Tuesday, 19 February 2013

சுயசாதி நிராகரிப்புப் போராட்டம்

images (5) உதயசங்கர்

80 களில் இடதுசாரி அமைப்புகளோடு தொடர்பு ஏற்பட்ட போது எங்களுடைய ஏராளமான சந்தேகங்களுக்கு தொடர்ந்து நடந்த தத்துவார்த்த

வகுப்புகள் விளக்கமளித்தன. அது மட்டுமல்லாமல் தோழர்களுடனான தொடர்ந்த உரையாடல்கள், விவாதங்களினால், சமூகம், மனிதகுல

வரலாறு, மதம், சாதிகளின் தோற்றம் வளர்ச்சி, எல்லாவற்றைக் குறித்தும் எங்களுக்குத் தெளிவு கிடைத்தது. வாசிப்பு வெறியென எங்களைக்

கவ்வியிருந்த காலம் அது. புரிந்ததோ புரியவில்லையோ வாசித்தோம். வாசிப்பில் கிடைத்த அரைகுறை அறிவோடு தோழர்களோடு விவாதம்

செய்தோம். அப்போது தோழர்கள் எந்த சாதியிலிருந்து வந்திருக்கிறார்கள் என்று தெரியாது. அதைப் பற்றிக் கவலைப்பட்டதுமில்லை.

எனக்கு எப்போதுமே சாதிஅபிமானமோ, சாதி உணர்வோ இருந்ததில்லை. கீழ் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்பதால் எங்கள் வீட்டில்

தேவைகளுக்காக எல்லோரும் தீப்பெட்டி கட்டை அடுக்கியோ, தீப்பெட்டி ஒட்டியோ உழைத்துக் கொண்டிருந்தோம். அதனால் பெரிதாய் ஒன்றும்

சாதி பற்றிய பெருமிதம் இல்லை. அப்பா மில் தொழிலாளி. அவருக்கு எல்லாசாதியிலும் ஆப்த நண்பர்கள் இருந்தனர். என் அப்பாவின் பெயரை

யார் கேட்டாலும் சரி எங்கு எழுதினாலும் சரி பின்னால் சாதிவாலைச் சேர்த்துச் சொன்னதுமில்லை, எழுதியதுமில்லை. யாராவது வற்புறுத்திக்

கேட்டால் மட்டுமே சொல்வதுண்டு. ஆனால் சாதி எப்படி சமூகத்தில் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதை உணர வைக்கும் சம்பவங்கள்

நடந்தன. 1977-ல் பள்ளியிறுதி வகுப்பு முடிந்து கல்லூரிக்கு புகுமுகவகுப்புக்குச் செல்லும் போது டவுசர் அணிந்து கொண்டு தான் போனேன்.

என்னை மாதிரி இன்னும் சிலர் வந்திருந்தார்கள். மற்ற எல்லோரும் பேண்ட் அணிந்திருக்க நாங்கள் வித்தியாசமாக உணர்ந்தோம். கல்லூரி

ஆசிரியர்கள் பேண்ட் போட்டுத் தான் கல்லூரிக்கு வர வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். உடனே பேண்டுக்கு எங்கே போவது? அப்பாவுக்கு

பத்தாம் தேதி சம்பளம் வந்தால் தான் பார்க்கலாம் என்று அம்மா சொல்லி விட்டார்கள். பக்கத்து வீட்டில் இருந்த மாமாவிடம் அவருக்குத்

தேவைப்படாத பழைய பேண்டை வாங்கி அதில் ஒட்டுத்துணி கொடுத்து ராக்கெட் பேண்டாக்கி போட்டுக் கொண்டு கல்லுரிக்குப் போய்க்

கொண்டிருந்தேன். ஏற்கனவே மிகுந்த தயக்கம் கொண்ட என்னைக் கல்லூரியின் புதிய சூழலும் ஆங்கிலவழிப்போதனையும் இன்னும்

வெருட்டியது. யாரிடமும் பேசாமல் எல்லோரிடமிருந்தும் ஒதுங்கியே இருந்தேன். அப்போது ஒரு நாள் சகமாணவன் ஒருவன் என்னிடம் வந்து,

 

 

“ ஏன் யார் கிட்டயும் பேசாம ஒதுங்கி ஒதுங்கிப் போறே.. நீ என்ன எஸ். சி.யா? “

 

என்று கேட்டான். முதலில் எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் உடனே என் சாதியைச் சொல்லி முணுமுணுத்தேன். ஆனால் மனதில் அவன்

என்னை ஏதோ இழிவாகச் சொல்லிவிட்டான் என்று வருந்தினேன். அவனிடம் வெகுநாள் பேசாமலும் இருந்தேன். அப்போது சாதி குறித்தெல்லாம்

எதுவும் அறியாதபருவம்.

