்டில்கள் புலம்புகின்றன. விசித்திரமான அந்த வாழ்நிலைக்கு எல்லாரும் பழகிவிட அதைக்கண்டு அஞ்சி ஓடி மனநிலை பிறழ்கிற கதாபாத்திரம் வாழ்வின் குரூரத்தைச் சொல்கிறது.

தோற்றுக்கொண்டேயிருப்பவன் கதையில் ஒரு பாலியல் தொழிலாளியைக் காப்பாற்றுவதாகக் கொள்ளும் பெருமை மீது இறுதியில் கொடுக்கும் அடி தடுமாறச்செய்கிறது. காமத்தின் கடும் அவஸ்தையில் பாலியல் விடுதிக்குச் செல்ல நினைக்கும் ஒருவனின் மனச்சஞ்சலங்களும் அவஸ்தைகளும் மண்டோ என்ற இலக்கியாளுமையின் வரிகளில் சாக்கடையான சமூகத்தின் அவலத்தைக் காட்டுகிறது. சூபிகளின் கோவில்களில் நடக்கும் குழந்தைப்பேறு நேர்த்திக்கடன்களும் அதன் பிறகு பிறக்கும் குழந்தைகளை கோவிலில் கொடுத்துவிட்டு வரும் ஒரு பெண்ணின் மன அவஸ்தை. யாசித் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகும் நடந்த ராஜீய ரீதியிலான மறைமுக யுத்தத்தைப் பற்றிய கதை. இஸ்லாமிய புராணத்திலிருந்த ஒரு வில்லன் கதாபாத்திரம் எப்படி மாறுகிறது என்பது தான் இந்தக்கதை. மிகவும் புகழ்பெற்ற தோபாதேக்சிங் கதையை வாசிக்கும்போது நாம் வாழும் இந்த நிலத்துக்கு என்ன அர்த்தமிருக்கிறது என்ற கேள்வி எழாமல் போகாது. மனதை அதிரவைக்கும் கதை. கேள்விக்குறியான கௌரவம் கதையில் வரும் மீசை மம்மது பாயைக் கண்டு எல்லாரும் பயப்படுகிறார்கள், ஆனால் அந்த மம்மது பாய் ஏன் அழுகிறான் என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிற கதை. எல்லாக்கதைகளும் துல்லியமான விவரனைகளுடன், நேர்த்தியான கதைசொல்லலுடன், அழுத்தமான கதாபாத்திரங்களுடன் எழுதப்பட்டிருப்பது மண்டோவின் மேதைமைக்குச் சான்று. மண்டோவின் இருநூற்றைம்பது கதைகளில் தமிழில் இதுவரை ஐம்பது கதைகளுக்குள் தான் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும். அவருடைய அத்தனை கதைகளும் நாவலும் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்படும் போது மண்டோவின் மகாமேதைமை இன்னும் சூரியனாய் பிரகாசிக்கும்.

மண்டோவின்  சிறுகதைகள் உலக இலக்கியத்தில் வைத்துப் போற்றப்படவேண்டியவை. அவரை மீண்டும் மீண்டும் வாசிப்பதன் மூலமே சிவில் சமூகம் தன்னுடைய மனப்பிறழ்வுகளை கண்டுணர்ந்து சரி செய்து கொள்ள முடியும். எல்லாரும் சகோதரத்துவதுடன், சமத்துவத்துடன் வாழ்வதற்கு மண்டோவை வாசிக்கவேண்டும்.

 மீண்டும் மீண்டும் மண்டோவை வாசிப்போம்.

 முன்னெப்போதையும் காட்டிலும் மண்டோ இன்று தேவைப்படுகிறார்.

நன்றி - புக் டே

 

Monday, 11 May 2020

ஆறுதல் - சாதத் ஹசன் மண்ட்டோ


1.   ஆறுதல் 

சாதத் ஹசன் மண்ட்டோ



எட்டு வருடங்களுக்கு முன்னால் நடந்தது. என்னுடைய நண்பன் விஸ்வேஷ்வரநாத்தின் திருமணவிருந்து இந்து சபை கல்லூரியின் முன்னாலிருந்த அழகான விருந்து மண்டபத்தில் நடந்தது. அந்த விருந்தில் முந்நூறு முந்நூற்றைம்பது விருந்தினர்கள் கலந்து கொண்டார்கள். அவர்கள் லாகூரின் மிகப்பிரபலமான பாடகிகளின் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது அந்தப்பாடகிகள் அந்த விருந்து மண்டபத்திலுள்ள பல்வேறு அறைகளில் அவர்களுடைய கட்டில்களில் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.
அதிகாலை நான்கு மணி. எனக்கு இன்னும் மயக்கமாக இருந்தது. சிறிய நண்பர்கள் குழுவுடன் சேர்ந்து குடித்த விஸ்கியின் வேலை. நான் கல்யாண மாப்பிள்ளையுடன் சேர்ந்து தனியாக ஒரு அறையில் குடித்தேன். ஹாலில் இருந்த வட்டக்கடிகாரத்தில் நான்கு மணி அடித்தபோது நான் என் கண்களைத் திறந்தேன். ஒருவேளை நான் கனவு கண்டு கொண்டிருந்திருக்கலாம் ஏனெனில் என்னுடைய கண்ணிமைகளில் ஏதோ குடியிருந்தது.
நான் ஒரு கண்ணைத் திறந்து ஹாலுக்குப் போகும் பாதையைப் பார்த்தேன். அப்போது மற்றொரு கண்ணை மூடியே வைத்திருந்தேன். அது இன்னும் கொஞ்சநேரம் தூங்கும். எல்லோரும் உறங்கிக்கொண்டிருந்தார்கள். சிலர் குப்புறப்படுத்திருந்தார்கள், சிலர் மல்லாந்து படுத்திருந்தார்கள். சிலர் குண்டக்கமண்டக்க படுத்திருந்தார்கள். நான் என்னுடைய அடுத்த கண்ணையும் திறந்தேன். நேற்று ராத்திரி அஸ்கர் அலி பெரிய தலையணையில் படுக்கச்சொல்லி வற்புறுத்தியது நினைவு கூர்ந்தேன். அந்தத் தலையணை என்னுடைய தலையிலிருந்து நழுவி கொஞ்சதூரத்தில் கிடந்தது. ஆனால் அஸ்கர் அலி இருப்பதற்கான எந்த அறிகுறியுமில்லை.
ஒருவேளை இரவு முழுவதும் அவன் முழித்திருந்ததால், இப்போது ராம்பாக்கிலுள்ள மலிவான விபச்சாரியின் அழுக்கான படுக்கையில் தூங்கிக்கொண்டிருப்பான்.
விஸ்கி அது லோக்கலாக இருந்தாலும் சரி ஃபாரினாக இருந்தாலும் சரி ஆஸ்கரைப் பொறுத்தவரை விரைவு ரயிலைப்போல நேரே ஒரு பெண்ணிடம் போய் தான் நிற்கும். கிட்டத்தட்ட தொண்ணூற்றியொன்பது சதவீத மனிதர்களுக்கு இரண்டு பெக் உள்ளே இறங்கியவுடன் அழகான பொருட்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். அப்படியிருக்கும்போது அஸ்கர் – அவன் மிகச்சிறந்த ஓவியர் புகைப்படக்கலைஞர், அவனுக்கு எப்படி கோடுகளையும் நிறங்களையும் பயன்படுத்தவேண்டுமென்று தெரியும் – குடித்த பிறகு எப்போதும் மிக மோசமான படங்களையே வரைவான்.
கனவின் துண்டு துணுக்குகள் என்னுடைய கண்களிலிருந்து வெளியேறின. அஸ்கர் அலிக்கு கண்டிப்பாக கனவே இருக்காது என்று நான் நினைக்கத்தொடங்கினேன். என்னால், அவனுடைய கனத்த நீண்ட தலைமுடியுடனான உடலின் அடையாளத்தை தலையணையில் பார்க்க முடிகிறது.
அவனை மிக நெருக்கமாக கவனித்துக்கொண்டிருந்தாலும் கூட பல சமயங்களில் இரண்டு பெக் குடித்தவுடன் அஸ்கர் ஏன் முட்டாள் மாதிரி மாறி விடுகிறான் என்பதை என்னால் ஆராய்ந்து கண்டுபிடிக்க முடியவில்லை. முட்டாள் என்று கூடச் சொல்ல முடியாது அவன் உண்மையில் பயங்கர முரட்டுத்தனமாகவும், கீழ்த்தரமானவனாகவும் மாறி விடுவான். இருண்ட தெருக்களின் வழியாகவும், சந்துகளின் வழியாகவும் தன்னுடலை விற்கும் ஏதாவது ஒரு பெண்ணிருக்கும் இடத்தைத் தேடி தட்டுத்தடுமாறி ஓடுவான். அடுத்த நாள் காலை அவளுடைய அழுக்கான படுக்கையிலிருந்து எழுந்து வீட்டுக்குப் போவான். குளித்து விட்டு அவனுடைய ஸ்டுடியோவுக்குப் போய் அங்கே அழகான, நாகரிகமான இளம் பெண்களை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருப்பான். அப்போது முந்தைய இரவின் மிருகத்தனத்தின் சிறு தடயத்தைக் கூட பார்க்க முடியாது. ஆனால் அது குடிபோதையில் ரொம்ப வெளிப்படையாகத் தெரியும்.
என்னை நம்புங்கள். நான் சொல்கிறேன். அவன் குடிக்கும்போது பேய் பிடித்தவனைப் போலாகி விடுகிறான். சுருக்கமான குறுகிய நேரத்துக்கு அவனுடைய மூளை சிந்திக்கவும் உணரவுமான சக்தியை இழந்து விடுகிறது. ஒரு மனிதனால் எவ்வளவு குடிக்கமுடியும்? ஆறு, ஏழு, எட்டு பெக்குகள்? அவனைப் பொறுத்தவரை ஆறேழு தடவை உறிஞ்சினாலே போதும் அது அவனை ஆழமறிய முடியாத மறதியின் கடலுக்குள் தள்ளி விடும். நீங்கள் விஸ்கியை தண்ணீருடனோ, சோடாவுடனோ கலக்கலாம். ஆனால் ஒரு பெண்ணுடன் கலப்பது என்பது என்னுடைய புரிந்து கொள்ளலுக்கு அப்பாற்பட்டது. சில அவர்களுடைய சோகங்களை மறப்பதற்காகக் குடிப்பார்கள். ஆனால் ஒரு பெண்ணை சோகம் என்று சொல்லமுடியாது. சிலர் கூச்சல்,குழப்பம் போடவே குடிப்பார்கள். ஆனால் ஒரு பெண்ணைக் கூச்சல், குழப்பம் என்று சொல்லமுடியாது.
நேற்றிரவு அஸ்கர் பயங்கரமாகக் குடித்து விட்டு சத்தம்போட்டுக் கொண்டிருந்தான். பெரும்பாலான திருமணங்களே சத்தக்காடு தான் ஆகையால் அஸ்கரின் கூச்சல் பொதுவான இரைச்சலில் அமிழ்ந்து விட்டது. அப்படியில்லாமலிருந்தால் நரகத்தையே விலையாகக் கொடுக்கவேண்டியதிருந்திருக்கும். அந்த மாலைப்பொழுதின் ஒரு நேரத்தில் அவன் கிளாஸ் நிறைய விஸ்கியை ஊற்றியெடுத்து அறைக்கு வெளியே சென்று,
“ நான் உயர்ந்த மனிதன். அதற்கேத்தமாதிரி உயரமான இடத்தில் உட்கார்ந்து நான் குடிப்பேன்..” என்று சொன்னான்.
அவன் ராம்பாக்கில் எங்கேயோ அவனுக்குப் பொருத்தமான உயர்ந்த விபச்சாரியைத் தேடி அலைந்திருப்பான் என்று நான் நினைத்தேன். ஆனால் சிறிது நேரம் கழித்து, கதவு திறந்தது. அவன் அறைக்குள் ஒரு ஏணியைத் தூக்கிக் கொண்டு வந்தான். அதைச் சுவரில் சாய்த்துப் போட்டான். அதில் ஏறி உயரமான ஏணிப்படியில் உட்கார்ந்து கொண்டு விஸ்கியை உறிஞ்சினான். அப்போது அவனுடைய தலை கூரை முகட்டை நெருங்கித் தொட்டுக் கொண்டிருந்தது.
கொஞ்சம் சிரமப்பட்டு நானும் விஸ்வேஸ்வரும் அவனைச் சமாதானப்படுத்தி கீழே இறங்கிவரச் செய்தோம். அத்துடன் அவனிடம் இந்தமாதிரி கோணங்கித்தனமெல்லாம் சுற்றிலும் யாரும் இல்லாதபோது சரியாக இருக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்தோம். விருந்து மண்டபம் நிறைய விருந்தினர்கள் இருக்கிறார்கள். அதனால் அவன் அமைதியாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்ள வேண்டும். கடவுளுக்குத் தான் தெரியும் எங்களுடைய கெஞ்சல்கள் அவனுடைய மரமண்டைக்குள் எப்படி ஏறியதென்று. அதன்பிறகு விருந்து முழுவதும் அவன் அமைதியாக ஒரு மூலையில் அவனுடைய பங்கு விஸ்கியை உறிஞ்சிக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.
நேற்றிரவு நடந்த நிகழ்ச்சிகளை யோசித்துக் கொண்டே நான் எழுந்து வெளியிலிருந்த பால்கனியில் போய் நின்றேன். எனக்கு முன்னால் விடியலுக்கு முன்பிருந்த இருளில் சிவப்பு செங்கற்களால் கட்டபபட்டிருந்த இந்து சபைக்கல்லூரி அமைதியாக நின்று கொண்டிருந்தது. நான் வானத்தைப் பார்த்தேன். நட்சத்திரங்கள் குழம்பியிருந்த வானில் நடுங்கிக் கொண்டிருந்தன.
நான் நீண்ட அந்த வராண்டாவைக் கடந்து மாடிப்படியை அடைந்தேன். யாரோ கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். ஒரு சில நொடிகளுக்குப் பின்னர் அஸ்கர் பார்வையில் பட்டான். என்னைக்கடந்து வேகமாக என்பக்கம் பார்க்காதமாதிரியே போனான். இருட்டாக இருந்தது. நான் மெல்ல படியேறும்போது நினைத்தேன், ஒருவேளை அவன் என்னைப் பார்க்காமலிருந்திருக்கலாம்.
எப்பொழுதெல்லாம் நான் படியேறுகிறோனோ நான் படிகளை எண்ணுவேன். நான் இருபத்திநான்கு என்று வாய்க்குள் முணுமுணுத்தபோது, திடீரென கடைசிப்படியில் ஒரு பெண் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் நடுங்கிப்போனேன். ஏனெனில் கிட்டத்தட்ட நான் ஒரு பெண்ணின் மீது மோதிவிடத் தெரிந்தேன்.
“ மன்னித்துக்கொள்ளுங்கள்.. ஓ.. நீயா? “
அந்தப் பெண் சாரதா. அவள் எங்களுக்குப் பழக்கமான ஹர்னாம் கவுரின் மூத்தமகள். அவள் திருமணமான ஒரு வருடத்திலேயே விதவையாகி விட்டாள். நான் எதுவும் கேட்பதற்கு முன்னால் அவள் அவசர அவசரமாகக் கேட்டாள்,
“ யாரு அந்த ஆள்? இப்ப கீழே இறங்கிப் போனது? “
“ யாரு? “
“ இப்ப படியிறங்கிப் போனானே.. அவனை உங்களுக்குத் தெரியுமா? “
“ ஆமாம். தெரியும்.”
“ யார் அவன்? “
“ அஸ்கர் “
“ அஸ்கர் “ அவள் கிட்டத்தட்ட பற்களைக் கடித்துக் கொண்டு அந்தப் பெயரைச் சொன்னாள். ஒரு கணத்தில் அவர்களுக்குள் என்ன நடந்திருக்கும் என்று எனக்குப் புரிந்து விட்டது.
“ அவன் ஏதாச்சும் மரியாதைக்குறைவா நடந்துக்கிட்டானா? “
“ மரியாதைக்குறைவா? “ அவளுடைய உடல் ஆத்திரத்தில் நடுங்கியது.
“ என்னை யாருன்னு நெனைச்சிக்கிட்டிருக்கான் அவன்? “  அவளுடைய சிறிய கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.
“ அவன்.. அவன்.. “ அவளுடைய தொண்டை இறுகி விட்டது. இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு சத்தமாக அழ ஆரம்பித்தாள். முழுமையாகக் கைவிடப்பட்டவளைப் போல.
நான் விசித்திரமான நெருக்கடியில் இருந்தேன். இப்போது யாராவது அவளுடைய அழுகையைக் கேட்டு மேலே வந்து விட்டால் பெரிய கலவரமாகி விடும். சாரதாவுக்கு நான்கு சகோதரர்கள். நான்குபேரும் அந்தக் கட்டிடத்தில் வேறு எங்கேயோ தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் இரண்டுபேர் வன்முறைச்சண்டைகளில் மிகவும் விருப்பமுள்ளவர்கள். நிச்சயமாக அஸ்கர் அலியை எதுவும் காப்பாற்றமுடியாது.
நான் அவளுக்குப் புத்தி சொல்ல ஆரம்பித்தேன்.
“ இங்க பாரு.. நான் சொல்றேன்.. அழுகையை நிறுத்து.. யாராவது கேட்டுருவாங்க..”
அவள் முகத்திலிருந்து கைகளை விலக்கினாள். கடுப்பான குரலில் சத்தமாக,
“ கேட்கட்டும்.. ஆட்கள் கேட்கட்டும்.. அவன் என்னை யாருன்னு நெனச்சுக்கிட்டான்? தேவடியான்னா? நான் நான் ..” என்று கத்தினாள்.
மறுபடியும் அவளுடைய குரல் தொண்டையில் இறுகிக்கொண்டது.
“ இங்கேயே இப்போதே இந்த விஷயத்தை புதைச்சிர்றது நல்லதுன்னு நினைக்கிறேன்..”
“ ஏன்? “
“ அது அவமானத்தைத் தரும்..”
“ யாருக்கு? அவனுக்கா? எனக்கா? “
“ அது அவனுக்குத் தான் அவமானம்.. ஆனாலும் சகதியில கை வைக்கிறது உனக்கும் நல்லதில்ல.... ” என்று சொல்லிக்கொண்டே என்னுடைய கைக்குட்டையை வெளியில் எடுத்து அவளிடம் கொடுத்தேன்.
“ இந்தா கண்ணீரைத் தொடைச்சுக்கோ..”
அவள் கைக்குட்டையை வீசி எறிந்து விட்டு அப்படியே தள்ளாடி மேல்படியில் உட்கார்ந்தாள். நான் என்னுடைய கைக்குட்டையை எடுத்து தூசி தட்டி மீண்டும் என்னுடைய பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன்.
“ சாரதா.. அஸ்கர் என்னுடைய நண்பன்.. அவன் என்ன தப்பு செய்ஞ்சிருந்தாலும் நான் உன்கிட்டே மன்னிப்பு கேட்டுக்கிறேன்..”
“ நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்கிறீங்க? “
“ ஏன்னா இந்த விஷயம் இங்கேயே முடிஞ்சிரணும்னு விரும்பறேன்.. ஒருவேளை நீ விரும்பினா நான் அவனை இஙே கூட்டிகிட்டு வாரேன்.. உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கச் சொல்றேன்..”
அவள் வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“ வேண்டாம்..எனக்கு முன்னால அவனைக் கூட்டிட்டு வரவேண்டாம்.. அவன் என்னை மோசமா புண்படுத்திட்டான்..” மறுபடியும் அவளுடைய தொண்டை கட்டிக்கொண்டது. பளிங்குப் படியில் உட்கார்ந்திருந்த அவளுடைய முழங்கை குளிர்ந்த கல்தரையைத் தொட்டுக்கொண்டிருந்தது. அவளுக்குள் ஆழமாக ஊற்றெடுத்த வேதனையை அவள் அடக்கமுயற்சித்தும் பயனில்லை.
இந்த நேரத்தில் நான் கவலையினால் தன்வசமிழந்திருந்தேன். ஒரு கட்டுடல் கொண்ட இளம்பெண் என் முன்னால் அழுது கொண்டிருக்கிறாள். அவள் அழுகையை என்னால் நிறுத்தமுடியவில்லை. ஒரு தடவை நான் அதே அஸ்கரின் காரை ஓட்டிக்கொண்டு வரும்போது ஒரு நாயை விரட்ட ஹார்னை அடித்தேன். அந்த ஹார்ன் மாட்டிக்கொண்டது. அதன் ஒலி நிறுத்தவேமுடியாத அலறலாக மாறிவிட்டது. மக்கள் என்னை முறைத்துப்பார்த்தனர். நான் ஏலமாட்டதவனாக இருந்தேன்.
கடவுளுக்கு நன்றி என்னையும் சாரதாவையும் தவிர மேலே வேறு யாருமில்லை. ஹார்ன் சம்பவம் நடந்தபோது இருந்ததை விட இப்போது என் நிலைமை எதுவும் செய்ய முடியாமலிருந்தது. எனக்கு முன்னால் ஒரு பெண், மிக மோசமாக காயப்பட்ட பெண் அழுதுகொண்டிருக்கிறாள்.
வேறு யாராவது ஒரு பெண்ணாக இருந்தால் நான் என் வேலையைப் பார்த்துக் கொண்டு போயிருப்பேன். ஆனால் சாரதா எனக்குப் பழக்கமானவர்களின் மகள். அவளைக் குழந்தையிலிருந்தே எனக்குத் தெரியும்.
அவள் அருமையான பெண். அவளுடைய மூன்று சகோதரிகளை விட அழகில் கொஞ்சம் குறைவு என்றாலும் பெரிய புத்திசாலி.
அவள் வாசிப்பதிலும் தையல் தைப்பதிலும் கெட்டிக்காரி. போனவருடம், திருமணம் முடிந்து பதினொரு மாதங்களிலேயே அவள் கணவனை இழந்து விட்டாள் என்று கேள்விப்பட்டபோது எங்களுக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது. கணவனை இழந்த அவளுடைய துயரம் ஆழமானது. ஆனால் இப்போது உயிருள்ள நண்பனால் ஏற்பட்ட வேதனை வேறுவகையானது. அவளுடைய இத்தனை கடுந்துன்பத்துக்குக் காரணமாக இருப்பதை நான் பார்க்கிறேன்.
நான் மீண்டும் அவளை அமைதிப்படுத்த முயன்றேன். நானும் அவளுக்குப் பக்கமாக அந்தப்பளிங்குத் தரையில் உட்கார்ந்தேன்.
“ சாரதா தேவி! இப்படியே அழுதுகொண்டிருப்பதைப் பார்க்கமுடியவில்லை.. கீழே போ! என்ன நடந்திருந்தாலும் அதை மறப்பதற்கு முயற்சி செய்! அந்த ஈனப்பய குடித்திருந்தான்..இல்லைன்னா என்னை நம்பு.. அவன் அவ்வளவு மோசமானவனில்லை.. கடவுளுக்குத் தான் வெளிச்சம்! அவன் குடிச்சான்னா அவனுக்குள்ள என்ன நடக்குதுங்கிறது…”
சாரதாவின் கண்ணீர் நிற்கவில்லை.
அஸ்கர் என்ன செய்திருப்பான் என்று என்னால் யூகிக்கமுடிந்தது. ஆண்களுக்கு ஒரே ஒரு அணுகுமுறை தான் இருக்கிறது. உடலின் மூலம் தான். ஆனால் நான் சாரதாவின் வாயிலிருந்து கேட்க விரும்பினேன். அஸ்கர் அவள் மீது செய்த மிருகத்தனமான குற்றச்செயலின் தன்மையைத் தெரிந்துகொள்ள விரும்பினேன். ஆகையால் நான் அநுதாபத்துடன்,
“ உண்மையில் அவன் என்ன மாதிரியான அவமானத்தை உனக்கு செய்ஞ்சான்னு எனக்குத் தெரியாது… ஆனால் என்னால் யூகிக்கமுடிகிறது.. நீ ஏன் மேலே வந்தே? “
சாரதா நடுங்கிய குரலில்,
“ நான் கீழேயுள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்தேன்.. இரண்டு பெண்கள் என்னைப் பற்றி பேச ஆரம்பிச்சாங்க..”
அவளுடைய குரல் தொண்டையிலேயே திணறியது.
“ அவங்க உன்னைய பத்தி என்ன சொன்னாங்க? “ என்று நான் கேட்டேன்.
சாரதா அவளுடைய முகத்தை குளிர்ந்த பளிங்குத் திண்டில் சாய்த்து சத்தமாக அழுதாள். நான் அவளுடைய அகன்ற தோள்களில் தட்டினேன்.
“ ஷ்..ஷ்.. சாரதா.. அமைதியா இரு..ஷ்ஷ்ஷ்..”
இரண்டு பெரிய விக்கல்களுக்கிடையில் அவள் மூச்சுத்திணறியது.
“ அவங்க சொன்னாங்க.. ஏன் இந்த அமங்கலியைக் கூப்பிட்டாங்க? ‘ அவள் அமங்கலி என்ற வார்த்தையைச் சொல்லும் போது கண்ணீரில் நனைந்த துப்பட்டாவின் ஒரு முனையை அவளுடைய வாயில் திணித்துக் கொண்டாள்.
“ நான் இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் அறையை விட்டு வெளியேறி இங்கே மேலே வந்து விட்டேன்.. “
அவளுடைய வார்த்தைகள் என்னை வருத்தின. எப்படி பெண்கள் இவ்வளவு குரூரமாக இருக்கிறார்கள்? அதுவும் வயதான பெண்கள்! ஒருவருடைய காயம் புதிதாக இருந்தாலும் சரி  பழையதாக இருந்தாலும் சரி அதை பிறாண்டிப் பார்த்து இளிக்கிறார்கள். நான் சாரதாவின் கைகளை என் கையில் எடுத்துக்கொண்டேன். ஆழமான இதயபூர்வமான பரிவுடன் மெல்ல அழுத்திக் கொண்டு,
“ எப்பவும் இப்படிப்பட்ட விஷயங்களுக்குக் காது கொடுக்கக்கூடாது..”
அவள் ஒரு குழந்தையைப் போல இரைந்து அழ ஆரம்பித்தாள்.
“ நான் சரியாக அப்படியே தான் எனக்குள் சொல்லிக் கொண்டு மேலே தட்டடியில் வந்து உறங்கி விட்டேன்.. உங்களுடைய நண்பர் வந்து என்னுடைய துப்பட்டாவை இழுத்து, என்னுடைய குர்த்தாவின் பொத்தான்களை அவிழ்த்து….”
அவளுடைய குர்த்தாவின் பொத்தான்கள் இன்னும் அவிழ்ந்து கிடந்தன.
“ முடிஞ்சிருச்சு.. சாரதா.. என்ன நடந்திருந்தாலும் மறந்திரு..” என்னுடைய பையிலிருந்து கைக்குட்டையை உருவி அவளுடைய கண்ணீரைத் துடைத்தேன்.
துப்பட்டாவின் ஒரு முனை அவளுடைய வாயில் இன்னும் இருந்தது. அவள் பற்களினால் இறுகக்கடித்துக் கொண்டிருந்தாள். நான் அவளுடைய வாயிலிருந்து அதை இழுத்தேன். ஈரமான அந்த மூலையை விரல்களில் சுற்றிக் கொண்டு நிராதரவான குரலில்,
“ நான் அமங்கலிங்கிறதுனால தான் உங்க நண்பர் என்னை மானபங்கப்படுத்தினாரில்லையா? யாரு வந்து இந்தப்பொண்ணைக் காப்பாத்தப்போறாங்கன்னு நெனைச்சிருப்பார்..”
“ இல்லை சாரதா இல்லை.. “ நான் அவளுடைய தலையை இழுத்து என்னுடைய தோள்களில் சாய்த்துக் கொண்டேன்.
“ மறந்துரு! அவன் என்ன நெனச்சிருந்தாலும் சரி. என்ன செய்ஞ்சிருந்தாலும் சரி. இப்ப அமைதியா இரு..”
நான் அவளைத் தூங்கவைக்க தாலாட்டு பாடவிரும்பினேன்.
ஒரு நிமிடத்துக்கு முன்னால் தான் அவளுடைய கண்ணீரைத் துடைத்திருந்தேன். இப்போது புதிய கண்ணீர்த்துளிகளுடன் அந்தக் கண்கள் மின்னின. அவள் வாயில் திணித்திருந்த  துப்பட்டாவின் ஒரு முனையை இழுத்து மீண்டும் அவளுடைய கண்ணீரைத் துடைத்தேன். பிறகு மென்மையாக அவளுடைய கண்களில் முத்தமிட்டேன்.
“ போதும் இனி அழுகாதே “
அவள் தலையினால் என் நெஞ்சில் இடித்தாள். நான் அவளுடைய கன்னங்களில் மெல்லத்தட்டிக் கொண்டு,
“ போதும் போதும் போதும் “ என்று சொன்னேன்.
கொஞ்சநேரம் கழித்து நான் கீழே இறங்கி வரும்போது, மார்ச் மாத இறுதியில் காலைப்பொழுதில் வீசும் நறுமணமுள்ள காற்றில் மல்மல் துப்பட்டா அலைபாய சாரதா அந்தப் பளிங்குப் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தாள். அஸ்கரின் துர்நடத்தை முழுவதுமாக மறந்து விட்டது. அவள் ஒரு இறகைப்போல மிதந்தாள். அவளுடைய இதயத்திலிருந்த அதிர்ச்சியையும் வேதனையையும் இன்பமும் கிளர்ச்சியும் இடம் மாற்றிவிட்டன.

