Saturday 17 May 2014

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்- புத்தகமதிப்புரை

 

கமலாலயன்

1497597_437038946422644_650455706_n

இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் விளைவுகள், மனிதகுலம் தன் வரலாறு நெடுக கடந்து வந்திருக்கிற இருண்ட நரகத்தின் கூறுகள், எத்தனையோ லட்சக்கணக்கான, இந்துக்கள்- முஸ்லீம்களான சாதாரண மனிதர்கள் தாம் அந்த நரக வாதையை அநுபவித்தவர்கள். மதவெறியர்கள் மூட்டிய தீ நாக்குகளுக்கு இரையாகி மடிந்த லட்சோப லட்சம் மக்களின் சாம்பற்குவியல்கள் இரு நாடுகளிலும் இன்னமும் நிறைந்து தான் கிடக்கின்றன. பீனிக்ஸ் பறவைகளைப் போல மகத்தான கலைப்படைப்பாளிகள் இத்தகைய துயரங்களின் போதுதான் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். தங்களின் உயிரை விலையாகக் கொடுத்தேனும் அத்துயரங்களுக்குக் கலை வடிவம் தந்து விடுகிறார்கள். என்றோ, எங்கேயோ நடந்து முடிந்து போன நிகழ்வுகளே ஆயினும் அத்துயரப்பதிவுகள் காலத்தை வென்று உயிர் வாழ்கின்றன. மனச்சாட்சி உள்ள எந்த ஒரு மனிதனையும் இவை உலுக்கி விடுகின்றன. எதிர்காலச் சந்ததியினருக்கு இவை எச்சரிக்கை விளக்குகளாகி நிலை பேறடைகின்றன.

இந்தியத்துணைக்கண்டம் சந்தித்துக் கடந்து விட்ட ஆனால் சமீப காலங்களில் மீளவும் உயிர் பெற்று எழுந்து கோர நடனமாடுகிற அந்தத் துயரமும், குரூரமும் மிக்க காலத்தில் சோகந்தோய்ந்த குரல்கள் சாதத் ஹசன் மண்ட்டோவினுடையது. உருது மொழியிலக்கியத்தின் உன்னதமான படைப்பாளியான இவர் 1912, மே 11 ஆம் தேதி பிறந்தவர். அவரது நூறாவது பிறந்த ஆண்டான 2012- இல் தமிழில் அவருடைய படைப்புகள் மொழியாக்கம் செய்யப்பெற்று வந்தன. நண்பர் ராமாநுஜம் மண்ட்டோவின் மிகச்சிறந்த கதைகள் சொல்லோவியங்கள் நனவோடைப் படைப்புகளைத் தமிழாக்கி வழங்கியதன் மூலம் ஒரு மாபெரும் படைப்பாளியின் மறுவாசிப்பை நமக்குச் சாத்தியமாக்கியவர். அவரைத்தொடர்ந்து இப்போது கரிசல் காட்டின் கதை சொல்லியான உதயசங்கர், மண்ட்டோவின் 13 சிறந்த சிறுகதைகளை மொழியாக்கம் செய்து நமக்குத் தந்திருக்கிறார்.

உதயசங்கர், 1980-களிலிருந்து இன்று வரை உயித்துடிப்புடன் இயங்கி வரும் படைப்பாளி. ஏழு சிறுகதைத் தொகுதிகள், ஒரு குறுநாவல் தொகுதி, இந்து கவிதைத் தொகுதிகள், மலையாளத்திலிருந்து தமிழுக்கு ஒன்பது மொழியாக்க நூல்கள்,இரண்டு கட்டுரை நூல்கள், ஒரு குழந்தைப் பாடல் நூல்-ஆக 25 நூல்களின் ஆசிரியர். மானுட நதியின் கட்டற்ற பிரவாகத்தினூடே பயணித்தவாறே அதன் போக்கை முற்போக்கான திசை வழியில் கொண்டு செல்லுவதற்குத் தன்னாலியன்ற பங்களிப்பை செய்து வருபவர். மண்ட்டோவைப் பற்றி உதயசங்கர் எழுதிய உணர்ச்சிமயமான கட்டுரை ஒன்றை, இச்சிறுகதை மொழிபெயர்ப்பு நூலின் அறிமுகக் கட்டுரையாக இணைந்திருப்பது மிகமிகப் பொருத்தமான அமைவு.