நாங்கள் கல்லூரி முடிக்கின்ற பருவத்தில் அறிமுகமான இடதுசாரித் தோழர்கள் அறிமுகப்படுத்திய பாட்டாளி வர்க்க பண்பாடு எங்களை மிகவும்

ஈர்த்தது. தோழர்களும் தங்களுடைய மத்தியதர வர்க்க குணாதிசயங்களை நிராகரிக்கும் முயற்சியில் இருந்தனர். எப்போதும் விமர்சனக்

கண்ணோட்டத்துடனும் விழிப்புணர்வோடும் தங்கள் சொந்த வாழ்க்கையையும், பொது வாழ்க்கையையும் அணுகினர். பெட்டி பூர்ஷ்வா என்ற

சொல் அடிக்கடி விமர்சனமாகப் பேசப் பட்டுக் கொண்டேயிருந்தது. அருகில் நெருங்கி விட்டது புரட்சி என்ற உணர்வுடனே இருந்தோம். எனவே

நாங்களும் பாட்டாளி வர்க்கப் பண்பாட்டைப் பயில வேண்டும் என்று சில முயற்சிகள் செய்தோம். தட்டி போர்டுகளை எழுதி தூக்கிக்

கொண்டுபோய் நாங்களே கட்டுவது, போஸ்டர்களை ஒட்டுவது, டீக்கடையில் பெஞ்சில் உட்கார்ந்து டீ குடிக்காமல் கீழே தரையில் குத்துக்காலிட்டு

உட்கார்ந்து டீ குடித்து பீடி இழுத்துப் பார்ப்பது, என்று பல முயற்சிகள் செய்து பார்த்தோம். கீழே உட்கார்ந்திருந்த போது தான் உலகம் வேறு

மாதிரியாகத் தெரிந்தது. எல்லோரும் உயர்ந்தவர்களாகத் தெரிந்தார்கள். எல்லாவற்றையும் அண்ணாந்து பார்க்க வேண்டியதிருந்தது.

எல்லோருடைய பார்வையிலும் ஒரு அலட்சியம், அவமதிப்பு, இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் பெஞ்சில் உட்காருவதிலிருந்து ஏன்

தடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று புரிந்தது. இதெல்லாம் வேறெந்த ஊரிலோ, கண்காணாத தேசத்திலோ செய்யவில்லை. எங்கள் தெருமுக்கில்

இருந்த டீக்கடையில் செய்தோம். தெரிந்தவர்கள் எல்லோரும் டீக்கடைக்காரர் உட்பட விசித்திரமாகப் பார்த்தார்கள். முதலில் ஒரு சிறிய சங்கட

உணர்வு தோன்றியதென்னவோ உண்மை தான். ஆனால் அப்போது நமது தோழர்கள் இருந்தார்கள். நாங்கள் தனியாக இல்லை என்ற தெம்பு

வந்தது. ஒரு புதிய பண்பாட்டு விழுமியத்தை நோக்கிய சிறு தப்படி என்ற கர்வம் இருந்தது. எங்கள் சொந்த வர்க்கத்தை நிராகரிக்கும் ஒரு செயல்

என்ற பெருமிதம் இருந்தது. உண்மையில் அப்போது பாட்டாளி வர்க்கக் கலாச்சாரத்தைப் பற்றி எங்களுக்கு பெரிய அளவுக்கு ஒன்றும் தெரியாது.

 

. இடதுசாரிச் சிந்தனைகளின் தாக்கத்தினால் சாதிய எதிர்ப்புணர்வு வளர்ந்தது. யாராவது சாதி குறித்து பேசினால் அருவெறுப்பாய் இருந்தது.

பின்நவீனத்துவச் சிந்தனைகள் தமிழ்ச் சிந்தனையுலகில் நுழையவில்லை. அடையாள அரசியல் கிடையாது. சாதிகளின் எழுச்சி கிடையாது.