Saturday, 17 May 2014

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்- புத்தகமதிப்புரை

 

கமலாலயன்

1497597_437038946422644_650455706_n

இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் விளைவுகள், மனிதகுலம் தன் வரலாறு நெடுக கடந்து வந்திருக்கிற இருண்ட நரகத்தின் கூறுகள், எத்தனையோ லட்சக்கணக்கான, இந்துக்கள்- முஸ்லீம்களான சாதாரண மனிதர்கள் தாம் அந்த நரக வாதையை அநுபவித்தவர்கள். மதவெறியர்கள் மூட்டிய தீ நாக்குகளுக்கு இரையாகி மடிந்த லட்சோப லட்சம் மக்களின் சாம்பற்குவியல்கள் இரு நாடுகளிலும் இன்னமும் நிறைந்து தான் கிடக்கின்றன. பீனிக்ஸ் பறவைகளைப் போல மகத்தான கலைப்படைப்பாளிகள் இத்தகைய துயரங்களின் போதுதான் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். தங்களின் உயிரை விலையாகக் கொடுத்தேனும் அத்துயரங்களுக்குக் கலை வடிவம் தந்து விடுகிறார்கள். என்றோ, எங்கேயோ நடந்து முடிந்து போன நிகழ்வுகளே ஆயினும் அத்துயரப்பதிவுகள் காலத்தை வென்று உயிர் வாழ்கின்றன. மனச்சாட்சி உள்ள எந்த ஒரு மனிதனையும் இவை உலுக்கி விடுகின்றன. எதிர்காலச் சந்ததியினருக்கு இவை எச்சரிக்கை விளக்குகளாகி நிலை பேறடைகின்றன.

இந்தியத்துணைக்கண்டம் சந்தித்துக் கடந்து விட்ட ஆனால் சமீப காலங்களில் மீளவும் உயிர் பெற்று எழுந்து கோர நடனமாடுகிற அந்தத் துயரமும், குரூரமும் மிக்க காலத்தில் சோகந்தோய்ந்த குரல்கள் சாதத் ஹசன் மண்ட்டோவினுடையது. உருது மொழியிலக்கியத்தின் உன்னதமான படைப்பாளியான இவர் 1912, மே 11 ஆம் தேதி பிறந்தவர். அவரது நூறாவது பிறந்த ஆண்டான 2012- இல் தமிழில் அவருடைய படைப்புகள் மொழியாக்கம் செய்யப்பெற்று வந்தன. நண்பர் ராமாநுஜம் மண்ட்டோவின் மிகச்சிறந்த கதைகள் சொல்லோவியங்கள் நனவோடைப் படைப்புகளைத் தமிழாக்கி வழங்கியதன் மூலம் ஒரு மாபெரும் படைப்பாளியின் மறுவாசிப்பை நமக்குச் சாத்தியமாக்கியவர். அவரைத்தொடர்ந்து இப்போது கரிசல் காட்டின் கதை சொல்லியான உதயசங்கர், மண்ட்டோவின் 13 சிறந்த சிறுகதைகளை மொழியாக்கம் செய்து நமக்குத் தந்திருக்கிறார்.

உதயசங்கர், 1980-களிலிருந்து இன்று வரை உயித்துடிப்புடன் இயங்கி வரும் படைப்பாளி. ஏழு சிறுகதைத் தொகுதிகள், ஒரு குறுநாவல் தொகுதி, இந்து கவிதைத் தொகுதிகள், மலையாளத்திலிருந்து தமிழுக்கு ஒன்பது மொழியாக்க நூல்கள்,இரண்டு கட்டுரை நூல்கள், ஒரு குழந்தைப் பாடல் நூல்-ஆக 25 நூல்களின் ஆசிரியர். மானுட நதியின் கட்டற்ற பிரவாகத்தினூடே பயணித்தவாறே அதன் போக்கை முற்போக்கான திசை வழியில் கொண்டு செல்லுவதற்குத் தன்னாலியன்ற பங்களிப்பை செய்து வருபவர். மண்ட்டோவைப் பற்றி உதயசங்கர் எழுதிய உணர்ச்சிமயமான கட்டுரை ஒன்றை, இச்சிறுகதை மொழிபெயர்ப்பு நூலின் அறிமுகக் கட்டுரையாக இணைந்திருப்பது மிகமிகப் பொருத்தமான அமைவு.

நுட்பமான படைப்பு மனநிலையும், சக மனிதர்களின் மீது எல்லையற்ற நேசமும் கொண்ட எந்த ஒரு கலைஞனும் மண்ட்டோவைத் தனது நெருங்கிய உறவாக உணர்ந்து சொந்தம் கொண்டாடாமல் இருக்கவே முடியாது. உதயசங்கரும் ‘மண்ட்டோ மாமா’ வை உரிமையுடன் சொந்தம் கொண்டாடியிருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை.

பிரிவினையின், மதவெறியின் கொடூரங்கள் ஒருவர் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், மண்ட்டோவின் இந்தக் கதைகளை அவர் அவசியம் படித்தே ஆகவேண்டும். முதல் கதையான ‘டிட்வாலின் நாய்’ ஒரு நையாண்டியான தொனியில் எழுதப்பட்டிருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்புறத்து இராணுவ நிலைகளில், அவரவர் முகாம்களில் இருந்தவாறே ‘எதிரி’ நாட்டின் மீது ‘சும்மா’ சுட்டுக் கொண்டிருக்கிறார்கள் இருநாட்டு வீரர்களும். யார் வெற்றி பெறுவார்கள் எனத் தெரியாத ஒரு பைத்தியக்காரத்தனமான போர் அது. இரு படைநிலைகளுக்கும் நடுவே, தற்செயலாகத் தெரியாத்தனமாக வந்து மாட்டிக் கொள்கிறது ஒரு நாய். இந்திய-பாகிஸ்தான் வீரர்கள் மாறிமாறி இந்த விரட்டியடித்து நடத்தும் ‘துப்பாக்கிச் சூடு’ விளையாட்டில் ‘தியாகியைப் போல் செத்துப் போகிறது அது.

நாய்தான் என்றில்லை; இருஎஆட்டு இராணுவங்களின் தாக்குதல்களுக்கு நடுவே மனிதர்களும் ‘நாய்களைப்’ போல் செத்துப் போகிறார்கள். என்பதையே இக்கதை குறியீட்டுத் தனமையில் வெளிப்படுத்துவதாகவும் வாசிக்கவும். இதன் இன்னொரு பரிமாணம் யுத்தகளப் பயங்கரங்கட்கு நடுவிலும் என்றும் போல் உயிர்ப்புடன் திகழும் இயற்கையின் தரிசனப்பதிவுகள்; “ சீதோஷ்ணநிலையில் ரம்மியமும் காட்டு மலர்களின் வாசனையும் நிரம்பிய இயற்கை தன் வழியே போய்க்கொண்டிருக்கிற போது திடீரென்று வெடிக்கிற குண்டுகள் எல்லாவற்றையும் சீர்குலைத்துச் சிதறடித்து விடுகின்றன. பஞ்சாபி கிராமியப் பாடலைப் பாடுகிற இராணுவ வீரனின் துயரக்குரல் ஒரு புறம். அப்பாடலில் ஓர் ஏழைக்காதலி தனது காதலனிடம் எருமையை விற்று விட்டாவது நடசத்திரங்கள் பதித்த ஒரு ஜோடி செருப்பை வாங்கி வர வேண்டுமென்று மன்றாடுகிறாள். இவ்வாறான அத்தனை உயிர்க்குரல்களையும், துப்பாக்கிக்குண்டுகளின் முழக்கம் ஈவிரக்கமின்றிச் சாகடித்து விடுகிறது.

சாலையோரமாக.. புதிதாய்ப் பிறந்த ஒரு குழந்தை நனைந்த லினன் துணியால் சுற்றப்பட்டுக் கிடப்பதை போலீசார் லாகூரில் கண்டெடுக்கிறார்கள். குளிரில் அது விறைத்தே செத்திருக்க வேண்டும். ஆனால் அது உயிருடன் இருந்தது; மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டது. அந்தக்குழந்தை யார்? பரஸ்பரம் தமது நிறைவின்மையை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு முழுமையடைந்து ஏதோ காரணத்தினால் பிரிந்து போன இரு ஆத்மாக்களின் விளைபொருளா அது?