நுட்பமான படைப்பு மனநிலையும், சக மனிதர்களின் மீது எல்லையற்ற நேசமும் கொண்ட எந்த ஒரு கலைஞனும் மண்ட்டோவைத் தனது நெருங்கிய உறவாக உணர்ந்து சொந்தம் கொண்டாடாமல் இருக்கவே முடியாது. உதயசங்கரும் ‘மண்ட்டோ மாமா’ வை உரிமையுடன் சொந்தம் கொண்டாடியிருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை.

பிரிவினையின், மதவெறியின் கொடூரங்கள் ஒருவர் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், மண்ட்டோவின் இந்தக் கதைகளை அவர் அவசியம் படித்தே ஆகவேண்டும். முதல் கதையான ‘டிட்வாலின் நாய்’ ஒரு நையாண்டியான தொனியில் எழுதப்பட்டிருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்புறத்து இராணுவ நிலைகளில், அவரவர் முகாம்களில் இருந்தவாறே ‘எதிரி’ நாட்டின் மீது ‘சும்மா’ சுட்டுக் கொண்டிருக்கிறார்கள் இருநாட்டு வீரர்களும். யார் வெற்றி பெறுவார்கள் எனத் தெரியாத ஒரு பைத்தியக்காரத்தனமான போர் அது. இரு படைநிலைகளுக்கும் நடுவே, தற்செயலாகத் தெரியாத்தனமாக வந்து மாட்டிக் கொள்கிறது ஒரு நாய். இந்திய-பாகிஸ்தான் வீரர்கள் மாறிமாறி இந்த விரட்டியடித்து நடத்தும் ‘துப்பாக்கிச் சூடு’ விளையாட்டில் ‘தியாகியைப் போல் செத்துப் போகிறது அது.

நாய்தான் என்றில்லை; இருஎஆட்டு இராணுவங்களின் தாக்குதல்களுக்கு நடுவே மனிதர்களும் ‘நாய்களைப்’ போல் செத்துப் போகிறார்கள். என்பதையே இக்கதை குறியீட்டுத் தனமையில் வெளிப்படுத்துவதாகவும் வாசிக்கவும். இதன் இன்னொரு பரிமாணம் யுத்தகளப் பயங்கரங்கட்கு நடுவிலும் என்றும் போல் உயிர்ப்புடன் திகழும் இயற்கையின் தரிசனப்பதிவுகள்; “ சீதோஷ்ணநிலையில் ரம்மியமும் காட்டு மலர்களின் வாசனையும் நிரம்பிய இயற்கை தன் வழியே போய்க்கொண்டிருக்கிற போது திடீரென்று வெடிக்கிற குண்டுகள் எல்லாவற்றையும் சீர்குலைத்துச் சிதறடித்து விடுகின்றன. பஞ்சாபி கிராமியப் பாடலைப் பாடுகிற இராணுவ வீரனின் துயரக்குரல் ஒரு புறம். அப்பாடலில் ஓர் ஏழைக்காதலி தனது காதலனிடம் எருமையை விற்று விட்டாவது நடசத்திரங்கள் பதித்த ஒரு ஜோடி செருப்பை வாங்கி வர வேண்டுமென்று மன்றாடுகிறாள். இவ்வாறான அத்தனை உயிர்க்குரல்களையும், துப்பாக்கிக்குண்டுகளின் முழக்கம் ஈவிரக்கமின்றிச் சாகடித்து விடுகிறது.

சாலையோரமாக.. புதிதாய்ப் பிறந்த ஒரு குழந்தை நனைந்த லினன் துணியால் சுற்றப்பட்டுக் கிடப்பதை போலீசார் லாகூரில் கண்டெடுக்கிறார்கள். குளிரில் அது விறைத்தே செத்திருக்க வேண்டும். ஆனால் அது உயிருடன் இருந்தது; மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டது. அந்தக்குழந்தை யார்? பரஸ்பரம் தமது நிறைவின்மையை மற்றவருடன் பகிர்ந்து கொண்டு முழுமையடைந்து ஏதோ காரணத்தினால் பிரிந்து போன இரு ஆத்மாக்களின் விளைபொருளா அது?