பிணக்குகள் இருந்தன. ஆனால் பெருமிதங்களில்லை. அப்போது எங்களுக்கு அறிமுகமான ஒரு தோழர் எல்லோரையும் அவரவர் சாதியைச்

சொல்லியே பேசினார். என்ன நயினா வந்தாச்சா? செட்டியாரை இன்னும் காணும்? பிள்ளைவாள்கிட்ட பேசி மீள முடியுமா? எங்களுக்கானால்

எரிச்சல். என்ன இந்தத் தோழர் எல்லோரையும் இப்படி அருவெறுப்பாய் கூப்பிடுகிறார் என்று நினைத்தோம். அதிலும் அவர் ஒரு தலித் தோழர்

என்று அறிந்தபோது இன்னும் அதிர்ச்சியாய் இருந்தது. ஒரு நாள் அந்தத் தோழரிடம் கேட்டேன்,

 

” ஏன் தோழர் எல்லோரையும் சாதியைச் சொல்லியே பேசுகிறீர்கள்..?”

 

” தோழர் நான் பிறந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் இருபத்திநாலு மணி நேரமும் நான் இன்ன சாதியைச் சேர்ந்தவன் என்று இந்தச் சமூகம்

எச்சரித்துக் கொண்டேயிருக்கிறது.. கொஞ்சம் நான் அயத்து மறந்தாலும் தண்டனை தான்.. நான் சாதியாகவே தான் தோழர் அறியப்படுகிறேன்.

எனக்கு இந்தச் சமூகமும் சாதியாகவே தான் தெரிகிறது.. இந்தக் கொடுமையை அநுபவித்துப் பார்த்தால் தான் தெரியும்..தோழர்”

 

எனக்கு அவர் சொல்லியதைக் கேட்டபோது வலித்தது. உண்மை தான் மற்ற சாதியினர் யாரும் எங்கும் எப்போதும் தங்கள் சாதியை நினைத்துக்

கொண்டேயிருப்பதில்லை. அதைக் குறித்து தயக்கமோ, அவமானமோ, அச்சமோ, இருப்பதில்லை. ஆனால் சாதி தலித்துகளுக்கு அச்சமூட்டும்

கொடிய தண்டனை. எந்த ஒரு விநாடியும் அதை அவர் மறக்கமுடியாது. தோழர்கள் எல்லோரும் அவர் அப்படிக் கூப்பிடுவதை தவறாக எடுத்துக்

கொள்ளவில்லை. மாறாக எல்லோரும் சுயசாதியைக் கிண்டல் செய்து கேலி பேசி மகிழ்ந்ததைப் பார்த்தேன். அவரும் அங்கே சுதந்திரமாய்

மற்றெல்லாசாதியினரையும் கேலி செய்தார். எங்களுக்கு ஆச்சரியமாயிருந்தது.

 

நான் வேலைக்குச் சென்ற பிறகு எங்கு டூட்டிக்குப் போனாலும் போன கொஞ்ச நேரத்திலேயே உடன் வேலை பார்க்கிற சகதொழிலாளிகள் நான்

என்ன சாதியைச் சேர்ந்தவன் என்பதை அறிவதில் குறியாய் இருந்தார்கள். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. என்னுடைய உருவமும்,

நிறமும், இயல்பும் அந்த ஆர்வத்தைத் தூண்டியிருக்கலாம். முக்கியமாக எல்லோரும் நான் தலித்தா இல்லையா என்று அறிந்து கொள்ள

ஆசைப்பட்டார்கள். அதைப் பொறுத்து அணி சேர்க்கை வைத்து கொள்ளும் திட்டம் தான். நேரிடையாகக் கேட்க முடியாத அளவுக்கு நாகரீகமாக

இருந்தார்கள் அவ்வளவு தான். மற்றபடி சுற்றி வளைத்து சொந்த ஊர், வசிக்கும் ஏரியா, அப்பாவின் பெயர், இன்னாருக்கு நீங்கள் என்ன வேண்டும்

என்றோ, இன்னாரை உங்களூக்குத் தெரியுமா என்றோ கேள்விகள் கேட்டு மண்டையைக் கீறுவார்கள். நீங்கள் தலித்தாக இருந்தால்

மற்றவர்களின் பழக்கத்திலேயே ஒரு விலக்கம் தெரியும். பார்வையிலே ஒரு அலட்சியம் தெரியும். வர்க்க அரசியலில் எதிரியான முதலாளித்துவ

வர்க்கத்தோடு மோதுவதற்குப் பதில் சொந்த வர்க்கத்துடனேயே மோதுகிற அவலம் தொழிலாளி வர்க்கச் சிந்தனையில் ஏற்பட்டிருக்கிறது.