‘ நான் ஓர் ஆண்; இன்று நீ என் வாழ்வில் முழுமையைக் கொண்டு வந்தாய். நாளை வேறொரு பெண். இன்று நீ நிரப்பிய வெறுமை மறுபடியும் தோன்றும். அப்போது அங்கே அதை நிரப்ப மற்றவர்கள் இருப்பார்கள்..” இப்படியான குரூரமான வார்த்தைகள் உயிருடன் கல்லால் அடிப்பதைப் போல அந்தப் பேதைப் பெண்ணைத் தாக்குகின்றன. அவள் மன்றாடுகிறாள்: “ இப்படியான குரூரமான வார்த்தைகள் உயிருடன் கல்லால் அடிப்பதைப் போல அந்தப் பேதைப் பெண்ணைத் தாக்குகின்றன. அவள் மன்றாடுகிறாள்: “ நடந்தது ஒரு விபத்து. ஆனால் அவன் அதிலிருந்து முழுதாக எந்தச் சேதாரமுமில்லாமல் எழுந்து நடந்து போய்விட்டான். ஆனால் என் காதில் ஒரு குரல் கிசுகிசுக்கிறது. ஒரு கண்ணீர்த்துளி என்னுடைய சிப்பிக்குள் நழுவி விழுந்து ஒரு முத்தை உருவாக்கியது. நான் காத்துக் கொண்டிருக்கும் ஒரு மடி. என்னுடைய கைகள் அதை ஏந்திக் கொள்வதற்காக நீள்கின்றன. இல்லை.. அதை என்னிடமிருந்து பறிக்காதீர்கள். என்னிடம் இருந்து அதை எடுத்துச் செல்லாதீர்கள்..” இப்படியெல்லாம் கடவுளின் பெயரால் அவள் எவ்வளவோ கெஞ்சி, அரற்றிய போதிலும், அவளிடமிருந்து பறிக்கப்பட்டு விட்ட உன்னதமான கனிதான் அந்தக் குழந்தையா?

தினசரி செய்தித்தாள்களில் நாம் படித்து விட்டு கொஞ்ச நேரத்தில் மறந்து போகும், சாலையோரக்குப்பைத் தொட்டிகளில் கிடக்கும் குழந்தைகளுள் ஒன்றாகக்கூட இது இருக்கலாம். மண்ட்டோவின் கலைத்தூரிகை இந்த அவலத்தை எத்தனை உயிர்ப்புடன் சொல்லோவியமாய் தீட்டியிருக்கிறது என்பதை இக்கதையைப் படித்தால் மட்டுமே உணரமுடியும்.

மதவெறியின் போதையில் நிலை மறந்துபோன மனிதர்கள், தமது எதிரி மதத்தைச் சேர்ந்த குடும்பத்தினரைக் கொன்று குவிக்கிறார்கள். பெண்களைச் சீரழிக்கிறார்கள். அந்த வகையில் ஐஷர்சிங்கின் கும்பலில் மாட்டிக் கொண்ட ஒரு நிராதரவான குடும்பத்தினர் ஏழுபேரில் ஆறு பேரை அவனுடைய கிர்பான் கத்தி கொன்று விடுகிறது. ஏழாவது நபர் ஓர் அழகான இளம்பெண். அவளை ஐஷர்சிங் கொல்லவில்லை. அவளைத் தூக்கிக் கொண்டு நகருக்கு வெளியே ஓடுகிற ஐஷர்சிங் அவளிடம் தனது துருப்புச்சீட்டை இறக்க முற்படுகிறான். அப்போதுதான் அந்த அதிர்ச்சிகரமான உண்மை அவனுக்குத் தெரிய வருகிறது. பனிக்கட்டியை விட குளிர்ந்து போய்.. என்ற இக்கதையின் இரண்டே கதாபாத்திரங்களும் ஒரு பிணமும் நமது இரத்தத்தை உறைய வைத்து விடுகிற மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

புதிய அரசியலமைப்புச் சட்டம் ஒரு கட்டுரையின் தலைப்பைப் போலமைந்த இக்கதை விடுதலைக்கு முன்பு-பின்பு என இரு சமயங்களிலும் மக்களின் எதிர்பார்ப்புகளையும், ஏமாற்றங்களையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக முன் வைக்கிறது: “ என்ன முட்டாள்தனமாகப் பேசிக் கொண்டிருக்கிறாய்? என்ன புதிய அரசியலமைப்புச் சட்டம்? எல்லாம் அதே பழைய அரசியலமைப்புச் சட்டம் தான் முட்டாளே!..” என்று குதிரை வண்டிக்காரன் மங்குவைப் பார்த்துச் சொல்லப்படுகிற இந்த வார்த்தைகள், விடுதலையடைந்த இந்தியாவின் சாதாரண குடிமக்கள் எல்லோருக்குமே ஏதேனும் ஒரு வகையில் பொருந்துபவையாகத் தான் இருக்கின்றன.

காட்டுக்கள்ளி கதையில் வருகிற சர்தார், நவாப், ஹைபத்கான், மூவரும் ஒரு முக்கோணத்தின் மூன்று முனைகள். ஹைபத்கானின் காதல், நவாப் என்கிற விலைமகளின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கிறது. ஆனால் ஹைபத்கானின் மனைவியான சகீனா என்ற பெண்ணின் வருகை, நவாப் வாழ்வின் இறுதி அத்தியாயத்தை மிகக் குரூரமான எழுத்துகளில் எழுதி முடித்தே விடுகிறது. உன்மத்தம் நிறைந்த காதலின் மறுபக்கம், உயிரையும் பறிக்கிற வெறுப்பாகவும் வினைபுரிவதை காட்டுக்கள்ளி சொல்லுகிறது. சர்தார், நவாப், போன்ற காட்டுக்கள்ளிகளைப் பாதுகாப்பதற்கு யாரிருக்கிறார்கள் இங்கே? மனப்பரப்பெங்கும் துயரத்தை நிரப்பி விடுகிற கதை இது.

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண் கதை கிழக்கு-மேற்கு பஞ்சாப் பகுதிகளில் இந்து-முஸ்லீம் கலவரங்களின் போது, கலவரக்காரர்களிடமிருந்து தப்புவதற்காக காரில் விரைவாக வந்து விபத்திற்குள்ளாகும் பிரபல பெண் ஓவியர் மிஸ்.எம்-மின் கதை. கலைக்கல்லூரி ஒன்றின் முதல்வரான அந்த முதிய வயதுப் பெண் ஆண்களை வெறுத்து வந்தவர். ஆனால் மழை பெய்து கொண்டிருந்த அந்த இரவில் கார் விபத்திலிருந்து தன்னை மீட்டுக் கொண்டு வந்த கதைசொல்லியின் வீட்டு வரவேற்பறையில் தான் முதன்முதலாகத் தன்னை ஒரு பெண்ணாக உணர்ந்து, அன்று புதிதாய்ப் பிறக்கிறாள். ஆனால் இருளில் முகம் தெரியாதபோது மோகம் பொங்க அவளை இறுக்கி அணைக்க முயலுகிற கதைசொல்லி திரு.எஸ்- நீ விருப்பப்பட்டா போகலாம் என்று சற்றுமுன் தான் தன்னைப் பெண்ணாக உணர்ந்த மிஸ்.எம்மைப் போகச் சொல்லுகிறான். அந்த மழையிரவில் ஏதோ சொல்ல முயன்று முடியாமல் மௌனமாக வெளியே போய்விடுகிற அவள் அன்றிரவே ஒரு கார் விபத்தில் இறந்து போய்விட்டதாக திரு.எஸ்ஸிடம் அவனுடைய நண்பன் சொல்லுகிறான். நாம் அறிந்தோ அறியாமலோ அன்றாடம் கொன்று குவிக்கிற பல மனிதர்களுள் ஒருத்தியைப் பற்றிய கதை இது. பல சமயங்களில் கொல்லப்படுவது வெறும் உடல்கள் மட்டுமேயல்ல என்ற உண்மை நெஞ்சில் அறைகிறது நம்மை.

கடவுளின் மனிதன் கதையின் ஜீனாவையும் அவருடைய அம்மா பதானையும் எப்படி மறக்க முடியும்? கடவுளின் பெயரால் கடவுளின் பிரதிநிதிகள் என்று தம்மை முன் நிறுத்திக் கொண்டு ஏமாற்றித் திரிகிற கயவர்களின் பிரதிநிதியாக மௌல்விசாகிப் வருகிறான். ஜீனா, பதான், இரண்டு பேரையும் வஞ்சித்து அநுபவிப்பதற்கு அந்தப் போலி மௌல்வியின் தாடி, மீசை, அலங்கார ஆன்மீகச் சொல்லாடல்கள் இவற்றை விடவும் அவனுக்கு முதன்மையாக உதவுவது பதானின் கணவனும் ஜீனாவின் தந்தையுமான சௌத்ரி மௌஜீவின் மதநம்பிக்கையும் இறையச்சமும் தான் என்பது நம் முகத்திலறைகிறது.

கடவுளின் பணியைச் செய்து கொண்டு கதையில் வருகிற பனியா வகுப்பு வியாபாரி, நமது சமகாலத்து லாபவேட்டைக் கொள்ளைக்காரர்களின் வகை மாதிரியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறான். விண்ணை முட்டுகிற வசிப்பிடக்கட்டடங்களின் அடித்தளத்திற்குள் அனுதினமும் புதையுண்டு போய்க் கொண்டிருக்கும் மனிதர்களின் அவலக்குரல்களை, நேரடியாக அல்லாமல் அந்த வியாபாரிகள் உணர்ச்சி ஏதுமற்ற வறட்டு விவரிப்பின் மூலமே நையாண்டி செய்து பதிவு செய்திருக்கிறார் மண்ட்டோ.

சிராஜ் ஒரு புதிரான பாலியல் தொழிலாளி. பத்து ஆண்டுகட்கு முன் லாகூரின் ஓட்டல் ஒன்றில் தன்னை ஏமாற்றிவிட்டு ஓடிப்போன அதே ஆளைக் கண்டுபிடித்து அதே ஒட்டல் அறையில் தன் பழைய கணக்கைத் தீர்த்து விடுகிறாள். எல்லோருக்கும் விடுதலை கதையில் பாணரான கபீர் விடுதலையடைந்த பூமியில் தான் சந்திக்கிற வெவ்வேறு மனிதக்குழுக்களிடமிருந்து எழுப்புகிற பல கேள்விகளாலும் பதில்களாலும் தனது எதிர்வினைகளாலும் நெய்யப்பட்ட ஒரு அற்புத மாலையைக் கதையாகத் தொடுத்திருக்கிறார் மண்ட்டோ. துக்கத்தின் அடையாளமாகக் கருப்புப் பட்டைகளை அணிந்திருக்கிற மனிதர்களிடமும் கபீர் ஓர் அர்த்தமுள்ள கேள்வியை எழுப்புகிறார். அவர்கள் கபீரை, ‘ நீ ஒரு கம்யூனிஸ்ட். ஐந்தாம்படை பத்திரிகையாளர் ‘ என்று பலவாறாக ஏசுகிறார்கள். அன்று முதல் முறையாக கபீர் சிரிக்கிறார். ஆனால் நண்பர்களே நான் கருப்போ, சிவப்போ, பச்சையோ, எந்தப் பட்டையும் அணியவில்லை..என்ற கபீரின் வாக்குமூலத்தை ஒரு வகையில் மண்ட்டோவினுடையதாகவும் வாசிக்க முடியும்.

இத்தொகுப்பின் எல்லாக்கதைகளிலும் நாம் சந்திக்கிற மனிதர்கள், நல்லவர்களா? கெட்டவர்களா? மென்மையும் அன்பும் கொண்டவர்களா? குரூரமும் வெறுப்புமே நிறைந்தவர்களா? உண்மையில் மனிதர்கள் இருவகையையும் சேர்ந்தவர்களுமாகத்தான் இருக்கிறார்கள். அப்படித்தான் அவர்கள் இருந்திருக்க முடியும். மண்ட்டோ யார் பக்கம்? இறுதியாகப்பார்த்தால் அவர் எளிய நிராதரவான மனிதர்களின் ஆன்மாக்களின் பாதுகாவலராக இருப்பதை நாம் உணர முடியும்.

சாதாரண அடித்தட்டு மக்கள் விளிம்பு நிலையினர், பாலியல் தொழிலாளிகள் போன்ற சாமானியர்களின் வாழ்க்கை அவலங்களை வாசக மனங்கள் அதிரும்வகையில் சொன்னவர் மண்ட்டோ. அனைத்து அதிகாரநிறுவனங்கட்கும், மேலாதிக்கக்கருத்துகளுக்கும் எதிரான போர்க்குரல் மண்ட்டோவினுடையது. ஆபாசமான கதைகளை எழுதியவர் என்று பலமுறை நீதிமன்றங்களால் அலைக்கழிக்கப்பட்ட, குற்றம் சுமத்தப்பட்ட எழுத்தாளர் அவர்.

மண்ட்டோவின் காலம் இந்திய வரலாற்றில் கொந்தளிப்பு நிறைந்த சமன் குலைந்த பிரிவினையின் வெறி மிகுந்த காலம். இயல்பாகவே தன் மனசாட்சியின் குரலைப்பின்பற்றி படைப்பு நேர்மை மிக்க கதைகளை எழுதியவர் மண்ட்டோ. உதயசங்கரின் கலையுள்ளம் மண்ட்டோவின் மனவுலகை முழுமையாகவும் ஆழமாகவும் உள்வாங்கி இக்கதைகளின் மொழியாக்கத்தில் முனைப்புடன் இயங்கியிருப்பதின் வெளிப்படை இந்தத் தொகுப்பு.

” சாதத் ஹசன் என்ற மனிதனை அவனுடைய சிந்தனைகளை செயல்களை அவனுடைய குடும்பத்தார், நண்பர்கள் யாரும் புரிந்து கொள்ளவில்லை. அவனை ஒரு பைத்தியக்காரனாகவே நினைத்தார்கள். ஆனால் மண்ட்டோ என்ற படைப்பாளியை தன் ஊனை உருக்கி உயிரைச்செலுத்தி அவன் படைத்த மகத்தான படைப்புகளை உலகம் இன்னமும் கொண்டாடுகிறது.” என்கிறார் உதயசங்கர். ஆம் உண்மை தான். முன்பு ராமாநுஜமும் இப்போது உதயசங்கரும் மொழிபெயர்த்துத் தந்திருக்கும் படைப்புகளின் வழியாக நாம் மண்ட்டோ என்ற மகத்தான படைப்பாளியின் மன உலகிற்குள் பிரவேசித்து உலாவி வருவதற்கு முடிந்திருக்கிறது.

“ நாமே அறியாத நம் மனதின் அத்த்னை மூலை முடுக்குகளிலும் பயணித்து அங்கே கொட்டிக் கிடக்கும் சாக்கடையையும், சகதியையும் அள்ளியெடுத்து வெளியே எறிந்து சுத்தப்படுத்துகிறான் கலைஞன். அங்கே கலையின் பொன்னொளியால் அன்பெனும் சுடரை ஏற்றுகிறான்…” என்று பொருத்தமான, தேர்ந்த சொற்களால் உதயசங்கர் மண்ட்டோவிற்குப் புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

இத்தொகுப்புக் கதைகளில் ஒரு எழுத்தைக்கூட மனம் நெகிழாமல் பதறாமல் ஆத்திரப்படாமல், வெறுக்காமல், நேசிக்காமல், சாதாரணமாக உங்களால் கடந்து போய் விட முடியாது. அந்த அளவிற்கு உயிர்ச்சத்து நிரம்பிய வலிமைமிக்க வாழ்க்கையின் உக்கிரங்களாகிய எரிமலை வெடித்துச் சிதறிப் பிரவாகமெடுத்ததைப் போன்ற கதைகள் இவை!

நன்றி- உங்கள் நூலகம் மார்ச் 2014

Wednesday, 20 November 2013

புதிய அரசியலமைப்புச்சட்டம்..

சாதத் ஹசன் மண்ட்டோ

ஆங்கிலத்தில்- காலித் ஹசன்

தமிழில்- உதயசங்கர்manto2

குதிரைவண்டிக்காரனான மங்கு தான் அவனுடைய நண்பர்களிலேயே மிகச்சிறந்த அறிவாளி என்று கருதப்பட்டான். அவன் பள்ளிக்கூடத்துக்கு உள்ளே சென்று எப்படியிருக்கும் என்று இதுவரை பார்த்ததில்லை. கறாரான கல்வித்தகுதி என்று பார்த்தோமானால் அவன் பூஜ்யம் தான். ஆனால் சூரியனுக்குக் கீழே அவனுக்குத் தெரியாத எந்த விஷயமும் இல்லை.லௌகீகஉலகத்தைப் பற்றிய அவனுடைய இந்தப்பன்முகஅறிவைப் பற்றி குதிரைவண்டி நிலையத்திலுள்ள, அவனுடைய எல்லாநண்பர்களுக்கும் தெரியும். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றிய அவர்களுடைய ஆர்வத்தை அவன் எப்போதும் திருப்திப்படுத்திவிடுவான்.

ஒரு நாள் அவன் அவனுடைய இரண்டு சவாரிகள் பேசிக் கொண்டிருந்ததிலிருந்து இந்து முஸ்லீம்களுக்கிடையில் இன்னொரு மதக்கலவரம் வெடித்துவிட்டது என்று தெரிந்து கொண்டான்.

அன்று மாலையில் அவன் நிலையத்துக்கு வந்தபோது குழம்பிப்போயிருந்தான். அவனுடைய நண்பர்களுடன் உட்கார்ந்து, ஹூக்காவில் நீண்ட ஒரு இழுப்பு புகையை இழுத்துவிட்டான். அவனுடைய காக்கிநிறத் தலைப்பாகையை எடுத்துவிட்டு கவலைதோய்ந்த குரலில், “ இது அந்தப் புனிதரின் சாபம் தான். அன்றாடம் இந்துக்களும் முஸ்லீம்களும் ஒருவரையொருவர் அடித்துக்கொள்வார்கள். ஒருமுறை அக்பர் பாதுஷா ஒரு முனிவரை அவமரியாதை செய்துவிட்டார். அந்த முனிவர் ,” என் கண்முன்னே நிற்காதே.. உன் ஹிந்துஸ்தான் எப்போதும் கலவரங்களாலும், ஒழுங்கின்மையாலும் பீடித்திருக்கும்…” என்று சாபம் கொடுத்துவிட்டதாக பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன். நீங்களே பாக்கறீங்கள்ல அக்பரோட ஆட்சி முடிந்ததிலிருந்து என்ன நடக்கிறது இந்தியாவில் கலவரங்களைத்தவிர..” என்று சொன்னான்.