‘ நான் ஓர் ஆண்; இன்று நீ என் வாழ்வில் முழுமையைக் கொண்டு வந்தாய். நாளை வேறொரு பெண். இன்று நீ நிரப்பிய வெறுமை மறுபடியும் தோன்றும். அப்போது அங்கே அதை நிரப்ப மற்றவர்கள் இருப்பார்கள்..” இப்படியான குரூரமான வார்த்தைகள் உயிருடன் கல்லால் அடிப்பதைப் போல அந்தப் பேதைப் பெண்ணைத் தாக்குகின்றன. அவள் மன்றாடுகிறாள்: “ இப்படியான குரூரமான வார்த்தைகள் உயிருடன் கல்லால் அடிப்பதைப் போல அந்தப் பேதைப் பெண்ணைத் தாக்குகின்றன. அவள் மன்றாடுகிறாள்: “ நடந்தது ஒரு விபத்து. ஆனால் அவன் அதிலிருந்து முழுதாக எந்தச் சேதாரமுமில்லாமல் எழுந்து நடந்து போய்விட்டான். ஆனால் என் காதில் ஒரு குரல் கிசுகிசுக்கிறது. ஒரு கண்ணீர்த்துளி என்னுடைய சிப்பிக்குள் நழுவி விழுந்து ஒரு முத்தை உருவாக்கியது. நான் காத்துக் கொண்டிருக்கும் ஒரு மடி. என்னுடைய கைகள் அதை ஏந்திக் கொள்வதற்காக நீள்கின்றன. இல்லை.. அதை என்னிடமிருந்து பறிக்காதீர்கள். என்னிடம் இருந்து அதை எடுத்துச் செல்லாதீர்கள்..” இப்படியெல்லாம் கடவுளின் பெயரால் அவள் எவ்வளவோ கெஞ்சி, அரற்றிய போதிலும், அவளிடமிருந்து பறிக்கப்பட்டு விட்ட உன்னதமான கனிதான் அந்தக் குழந்தையா?

தினசரி செய்தித்தாள்களில் நாம் படித்து விட்டு கொஞ்ச நேரத்தில் மறந்து போகும், சாலையோரக்குப்பைத் தொட்டிகளில் கிடக்கும் குழந்தைகளுள் ஒன்றாகக்கூட இது இருக்கலாம். மண்ட்டோவின் கலைத்தூரிகை இந்த அவலத்தை எத்தனை உயிர்ப்புடன் சொல்லோவியமாய் தீட்டியிருக்கிறது என்பதை இக்கதையைப் படித்தால் மட்டுமே உணரமுடியும்.

மதவெறியின் போதையில் நிலை மறந்துபோன மனிதர்கள், தமது எதிரி மதத்தைச் சேர்ந்த குடும்பத்தினரைக் கொன்று குவிக்கிறார்கள். பெண்களைச் சீரழிக்கிறார்கள். அந்த வகையில் ஐஷர்சிங்கின் கும்பலில் மாட்டிக் கொண்ட ஒரு நிராதரவான குடும்பத்தினர் ஏழுபேரில் ஆறு பேரை அவனுடைய கிர்பான் கத்தி கொன்று விடுகிறது. ஏழாவது நபர் ஓர் அழகான இளம்பெண். அவளை ஐஷர்சிங் கொல்லவில்லை. அவளைத் தூக்கிக் கொண்டு நகருக்கு வெளியே ஓடுகிற ஐஷர்சிங் அவளிடம் தனது துருப்புச்சீட்டை இறக்க முற்படுகிறான். அப்போதுதான் அந்த அதிர்ச்சிகரமான உண்மை அவனுக்குத் தெரிய வருகிறது. பனிக்கட்டியை விட குளிர்ந்து போய்.. என்ற இக்கதையின் இரண்டே கதாபாத்திரங்களும் ஒரு பிணமும் நமது இரத்தத்தை உறைய வைத்து விடுகிற மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