இது ஒரு புறம் என்றால் இன்னொரு புதிய முறையும் வர்க்கமாக அணி திரண்ட தோழர்களிடம் தோன்றியிருக்கிறது. அடையாள அரசியலின்

மூலம் மறுபடியும் வர்ணாசிரமக்கோட்பாடு நவீன முகமூடியை அணிந்து கொண்டு சாதிய அணிதிரட்டலை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது.

சாதிய அணிதிரட்டலின் மூலம் ஒவ்வொரு சாதியும் தன்னுடைய இடத்தைத் தக்கவைப்பது மட்டுமல்ல ஆண்டபரம்பரை.. ஆண்டு

கொண்டிருக்கும் பரம்பரை..ஆளப்போகும் பரம்பரை என்று வர்ணாசிரப்படிநிலையில் மேல்நிலையாக்கத்துக்கு செல்ல முயற்சி செய்து

கொண்டிருக்கிறது. இதனால் வர்க்க ரீதியில் அமைப்பாக அணி திரண்ட தொழிலாளிகளும் பாதிப்படைய நேரிடுகிறது. ஏற்கனவே பாட்டாளி

வர்க்கப் பண்பாட்டுவெளியில் நிகழ்ச்சிநிரல் எதுவுமே இல்லாததால் வர்க்கமாக அணி திரண்ட தொழிலாளிகளும் அடையாள அரசியலின்

சூழ்ச்சிக்குப் பலியாக வேண்டியுள்ளது.

தங்கள் குடும்பங்களுக்குள் தோழர்கள் ஊடாடுவதில் பெருந்தயக்கம் இருக்கிறது. தாங்கள் மிக முற்போக்காக இருந்து கொண்டு, ஆனால் குடும்பம்

சாதியப்பிடிமானம் உள்ள குடும்பமாக இருப்பதைக் கண்டு கொள்ளாமல் இருந்து விடுவது வசதியாக இருக்கிறது. எனவே புதிய பண்பாட்டு

விழுமியங்களை உருவாக்குவதில் அக்கறை வருவதில்லை. அது மட்டுமல்லாமல் குடும்பத்தின் பிற்போக்கான குணாதிசயத்தினால் தங்கள்

குழந்தைகளின் சாதிமறுப்புக்காதலை மறுக்கிற நிலைமை ஏற்படுகிறது. இல்லையென்றால் பூனைக்கும் தோழனாய் பாலுக்கும் காவலாக

இருப்பதைப் போல தோழர்களிடையே தங்கள் சொந்த சாதி பார்த்து சம்பந்தம் பேசித் தலைவர்களை அழைத்து முற்போக்கான திருமணங்களை

நடத்தி விடுகிறார்கள். இல்லையென்றால் காலையில் சநாதனமாய் புரோகிதர் சகிதம் ஹோமகுண்டம் வளர்த்து அக்னிசாட்சி, அருந்ததி சாட்சி

என்று எல்லாச் சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் செய்து முடித்து அந்தச் சூடு ஆறுமுன்னே மாலையில் தலைவர்களை அழைத்து

முற்போக்கான வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தி விடுகிறதும் உண்டு. இதற்கு தோழர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. முற்போக்கு

பண்பாட்டுவெளியில் நாம் வலுவாகச் செயல்படாதாதும், தோழமை என்கிற மகத்தான சர்வதேசிய, வர்க்கபேதமற்ற, சாதி பேதமற்ற

வாழ்வியல்நெறியைச் செழுமைப்படுத்துவதில் ஏற்பட்ட பின்னடைவும் தான் காரணம் என்று தோன்றுகிறது.

 

எப்படியானாலும் சாதியும் வர்ணாசிரமமும் குடும்பங்களின் வழியே தங்களைப் புதுப்பித்துக் கொள்கின்றன. அடுத்தடுத்த தலைமுறைக்கும் அதை

கொண்டு செல்லும் வழியைக் கண்டு பிடித்து விடுகின்றன. இதற்குப் பண்பாட்டு வெளியில் இருக்கிற வெறுமையும் ஒரு காரணம்.

இங்கிருக்கக்கூடிய சட்டம், நீதி, கலை, இலக்கியம், ஊடகங்கள், எல்லாமே மதங்களின் சட்டங்களையே பெரும்பாலும் பிரச்சாரம் செய்கின்றன.