தன்னிச்சையாக அவன் ஹூக்காவை இழுத்து பெரிய மூச்சு விட்டு, “ இந்த காங்கிரஸ்காரங்க… இந்தியா சுதந்திரம் அடையணும்னு விரும்பறாங்க..இன்னிக்கி நான் சொல்றேன் கேட்டுக்கோ.. ஆயிரம் வருஷம் ஆனாலும் அவங்களால அது முடியாது..வேணும்னா ஆங்கிலேயர்கள் போகலாம்.. ஆனா அதுக்கப்புறம் இத்தாலிக்காரனையோ, ருஷ்யாக்காரனையோ நீ பார்ப்பே… எனக்குத் தெரிஞ்சவரை ருஷ்யாக்காரன் ரெம்ப முரட்டுத்தனமானவங்க.. நான் சத்தியம் செய்றேன் ஹிந்துஸ்தான் எப்போதும் அடிமையாத்தான் இருக்கும்…ஆமாம் அந்த முனிவர் அக்பருக்குக் கொடுத்த சாபத்தின் இன்னொரு விஷயத்தைச் சொல்ல நான் மறந்துட்டேன்… இந்தியா எப்போதும் அந்நியர்களாலேயே ஆளப்படும்….” என்று சொன்னான்.

மங்கு வாத்தியாருக்கு பிரிட்டிஷ்காரர்களைப் பிடிக்காது. அவன் அவர்களை வெறுப்பதற்கான காரணம் என்னவென்றால் அவர்கள் இந்தியர்களின் விருப்பத்துக்கு மாறாக இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல அட்டுழியம் செய்வதற்கான எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் அவர்கள் விட்டுவைப்பதில்லையென்று அவனுடைய நண்பர்களிடம் சொல்வது வழக்கம். ஆனால் உண்மையான விஷயம் என்னவென்றால் அவனுக்கு பிரிட்டிஷ்காரர்களைப் பற்றிய தாழ்வான அபிப்பிராயம் தோன்றுவதற்கு அங்கு படைமுகாமிலிருந்த கோரா படைவீரர்கள் தான் காரணம். அவர்கள் அவனை நாயை விடக் கேவலமான பிறவி போல நடத்துவார்கள். அதுவுமல்லாமல் அவன் அவர்களுடைய வெள்ளை நிறத்தை வெறுத்தான். அவன் யாராவது ஒரு பிரிட்டிஷ்காரனை அல்லது செம்பவளநிற கோரா படைவீரனை எதிர்கொள்ள நேர்ந்து விட்டால் குமட்டிக்கொண்டு வரும். ’ அவங்க சிவப்பு முகங்க எனக்கு அழுகிக் கொண்டிருக்கும் பிரேதங்களை ஞாபகப்படுத்தும் ’ என்று விருப்பத்துடன் சொல்லிக்கொண்டிருப்பான்.

ஒரு குடிகாரகோரா படைவீரனோடு ஏற்பட்ட அடிதடிச்சண்டைக்குப் பிறகு பலநாட்களுக்கு அவன் மனவருத்ததோடு இருந்தான்.அவன் நிலையத்துக்குத் திரும்பிய பிறகு வைது கொண்டே ஹூக்காவைப் பிடிப்பான். அல்லது அவனுக்குப் பிடித்த ஏர் படம் போட்ட பிராண்ட் சிகரெட்டுகளைப் புகைக்கும் போது திட்டுவான்.

அப்போது அவன் தலையாட்டிக் கொண்டே சொல்வான்,” பாரு அவங்களை…. வீட்டுக்கு ஒரு மெழுகுவர்த்தி எடுக்க வருவாங்க.. உனக்குத் தெரியாம எடுத்துகிட்டு போயிருவாங்க.. அந்த மனுசக்குரங்குகளுக்கு முன்னால நிற்கவே என்னால முடியாது.. அவங்க உனக்கு ஆணையிடுறதப் பார்த்தீன்னா ஏதோ நாம அவங்கப்பனோட அடிமை மாதிரி…!”

சிலசமயங்களில், மணிக்கணக்காக அவர்களைத் திட்டியபிறகும், அவனுடைய கோபம் தீராது. அவனுக்கு அருகில் உட்கார்ந்திருப்பவரிடம் “ பாரு அவங்களை…குஷ்டம் பிடிச்சவங்களை மாதிரி.. .செத்து அழுகிக் கொண்டிருக்கிற மாதிரி… நான் அவங்கள ஒரே அடியிலே சாய்ச்சிருவேன்…ஆனா அவங்களோட திமிர்த்தனத்தை எப்படி எதிர்கொள்ள…? நேற்று ஒருத்தனோட தகராறு..அவனோட அதிகாரத்தைப் பார்த்து எனக்கு வந்ததே கோபம்…நான் அவன் மண்டையை உடைச்சிருப்பேன்..ஆனா நான் என்னைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கிட்டேன்…அந்தக் கழிசடையோட சண்டை போடறது என்னோட தகுதிக்குக் குறைவானதில்லையா..” என்று சொல்வான்.

அவனுடைய சட்டைக்கையினால் மூக்கைத் துடைத்துக் கொள்வான். மறுபடியும் அவனுடைய வசவைத் தொடர்வான். “ கடவுள் சத்தியமாகச் சொல்றேன்… இந்த இங்கிலீஷ் கனவான்களைக் கேலி செய்றதே எனக்குப் பிடிக்கல… ஒவ்வொரு தடவையும் அவங்களோட சனியன்பிடிச்ச மூஞ்சிகளைபார்த்தவுடனேயே என்னோட ரத்தம் கொதிக்க ஆரம்பிச்சிரும்… உம்மேல சத்தியமா சொல்றேன்..இவங்கள ஒழிக்கணும்னா ஒரு புதிய சட்டம் தான் கொண்டு வரணும்…”

ஒருநாள் வாத்தியார் மங்கு மாவட்ட நீதிமன்றத்திலிருந்து இரண்டு சவாரிகளை ஏற்றிக்கொண்டு போனான். அவர்களுடைய உரையாடலிலிருந்து இந்தியாவில் ஒரு புதிய சட்டம் வரப்போகிறதென்று தெரிந்து கொண்டான்.அவர்கள் மிக விரைவில் அறிமுகப்படுத்தப் போகிற இந்திய அரசுச்சட்டம் 1935 ஐப் பற்றிப் விவாதித்துக் கொண்டு வந்தார்கள்.

“ ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து இந்தப் புதிய சட்டம் அமலுக்கு வரப்போவதாகச் சொல்கிறார்கள்… இது எல்லாவற்றையும் மாத்திரும்னு நம்புறியா..? ”

“ எல்லாம் மாறாது..ஆனால் நிறைய மாற்றங்கள் வரும்னு சொல்றாங்க… இந்தியர்களுக்கு விடுதலை கிடைச்சிரும்..”

“ அப்படின்னா நம்மோட வட்டி? “ என்று ஒருவர் கேட்டார். அநேகமாக அவர்கள் வழக்குக்காக நகரத்துக்கு வந்த லேவாதேவிக்காரர்களாக இருக்க வேண்டும்.

“ உண்மையில் எனக்குத் தெரியல… வழக்கறிஞரைக் கேட்கணும்…” என்று அவருடைய நண்பர் பதில் சொன்னான்.

வாத்தியார் மங்கு ஏற்கனவே ஏழாவது சொர்க்கத்துக்குப் போய் விட்டான். சாதாரணமாக அவனுடைய குதிரை மெதுவாகப் போவதாக திட்டிக் கொண்டே வருகிற பழக்கம் உண்டு. அதோடு சவுக்கை வீசி அடிக்கவும் தயங்க மாட்டான். ஆனால் இன்று எதுவும் செய்யவில்லை. அவ்வப்போது அவன் திரும்பி அவனுடைய பயணிகளைப் பார்த்துக் கொண்டான். மீசையைத் தடவி விட்டுக் கொண்டான். குதிரையின் கடிவாளத்தை ஆதூரத்துடன் தளர்வாக விட்டு,” வாடா மகனே உன்னால என்ன செய்ய முடியும்னு அவங்களுக்குக் காட்டுவோம்…. போவோம் வா..” என்று சொன்னான்.

அவனுடைய சவாரிகளை இறக்கிவிட்டு விட்டு அனார்கலி வணிகவளாகத்தில் அவனுடைய மிட்டாய்க்கடை நண்பனான டினோவின் கடையின் முன் நிறுத்தினான். அவன் ஒரு பெரிய கிளாஸ் லஸ்ஸியை வாங்கிக் ஒரே மூச்சில் குடித்தான். திருப்தியுடன் ஒரு பெரிய ஏப்பமிட்டு, கூவினான், “ அவர்கள் நரகத்துக்குப் போக..! “.

அவன் சாயந்திரம் குதிரைவண்டி நிலையத்துக்குப் போனபோது அவனுடைய நண்பர்கள் யாரும் அங்கில்லை. அவன் வெகுவாக ஏமாற்றமடைந்தான். ஏனெனில் அவன் அந்தச் சிறந்த செய்தியை அவனுடைய ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆவலுடன் வந்திருந்தான். அவனுக்கு சீக்கிரத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டம் வரப்போகிறது… அது எல்லாவற்றையும் மாற்றப்போகிறது …என்று யாரிடமாவது சொல்லியே ஆக வேண்டும்.

ஒரு அரைமணி நேரத்துக்கு அவனுடைய கையில் சவுக்கைப் பிடித்தபடி அமைதியின்றி சுற்றிச் சுற்றி நடந்து கொண்டிருந்தான். அவனுடைய மனசு பல விஷயங்களைப் பற்றி, எதிர்காலத்தில் நடக்கவிருக்கிற நல்ல விஷயங்களைப் பற்றி யோசித்தது. நாட்டில் வரப்போகிற புதிய அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றிய செய்தி புதிய சாத்தியங்களைத் திறந்து விட்டது. அவன் அவனுடைய மூளையின் அனைத்து விளக்குகளையும் எரிய விட்டான். இந்தியாவில் ஏப்ரல் 1 ஏற்படுத்தப்போகிற விளைவுகளைப் பற்றி கவனமாகப் பரிசீலித்தான். அவன் புளகாங்கிதமடைந்தான். அந்த கழிசடை லேவாதேவிக்காரர்கள் வட்டியைப் பற்றிப் பேசிக் கொண்டதைப் பற்றி நினைத்தவுடன் தனக்குத் தானே சிரித்துக் கொண்டான். ‘ இந்தப் புதிய சட்டம் கொதிக்கிற சுடுதண்ணீர் மாதிரி ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சும் இந்த மூட்டைப்பூச்சிகளை கொன்றொழித்து விடும் ‘ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். இந்தப் புதிய அரசியலமைப்புச் சட்டம் இந்த வெள்ளைஎலிகளை ( பிரிட்டிஷ்காரர்களுக்கு அவன் வைத்திருந்த பெயர்.) ஒரேயடியாக அவைகளுடைய இருண்டபொந்துகளுக்குள் விரட்டியடித்து விடும். இனி பூமியில் எங்கும் தலையெடுக்க முடியாது. சிறிது நேரம் கழித்து நாதூ என்ற வழுக்கைத்தலை குதிரைவண்டிக்காரன் அவனுடைய தலைப்பாகையை எடுத்து கையில் வைத்துக் கொண்டு மெல்ல நடந்து வந்தான். வாத்தியார் மங்கு அவனுடைய கையைப் பிடித்துப் பலமாகக் குலுக்கிக் கொண்டே, “ உனக்கு ஒரு சிறந்த செய்தி வைத்திருக்கிறேன்.. அதைக் கேட்டால் உன் வழுக்கைத் தலையில் முடி முளைச்சாலும் முளைச்சிரும்..” என்று சொன்னான்.

பிறகு அவன் அந்தப் புதிய அரசியலமைப்பு சட்டம் இந்தியாவுக்குக் கொண்டு வரப் போகிற மாற்றங்களைப் பற்றி விவரிக்கத் தொடங்கினான். “ கொஞ்சம் பொறுத்துப் பாரு… என்னெல்லாம் நடக்கப்போகுதுன்னு….நான் இன்னைக்குச் சொல்றேன் கேட்டுக்கோ…. ருஷ்யாவின் ராஜா அவர்கள் போகின்ற பாதையைக் காட்டப் போகிறார்..”.

வாத்தியார் மங்கு பல வருடங்களாக கம்யூனிச அரசாங்கத்தைப் பற்றிப் பல கதைகளைக் கேள்விப்பட்டிருக்கிறான். அதிலுள்ள பல விஷயங்களை புதிய சட்டங்களை, இன்னும் புதிய திட்டங்களை, அவன் மிகவும் விரும்பினான்.அதனால் தான் அவன் இந்தியாவின் புதிய சட்டத்தோட ருஷ்யாவின் ராஜாவை தொடர்பு படுத்தினான். ஏப்ரல் 1 ஆம் தேதி வரப்போகிற மாற்றங்கள் ருஷ்யாராஜாவின் செல்வாக்கினால் தான் ஏற்படுகிறது என்று நம்பினான். அவனைப் பொறுத்தவரை உலகிலுள்ள ஒவ்வொரு நாடும் ஒரு ராஜாவினால் தான் ஆளப்படுகிறது என்று உறுதியாக நினைத்தான்.

சில வருடங்களாக பெஷாவர் நகரில் சிவப்புச் சட்டை இயக்கம் மிகவும் பிரபலமாக செய்திகளில் அடிபட்டது. வாத்தியார் மங்குவுக்கு இந்த இயக்கம் ருஷ்யராஜாவுக்கு ஏதோ ஒரு வகையில் தொடர்புடையது அதனால் இயல்பாகவே புதிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும் தொடர்புடையது. இந்தியாவின் பல நகரங்களில் அடிக்கடி குண்டுவெடிப்புகள் நடந்ததாகத் தகவல்கள் வெளியாயின. வெடிபொருட்கள் வைத்திருந்ததாக பலர் பிடிபட்டதாக வாத்தியார் மங்கு கேள்விப்பட்டபோதும், தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளில் பலர்மீது வழக்கு தொடர்ந்த போதும் அவன் புதிய சட்டம் வருவதற்கு இவையெல்லாம் காரணம் என்று விளங்கிக் கொண்டான்.

ஒருநாள் அவனுடைய குதிரைவண்டியில் இரண்டு பாரிஸ்டர்கள் ஏறினார்கள் அவர்கள் புதிய அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி உரக்க விவாதித்துக் கொண்டே வந்தார்கள். அதில் ஒருவர் சொன்னார், “ அது சட்டத்தின் இரண்டாவது பிரிவு என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை…அது இந்திய கூட்டாட்சியைப் பற்றியது. அப்படி ஒரு கூட்டாட்சி உலகத்தில் எங்கேயும் இல்லை..அரசியல் ரீதியாகப் பார்த்தால் அது ஒரு பெரிய பேராபத்து…உண்மையில் சொல்லப்போனால், முன்மொழிந்திருப்பது கூட்டாட்சியைப் பற்றித் தான் வேறொன்றுமில்லை.”

அந்த பேச்சின் பெரும்பகுதியும் ஆங்கிலத்திலேயே நடந்ததால் வாத்தியார் மங்குவால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இந்த இரண்டு பாரிஸ்டர்களும் புதிய சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்றும் இந்தியா விடுதலை அடைவதை விரும்பவில்லை என்றும் அவன் மனதில் பட்டது. ‘ தவளைகள் ’ என்று என்று அவன் வாய்க்குள் முணுமுணுத்தான்.

இந்த நிகழ்ச்சிக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு அவன் மொசாங் போவதற்காக மூன்று அரசுக்கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு போனான். அவர்கள் புதிய சட்டத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு வந்தார்கள்.

“ புதிய சட்டத்தோடு பல புதிய விஷயங்கள் நடக்கப்போகுதுன்னு நான் நெனைக்கிறேன்…கொஞ்சம் கற்பனை பண்ணிப்பாரு.. நாம சட்டசபைகளை தேர்ந்தெடுக்கப் போறோம்.. ஒருவேளை திருவாளர் ………………….. தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால் எனக்கு எப்படியும் அரசாங்கவேலை கிடைத்து விடும்….”

“ ஓ பல புது விஷயங்களும் நிறையக் குழப்பங்களூம் நடக்கும். இன்னும் சொல்லப்போனால் நாம் ஏதோ ஒன்றில் நம் கைகளை வைக்கப்போகிறோம் என்று எனக்கு உறுதியாகத் தெரிகிறது..”

“ இதை என்னால ஒத்துக்கொள்ள முடியல..”

“ இயல்பாகவே இப்ப இருக்கிற ஆயிரக்கணக்கான வேலையில்லாப்பட்டதாரிகளின் எண்ணிக்கை குறையும்..”

இந்தப் பேச்சு வாத்தியார் மங்குவைப் பொறுத்தவரை அவனைப் புளகாங்கிதமடையச் செய்தது புதிய அரசியலமைப்புச் சட்டம் ஒளிமிக்கதாகவும் நம்பிக்கை நிறைந்ததாகவும் அவனுக்குத் தெரிந்தது. . ஒரே விஷயம் என்னவென்றால் அவன் புதிய சட்டத்தை ஒரு இரண்டு வருடங்களுக்கு முன்பு அவனுடைய குதிரைவண்டிக்காக சௌத்ரி குடாபக்ஸிடமிருந்து வாங்கிய அற்புதமான பித்தளை முலாம் பூசிய அலங்காரவிளக்கோடு ஒப்பிட்டுப் பார்க்கவே முடிந்தது. புதிய சட்டம் அவனுக்கு கதகதப்பான இனிய உணர்வைத் தந்தது.

பின்வந்த வாரங்களில் வாத்தியார் மங்கு மாற்றங்களைப் பற்றி ஆதரவாகவும் எதிராகவும் நிறையக் கேள்விப்பட்டான். ஆனால் அவனுடைய மனதில் உறுதியாக தோன்றிவிட்டது. அவன் ஏப்ரல் 1 ஆம் தேதியில் எல்லாம் மாறிவிடும் என்ற நம்பிக்கையை அவன் பாதுகாத்து வந்தான்.

கடைசியில் மார்ச் மாதத்தின் முப்பத்தியொரு நாட்களும் முடிவுக்கு வந்தன. வழக்கத்தை விட சீக்கிரமாக வாத்தியார் மங்கு எழுந்த போது குளிர்ந்த காற்று வீசியது. அவன் குதிரை லாயத்துக்குப் போனான். அவனுடைய குதிரை வண்டியைத் தயார் செய்து ரோட்டிற்கு கொண்டு போனான். இன்று அவன் அதீத மகிழ்ச்சியிலிருந்தான். ஏனெனில் புதிய சட்டம் வரப்போவதை அவனுடைய கண்களால் அவன் பார்க்கப்போகிறான்.

காலைப் பனியில் அவன் நகரத்தின் அகலமான, குறுகலான தெருக்களுக்குள் சுற்றி வந்தான். ஆனால் எல்லாம் அப்படியே பழைய மாதிரியே பாழடைந்து கிடந்தன. அவன் வண்ணங்களையும் ஒளியையும் பார்க்க விரும்பினான். அங்கே எதுவுமில்லை. அவன் அவனுடைய குதிரைக்காக புதிய இறகுக்குஞ்சம் ஒன்றை அந்தப் பெருநாளைக் கொண்டாடுவதற்காகக் கொண்டு வந்திருந்தான். அது ஒன்று தான் அங்கே அவனால் பார்க்கமுடிந்த சிறிதளவு வண்ணம். அது அவனுக்குக் கொஞ்சம் செலவையும் தந்து விட்டது.