புதிய அரசியலமைப்புச் சட்டம் ஒரு கட்டுரையின் தலைப்பைப் போலமைந்த இக்கதை விடுதலைக்கு முன்பு-பின்பு என இரு சமயங்களிலும் மக்களின் எதிர்பார்ப்புகளையும், ஏமாற்றங்களையும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக முன் வைக்கிறது: “ என்ன முட்டாள்தனமாகப் பேசிக் கொண்டிருக்கிறாய்? என்ன புதிய அரசியலமைப்புச் சட்டம்? எல்லாம் அதே பழைய அரசியலமைப்புச் சட்டம் தான் முட்டாளே!..” என்று குதிரை வண்டிக்காரன் மங்குவைப் பார்த்துச் சொல்லப்படுகிற இந்த வார்த்தைகள், விடுதலையடைந்த இந்தியாவின் சாதாரண குடிமக்கள் எல்லோருக்குமே ஏதேனும் ஒரு வகையில் பொருந்துபவையாகத் தான் இருக்கின்றன.

காட்டுக்கள்ளி கதையில் வருகிற சர்தார், நவாப், ஹைபத்கான், மூவரும் ஒரு முக்கோணத்தின் மூன்று முனைகள். ஹைபத்கானின் காதல், நவாப் என்கிற விலைமகளின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கிறது. ஆனால் ஹைபத்கானின் மனைவியான சகீனா என்ற பெண்ணின் வருகை, நவாப் வாழ்வின் இறுதி அத்தியாயத்தை மிகக் குரூரமான எழுத்துகளில் எழுதி முடித்தே விடுகிறது. உன்மத்தம் நிறைந்த காதலின் மறுபக்கம், உயிரையும் பறிக்கிற வெறுப்பாகவும் வினைபுரிவதை காட்டுக்கள்ளி சொல்லுகிறது. சர்தார், நவாப், போன்ற காட்டுக்கள்ளிகளைப் பாதுகாப்பதற்கு யாரிருக்கிறார்கள் இங்கே? மனப்பரப்பெங்கும் துயரத்தை நிரப்பி விடுகிற கதை இது.

சிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண் கதை கிழக்கு-மேற்கு பஞ்சாப் பகுதிகளில் இந்து-முஸ்லீம் கலவரங்களின் போது, கலவரக்காரர்களிடமிருந்து தப்புவதற்காக காரில் விரைவாக வந்து விபத்திற்குள்ளாகும் பிரபல பெண் ஓவியர் மிஸ்.எம்-மின் கதை. கலைக்கல்லூரி ஒன்றின் முதல்வரான அந்த முதிய வயதுப் பெண் ஆண்களை வெறுத்து வந்தவர். ஆனால் மழை பெய்து கொண்டிருந்த அந்த இரவில் கார் விபத்திலிருந்து தன்னை மீட்டுக் கொண்டு வந்த கதைசொல்லியின் வீட்டு வரவேற்பறையில் தான் முதன்முதலாகத் தன்னை ஒரு பெண்ணாக உணர்ந்து, அன்று புதிதாய்ப் பிறக்கிறாள். ஆனால் இருளில் முகம் தெரியாதபோது மோகம் பொங்க அவளை இறுக்கி அணைக்க முயலுகிற கதைசொல்லி திரு.எஸ்- நீ விருப்பப்பட்டா போகலாம் என்று சற்றுமுன் தான் தன்னைப் பெண்ணாக உணர்ந்த மிஸ்.எம்மைப் போகச் சொல்லுகிறான். அந்த மழையிரவில் ஏதோ சொல்ல முயன்று முடியாமல் மௌனமாக வெளியே போய்விடுகிற அவள் அன்றிரவே ஒரு கார் விபத்தில் இறந்து போய்விட்டதாக திரு.எஸ்ஸிடம் அவனுடைய நண்பன் சொல்லுகிறான். நாம் அறிந்தோ அறியாமலோ அன்றாடம் கொன்று குவிக்கிற பல மனிதர்களுள் ஒருத்தியைப் பற்றிய கதை இது. பல சமயங்களில் கொல்லப்படுவது வெறும் உடல்கள் மட்டுமேயல்ல என்ற உண்மை நெஞ்சில் அறைகிறது நம்மை.