கடைப்பிடிக்கின்றன. பெரியாருக்குப் பின்னால் மாற்றுப்பண்பாட்டுவெளியில் ஒரு மிகப்பெரிய வெற்றிடம் இருக்கிறது. முற்போக்கான

மாற்றுப்பண்பாட்டு வெளியில் நூறுபூக்கள் மலர வேண்டும். புதிய முற்போக்கு பண்பாட்டு விழுமியங்களை உருவாக்குவதின் மூலமே நாம்

மார்க்சிய வாழ்வியல் நெறியைச் செழுமைப்படுத்த முடியும். சுயசாதி நிராகரிப்பை தொழிலாளி வர்க்கத்திடம் ஏற்படுத்த முடியும். இது ஒரு

தொடர்ச்சியான போராட்டம். தொடர்ந்த விழிப்புணர்வும், விமர்சனமும் சுய விமர்சனமும் மட்டுமே இந்தப் புதிய பண்பாட்டு விழுமியங்களை

முன்னெடுத்துச் செல்ல உதவும். அதன் மூலமே மக்களிடம் ஒரு புதிய முற்போக்கான பண்பாட்டு நடவடிக்கைகளைக் கொண்டு செல்லவும்,

அதனால் அவர்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தவும் முடியும். அது தான் இன்றையத் தேவை.DSC03548

5 comments:

 1. தங்களின் கட்டு​ரை​யை படிக்கும் ​பொழுது, என்னு​டைய இயக்கத்தில் ​வே​லை ​செய்த கால அனுபவங்களும் ​தோழர்களும் கண்முன்​னே வந்து ​சென்றார்கள். அரு​மையான கட்டு​ரை. ​மெல்லிய சரடாய் சாதியும் வர்க்கமும் குறித்த இடதுசாரிப் பார்​வை ஓடுகிறது.
  தாங்கள் ​நோட்​பேடில் தட்டச்சு ​செய்து "Word Wrap"​யை நீக்காம​லே​யே பதிவிற்கு காப்பி ​செய்துவிட்டீர்கள் ​போலிருக்கிறது. அதனால் தான் பத்தியாக பிரியாமல், ​நோட்​பேடில் வரிகள் உ​டையும் இட​மெல்லாம் தனி பத்தி ​போல் வந்துவிட்டது. இனி நீங்கள் "Format" ​மெனுவில் உள்ள "Word Wrap"ற்கு எதி​ரே உள்ள டிக்​கை ஆப் ​செய்து விட்டு காப்பி ​செய்தீர்க​ளேயானால் பத்திகள் சரியாக வரும்.

  ReplyDelete
 2. //அப்போது சாதி குறித்தெல்லாம் எதுவும் அறியாதபருவம்//

  ReplyDelete
 3. "பெரியாருக்குப் பின்னால் மாற்று பண்பாட்டு வேளியில் வெற்றிடம் உள்ளது" என்ற உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள தயக்கமாக இருக்கிறது ! சமூக நீதி பற்றிபேசும் பொது கி.மு,கி,பி என்பது போல் பெரியாருக்குமுன்,பின் என்று குறிப்பிடுவது இன்றய நாகரீகமாக ஆகிவிட்டது! பெரியார் தமிழ்சமூகத்திற்கு செய்த செவையை ஏற்றுக் கொள்வதுவேறூ! அவரை omnipotent,omnipresense என்று கொள்வது வேறு! பெரியார் சமூகநீதிக்கு மட்டுமே முக்கியத்துவம்கொடுத்தார் ! அவருடைய இலக்கு சிறியது! இந்திய விடுதலை மட்டுமல்ல மானுட விடுதலையை லட்சியமாக கொண்டவர்களை இதுகுறுகிய சிமிழிக்குள் அடைத்துவிடுமோஎன்றுஅஞ்சுகிறேன்1 அடையாள அரசியல் பற்றி தோழர் குணசேகரன் கொடுக்கும் விளக்கங்கள் ,தோழர் அருணன் கட்டுரைஆகியவை புதிய வெளிச்சத்தைத் தருகின்றன! சுய விமரிசனம் என்ற முறையில் உங்கள் கட்டுரை சிறப்பக உள்ளது! வாழ்த்துக்களூடன்---காஸ்யபன் !

  ReplyDelete
 4. எனக்கு எப்போதுமே சாதிஅபிமானமோ, சாதி உணர்வோ இருந்ததில்லை. கீழ் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்பதால் எங்கள் வீட்டில்

  தேவைகளுக்காக எல்லோரும் தீப்பெட்டி கட்டை அடுக்கியோ, தீப்பெட்டி ஒட்டியோ உழைத்துக் கொண்டிருந்தோம். அதனால் பெரிதாய் ஒன்றும்

  சாதி பற்றிய பெருமிதம் இல்லை.

  அருமையான பதிவு. நன்றி.
  எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

  ReplyDelete