குதிரையின் குளம்படிகளின் கீழே சாலை கருப்பாகவே இருந்தது. விளக்குதூண்கள் பழைய மாதிரியே இருந்தன. கடைகளின் விளம்பரப்பலகைகள் மாறவில்லை. புதிதாக எதுவும் நடக்காதமாதிரி மக்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். இருந்தாலும் அது ரெம்ப சீக்கிரம் தான். பெரும்பாலான கடைகள் மூடியிருந்தன. ஒன்பது மணிக்கு முன்னால் நீதிமன்றம் திறக்காது அதுக்கு அப்புறம் புதிய சட்டம் அமுலுக்கு வந்துவிடும் என்ற சிந்தனை வர அவனை அவனே ஆறுதல்படுத்திக் கொண்டான்.

அரசுக்கல்லூரிக்கு முன்னால் அவன் நின்ற போது மணிக்கூண்டுக் கடிகாரம் கிட்டத்தட்ட அதிகாரமாய் ஒன்பது தடவை அடித்து ஓய்ந்தது. மெயின் கேட் வழியே அழகாக உடையணிந்த மாணவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் மிகவும் அலங்கோலமாக வாத்தியார் மங்குவுக்குத் தெரிந்தார்கள். ஏதாவது வண்ணமயமாக, இன்னும் வியக்கிற மாதிரி நடக்க வேண்டும் என்று விரும்பினான்.

அவன் குதிரைவண்டியை முக்கிய வணிகவளாகமான அனார்கலியை நோக்கி ஓட்டினான். பாதிக்கடைகள் திறந்திருந்தன. மிட்டாய்க்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பொது வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் வியாபாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அவர்களுடைய விற்பனைப் பொருட்கள் எல்லோர் கவனத்தையும் ஈர்க்கும்வண்ணம் கடை ஜன்னல்களில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் எதுவும் வாத்தியார் மங்குவை ஈர்க்கவில்லை. அவன் புதிய அரசியலமைப்பு சட்டத்தை அவனுடைய குதிரையைப் பார்ப்பது போல தெளிவாகப் பார்க்கவேண்டும் என்று விரும்பினான்.

வாத்தியார் மங்குவும் எதிர்பார்த்துக்காத்திருப்பதற்கு முடியாதவர்களில் ஒருவன். அவனுடைய முதல்குழந்தை பிறந்தபோதும் அவனால் அமைதியாக உட்கார்ந்திருக்க முடியவில்லை. குழந்தை பிறப்பதற்கு முன்பே அதைப் பார்க்க விரும்பினான். பலமுறை மனைவியின் வயிற்றில் அவனுடைய காதுகளை வைத்து குழந்தை எப்போது வெளியில் வரும் என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்வான். அல்லது குழந்தை எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்வான். ஆனால் அவனால் எதையும் கண்டுபிடிக்க முடியாது. ஒருநாள் அவன் அவனுடைய மனைவியைப் பார்த்து எரிச்சலுடன் கத்தினான்,

“ என்ன ஆச்சு உனக்கு? நாள்பூரா படுக்கையிலே கிடக்கிறே..பிணம் மாதிரி..ஏன் நீ எழுந்து வெளியில் போய் சுற்றி நடந்து கொஞ்சம் சக்தியை சேர்த்து வைக்க வேண்டியது தானே..குழந்தை பிறப்பதற்கு உதவி செய்யலாம்ல.. நான் சொல்றேன் இப்படியே இருந்தா அவன் எப்படி வருவான்.”

வாத்தியார் மங்கு எப்போதும் அவசரத்திலிருந்தான். அவனால் காரியங்கள் ஒரு வடிவத்துக்கு வரும்வரை காத்திருக்க முடியவில்லை. அவனுக்கு எல்லாம் உடனே நடந்து விட வேண்டும். ஒருமுறை அவனுடைய மனைவி கங்காவதி அவனிடம் சொன்னாள்,

“ கிணறே இன்னும் தோண்ட ஆரம்பிக்கல.. அதுக்குள்ள பொறுமையில்லாம தண்ணி குடிக்க அவசரப்படறே…”

இன்று காலையில் அவன் எப்போதும் இருக்கிற மாதிரி அந்தளவுக்கு பொறுமையில்லாமல் இல்லை.அவன் சீக்கிரம் வந்ததே புதிய சட்டத்தை அவனுடைய கண்களால் பார்ப்பதற்குத் தான். எப்படி காந்திஜியையும், நேருவையும் பார்ப்பதற்காக அவன் பல மணி நேரம் காத்திருந்தானோ அப்படி அவன் புதிய சட்டத்தைப் பார்ப்பதற்காக வந்திருந்தான்.

பெரிய தலைவர்களென்றால் வாத்தியார் மங்குவைப் பொறுத்தவரை ஊர்வலமாக வரும்போது ஏராளமான மாலைகள் சூட்டப்பட்டும் வருபவர்கள். ஒருவேளை அந்த ஊர்வலத்தில் போலீசாரோடு ஏதாவது சில தள்ளுமுள்ளுகள் நடந்து விட்டால் அந்தத் தலைவர் மங்குவின் பார்வையில் எங்கோ உயரத்திற்கு போய் விடுவார். புதிய அரசியலமைப்பு சட்டமும் அப்படியான பரபரப்பாக அமுலாவதைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினான்.

அனார்கலி வணிகவளாகத்திலிருந்து அவன் கடைவீதிக்குப் போனான். மோட்டார் ஷோ ரூம் முன்னால் அவனுக்கு ஒரு சவாரி படையணி நிலையத்துக்குக் கிடைத்தது. அவர்கள் பணத்தைக் கொடுத்து விட்டு உடனே அந்த இடத்தை விட்டு அவர்கள் வழியில் சென்றனர். வாத்தியார் மங்குவுக்கு இப்போது நம்பிக்கை வந்தது. படையணிநிலையத்திலிருந்து புதிய அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி ஏதாவது தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தான்.

அவனுடைய சவாரி குதிரை வண்டியிலிருந்து இறங்கியதும் வாத்தியார் மங்கு குதிரை வண்டியின் பின்னிருக்கைக்குச் சென்று ஒரு சிகரெட்டை பற்ற வைத்தபடியே யோசிக்க ஆரம்பித்தான். அவனுக்கு நேரம் கிடைக்கும்போது இப்படித்தான் அவன் ஆசுவாசப்படுத்திக் கொள்வான். அவன் அடுத்த சவாரியைப் பார்க்கவில்லை. அவன் புதிய சட்டத்தினால் வரக்கூடிய மாற்றங்கள் குறித்து அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தான்.

குதிரைவண்டிகளுக்கு குதிரைவண்டி எண் கொடுக்கும் இப்போதைய முறையை புதிய சட்டஒழுங்குமுறையில் எப்படி மாற்றலாம் என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தான். அப்போது ஒரு கோரா படைவீரன் விளக்குத்தூணுக்கருகில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான்.

அவனுக்கு ஏற்பட்ட முதல் உள்ளுணர்வு வண்டியில் அவனை ஏற்றக்கூடாது. அவன் அந்தக் குரங்குகளை வெறுத்தான். ஆனால் அவர்களுடைய பணத்தை ஏற்றுக் கொள்ளாமலிருப்பது புத்திசாலித்தனமுமல்ல என்று அவனுக்குத் தோன்றியது. புதிய இறகுக்குஞ்சம் வாங்க நான் செலவழித்த பணத்தை மீட்ட மாதிரி இருக்கும் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

அவன் வண்டியைத் திருப்பி இருந்த இடத்திலிருந்து கொண்டே சாவகாசமான முறையில் கேட்டான், ” பகதூர் சாகிப் உங்கள எங்கே கூட்டிக் கொண்டு போக வேண்டும் ஐயா..? “ என்று கேட்டான். இந்த வார்த்தைகளை அவன் வெளிப்படையான வெறுப்புடனே கேட்டான். அப்போது அவன் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. அந்தத் துடுக்குத்தனமான கோரா உடனே அங்கிருந்து மறைந்து விடவேண்டும் என்பதைத் தவிர வேறொன்றும் அவன் விரும்பவில்லை.

காற்றை எதிர்த்து சிகரெட்டைப் பற்றவைக்க முயற்சி செய்து கொண்டிருந்த கோரா திரும்பி குதிரைவண்டியைப் பார்த்து நடந்தான். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்தனர். வாத்தியார் மங்குவுக்கு இரண்டு துப்பாக்கிகள் நேருக்குநேராக சுட்டுக் கொள்வதைப் போல உணர்ந்தான்.

கடைசியில் அவன் அடக்கிவைக்கப்பட்ட சீற்றத்தோடு அந்த படைவீரனைப் பார்த்துக் கொண்டே கீழே இறங்கினான்.

“ நீ பேசாம வாறீயா இல்ல ஏதாவது பிரச்னைப் பண்ணப்போறீயா “ என்று கோரா தன்னுடைய உடைந்த உருதுவில் கேட்டான். “ இந்தப் பன்னியை எனக்குத் தெரியும் “ என்று மங்கு தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். இது அவனே தான் ஒரு வருடத்துக்கு முன்னால் அவனிடம் சண்டை போட்டவனே தான் என்று நிச்சயப்படுத்திக் கொண்டான். அப்போது அவன் குடித்திருந்தான். வாத்தியார் மங்குவை அவன் வைதான். அத்தனை வசவுகளையும் அவமானங்களையும் அமைதியாக ஏற்றுக் கொண்டான். அந்த வேசைமகனின் மண்டையை உடைக்க வேண்டுமென்று விரும்பினான். ஆனால் அந்த வழக்கு நீதிமன்றத்துக்குப் போனால் இந்த எளிய குதிரைவண்டிக்காரனின் கழுத்தைப் பிடிப்பார்கள் என்று அவனுக்குத் தெரியும்.

“ நீங்க எங்கே போகணும்? “ என்று வாத்தியார் மங்கு கேட்டான். இப்பொழுது இந்தியாவில் புதிய அரசியலமைப்பு சட்டம் அமுலுக்கு வந்திருக்கிறது என்பதை அவன் மறக்கவில்லை.

“ ஹீரா மண்டி… நடனமாடும் பெண்கள் கடைவீதிக்கு….” என்று கோரா சொன்னான்.

“ அதுக்கு அஞ்சு ரூபா ஆகும்..” என்று வாத்தியார் மங்கு சொன்னான், அப்போது அவனுடைய மீசை நடுங்கியது.

“ என்னது அஞ்சு ரூபாயா…உனக்கென்ன பைத்தியமா..” என்று கோரா நம்ப முடியாமல் கத்தினான்.

“ இந்தா பாரு.. உனக்கு உண்மையிலேயே போகணுமா… இல்ல என்னோட நேரத்த வீணாக்க விரும்புறீயா…” என்று வாத்தியார் மங்கு அவனுடைய முஷ்டியை இறுக்கிக் கொண்டு கேட்டான்.

கோராவுக்கு அவர்களுக்கிடையில் நடந்த சண்டை ஞாபகத்துக்கு வந்து விட்டதால் நெஞ்சை நிமிர்த்தும் வாத்தியார் மங்குவின் கோபத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவனுடைய திமிர்த்தனத்துக்கு இன்னொரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தான் கோரா. அவன் இரண்டடி முன்னால் போய் அவனுடைய பிரம்பை அந்த இந்தியனின் தொடை மீது வீசினான்.

வாத்தியார் மங்கு கடுமையான வெறுப்புடன் அவனை விட சிறிய உருவமான கோராவைப் பார்த்தான். பிறகு அவனுடைய கையை உயர்த்தி தாடையில் ஓங்கி அடித்தான். தொடர்ந்து இரக்கமில்லாமல் அந்த ஆங்கிலேயனை அடித்துக் கொண்டேயிருந்தான்.

கோராவுக்கு உண்மையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று நம்பமுடியவில்லை. அவன்மீது தொடர்ந்து இறங்கிக் கொண்டிருந்த அடிகளைத் தடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். ஆனால் அவனுக்கு அதிர்ஷ்டமில்லை. அவனுடைய எதிரி கிட்டத்தட்ட பைத்தியக்காரமனநிலையை தொட்டுக் கொண்டிருந்ததை அவனால் பார்க்க முடிந்தது.கையறுநிலையில் அவன் உதவிக்காக சத்தம் போட ஆரம்பித்தான். இது இன்னும் வாத்தியார் மங்குவின் ஆக்ரோஷத்தை அதிகப்படுத்தியது. அடிகள் இன்னும் பலமாக விழுந்தது. அவன் கோபத்துடன் அலறினான், “ ஏப்ரல் 1 ஆம் தேதியிலும் அதே வீறாப்பா.. மகனே! இப்போ எங்களோட ராஜ்யம் நடந்துக்கிட்டிருக்கு ”

கூட்டம் கூடி விட்டது. எங்கிருந்தோ இரண்டு போலீஸ்காரர்கள் வந்தார்கள் மிகுந்த முயற்சி செய்து அந்த துரதிருஷ்டசாலியான ஆங்கிலேயனைக் காப்பாற்றினார்கள். அது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. அங்கே வாத்தியார் மங்குவை இடது பக்கம் ஒரு போலீஸ்காரனும் வலது பக்கம் இன்னொரு போலீஸ்காரனும் பிடித்துக் கொள்ள எதிர்த்து விரிந்த தன் நெஞ்சை முன்னுக்குத் தள்ளியபடி அவன் நின்று கொண்டிருந்தான்.+ அவன் வாயில் நுரை தள்ளியது. ஆனால் கண்களில் ஒரு விநோதஒளி வீசியது. சுற்றிலும் திகைத்துபோய் நின்று கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து வாத்தியார் மங்கு, “ அந்த நாட்கள் போய்விட்டன நண்பர்களே! நாம் எதற்கும் லாயக்கில்லாதவர்களாக இருந்த காலம்.. இப்போது புதிய சட்டம்…ஆம் புதிய அரசியலமைப்பு சட்டம்! புரிந்ததா? “ என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

அந்த ஆங்கிலேயனின் முகம் வீங்கிப் போயிருந்தது. அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவனுக்கு இன்னும் என்ன நடந்தது என்று புரிந்து கொள்ள முடியவில்லை. வாத்தியார் மங்கு உள்ளூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான். எல்லாநேரமும் காவல்நிலையத்துக்குள்ளேயும் “ புதிய சட்டம்…புதிய அரசியலமைப்புச் சட்டம்..” என்று அலறிக் கொண்டிருந்தான்

“ என்ன முட்டாள்த்தனமாகப் பேசிக் கொண்டிருக்கிறாய்? என்ன புதிய அரசியலமைப்புச் சட்டம்.. எல்லாம் அதே பழைய அரசியலமைப்புச் சட்டம்…தான் முட்டாளே..” என்று அவனுக்குச் சொல்லப்பட்டது.

பின்னர் அவர்கள் அவனை சிறையில் அடைத்தனர். 1400463_750454114981778_1170040150_oஅக்டோபர் 20 ஆம் தேதி தாம்பரத்தில்  சாதத் ஹசன் மண்ட்டோவின் சிறுகதைத் தொகுப்பான ‘ சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்’ என்ற நூல்( மொழிபெயர்ப்பு- உதயசங்கர் )  மார்க்சியக்கம்யூனிஸ்ட் கட்சியின்  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர். சீதாராம் யெச்சூரி வெளியிட்டார். இது ஒரு நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் வெளியீடு. விலை ரூ.145/-

Wednesday, 9 October 2013

கடவுளின் மனிதன்

 

சாதத் ஹசன் மண்டோ

ஆங்கிலத்தில்- காலித் ஹசன்

தமிழில்- உதயசங்கர்

Saadat_hasan_manto

சௌத்ரிமௌஜூ அவனுடைய ஹூக்காவைப் புகைத்துக் கொண்டு இலைகள் அடர்ந்த ஒரு அரசமரத்தின் கீழ் ஒரு கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்திருந்தான். உச்சிப்பொழுது வெப்பமாயிருந்தது. ஆனால் வயல்களிலிருந்து வீசிய மெல்லிய தென்றல் ஹூக்காவின் ஊதா நிறப்புகையைக் கலைத்து விசிறியடித்தது.

அவன் அதிகாலையிலிருந்தே அவனுடைய வயலை உழுது கொண்டிருந்தான். ஆனால் இப்போது சோர்ந்து போய்விட்டான். சூரியன் சுட்டெரித்தான். ஆனால் அதெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டில்லை. அவன் கிடைத்த அந்த ஓய்வை அநுபவித்துக் கொண்டிருந்தான்.

அவனுடைய ஒரே மகளான ஜீனா அவனுடைய மதிய உணவான சுட்டரொட்டியும் மோரும் கொண்டு வருவதை எதிர்பார்த்து அவன் அங்கே உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்தான். வீட்டு வேலைகளில் அவளுக்கு உதவி செய்ய யாரும் இல்லையென்றாலும் அவள் எப்போதும் நேரத்திற்கு வந்து விடுவாள். அவன் ஒரு கோபாவேசத்தில் அவளுடைய அம்மாவை இரண்டு வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்து விட்டான்.

ஜீனா அப்பாவை நன்றாகக் கவனித்துக் கொள்கிற கீழ்ப்படிதலுள்ள மகளாக இருந்தாள். அவள் ஒருபோதும் சும்மா இருந்ததில்லை. அவளுடைய வீட்டு வேலைகள் முடிந்து விட்டால் அவள் கை ராட்டினத்தில் நூல் நூற்கும் வேலையைச் செய்வாள். எப்போதாவது தான் அவளுடைய தோழிகளிடம் கதை பேசப்போவாள்.

சௌத்ரிமௌஜூக்கு அதிக நிலம் இல்லை. ஆனால் அவனுடைய எளிய தேவைகளுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. அந்தக் கிராமம் சிறியது. பல மைல் தூரத்தில் ரயில்நிலையம் இருந்தது. அந்த கிராமத்தை ஒரு மண்சாலை தான் இன்னொரு கிராமத்தோடு இணைத்தது. அதில் தான் சௌத்ரிமௌஜூ மாதம் இரண்டு முறை பலசரக்கு வாங்கப் போவான்.

அவன் மகிழ்ச்சியானவனாகவே எப்போதும் இருந்தான். ஆனால் அவனுடைய விவாகரத்திலிருந்து அவனுக்கு வேறு குழந்தைகள் இல்லை என்கிற விஷயம் அவனைத் தொந்திரவு செய்து கொண்டேயிருந்தது. இருந்தாலும் அவன் சிறந்த மதப்பற்றாளனாக இருந்ததால் இதெல்லாம் கடவுளின் சித்தம் என்று தன்னை ஆறுதல்படுத்திக் கொண்டு சமாளித்தான்.