கடவுளின் மனிதன் கதையின் ஜீனாவையும் அவருடைய அம்மா பதானையும் எப்படி மறக்க முடியும்? கடவுளின் பெயரால் கடவுளின் பிரதிநிதிகள் என்று தம்மை முன் நிறுத்திக் கொண்டு ஏமாற்றித் திரிகிற கயவர்களின் பிரதிநிதியாக மௌல்விசாகிப் வருகிறான். ஜீனா, பதான், இரண்டு பேரையும் வஞ்சித்து அநுபவிப்பதற்கு அந்தப் போலி மௌல்வியின் தாடி, மீசை, அலங்கார ஆன்மீகச் சொல்லாடல்கள் இவற்றை விடவும் அவனுக்கு முதன்மையாக உதவுவது பதானின் கணவனும் ஜீனாவின் தந்தையுமான சௌத்ரி மௌஜீவின் மதநம்பிக்கையும் இறையச்சமும் தான் என்பது நம் முகத்திலறைகிறது.

கடவுளின் பணியைச் செய்து கொண்டு கதையில் வருகிற பனியா வகுப்பு வியாபாரி, நமது சமகாலத்து லாபவேட்டைக் கொள்ளைக்காரர்களின் வகை மாதிரியாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறான். விண்ணை முட்டுகிற வசிப்பிடக்கட்டடங்களின் அடித்தளத்திற்குள் அனுதினமும் புதையுண்டு போய்க் கொண்டிருக்கும் மனிதர்களின் அவலக்குரல்களை, நேரடியாக அல்லாமல் அந்த வியாபாரிகள் உணர்ச்சி ஏதுமற்ற வறட்டு விவரிப்பின் மூலமே நையாண்டி செய்து பதிவு செய்திருக்கிறார் மண்ட்டோ.

சிராஜ் ஒரு புதிரான பாலியல் தொழிலாளி. பத்து ஆண்டுகட்கு முன் லாகூரின் ஓட்டல் ஒன்றில் தன்னை ஏமாற்றிவிட்டு ஓடிப்போன அதே ஆளைக் கண்டுபிடித்து அதே ஒட்டல் அறையில் தன் பழைய கணக்கைத் தீர்த்து விடுகிறாள். எல்லோருக்கும் விடுதலை கதையில் பாணரான கபீர் விடுதலையடைந்த பூமியில் தான் சந்திக்கிற வெவ்வேறு மனிதக்குழுக்களிடமிருந்து எழுப்புகிற பல கேள்விகளாலும் பதில்களாலும் தனது எதிர்வினைகளாலும் நெய்யப்பட்ட ஒரு அற்புத மாலையைக் கதையாகத் தொடுத்திருக்கிறார் மண்ட்டோ. துக்கத்தின் அடையாளமாகக் கருப்புப் பட்டைகளை அணிந்திருக்கிற மனிதர்களிடமும் கபீர் ஓர் அர்த்தமுள்ள கேள்வியை எழுப்புகிறார். அவர்கள் கபீரை, ‘ நீ ஒரு கம்யூனிஸ்ட். ஐந்தாம்படை பத்திரிகையாளர் ‘ என்று பலவாறாக ஏசுகிறார்கள். அன்று முதல் முறையாக கபீர் சிரிக்கிறார். ஆனால் நண்பர்களே நான் கருப்போ, சிவப்போ, பச்சையோ, எந்தப் பட்டையும் அணியவில்லை..என்ற கபீரின் வாக்குமூலத்தை ஒரு வகையில் மண்ட்டோவினுடையதாகவும் வாசிக்க முடியும்.

இத்தொகுப்பின் எல்லாக்கதைகளிலும் நாம் சந்திக்கிற மனிதர்கள், நல்லவர்களா? கெட்டவர்களா? மென்மையும் அன்பும் கொண்டவர்களா? குரூரமும் வெறுப்புமே நிறைந்தவர்களா? உண்மையில் மனிதர்கள் இருவகையையும் சேர்ந்தவர்களுமாகத்தான் இருக்கிறார்கள். அப்படித்தான் அவர்கள் இருந்திருக்க முடியும். மண்ட்டோ யார் பக்கம்? இறுதியாகப்பார்த்தால் அவர் எளிய நிராதரவான மனிதர்களின் ஆன்மாக்களின் பாதுகாவலராக இருப்பதை நாம் உணர முடியும்.