அவனுடைய நம்பிக்கை ஆழமானது. ஆனால் அவனுக்கு மதத்தைப் பற்றி எதுவும் தெரியாது. கடவுள் இருக்கிறார், அவரை வணங்க வேண்டும். முகமது அவருடைய தீர்க்கதரிசி. குரான் முகமதுக்குக் கடவுள் வெளிப்படுத்திய செய்தி. அவ்வளவு தான் அவனுக்குத் தெரியும்.

அவன் ஒருபோதும் நோன்பு இருந்ததில்லை. தொழுகை நடத்தியதில்லை. உண்மையில் அந்த கிராமம் மிகச் சிறியது என்பதால் அதில் ஒரு மசூதி கூட இல்லை. மக்கள் தங்கள் வீடுகளில் தொழுதனர். பொதுவாகவே கடவுளுக்குப் பயந்தவர்களாக இருந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் குரான் ஒரு பிரதி இருந்தது. ஆனால் யாருக்கும் அதை எப்படி வாசிப்பது என்று தெரியாது. அது வீட்டிலுள்ள மேலடுக்கில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும். எப்போதாவது யாராவது உறுதிமொழி எடுக்க வேண்டி வரும்போது பயன்படுத்தப்படும்.

திருமணங்களில் சடங்குகளை நடத்துவதற்காக ஒரு மௌல்வியை அந்தக் கிராமத்துக்கு வரவழைப்பார்கள். இறுதிச் சடங்குப் பிரார்த்தனைகளை கிராமத்துக்காரர்களே செய்து விடுவார்கள். அரபியில் இல்லை. அவர்களுடைய சொந்த மொழியான பஞ்சாபியில் பிரார்த்தனை செய்வார்கள். சௌத்ரிமௌஜூக்கு அந்த மாதிரியான நேரங்களில் கிராக்கி அதிகமாக இருக்கும். அவன் அவனுக்கென்று சுயமாக அஞ்சலி உரையை உருவாக்கிக் கொள்வான்.

உதாரணத்திற்கு,ஒரு வருடத்துக்கு முன்னால் அவனுடைய நண்பன் டினூ தன் மகனை இழந்து விட்டான். சௌத்ரிமௌஜூ கல்லறைக்குள் பிரேதத்தை இறக்கிய பிறகு கிராமத்தார்களிடம் இரங்கல் உரையை நிகழ்த்தினான்.

எப்பேர்ப்பட்ட அழகான, பலசாலியான இளைஞன் அவன்! அவன் எச்சிலைத் துப்பினால் அது இருபது அடி தூரம் தள்ளி விழும். அதேபோல அவனுடைய அடிவயிற்றில் அவ்வளவு சக்தி இருந்தது. அதனால் அவனால் இந்தக் கிராமத்திலிருக்கிற எந்த இளைஞனை விடவும் மிகத் தூரமாக மூத்திரம் பெய்ய முடியும். மல்யுத்தப்போட்டியில் அவன் ஒருபோதும் தோற்றதில்லை. நீங்கள் சட்டை பொத்தானைக் கழட்டுகிற மாதிரி அவன் எதிரியின் பிடியிலிருந்து மிகச் சுலபமாகத் தன்னை விடுவித்துக் கொள்வான்.

டினூ என் நண்பனே! உனக்கான தீர்ப்பு நாள் ஏற்கனவே இங்கே எழுதப்பட்டு விட்டது. நீ அதிலிருந்து தப்பிக்க முடியாது என்று நான் சந்தேகப்படுகிறேன். நீ கட்டாயம் இறந்து விடுவாய் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் இவ்வளவு பெரிய அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டு நீ எப்படி வாழப்போகிறாய்? ஓ….எத்தனை அழகிய வாலிபன் உன்னுடைய மகன்! எனக்கு உண்மையில் தெரியும் தங்க ஆசாரியின் மகள் நெட்டி அவனுடைய காதலைப் பெறுவதற்காகப் பலமுறை வசிய மந்திரத்தை ஏவினாள். ஆனால் அவன் அவளை நிராகரித்து விட்டான். அவளுடைய அழகும் இளமையும் அவனை மயக்கவில்லை. கடவுள் சொர்க்கத்தில் அவனுக்கு ஒரு எழில் அணங்கை வழங்கட்டும். அங்கும் அவன் தங்க ஆசாரியின் மகள் நெட்டியிடம் இருந்ததைப் போலவே அந்த எழில் அணங்கிடம் மயங்காமல் இருக்கட்டும். கடவுள் அவன் ஆத்மாவை ஆசீர்வதிக்கட்டும்.

இந்தச் சுருக்கமான உரையை மிக உணர்ச்சிகரமாக நிகழ்த்துவான். சௌத்ரிமௌஜூ உட்பட எல்லோருக்கும் அழுது விடுவார்கள்.

மௌஜூ அவனுடைய மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்று முடிவு செய்த போது அவன் மௌல்விக்கு ஆளனுப்பவில்லை. அவனுக்கு மூத்தவர்களிடமிருந்து அவன் கேள்விப்பட்டிருந்தான். அதற்குத் தேவையானதெல்லாம் அவன் மூன்று முறை ‘ தலாக்…தலாக்…தலாக்..’ என்று சொல்ல வேண்டியது தான். உண்மையில் அதைத் தான் அவன் செய்தான். மறுநாள் அவன் வருத்தப்பட்டான். அதோடு அவனை நினைத்தே அவன் வெட்கப்பட்டான். கணவன், மனைவிக்குள் வருகிற தினசரிச் சச்சரவுக்கு மேல் பெரிய தீவிரமான எதுவும் அதில் கிடையாது. அது விவாகரத்தில் முடிய வேண்டிய அவசியமும் இல்லை.

அவனுடைய மனைவி பதானை அவன் விரும்பவில்லை என்று சொல்லமுடியாது. அவன் அவளை விரும்பினான். அவள் இளமையாக இல்லையென்றாலும் அவள் உடம்பு கட்டுக்கோப்பாக இருந்தது. அதோடு அவனுடைய மகளுக்குத் தாய் அவள். இதற்கு மேல் என்ன வேண்டும். ஆனால் அவன் அவளைத் திரும்பி அழைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. அப்படியே வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது.

ஜீனா அவளுடைய அம்மா இளமையில் இருந்ததைப் போலவே அழகாக இருந்தாள். சிறு பெண்ணாக இருந்த அவள் இரண்டு வருடங்களில் இளமையான, கவர்ச்சியான, பெண்ணாக, வளர்ந்திருந்தாள். அவன் அடிக்கடி அவளுடைய திருமணத்தைப் பற்றிக் கவலைப்பட்டான். குறிப்பாக அந்த நேரங்களில் அவனுடைய மனைவியைத் தேடுவான்.

அவன் இப்போது அவனுடைய கயிற்றுக் கட்டிலில் சாய்ந்து கொண்டு இன்பமாகப் புகைத்துக் கொண்டிருந்தான். அப்போது

“ கடவுளின் ஆசீர்வாதங்களும், சாந்தியும் உன் மீது இறங்கட்டும்…”

என்ற குரல் கேட்டது.

அவன் திரும்பினான். அங்கே ஒரு வயதான மனிதர் தூய வெள்ளாடை உடுத்தி காற்றில் அலைபாயும் தாடியுடன், தோள்வரை வளர்ந்த நீண்ட தலைமுடியுடன், நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். எங்கேயிருந்து அவர் முளைத்து வந்தார் என்று ஆச்சரியத்துடன் மௌஜூ அவரை வணங்கினான்.

அந்த மனிதர் உயரமாக இருந்தார். அவருடைய முகத்தில் பெரிய கருப்பிந்திய கண்கள் குறிப்பிடத்தகுந்ததாக இருந்தன.அவர் தலையில் ஒரு பெரிய வெள்ளைத் தலைப்பாகையும் அவருடைய ஒரு தோளில் மஞ்சள் துண்டும் அணிந்திருந்தார்.அவருடைய கையில் வெள்ளிப்பிடி போட்ட கைத்தடி வைத்திருந்தார். அவருடைய பூட்ஸ் மென்மையான தோலால் செய்யப்பட்டிருந்தது.

சௌத்ரிமௌஜூ உடனே அவரால் கவரப்பட்டான். இன்னும் சொல்லப்போனால் அவருடைய அழுத்தமான பெரியமனிதத் தோற்றத்தினால் அவனுக்கு வியப்பு விளிம்பிட்ட ஒரு ஆழ்ந்த மரியாதை அவர் மீது தோன்றியது. அவன் கட்டிலிலிருந்து எழுந்து,

“ நீங்கள் எங்கிருந்து எப்போது வந்தீர்கள்?”

என்று கேட்டான்.

அந்த மனிதர் புன்முறுவலோடு,

“ நாங்கள் கடவுளின் மனிதர்கள் சூன்யத்திலிருந்து வருவோம்.. எங்களுக்கு போவதற்கு வீடு கிடையாது. எந்தக் கணத்தில் வருவோம்.. எப்போது போவோம் என்று யாருக்கும் தெரியாது.. அந்தக் கடவுள் அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற எங்களுக்கு வழி காட்டுவார்.. அதேபோல அந்தக் கடவுள் தான் எங்களுடைய பிரயாணத்தை எங்கே நிறுத்தவேண்டும் என்றும் கட்டளையிடுவார்..”

என்று சொன்னார். சௌத்ரிமௌஜூவை இந்த வார்த்தைகள் மிகவும் பாதித்தன. அவன் அந்தப் புனிதரின் கையைப் பிடித்து மிகுந்த மரியாதையுடன் முத்தமிட்டு கண்களில் ஒற்றிக் கொண்டான். பின்பு,

“ என்னுடைய எளிய வீடு உங்களுடையது..”

என்று சொன்னான்.

அந்தப் புனிதர் புன்னகையுடன் கட்டிலில் உட்கார்ந்தார். அவருடைய இரண்டு கைகளாலும் கைத்தடியைப் பிடித்துக் கொண்டு அதில் தலை சாய்த்துக் கொண்டு,

“ உன்னுடைய எந்தக் காரியம் கடவுளின் கண்களுக்குப் பிடித்து அவர் இந்தப் பாவியை உன்னிடம் அனுப்பியிருக்கிறார் என்று யார் சொல்ல முடியும்? “

என்று சொன்னார். உடனே சௌத்ரிமௌஜூ,

“ மௌல்வி சாகிப்.. நீங்கள் கடவுளின் ஆணைப்படியா என்னைத் தேடி வந்தீர்கள்?”

என்று கேட்டான். அந்தப் புனிதர் தலையை உயர்த்தி கோபமான குரலில்,

“ அப்படின்னா உன்னுடைய கட்டளையின் பேரில் இங்கே வந்தேன் என்று நினைக்கிறீயா.. உனக்குக் கீழ்ப்படிவோமா இல்லை நாப்பது வருடங்களாக பணிவுடன் அந்தக் கடவுளைத் தொழுது வந்ததிருக்கிறோம். கடைசியில் அவர் அவருடைய அருளைப் பெற எங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் அவருக்குக் கீழ்ப்படிவோமா?..”

என்று சொன்னார். சௌத்ரிமௌஜூ பயந்து விட்டான். அவனுடைய எளிய கிராமத்துப் பாணியில் அவன் தேம்பிக் கொண்டே,

“ மௌல்வி சாகிப் நாங்கள் படிப்பறிவில்லாத மக்கள் இதைப்பற்றியெல்லாம் எதையும் அறியாதவர்கள்.. எங்களுக்கு எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கூடத் தெரியாது..உங்களைப் போன்ற கடவுளின் மனிதர்கள் கிடையாது.. அதனால் கடவுளின் கண்களில் பாவமன்னிபை நாங்கள் பார்த்ததேயில்லை..”

என்று சொன்னான்.

“ அதற்காகத் தான் நாம் இங்கிருக்கிறோம்..”

என்று அந்தப் புனிதர் பாதிக்கண்களை மூடிக் கொண்டே சொன்னார்.

சௌத்ரிமௌஜூ கீழே தரையில் உட்கார்ந்து கொண்டு விருந்தினரின் கால்களை அமுக்கி விட்டுக் கொண்டிருந்தான். அப்போது ஜீனா அவனுடைய சாப்பாட்டுடன் அங்கு வந்தாள். அவள் அந்த அந்நியரைப் பார்த்தவுடன் அவளுடைய முகத்தை மூடிக் கொண்டாள்.

“ யார் அது சௌத்ரிமௌஜூ? “

“ என்னுடைய மகள்..மௌல்வி சாகிப்..”

மௌல்வி சாகிப் ஓரக்கண்ணால் ஜீனாவைப் பார்த்துக் கொண்டே,

“ எங்களைப் போன்ற பிச்சைக்காரங்க முன்னால ஏன் அவள் முகத்தை மூடணும்னு கேளு..”

என்று சொன்னார்.

“ ஜீனா.. மௌல்வி சாகிப் கடவுளோட விஷேசத் தூதுவர்.. முக்காட்ட எடுத்துரு..”

என்று அவன் சொன்னான். ஜீனா அவளிடம் சொல்லப்பட்டதைச் செய்தாள். மௌல்வி சாகிப் அப்படியே அவளை மேலும் கீழும் அளவெடுத்துக் கொண்டே,

“ உன்னோட மகள் அழகாக இருக்கிறாள்..சௌத்ரிமௌஜூ..”

என்று சொன்னார். ஜீனா வெட்கப்பட்டாள். மௌஜு,

“ அவள் அவளோட அம்மா மாதிரி..”

என்று சொன்னான். ஜீனாவின் இளமை பொங்கும் கன்னியுடலை நோட்டமிட்டுக் கொண்டே,

“ அவளோட அம்மா எங்கே? “

என்று கேட்டார். அதற்கு எப்படிப் பதில் சொல்வதென்று தெரியாமல் சௌத்ரிமௌஜூ தயங்கினான். திரும்பவும் மௌல்வி சாகிப்,

“ அவளோட அம்மா எங்கே? “

என்று கேட்டார். மௌஜூ வேகவேகமாக,

“ அவ இறந்துட்டா..”

என்று சொன்னான். அதைக்கேட்டு திடுக்கிட்ட ஜீனாவைக் கவனமாகப் பார்த்தார். பிறகு அவர்,

“ நீ பொய் சொல்றே..”

என்று முழங்கினார். மௌஜூ அவர் காலில் விழுந்தான். குற்றவுணர்ச்சியுடன்,

“ ஆமாம். நான் உங்க கிட்ட பொய் சொன்னேன்..தயவு செய்ஞ்சு என்ன மன்னிச்சிருங்க.. நான் ஒரு பொய்யன்.. உண்மை என்னன்னா.. நான் அவளை விவாகரத்து பண்ணிட்டேன்..மௌல்வி சாகிப்..”

என்று சொன்னான்.

“ நீ ஒரு பெரிய பாவி.. அந்தப் பெண் செய்த தவறு தான் என்ன? “

“ எனக்குத் தெரியல..மௌல்வி சாகிப்.. அது வந்து உண்மையிலே ஒண்ணுமில்லை..ஆனா கடைசியில அவளை விவாகரத்து செய்யும்படியாயிருச்சி.. உண்மையில நான் ஒரு பாவி.. நான் மறுநாளே என்னோட தப்ப உணர்ந்துட்டேன்.. ஆனால் ரெம்பத் தாமதமாகியிருச்சி..அதுக்குள்ளே அவ அவளோட அப்பாஅம்மாகிட்ட போயிட்டா..”

மௌல்வி சாகிப் தன்னுடைய வெள்ளிக் கைப்பிடி போட்ட கைத்தடியினால் மௌஜூவின் தோள்களைத் தொட்டு,

“ கடவுள் பெரியவர்.. அவர் கருணையும் அன்பும் கொண்டவர்.. அவர் விரும்பினால் எல்லாத் தவறுகளையும் சரி செய்து விடலாம்.. அது தான் அவருடைய கட்டளையாக இருந்தால் அவருடைய இந்த வேலைக்காரன் உன்னை உன்னுடைய மீட்சியை நோக்கி வழி நடத்தவும் உனக்கு மன்னிப்பு வழங்கவும் சக்தி படைத்தவனாகிறான்..”

என்று சொன்னார். முழுமையான பணிவுடனும் நன்றியுடனும் சௌத்ரி மௌஜூ அவருடைய கால்களில் விழுந்து அழுதான். மௌல்வி சாகிப் ஜீனாவைப் பார்த்தார். அவளுடைய கன்னங்களிலும் கண்ணீர் வழிந்தோடியது.

“ இங்கே.. வா..பெண்ணே..” என்று கட்டளையிட்டார் அவர்.

அவருடைய குரலில் அப்படியோரு அதிகாரம் இருந்தது. அவளால் அதற்குக் கீழ்ப்படியாமல் இருக்க முடியவில்லை.அவள் சாப்பாட்டை ஓரமாக வைத்து விட்டு அவரை நோக்கி நடந்தாள். மௌல்வி சாகிப் அவளுடைய கைகளைப் பற்றி இழுத்து,

“ உட்கார்..”

என்று சொன்னார்.

அவள் கீழே தரையில் உட்காரப்போனாள். ஆனால் மௌல்வி சாகிப் அவளை அவர் பக்கமாக இழுத்து,

“ என் பக்கத்தில இங்கே உட்கார்..”

என்று உத்தரவிட்டார். ஜீனா உட்கார்ந்தாள். மௌல்வி சாகிப் அவருடைய கைகளால் அவளுடைய இடுப்பைச் சுற்றி வளைத்து அவளை இறுக்கிப் பிடித்துக் கொண்டே,

“ சரி.. எங்களுக்காக என்ன கொண்டு வந்திருக்கிறாய்..? ”

என்று கேட்டார். ஜீனா விலக நினைத்தாள். ஆனால் மௌல்வி சாகிப்ப்பின் பிடி கிடுக்கிப் பிடியாக இருந்தது.

“ சுட்ட ரொட்டியும் மோரும் கொஞ்சம் கீரையும் கொண்டு வந்திருக்கேன்..”

என்று தாழ்ந்த குரலில் சொன்னாள். மௌல்வி அவளுடைய மெல்லிய இடையை மறுபடியும் ஒரு தடவை பிசைந்தார். பின்பு,

“ அப்படியா..போ.. போய் அதைக் கொண்டு வந்து எங்களுக்குச் சாப்பாடு போடு..”

ஜீனா எழுந்தவுடன் மௌல்வி சாகிப் தன்னுடைய கைத்தடியினால் மௌஜூவின் தோள்களில் மெல்லத் தட்டி,

“ மௌஜூ.. என்னுடைய கைகளைக் கழுவ உதவி செய்..”

மௌஜூ அருகிலிருந்த கிணற்றுக்குச் சென்றான். ஒரு வாளியில் நல்ல தண்ணீரைக் கொண்டு வந்தான். ஒரு உண்மையான சிஷ்யனைப் போல அவன் மௌல்வி சாகிப் அவருடைய கைகளைக் கழுவ உதவினான். ஜீனா உணவை அவருக்கு முன்னால் வைத்தாள்.

மௌல்வி சாகிப் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டார். பின்பு அவர் அவருடைய கைகளைக் கழுவத் தண்ணீர் ஊற்றும்படி ஜீனாவுக்கு ஆணையிட்டார். அவள் கீழ்ப்படிந்தாள். அவருடைய செய்கையில் அப்படி ஒரு அதிகாரம் இருந்தது.

மௌல்வி சாகிப் சத்தமாக ஏப்பமிட்டார். அதை விட சத்தமாக கடவுளுக்கு நன்றி சொன்னார். ஈரக்கைகளால் அவருடைய தாடியைக் கோதி விட்டுக் கொண்டே கட்டிலில் சாய்ந்தார். ஒரு கண்ணால் ஜீனாவையும், இன்னொரு கண்ணால் அவளுடைய அப்பாவையும் கவனித்தார். அவள் சாப்பாட்டுப்பாத்திரங்களை எடுத்துக் கொண்டு போனாள். மௌல்வி சாகிப் மௌஜூவிடம்,

“ சௌத்ரி.. நாம் சற்று ஓய்வெடுக்கப் போகிறோம்..”

என்று சொன்னார்.

சௌத்ரி அவருடைய கால்களையும் பாதங்களையும் கொஞ்சநேரம் அமுக்கி விட்டான். அவர் உறங்கிவிட்டார் என்பதை உறுதிசெய்த பிறகு அங்கிருந்து நகர்ந்து அவனுடைய ஹூக்காவை பற்ற வைத்தான். அவன் சந்தோஷமாக இருந்தான். அவனுடைய நெஞ்சிலிருந்து மிகப்பெரிய பாரத்தை அகற்றியது போல அவன் உணர்ந்தான். அவனுக்குத் தெரிந்த எளிய வார்த்தைகளால் கருணையின் தேவர்களில் ஒருவரை மௌல்வி சாகிப்பின் வடிவில் கடவுள் அவனிடம் அனுப்பி வைத்தற்காக இதயபூர்வமாக நன்றி சொன்னான்.

மௌல்வி சாகிப் ஓய்வெடுப்பதையே சற்று நேரம் அங்கேயே இருந்து பார்த்துக் கொண்டிருந்து விட்டு, அவனுடைய வயலுக்கு வேலை செய்யப் போனான். அவனுடைய பசி கூட அவனுக்குத் தெரியவில்லை. உண்மையில் மௌல்வி சாகிப்புக்கு உணவளிக்கும் கௌரவமே அவனுக்குப் பெரிய விஷயமாக இருந்தது.

மாலையில் அவன் வேலை முடிந்து திரும்பியபோது மௌல்வி சாகிப் அங்கில்லாதது மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. அவன் அவனையே சபித்துக் கொண்டான். அந்த இடத்தை விட்டு போய் அவன் கடவுளின் மனிதரை அவமானப்படுத்தி விட்டான். ஒருவேளை போவதற்கு முன்னால் அவர் அவனைச் சபித்து விட்டும் போயிருக்கலாம். அவன் பயத்தில் நடுங்கினான். கண்ணீர் அவனுடைய கண்களில் குளமாய் கட்டியது.

அவன் கிராமத்தில் மௌல்வி சாகிப்பைத் தேடிப்பார்த்தான். ஆனால் அவரைக் காணவில்லை. மாலை இரவினுள் மூழ்கிக் கொண்டிருந்தது. ஆனால் மௌல்வி சாகிப்பைப் பற்றி ஒரு துப்பும் தெரியவில்லை. அவனுடைய வீட்டை நோக்கி ஏதோ இந்த உலகத்தையே அவனுடைய தோள்களில் சுமப்பதைப் போல அவன் தலையைக் குனிந்து கொ்ண்டே நடந்தான். கிராமத்திலிருந்து இரண்டு இளைஞர்களை அவன் எதிர்கொண்டான். அவர்கள் பயந்து போயிருந்தார்கள். முதலில் அவர்கள் என்ன நடந்ததென்று சொல்லவில்லை. அவன் வற்புறுத்திக் கேட்டபிறகே அவர்களுடைய கதையைச் சொன்னார்கள்.

கொஞ்ச நாளைக்கு முன்னால் அவர்கள் கடுமையான நாட்டுச்சாரயத்தைக் காய்ச்சி வடித்து மண்பானையில் ஊற்றி ஒரு மரத்தின் அடியில் புதைத்து வைத்தார்கள். அன்று மாலை அவர்கள் அந்த இடத்துக்குப் போனார்கள். அவர்களுடைய விலக்கப்பட்ட செல்வத்தைத் தோண்டியெடுத்தார்கள். அதைக் குடிக்கப்போகும் சமயம் ஒரு வயதான மனிதர் ஒரு விசித்திரமான ஓளி முகத்தில் வீச திடீரென அந்த இடத்தில் பிரசன்னமாகி அவர்கள் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டார்.

அவர்கள் செய்யவிருந்த பாவச்செயலுக்காக அவர்களைக் கடுமையாக ஏசினார். கடவுளே மனிதர்கள் தொடவேக்கூடாது என்று விலக்கிவைத்திருந்ததைக் எப்படி அவர்கள் குடிக்க நினைக்கலாம் என்று கேட்டார். அவர்கள் திகிலடைந்துபோய் அந்த இடத்தை விட்டு மண்பானையை அங்கேயே விட்டு விட்டு ஓடிப்போய் விட்டார்கள்.

சௌத்ரி மௌஜூ அவர்களிடம் சொன்னார், அந்த விசித்திரமான ஒளி வீசும் வயதான மனிதர் யார் தெரியுமா அவர் கடவுளின் புனிதர். அவர் அவமானப்படுத்தப் பட்டதால் அநேகமாக அந்த முழுக்கிராமத்தின் மீதும் சாபம் விட்டுப் போயிருக்கலாம்.

கடவுள் நம்மை காப்பாற்றட்டும் என் மக்களே...கடவுள் நம்மை காப்பாற்றட்டும்…..என் மக்களே.. என்று அவன் முணுமுணுத்தவாறே அவனுடைய வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஜீனா வீட்டிலிருந்தாள். ஆனால் அவன் அவளிடம் பேசவில்லை. மௌல்வி சாகிப்பின் சாபத்திலிருந்து தப்பமுடியாது என்று அவன் மனதார நம்பினான்.

ஜீனா மௌல்வி சாகிப்பிற்கும் சேர்த்துக் கூடுதல் உணவு தயாரித்திருந்தாள்.

அவள் “ அப்பா மௌல்வி சாகிப் எங்கே? ” என்று கேட்டாள்.

“ போய்ட்டாரு.. அவர் போய்ட்டாரு.. எப்படி கடவுளின் மனிதரால் நம்மைப் போன்ற பாவிகளோடு சேர்ந்து இருக்க முடியும்? “ என்று வருத்தந்தோய்ந்த குரலில் அவன் சொன்னான்.

ஜீனாவும் வருத்தப்பட்டாள். ஏனென்றால் மௌல்வி சாகிப் அவளுடைய அம்மாவை திரும்பி வரவழைக்க ஒரு வழி கண்டுபிடிப்பதாக வாக்களித்திருந்தார். இப்போதென்றால் அவர் போய் விட்டார் அவளை அவளுடைய அம்மாவுடன் சேர்த்து வைப்பதற்கு. இனி யாரிருக்கிறார்கள்? ஜீனா கீழே மணைப்பலகையில் உட்கார்ந்தாள். உணவு குளிர்ந்து கொண்டிருந்தது.

கதவை நோக்கி நெருங்கி வரும் காலடி ஓசையை அவர்கள் கேட்டார்கள். அப்பாவும் மகளும் துள்ளியெழுந்தார்கள். திடீரென மௌல்வி சாகிப் உள்ளே நுழைந்தார். கிளியாஞ்சட்டி விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் அவர் தடுமாறிக் கொண்டே வருவதைப் பார்த்துவிட்டாள். அவருடைய கையில் ஒரு சிறிய மண்கலயத்தை வைத்திருந்தார்.

மௌஜூ அவர் கட்டிலில் உட்காருவதற்கு உதவி செய்தான். அவனிடம் அந்த மண்கலயத்தைக் கொடுத்துக்கொண்டே மௌல்வி சாகிப்,

” இன்று கடவுள் நம்மை பெருஞ்சோதனைக்கு ஆட்படுத்திவிட்டான். எதிர்பாராதவிதமாக உன் கிராமத்திலிருந்து கொடிய பாவமான சாரயம் குடிக்கவிருந்த இரண்டு இளைஞர்களைச் சந்தித்தேன். நாம் அவர்களை நிந்தித்த போது அவர்கள் ஓடி விட்டார்கள். நாம் மிகுந்த துக்கத்திலிலாழ்ந்து விட்டோம். அவ்வளவு இளம்வயதில் இவ்வளவு கொடிய பாவமா? ஆனால் அவர்களுடைய இளமைதான் அவர்களை இந்தப்பாவத்தைச் செய்யத் தூண்டியது என்று நாம் உணர்ந்தோம். கடவுளின் மேலோக நீதிமன்றத்தில் அவர்களை மன்னித்தருளுமாறு நாம் பிரார்த்தனை செய்தோம். நமக்கு என்ன பதில் கிடைத்ததென்று உனக்குத் தெரியுமா? “ என்று கேட்டார்.

” தெரியாது..” என்று உணர்ச்சிவயப்பட்டு சௌத்ரி மௌஜூ கூறினான்.

“ அந்த பதில் என்னவென்றால் நீ அவர்களுடைய பாவத்தின் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராய் இருக்கிறாயா? அதற்கு நாம் சொன்னோம் சரி எல்லாம்வல்ல இறைவனே. அதன் பிறகு நாம் குரலைக் கேட்டோம்.. இந்த மண்கலயத்திலுள்ள அத்தனை சாராயத்தையும் குடிக்கும்படி ஆணையிடுகிறேன். நாம் அந்தப் பையன்களை மன்னித்தருளுவோம்..”

மௌஜூக்கு மயிர்க்கூச்செரிந்தது. “ பிறகு நீங்கள் அதைக் குடித்தீர்களா?”

மௌல்வியின் நாக்கு இன்னும் குழறியது, “ ஆமாம் நாம் குடித்தோம்.. அந்த இளம்பாவிகளின் ஆத்மாக்களைக் காப்பாற்றுவதற்காக..இந்த உலகத்தில் வணங்கவேண்டிய ஒரே ஆளான கடவுளின் கண்களுக்கு முன்னால் மதிப்பைச் சம்பாதிப்பதற்காக.. இன்னும் கொஞ்சம் மீதமிருக்கிறது அதையும் நாம் தான் குடிக்கவேண்டுமென ஆணையிடப்பட்டிருக்கிறோம்.. இப்பொழுது அதைக் கவனமாகப் பத்திரப்படுத்து.. ஒரு சொட்டுகூட வீணாகிவிடக்கூடாது..பாத்துக்கோ..”

மௌஜூ அந்த மண்கலயத்தை எடுத்தான். அதனுடைய வாயை ஒரு சுத்தமான துணியினால் மூடிக்கட்டினான். பின்னர் அதை அவனுடைய எளிய வீட்டிலுள்ள ஒரு இருட்டறையில் வைத்தான். அவன் திரும்பிய போது மௌல்வி சாகிப் கட்டிலில் கைகால்களைப் பரப்பிக் கொண்டு கிடந்தார். ஜீனா அவருடைய தலையைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தாள்.அவர் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தார், “ யார் மற்றவர்களுக்கு உதவி செய்கிறார்களோ அவர்களே கடவுளின் அன்புக்கு பாத்திரமாவார்கள்.. அவர் இந்தக் கணத்தில் உன்மீது பிரீதியோடு இருக்கிறார்.. நாமும் உன்மீது பிரீதியோடு இருக்கிறோம்..”

பிறகு மௌல்வி சாகிப் அவருக்கு பக்கத்தில் அவளை உட்காரவைத்து அவளுடைய நெற்றியில் ஒரு அழுத்தமான முத்தத்தைப் பதித்தார். அவள் எழுந்து கொள்ள முயற்சி செய்தாள் ஆனால் அவளால் அவரிடமிருந்து விடுவித்துக் கொள்ள முடியவில்லை. மௌல்வி சாகிப் அவளைக் கட்டியணைத்துக் கொண்டு மௌஜூவிடம் சொன்னார், ” சௌத்ரி நான் உன் மகளுடைய உறங்கிக் கொண்டிருக்கும் விதியை எழுப்புகிறேன்..”

மௌஜூ மிகுந்த உணர்ச்சிவசப்பட்டான். அவனால் நன்றியைக் கூட சரியாகச் சொல்ல முடியவில்லை. அவனால் சொல்ல முடிந்ததெல்லாம்,

“ எல்லாம் உங்களுடைய பிரார்த்தனைகளாலும் அன்பினாலும் வந்தது…”

அவ்வளவு தான். மௌல்வி சாகிப் ஜீனாவை அவருடைய நெஞ்சோடு சேர்த்து இறுக்கிக் கொண்டு சொன்னார், “ உண்மையில் கடவுள் தன்னுடைய அனுக்கிரகத்தை உனக்கு அளித்துவிட்டார். ஜீனா நாளை நாம் உனக்கு புனித பிரார்த்தனையைச் சொல்லிக் கொடுப்போம்.. நீ அதை எப்போதும் சொல்லிக் கொண்டிருந்தால் கடவுளின் கண்களுக்கு எப்போதும் நீ ஏற்றவளாக இருப்பாய்..”

மறுநாள் மௌல்வி சாகிப் தாமதமாக எழுந்தார். மௌஜூ ஒருவேளை அவன் அவருக்குத் தேவைப்படலாமோ என்று பயந்து வயலுக்குப் போகவில்லை. கடமையுணர்வோடு அவன் காத்திருந்தான். மௌல்வி கண் விழித்தபோது அவர் தன்னுடைய முகத்தைக் கழுவவும், கைகளைக் கழுவவும் அவன் உதவினான். அவருடைய விருப்பத்திற்கிணங்க அந்த மண்கலயத்தை எடுத்துக் கொண்டு வந்தான்.

மௌல்வி சாகிப் முணுமுணுத்தபடியே ஒரு தொழுகை நடத்தினார். பிறகு மண்கலயத்தின் வாயை மூடியிருந்த துணியை அகற்றி விட்டு மூன்று முறை பானைக்குள் ஊதினார். மூன்று பெரிய கோப்பைகள் நிறைய மதுவைக் குடித்தார். பிறகு இன்னொரு பிரார்த்தனையை முணுமுணுத்தார். வானத்தை அண்ணாந்து பார்த்து முழக்கமிட்டார்.

“ கடவுளே நீ எங்களைச் சோதிக்கும் சோதனையை நாங்கள் விரும்புவதாக நீ நினைத்து விடக்கூடாது..”

பிறகு அவர் மௌஜூவைப் பார்த்து, “ சௌத்ரி, நீ உடனே உன்னுடைய மனைவியின் கிராமத்துக்குப் போய் அவளை அழைத்துக்கொண்டு வரவேண்டும் என்று இப்போதுதான் புனிதகட்டளையை நாம் பெற்றோம்… நாம் எதிர்பார்த்திருந்த சமிக்ஞை கிடைத்துவிட்டது…” என்று சொன்னார்.

மௌஜூவுக்குப் புல்லரித்தது. அவன் குதிரையின் மீது ஏறினான். மறுநாள் அவளை அழைத்து வருவதாக சத்தியம் செய்தான். ஜீனாவிடம் மௌல்வி சந்தோஷமாகவும் வசதியாகவும் இருப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தினான்.

ஜீனாவின் தந்தை போனபிறகு அவள் வீட்டுவேலைகளில் மூழ்கி விட்டாள். மௌல்வி சாகிப் நிதானமாகக் குடித்துக் கொண்டேயிருந்தார். பிறகு அவர் சட்டைப்பையிலிருந்து ஜெபமாலையை எடுத்து அவருடைய விரல்களில் உருட்ட ஆரம்பித்தார். ஜீனா வேலைகளையெல்லாம் முடித்தவுடன் அவர் அவளைச் மேனியலம்பும் சடங்குகளைச் செய்யச் சொன்னார்.

அவள் அப்பாவியாக “ மௌல்விசாகிப், எப்படி அதைச் செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியாது..” என்று சொன்னாள்.

அவசியமான மதச்சடங்குகளைப் பற்றிய அறிவு கூட இல்லாமைக்காக அவளை மென்மையாக மௌல்விசாகிப் கடிந்து கொண்டார். பின்பு அவர் அவளுக்கு மேனியலம்பும் சடங்கை எப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். இந்த சிக்கலான பயிற்சி உடல்களின் நெருக்கம் மூலம் நிகழ்ந்தேறியது.

மேனியலம்பும் சடங்குக்குப் பின்னால் மௌல்விசாகிப் பிரார்த்தனைபாயைக் கேட்டார்.

அந்த வீட்டில் அப்படியொன்று இல்லை. மௌல்விசாகிப் அதிருப்தியடைந்தார். அவர் அவளிடம் ஒரு படுக்கைவிரிப்பைக் கொண்டுவரும்படி சொன்னார். உள்ளறையில் அதைத் தரையில் விரித்து ஜீனாவை உள்ளே வரும்படி ஆணையிட்டார். அதோடு வரும்போது அந்தப்பானையையும், கோப்பையையும் கொண்டு வரச் அறிவுறுத்தினார்.

மௌல்விசாகிப் கோப்பையில் நிறைய ஊற்றி, அதில் பாதியைக் குடித்தார். பிறகு தன் விரல்களில் ஜெபமாலையை உருட்ட ஆரம்பித்தார். ஜீனா அதை மௌனமாகக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

வெகுநேரத்துக்கு மௌல்விசாகிப் ஜெபமாலையை சுறுசுறுப்பாக உருட்டிக்கொண்டிருந்தார். அவருடைய கண்கள் மூடியிருந்தன. பிறகு அவர் கோப்பைக்குள் மூன்றுமுறை ஊதி விட்டு ஜீனாவைக் குடிக்குக்கும்படிச் சொன்னார்.

ஜீனா நடுங்கும்கரங்களால் அதைக் கையில் எடுத்தாள். மௌல்விசாகிப் இடிக்குரலில் சொன்னார்,” நீ இதைக் குடிக்கும்படி நாம் கட்டளையிடுகிறோம். உன்னுடைய எல்லாவேதனைகளும், துன்பங்களும் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.”

ஜீனா அந்தக்கோப்பையை அவளுடைய உதடுகளுக்குக்கருகில் கொண்டு போனாள். ஒரே மூச்சில் அதைக் குடித்துவிட்டாள். மௌல்விசாகிப் புன்னகைத்தார்.

“ நாம் நம்முடைய சிறப்புப்பிரார்த்தனையைத் தொடரப்போகிறோம்…ஆனால் எப்பொழுதெல்லாம் நாம் சுட்டுவிரலை உயர்த்துகிறோமோ அப்பொழுதெல்லாம் பானையிலிருந்து அரைக்கோப்பை ஊற்றிக் குடிக்கவேண்டும்..தெரிந்ததா?”