சாதாரண அடித்தட்டு மக்கள் விளிம்பு நிலையினர், பாலியல் தொழிலாளிகள் போன்ற சாமானியர்களின் வாழ்க்கை அவலங்களை வாசக மனங்கள் அதிரும்வகையில் சொன்னவர் மண்ட்டோ. அனைத்து அதிகாரநிறுவனங்கட்கும், மேலாதிக்கக்கருத்துகளுக்கும் எதிரான போர்க்குரல் மண்ட்டோவினுடையது. ஆபாசமான கதைகளை எழுதியவர் என்று பலமுறை நீதிமன்றங்களால் அலைக்கழிக்கப்பட்ட, குற்றம் சுமத்தப்பட்ட எழுத்தாளர் அவர்.

மண்ட்டோவின் காலம் இந்திய வரலாற்றில் கொந்தளிப்பு நிறைந்த சமன் குலைந்த பிரிவினையின் வெறி மிகுந்த காலம். இயல்பாகவே தன் மனசாட்சியின் குரலைப்பின்பற்றி படைப்பு நேர்மை மிக்க கதைகளை எழுதியவர் மண்ட்டோ. உதயசங்கரின் கலையுள்ளம் மண்ட்டோவின் மனவுலகை முழுமையாகவும் ஆழமாகவும் உள்வாங்கி இக்கதைகளின் மொழியாக்கத்தில் முனைப்புடன் இயங்கியிருப்பதின் வெளிப்படை இந்தத் தொகுப்பு.

” சாதத் ஹசன் என்ற மனிதனை அவனுடைய சிந்தனைகளை செயல்களை அவனுடைய குடும்பத்தார், நண்பர்கள் யாரும் புரிந்து கொள்ளவில்லை. அவனை ஒரு பைத்தியக்காரனாகவே நினைத்தார்கள். ஆனால் மண்ட்டோ என்ற படைப்பாளியை தன் ஊனை உருக்கி உயிரைச்செலுத்தி அவன் படைத்த மகத்தான படைப்புகளை உலகம் இன்னமும் கொண்டாடுகிறது.” என்கிறார் உதயசங்கர். ஆம் உண்மை தான். முன்பு ராமாநுஜமும் இப்போது உதயசங்கரும் மொழிபெயர்த்துத் தந்திருக்கும் படைப்புகளின் வழியாக நாம் மண்ட்டோ என்ற மகத்தான படைப்பாளியின் மன உலகிற்குள் பிரவேசித்து உலாவி வருவதற்கு முடிந்திருக்கிறது.

“ நாமே அறியாத நம் மனதின் அத்த்னை மூலை முடுக்குகளிலும் பயணித்து அங்கே கொட்டிக் கிடக்கும் சாக்கடையையும், சகதியையும் அள்ளியெடுத்து வெளியே எறிந்து சுத்தப்படுத்துகிறான் கலைஞன். அங்கே கலையின் பொன்னொளியால் அன்பெனும் சுடரை ஏற்றுகிறான்…” என்று பொருத்தமான, தேர்ந்த சொற்களால் உதயசங்கர் மண்ட்டோவிற்குப் புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

இத்தொகுப்புக் கதைகளில் ஒரு எழுத்தைக்கூட மனம் நெகிழாமல் பதறாமல் ஆத்திரப்படாமல், வெறுக்காமல், நேசிக்காமல், சாதாரணமாக உங்களால் கடந்து போய் விட முடியாது. அந்த அளவிற்கு உயிர்ச்சத்து நிரம்பிய வலிமைமிக்க வாழ்க்கையின் உக்கிரங்களாகிய எரிமலை வெடித்துச் சிதறிப் பிரவாகமெடுத்ததைப் போன்ற கதைகள் இவை!

நன்றி- உங்கள் நூலகம் மார்ச் 2014

No comments:

Post a Comment