அவர் அவளை பதில்சொல்ல அநுமதிக்கவில்லை. அவள் ஆழ்ந்த மயக்கத்துக்குள் போய்க்கொண்டிருந்தாள். ஜீனாவின் வாயில் ஒரு மோசமான ருசி. நெஞ்சில் தீ எரிவதைப்போன்ற எரிச்சல். அவள் எழுந்து சென்று வாளிவாளியாய் குளிர்ந்த நீரைக் குடிக்க விரும்பினாள். ஆனால் அதற்கு அவளுக்குத் தைரியமில்லை. திடீரென்று மௌல்விசாகிப்பின் சுட்டுவிரல் உயர்ந்தது. அவள் மனோவசியம் செய்யப்பட்டவளைப் போல ஏற்கனவே மௌல்விசாகிப் சொல்லியமாதிரி அரைக்கோப்பை ஊற்றி ஒரே மடக்கில் குடித்தாள்.

மௌல்விசாகிப் தொடர்ந்து பிரார்த்திக் கொண்டிருந்தார்.அவளால் ஜெபமாலையின் மணிகள் ஒன்றோடொன்று உரசும் சத்தத்ததைக் கேட்க முடிந்தது. அவளுடைய தலை சுற்றியது. அவள் உறக்கம் வருவதைப்போல உணர்ந்தாள். ஒரு முகம் மழிக்கப்பட்ட இளைஞனின் மடியில் இருப்பதாகவும், அவன் அவளிடம் அவளைச் சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்று கொண்டிருப்பதாகவும் சொல்லிக்கொண்டிருப்பதைப் போல அவளுக்கு ஒரு தெளிவில்லாத, கிட்டத்தட்ட தன்னுணர்வில்லாத உணர்வு தோன்றியது.

அவள் உணர்வுக்கு வந்தபோது அவள் உள்ளே தரையில் படுத்திருந்தாள். மங்கலான கண்களால் சுற்றிலும் பார்த்தாள். ஏன் அவள் அங்கே படுத்துக்கிடக்கிறாள்? எப்போதிருந்து? எல்லாமே பனிமூட்டமாக இருந்தது. மறுபடியும் தூங்க விரும்பினாள். ஆனால் அவள் எழுந்துவிட்டாள். மௌல்விசாகிப் எங்கே? அப்புறம் அந்த சொர்க்கம் எங்கே மறைந்து போனது?

அவள் திறந்தவெளி முற்றத்திற்குப் போனாள். கிட்டத்தட்ட சாயங்காலமாகி விட்டதைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். மௌல்விசாகிப் மேனியலம்பும் சடங்கைச் செய்து கொண்டிருந்தார். அவள் வருகிற சத்தம் கேட்டு புன்னகைமுகத்துடன் திரும்பினார் மௌல்விசாகிப். அவள் அறைக்குத் திரும்பி தரையில் அமர்ந்து அவளுடைய அம்மா வீட்டுக்குத் திரும்பி வரப்போவதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். இன்னும் ஒரு இரவு இருக்கிறது.அவளுக்கு ரெம்பப் பசித்தது. ஆனால் அவள் சமையல் செய்ய விரும்பவில்லை. அவளுடைய மனம் முழுவதும் விளங்காத, பதிலில்லாத கேள்விகள் நிறைந்திருந்தன.

திடீரென மௌல்விசாகிப் கதவருகில் தோன்றினார். “ நாம் உன்னுடைய அப்பாவுக்காக விசேசபிரார்த்தனைகள் செய்ய வேண்டும். நாம் இரவு முழுவதும் கபர்ஸ்தானில் இருந்து பிரார்த்தனை செய்துவிட்டு காலையில் திரும்பி வருவோம். உனக்காகவும் நாம் பிரார்த்தனை செய்வோம்..” என்று சொன்னார்.

அவர் மறுநாள் காலையில் தோன்றினார். அவருடைய கண்கள் சிவந்திருந்தன. பேசும்போது லேசாக வாய் குழறியது. அவரால் நிலையாக நிற்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்தார். அவர் வெளிமுற்றத்துக்கு நடந்துபோய் ஜீனாவை உணர்ச்சியுடன் இறுக்கிக் கட்டிப் பிடித்து முத்தமிட்டார். ஜீனா மனைப்பலகையில் உடகார்ந்துகொண்டு கடந்த இருபத்திநாலு மணி நேரத்தில் நடந்த புதிரான, அரைகுறைஞாபகங்களோடு உள்ள நிகழ்வுகளை புரிந்துகொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தாள். அவளுடைய அப்பா திரும்பி வரவேண்டும் என்று விரும்பினாள். இரண்டுவருடங்களாக வீட்டை விட்டு போயிருந்த அம்மாவும் திரும்பி வரவேண்டும் என்று விரும்பினாள். அப்புறம் அங்கே அந்த சொர்க்கம்… அவளை அழைத்துக் கொண்டு போயிருந்தது என்ன வகையான சொர்க்கம்? அப்புறம் மௌல்விசாகிப்…. அவரா..அவளை சொர்க்கத்துக்கு கூட்டிப் போனது…அப்படியிருக்காது.. ஏன்னா ஒரு இளைஞன் அதுவும் தாடியில்லாதவனாக அவள் ஞாபகத்தில் வந்தான்.

மௌல்விசாகிப் அவளைப்பார்த்து, “ ஜீனா உன்னோட அப்பா இன்னும் வரல்ல..” என்று சொன்னார். அவள் ஒன்றும் சொல்லவில்லை.

அவர் திரும்பவும், “ இரவு முழுவதும் உன்னோட அப்பா என்னுடன் பிரார்த்தனையில் இருந்தான்..இப்பொழுது உன்னுடைய அம்மாவுடன் வந்திருக்கவேண்டுமே…”. என்று சொன்னார்.

ஜீனாவால் சொல்லமுடிந்ததெல்லாம் இதுதான்,” எனக்குத் தெரியல.. அவர் வந்துக்கிட்டிருப்பாரு..அம்மாவைக் கூட்டிக்கிட்டு..ஆனா உண்மையில் எனக்கு ஒண்ணும் தெரியாது…”

முன்கதவு திறந்தது. ஜீனா எழுந்தாள். அங்கே அவளுடைய அம்மா. இருவரும் ஒருவர் கைகளில் ஒருவர் விழுந்தனர். இருவருக்கும் கண்ணீர் பெருகியது. மனைவியின் பின்னால் மௌஜூவும் வந்தான். மிகுந்த மரியாதையுடன் மௌல்வி சாகிப்பை வணங்கினான். பின்னர் தன்னுடைய மனைவியிடம், “ பதான் நீ மௌல்விசாகிப்பை வணங்கவில்லையே….” என்று சொன்னான்.

பதான் மகளிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, கண்களைத் துடைத்தாள். பின்னர் மௌல்விசாகிப்பை வணங்கினாள். அதுவரை தன்னுடைய ரத்தச்சிவப்பான கண்களால் பதானையே முறைத்துப்பார்த்துக் கொண்டிருந்த மௌல்விசாகிப், “ நாம் உனக்காக இரவு முழுவதும் பிரார்த்தனையில் இருந்தோம்; இதோ நீ வந்து விட்டாய்.. கடவுள் நம்முடைய பிரார்த்தனைகளைச் செவிமடுத்துவிட்டார்.. இனி எல்லாம் நல்லபடியாய் நடக்கும்..” என்று சொன்னார்.

சௌத்ரிமௌஜூ தரையில் உட்கார்ந்து மௌல்விசாகிப்பின் கால்களை அமுக்கி விட்டுக் கொண்டிருந்தான். தொண்டை தழுதழுக்க, அவன் தன் மனைவியிடம், “ பதான், இங்கே வா… மௌல்விசாகிப்புக்கு உன் நன்றியைத் தெரிவி…. எனக்கு எப்படிச் சொல்லணும்னு தெரியல..” என்று சொன்னான்.

பதான் முன்னால் வந்து,” நாங்கள் ஏழை எளிய கிராமத்து ஆட்கள்…எங்களிடம் செய்வதற்கு எதுவுமில்லை…..புனித கடவுள்மனிதரே!..” என்று சொன்னாள்.

மௌல்விசாகிப் பதானை கூர்மையாகப் பார்த்துக் கொண்டே,” மௌஜூ சௌத்ரி நீ சொன்னது சரிதான்.. உன் மனைவி அழகாக இருக்கிறாள்.. இந்த வயதிலும் அவள் இளமையாகத் தெரிகிறாள்.. அவள் இன்னொரு ஜீனா… அவளை விட மேல்… நாம் எல்லாவற்றையும் சரி செய்வோம்.. பதான், கடவுள் உன்மீது அன்பும் கருணையும் கொள்ள தீர்மானித்துவிட்டார்…..” என்று சொன்னார்.

சௌத்ரி மௌஜூ மௌல்விசாகிப்பின் கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டேயிருந்தான். ஜீனா சமையலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாள்.

சிறிது நேரம் கழித்து மௌல்விசாகிப் எழுந்தார். பதானின் தலையை ஆதூரத்துடன் தட்டிக் கொடுத்துக் கொண்டே மௌஜூவிடம்,” எல்லாம் வல்ல கடவுளின் விதிப்படி எப்போது ஒரு மனிதன் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டபிறகு மீண்டும் அவளை கூட்டிக் கொண்டு வரவேண்டுமானால் அவள் இன்னொரு மனிதனைத் திருமணம் செய்து விவாகரத்து செய்தபிறகே தன்னுடைய முதல் கணவனுடன் சேர முடியும்….” என்று சொன்னார்.

மௌஜு மெல்லிய குரலில், “ நானும் கேள்விப்பட்டிருக்கேன்.. மௌல்விசாகிப்..” என்று சொன்னார்.

மௌல்விசாகிப் அவனை எழுந்து நிற்கச் சொன்னார். அவனுடைய தோளில் அவருடைய கையைப் போட்டுக் கொண்டு, “ நேற்று ராத்திரி நீ செய்த தவறுக்காக உன்னை தண்டிக்காமலிருக்குமாறு எல்லாம் வல்ல கடவுளிடம் மன்றாடினோம்..அசரீரி சொல்லியது என்னவென்றால்,எவ்வளவு நாள் தான் மற்றவர்களுக்காக உன்னுடைய பரிந்துரைகளை நான் ஏற்றுக் கொள்வது? உனக்காக எதையாவது கேள். அதை நாம் வழங்குகிறோம்… நாம் மீண்டும் மன்றாடினோம்.. பிரபஞ்சத்தின் அரசரே..எல்லாநிலங்களின் கடல்களின் இறைவனே, நாம் எதையும் நமக்காகக் கேட்பதில்லை.. நீங்கள் எமக்கு போதுமானதைக் கொடுத்திருக்கிறீர்கள்..மௌஜூ சௌத்ரி அவனுடைய மனைவிமீது அன்பாக இருக்கிறான். அதற்கு அந்தக்குரல், நாம் அவனுடைய அன்பையும் உன்னுடைய விசுவாசத்தையும் சோதிக்கப்போகிறோம்… நீ தான் அவளை ஒருநாள் திருமணம் செய்து மறுநாள் அவளை விவாகரத்து செய்து மௌஜூவிடம் ஒப்படைக்கவேண்டும்..இதைத்தான் நாம் உனக்கு வழங்கமுடியும்.. ஏனெனில் நீ நாப்பது வருடங்களாக என்னை விசுவாசமாக வணங்கிவருகிறாய்…என்றது.” என்று சொன்னார்.

மௌஜூ உணர்ச்சிவசப்பட்டு,” நான் ஏற்றுக் கொள்கிறேன் மௌல்விசாகிப்.. நான் ஏற்றுக்கொள்கிறேன்..” என்று சொன்னான். பிறகு அவன் பதானைப்பார்த்தான். அவனுடைய கண்கள் உள்ளே பொங்கிய மகிழ்ச்சியில் ஒளிர்ந்தது. “ சரியா பதான்..? ” என்று கேட்டவன் அவளுடைய பதிலுக்காகக் காத்திருக்காமல் “ நாங்கள் இருவரும் ஏற்றுக்கொள்கிறோம்..” என்று சொன்னான்.

மௌல்விசாகிப் அவருடைய கண்களை மூடி ஒரு பிரார்த்தனையைப் பாடினார்.பின்பு அவர்களுடைய முகத்தில் ஊதிவிட்டார். அவருடைய கண்களை மேலுலகத்தை நோக்கி உயர்த்தியபடியே, “ எல்லாவானங்களீன் கடவுளே! நீங்கள் வைத்துள்ள இந்த சோதனையில் நாங்கள் தோற்றுவிடாமலிருக்க எங்களுக்கு வலிமையைத் தாரும்..” என்றார்.

பிறகு அவர் மௌஜூவிடம், “ இப்போழுது நாம் போகிறோம்.. ஆனால் நீயும் ஜீனாவும் இன்று இரவு மட்டும் எங்காவது சென்றுவிடவேண்டும் என்று விரும்புகிறோம்.. நாம் பிறகு வருகிறோம்..” என்றார்.

மாலையில் அவர் திரும்பி வரும்போது, ஜீனாவும், மௌஜூவும் கிளம்புவதற்குத் தயாராக இருந்தார்கள். மௌல்விசாகிப் வாய்க்குள்ளேயே ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அவர் அவர்களிடம் பேசவில்லை. அவர்களைப் போகச்சொல்லி சைகை செய்தார். அவர்கள் போய்விட்டார்கள்.

மௌல்விசாகிப் கதவைத் தாழ்ப்பாள் போட்டார். பிறகு பதானிடம்,” இந்த ஒரு இரவு நீ என்னுடைய மனைவி… உள்ளே போ.. படுக்கையைக் கொண்டுவந்து இந்த கட்டிலில் விரித்து வை. நாம் ஒரு சிறு தூக்கம்போட விரும்புகிறோம்…” என்று சொன்னார்.

பதான் உள்ளே சென்று படுக்கையை கொண்டுவந்து கயிற்றுக்கட்டிலில் அழகாக விரித்தாள்.மௌல்விசாகிப் அவளிடம் அவருக்காகக் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு உள்ளே போனார்.

ஒரு அகல்விளக்கின் நிழலான ஒளி அந்தச் சிறிய அறையை அலங்கரித்தது. அந்த மண்பானை மூலையில் இருந்தது. மௌல்விசாகிப் அதில் ஏதாவது மீந்திருக்கிறதா? என்று அதைக் குலுக்கிப்பார்த்தார். அதில் இருந்தது. அவர் அந்தப்பானையை உதடுகளுக்குக் கொண்டுபோய் அவசரமாக சில மிடறுகள் குடித்தார். அவருடைய மஞ்சள்நிற பட்டுத்துணியினால் வாயைத் துடைத்துவிட்டு வெளியே வந்தார்.

பதான் கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். மௌல்விசாகிப்பின் கைகளில் ஒரு கோப்பையை வைத்திருந்தார். அவர் அதில் சில புனிதமந்திரங்களை மூன்றுமுறை ஓதி அதை பதானிடம் கொடுத்து,” இதைக் குடி….” என்று சொன்னார்.

அவள் குடித்த உடனேயே புரையேறிச் சிரமப்பட்டாள். ஆனால் மௌல்விசாகிப் அவளுடைய முதுகில் பலமாகத் தட்டிக் கொடுத்துக்கொண்டே,” உனக்குச் சரியாயிரும்..” என்று சொல்லிவிட்டி படுத்துக்கொண்டார்.

அடுத்தநாள் காலையில் ஜீனாவும், மௌஜூவும் திரும்பிவந்த போது பதான் முற்றத்தில் கிடந்த கட்டிலில் படுத்துறங்கிக் கொண்டாள். மௌல்விசாகிப் அருகில் எங்கும் இல்லை. ஒருவேளை அவர் வயல்கரைகளில் நடைப்பயிற்சிக்குப் போயிருக்கலாம் என்று மௌஜூ நினைத்தான். அவன் மனைவியை எழுப்பினான். அவள் கண்களைத் திறந்ததும் “ சொர்க்கம்…சொர்க்கம்..” என்று பிதற்றினாள். அவள் மௌஜூவைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்தாள்.

அவன்,” மௌல்விசாகிப் எங்கே? “ என்று கேட்டான்.

பதான் இன்னும் தள்ளாட்டத்தில் தான் இருந்தாள். “ மௌல்விசாகிப்பா… எந்த மௌல்விசாகிப்? அவர் எங்கே என்று எனக்குத் தெரியாது…அவர் இங்கே இல்லை…” என்று சொன்னாள்.

“ வேண்டாம் …நான் போய் அவரைத் தேடிப்பார்த்துட்டு வாரேன்..” என்று மௌஜூ கூவினான்.

அவன் கதவருகில் போய்க்கொண்டிருக்கும்போது பதானின் அலறலைக் கேட்டான். அவள் தலையணைக்கடியிலிருந்து ஏதையோ எடுத்தபடியே நடுங்கிக் கொண்டிருந்தாள்.

அவள், “ இது என்னது?..” என்று கேட்டாள்.

மௌஜூ, ‘ முடி மாதிரி தெரியுது..” என்று சொன்னான்.

பதான் அந்தக் கறுப்புக்குவியலைத் தரையில் வீசினான். மௌஜூ அதை எடுத்து சோதித்துப் பார்த்துவிட்டு, “ மனிதமுடி மாதிரி இருக்கு..” என்று சொன்னான்.

” மௌல்விசாகிப்பின் தாடியும் தோள்வரை தொங்கிய தலைமுடியும்…தான் இது .” என்று ஜீனா கூக்குரலிட்டாள். மௌஜூ குழப்பமடைந்தான்.

“ அப்படின்னா மௌல்விசாகிப்பை எங்கே? “ என்று அவன் கேட்டான். பிறகு அவனுடைய எளிய எதையும் நம்பும் மனசில் உடனே ஒரு பதில் தோன்றியது.

“ ஜீனா…பதான்… உங்களுக்குப் புரியலையா.. அவர் கடவுளின் மனிதரில்லையா? அவர் அற்புதங்கள் செய்வார்... நம்முடைய இதயங்கள் என்ன விரும்பியதோ அதைக் கொடுத்துவிட்டு அவரை நாம் ஞாபகப்படுத்திக்கொள்ள நமக்கு இதை விட்டு விட்டுப் போயிருக்கிறார்…” என்று சொன்னான்.

அவன் அந்த பொய்த்தாடியையும் தலைமுடியையும் முத்தமிட்டான். பக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொண்டான். பின்னர் அவற்றை ஜீனாவிடம் கொடுத்தான்.

“ போ… போய் இவற்றை சுத்தமான துணியில் சுற்றி அந்தப் பெரிய மர அலமாரியின் மேல் வை… கடவுளின் அருள் நமது வீட்டை விட்டு அகலாதிருக்கட்டும்..” என்று சொன்னான். ஜீனா உள்ளே போனாள். மௌஜூ பதானின் அருகில் உட்கார்ந்து அவளிடம்,” நான் பிரார்த்தனை செய்வது எப்படி என்று கற்றுக் கொள்ளப்போகிறேன்… ஒவ்வொரு நாளும் என்னுடைய பிரார்த்தனைகளில் அந்தச் சாமியாரை ஞாபகப்படுத்துவேன்….”

பதான் மௌனமாக இருந்தாள்.